[ 8 ]
அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார்.
“வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி எழுந்து எருக்கமலர் தொடுத்துச்சூட்டி கள்ளும் ஊனும் படைத்து கிராததேவனை வழிபட்டு வெண்சாம்பல் பூசி புதிய கப்பரை ஏந்தி வடக்கே உயர்ந்தெழுந்த பனிமலைகளை நோக்கிச் செல்வது அறுவருக்கும் தொல்மரபாக அறியப்பட்டுள்ளது.”
“நான் அங்கிருந்து மலையிறங்கி கங்கைப்பெருக்கினூடாக வந்தேன். அறுவகை சமயங்களுடனும் சொற்போரிட்டேன். பன்னிரு நாடுகளில் பிச்சையெடுத்து உண்டேன். என் துணையோருடன் காசிப்பெருநகர் அடைந்தேன். அங்கு இரு பெரும் சுடலைத்துறைகளில் இரவும் பகலும் எரிதாழாது சிதைகள் எரிகின்றன. அத்தழல்களுக்கு நடுவே கையில் முப்புரிவேலும் உடுக்கையும் கொண்டு வெற்றுடல் கோலமாக காலபைரவன் நின்றிருக்கும் ஆலயம் உள்ளது. அவன் கையிலிருந்து உதிர்ந்த கப்பரை குருதி உலராத பலிபீடமாக ஆலய முகப்பில் அமைந்துள்ளது. நாளும் பல்லாயிரவர் பலியும் படையலும் கொண்டு அங்கே வருகின்றனர். அவ்வாலயத்தின் முகப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவுமணி ஓய்ந்து ஒலியடங்கும் கணமே இல்லை.”
“ஆலயத்திற்கு தென்மேற்கே படித்துறையருகில் பார்ப்புக்கொலைப் பேய் தொழுத கையுடன் மூதாட்டி வடிவில் அமர்ந்திருக்கிறாள். கங்கையில் நீராடுவதற்கு முன் அவள் முன்னிலையில் பழைய ஆடைகளை நீக்குவது மரபு. கொண்ட நோய்களையும் பீடைகளையும் அங்கு ஒழித்து புதிதாகப் பிறந்தெழுந்து காலவடிவனை வணங்குகின்றனர். இறந்தோர் ஆடைகளும் அங்கு குவிக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அக்கரி படிந்த அவள் முகம் சென்றது எதையோ எண்ணியதுபோல தன்னுள் தொலைந்து தோளுக்குள் புதைந்திருக்கும்.”
“காசியிலிருந்து கிளம்பி நான் தென்றிசை செல்கிறேன். தென்னகத்தில் ஆதிசிவமென அமைந்த மலை என மாகேந்திரம் சொல்லப்படுகிறது. நஞ்சு சூடிய மாநாகர்களால் ஆளப்படுவது அது. அவர்களால் ஏற்கப்படுபவர்கள் மட்டுமே அதில் ஏறி அம்மலையின் உச்சியில் குவைக்கல் வடிவில் குடிகொள்ளும் சிவத்தை தொட்டுவணங்கமுடியும். அடுத்த சொல் கேட்பதற்கு முன்னர் சென்று அதை வணங்கி மீளும்படி என் ஆசிரியரின் ஆணை. அதைத் தலைக்கொண்டு நான் கிளம்பினேன்” என்றார்.
வைசம்பாயனன் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை நகங்கள் மண்செறிந்து விரல்கள் காய்ப்பேறி எலும்புக்கணுக்கொண்டு பாலைநிலத்து முள்மரங்களின் வேர்த்தூர் போலிருந்தன. அவை செல்லும் தொலைவை அவன் எண்ணிநோக்கினான். உடல் சரியும் கணம் வரை அவை சென்றுகொண்டுதான் இருக்கும்போலும். உடல்சரிந்த பின்னரும் உள்ளம் தான் கொண்ட விசை தீராது மேலும் செல்லும். அங்கே காத்திருப்பது எது?
அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல அவர் உரக்க நகைத்து “எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” என்றார். அவன் உள்ளம் நடுங்கத் தொடங்கியது. கைகளை மார்புடன் நன்கு கட்டி இறுக்கிக்கொண்டான்.
“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”
மலைப்பாறையில் கால்களை நீட்டிக்கொண்டு அவர் படுத்தார். உடலை ஒவ்வொரு உறுப்பாக எளிதாக்கி பரப்பிக்கொண்டார். விண்மீன்கள் செறிந்த வானை நோக்கி “சிவம்யாம்” என்றார். “ஆம், சிவமேயாம்” என்று மீண்டும் சொன்னார். அவருடைய விழிகள் மூடிக்கொள்வதை அவன் கண்டான். அருகே அவர் கால்களைப் பற்றி அமுக்கியபடி அமர்ந்திருந்தான். அவர் உறுப்புகள் துயிலில் விடுபட்டுச் சரிவதை காணமுடிந்தது.
“ஆசிரியரே…” என அவன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றார் அவர். “சொல்லுங்கள், நான் செல்லும் இடம் என்ன?” அவர் விழிமூடியபடியே புன்னகைத்தார். “நீ வேதம் கற்றுக் கடந்து காவியத்திற்குள் நுழைந்துள்ளாய். காவியம் கடந்து எதில் நுழைவாய்?” என்றார். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “அக்காவியத்தில் நீ தேடுவது என்ன? பொய்யெனும் இனிப்பையா மெய்யெனும் கசப்பையா?” அவன் சீற்றத்துடன் “உண்மையை. அதை மட்டுமே. பிறிதெதையும் இல்லை” என்றான். அவர் உடல் குலுங்க நகைத்தார். “அதைத் தேடிச்சென்ற உன் மூதாதையொருவன் சொன்னான், இல்லை இது இல்லை என. பலமரம் கண்ட தச்சன் அவன். ஒருமரமும் கொள்ளாமல் மீண்டான். நேதி! நேதி! நேதி!”
அடக்கமுடியாத சினம் எழுந்து அவன் உடலை பதறச்செய்தது. அவன் கைகள் வழியாகவே அதை உணர்ந்தவர்போல அவர் மேலும் நகைத்து “எவர் மேல் சினம்? நீ செய்யப்போவது என்ன? யோகியென இங்கிருப்போர் விலக்கி விலக்கி அறிவதை நீ தொகுத்துத் தொகுத்து அறியப்போகிறாய். வேறென்ன?” என்றார். அவர் மீண்டும் நகைத்து “ஒரே இருளை அறிய ஓராயிரம் வழிகள். சிவநடனம். சிவமாயை. சிவப்பேதைமை. அறிவென்றும் அறியாமை என்றும் ஆகி நின்றாடல். அனலொரு கையில் புனலொரு கையிலென பொன்றாப் பேராடல். சிவமேயாம்! சிவமேயாம்!” என்றார். அவன் சினத்துடன் “நான் அறியப்போவது இருளை மட்டும் அல்ல. இவ்வாழ்க்கையை. இதிலுள்ள அனைத்தையும்” என்றான். “அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்? மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி அமர்ந்திருக்கும் இருள்.”
அவர் துயில்வதுவரை அவன் நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து விண்மீன்களை நோக்கினான். அவை இருண்ட சதுப்புக்குள் திகைத்துத்துடித்து புதைந்துகொண்டிருந்தன. திசைதேர் கலையை நன்றாகப் பயின்றிருந்தும்கூட அவனால் விண்மீன்களை கணிக்க முடியவில்லை. அறியாமொழியின் எழுத்துக்கள் என அவை வானில் சிதறிக்கிடந்தன. மீண்டும் மீண்டும் அந்த அலகின்மையை அள்ளமுயன்று தோற்றுச் சலித்தபின் கால்தூக்கி வைத்து திரும்பி காட்டுக்குள் புகுந்தான்.
சீவிடுகளின் ஒலியால் தொகுக்கப்பட்ட இருள்குவைகளும் நிழலுருக்களும் காற்றசைவுகளும் சருகொலிகளும் காலடியோசையும் எதிரொலியுமாக சூழ்ந்திருந்தது தண்டகப்பெருங்காடு. வடபுலக்காடுகள் போல இரவில் அது குளிர்ந்து விரைத்திருக்கவில்லை. அடுமனைக்கூடம் போல மூச்சடைக்கவைக்கும் நீராவி நிறைந்திருந்தது காற்றில். ஆனால் உடல்தொட்ட இலைப்பரப்புகள் குளிர்ந்த ஈரம் கொண்டிருந்தன. எங்கோ ஏதோ உயிர்கள் ஒலிகளென உருமாறி அடர்ந்திருந்தன. இருளே குழைந்து அடிமரங்களாக கிளைகளாக இலைகளாக மாறி உருவென்றும் அருவென்றுமாகி சூழ்ந்திருந்தது. அவன் நடந்தபோது அசைவில் கலைந்து எழுந்தன கொசுப்படைகள். சற்றுநேரத்தில் அவனை மென்துகில்படலமெனச் சூழ்ந்து அவை ரீங்கரித்தன. சேற்றில் பதிந்த காலடியில் இருந்து சிறு தவளைகள் எழுந்து பறந்தன.
அவ்விருளில் நெடுந்தொலைவு செல்லமுடியாதென்று தோன்றியது. எங்காவது மரக்கிளையிலோ பாறையிலோ அமர்ந்து துயில்வதொன்றே வழி. ஆனால் அவன் மிகக்குறைந்த தொலைவே விலகி வந்திருந்தான். விழித்தெழுந்ததும் அவர் இயல்பாக அவனை கண்டடைந்துவிடமுடியும். சேற்றில் அவன் காலடித்தடம் பதிந்திருக்கும். அதைக் கண்டு அவன் விலகிச்செல்ல விழைகிறான் என அவர் புரிந்துகொள்ளக்கூடும். இல்லை, வேறெதன்பொருட்டோ சென்றிருக்கிறான் என எண்ணினால் தொடர்ந்து வருவார். மீண்டும் அவர் முகத்தை நோக்க அவனால் இயலாது.
ஆனால் அவர் எதற்கும் தயங்குபவர் அல்ல. தன் மூவேலால் அவன் தலையை அறைந்து பிளக்கலாம். அதன் கூர்முனையை அவன் நெஞ்சில் வைத்து வா என்னுடன் என ஆணையிடலாம். அல்லது அறியாதவர் போல கடந்தும் செல்லலாம். ஆனால் மீண்டும் அவர் அவன் வாழ்க்கையில் வரவேண்டியதில்லை. அவன் வாழ்ந்த உலகம் வேறு. அவன் அங்கு மீண்டு செல்லவிரும்பினான். பொருள் கொண்ட சொற்களின் உலகம். பொருள்கோடலுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் முன்னரே தன்னுடன் வைத்துக்கொண்ட சொற்களின் உலகம்.
சொற்களின் உலகம்போல உகந்தது எது? சொற்களென வந்தவை அனைத்தும் பல்லாயிரம் முறை முன்னோரால் கையாளப்பட்டவை. அவர்களின் கைவிழுக்கும் மணமும் படிந்தவை. அங்கு புதியதென ஏதுமில்லை. புதியவை என்பவை பழையவற்றின் உடைமாற்றம் மட்டுமே. ஆனால் இக்காடு நேற்று முளைத்தெழுந்தது. இதோ என்னைச் சூழ்ந்திருக்கும் இலைகள் இதுவரை மானுடனைப் பாராதவை. இக்கொசுக்கள் முதல்முறையாக அருந்துகின்றன மானுடக்குருதி. மறுகணம் இவை எவையென்று நான் அறியவே முடியாது.
சொல்கோத்து சொல்கோட்டி சொல்சிதைத்து சொல்மறைத்து மானுடன் உருவாக்கிக்கொள்வதுதான் என்ன? அறியமுடியாமையின் பெருவெளிக்குள் அறியப்படும் ஒரு சிற்றுலகைத்தானா? அறியப்படாத நூல்கள் உண்டா? இருந்தாலும் அவை அறியத்தக்கவையே என்னும் வாய்ப்பை கொண்டுள்ளவை. எங்கோ எவராலும் ஒருமுறையேனும் வாசிக்கப்படாத நூல் ஒன்று இருக்கலாகுமா? அப்போதும் அது வாசிப்பதற்கென்றே எழுதப்பட்டதாகையால் வாசிக்கத் தக்கதே.
எல்லா சொல்லும் பிறசொல் குறித்ததே. எல்லா சொல்லும் பொருள் குறிப்பது அவ்வாறே. சொல் என்பது ஓர் ஓடை. சொற்றொடர்களின் ஓடை. நூல்களின் ஓடை. அறிதலின் ஓடை. ஒன்று பிறிதை ஆக்கி ஒன்று பிறிதில் ஊறி ஒன்றென்று ஓடும் பெருக்கு. இங்குள்ளவை ஒவ்வொன்றும் தனித்தவை. இந்த இலை அதை அறியாது. இக்கொசு பிறிதை எண்ணாது. இவற்றைக் கோத்திருக்கும் அறியமுடியாமை என்னும் பெருக்கு இருண்டு மேலும் இருண்டு குளிர்ந்து மேலும் குளிர்ந்து அடங்கி மேலும் அடங்கி தன்னுள் தானை முடிவிலாது சுருட்டிக்கொண்டு சூழ்ந்திருக்கையில் இவை என்ன செய்தாலும் எஞ்சுவது பொருளின்மையே.
அவன் நாகத்தின் ஒலியைக் கேட்டான். அதைக் கேட்பதற்கு ஒரு கணம் முன்னரே அவன் உட்புலன் அதை அறிந்து உடல் மயிர்ப்பு கொண்டது. சிலகணங்கள் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. பின்பு கைகால்கள் அனைத்துத் திசைகளிலும் உதறிக்கொள்ள நின்ற இடத்திலேயே உடல் ததும்பினான். அதன் பின்னரே அது யானை என்றறிந்தான். அவன் முன் பிறைநிலவின் நீர்ப்பாவை என ஒரு வெண்வளைவாக ஒற்றைத் தந்தம் மட்டும் தெரிந்தது. மறுகணம் இருளில் மின்னும் நீர்த்துளி என கண்கள். விழிகளால் அன்றி அச்சத்தால் அதன் நீண்டு தரைதொட்டுத் துழாவிய துதிக்கையையும் கண்டுவிட்டான்.
ஆழுள்ளத்தில் கரந்த எண்ணமொன்று அசைவதுபோல அவன் மிகமெல்ல தன் வலக்காலைத் தூக்கி பின்னால் வைத்தான். அடுத்த காலை எடுக்கையில் தன் உடலால் அசைக்கப்பட்ட காற்றின் ஒலியையே அவன் கேட்பதுபோல் உணர்ந்தான். நிறுத்தி நெஞ்சில் செறிக்கப்பட்ட மூச்சு எடைகொண்டு குளிர்நீரென கற்பாறையென ஆயிற்று. மீண்டுமொரு கால் எடுத்துவைத்தபோது விலகிவிடமுடியுமென நம்பிக்கை எழுந்தது. மீண்டுமொரு காலில் விலகிவிட்டோமென்றே எண்ணம் பிறந்தது. மீண்டுமொரு கால் வைத்தபோது விழிகள் கூர்மைகொண்டன. யானையின் செவிகள் இருளை துழாவிக்கொண்டிருந்தன. செவிகளிலும் மத்தகத்திலும் செம்பூக்கள் இல்லை. முற்றுக்கரியுருவம். அதன் உடல் இருள்வெளி கனிந்து திரண்ட சொட்டு என நின்று ததும்பியது.
மீண்டும் இரு அடிகள் எடுத்துவைத்து அப்படியே பின்னால் பாய்ந்து ஓடத்தொடங்கலாமா என அவன் எண்ணினான். யானை துரத்திவருமென்றால் புதர்களில் ஓடுவது அறிவுடைமை அல்ல. பெருமரத்தில் தொற்றி ஏறவேண்டும். அல்லது உருள்பாறை ஒன்றில். அல்லது செங்குத்துப்பள்ளத்தில். அல்லது அதன் முகக்கை எட்டாத மேட்டில். ஒரு கணத்திற்குள் அவன் உள்ளம் அக்காட்டில் அவன் கண்ட அனைத்தையும் தொட்டு தேடிச்சென்று பெரும்பலா மரம் ஒன்றை கண்டுகொண்டது. அதன் கீழ்க்கணு அவன் கையெட்டும் உயரத்தில்தான் இருந்தது. முதற்கிளை யானைமத்தகத்திற்கும் மேலே. இரண்டாம் கிளை அதன் கைமூக்கின் நுனிக்கும் மேலே. அதுதான்.
உடல் ஓடத்தொடங்கி கால்கிளம்புவதற்கு முந்தைய கணத்தில் அவன் அடுத்த சீறலை கேட்டான். விழிதிருப்பி தனக்குப் பின்னால் நின்றிருந்த கரிய யானையை கண்டான். மறுகணமே வலப்பக்கமும் இடப்பக்கமும் யானைகளை கண்டுவிட்டான். மேலுமிரண்டு. மேலுமிரண்டு. எட்டு. எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள். ஓசையின்றி பெருகி அவை சூழ்ந்தபின்னரே அவன் முதல் யானையை கண்டிருக்கிறான். எண்பெருங்கரியின் நடுநுண்புள்ளி. தன் கால்கள் திகிரியென ஆகி உடல்சுழல்கின்றதா? சூழ்ந்த இருள் சுழல்கின்றதா? எட்டுத்திசையும் ஒற்றைப்பெருவட்டமென்றாகின்றனவா?
அவன் விழித்துக்கொண்டபோது விழிகளுக்குள் காலையொளி புகுந்து கூசவைத்தது. நிழலாட்டத்தை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த பின்னர்தான் யானைகளை நினைவுகூர்ந்தான். அவன் மேல் குனிந்தபடி பிச்சாண்டவர் நின்றிருந்தார். “உயிருடன் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “தொலைவில் உன்னை பார்த்தபோதே தெரிந்துகொண்டேன்.” அவிழ்ந்த தழையாடை அப்பால் கிடந்தது. அவன் உருண்டு அதை கைநீட்டி எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். திகைப்புடன் “யானைகள்!” என்றான்.
“என்ன?” என்றார் அவர். “எட்டு யானைகள்! அவை என்னை சூழ்ந்துகொண்டன.” அவர் புன்னகையுடன் “வா” என்று அழைத்துச்சென்றார். அவன் இரவில் செறிந்த காடென நினைத்த இடம் சேறுமண்டிய புதர்ப்பரப்பாக இருந்தது. “இதோ நீ நின்றிருந்த இடம்” என அவர் காட்டிய இடத்தில் அவன் காலடித்தடம் இருந்தது. அவர் முன்னால் சென்று “இங்கு களிறு ஒன்று நின்றிருக்கிறது. பிண்டம் கிடக்கிறது. காலடிகள் உள்ளன. தழை ஒடித்து தின்றிருக்கிறது” என்றார். அவன் ஓடிச்சென்று அந்தத் தடங்களை பார்த்தான். “நான் எட்டு யானைகளை பார்த்தேன்… என் விழிகளால் பார்த்தேன்.” அவர் புன்னகையுடன் “ஆம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றார்.
“நான் பார்த்தேன்… உண்மையாகவே பார்த்தேன்” என்று கூவியபடி அவன் பாய்ந்து புதர்களுக்குள் ஓடினான். அவன் விழுந்து கிடந்த இடத்தை புதர்கள் வழியாக சுற்றிவந்தான். யானைக்காலடிகளை காணாமல் மீண்டும் மீண்டும் விழிதுழாவி சலித்தான். திரும்பி வந்து மூச்சிரைக்க நின்று “நான் பார்த்தேன்!” என்றான். அவர் “பார்த்திருக்கக்கூடும் என்றுதானே நானும் சொன்னேன்” என்றபின் கனிவுடன் புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார்.
[ 9 ]
சௌகந்திகத்திற்கு வந்த கிராதன் அங்கிருந்து சென்றபின்னரும் அவன் சூர் அங்கே எஞ்சியிருந்தது. தேவதாரு மரங்களின் காற்று சுழன்று வீசும் ஒரு கணத்தில் அதை மூக்கு உணர்ந்தது. வேள்விப்புகையின் இன்மணத்தின் உள்ளே அது மறைந்திருந்தது. முனிவர்கள் காமத்தின் ஆழ்தருணத்தில் தங்கள் மனைவியரின் உடலில் அதை உணர்ந்தனர். அதை அறிந்ததுமே அனைத்தும் மறைந்து அவன் நினைவு மட்டும் எழுந்து கண்முன் நின்றது. மெய்ப்பு கொண்டு எழுந்து திசைகளை நோக்கி பதைத்தனர். “இங்குள்ள அனைத்திலும் அவன் எப்படி ஊடுருவ முடியும்?” என்றார் கனகர். “அத்தனை வேள்விகளும் மகாருத்ரம் ஆனது எப்படி? அனைத்து வேதச்சொற்களும் ருத்ரமாக ஒலிப்பது எப்படி?”
“நாம் காட்டாளர்கள் அல்ல” என்று சூத்ரகர் சொன்னார். “காட்டின் வேர்களை உண்கின்றன பன்றிகள். தண்டை உண்கின்றன யானைகள். இலைகளை மான்கள். கனிகளை குரங்குகள். நாம் மலரில் ஊறிய தேனை உண்பவர்கள். ஆம், காட்டின் உப்பும் சூரும் கொண்டதே அதுவும். அதுவே காட்டின் சாரம். தோழரே, வண்ணத்துப்பூச்சிகளே காட்டை அறிந்தவை. அவற்றின் சிறகிலேறிப் பறக்கிறது காடு. நாம் வேதநுண்சொல்லை மட்டுமே அறியவேண்டியவர்கள். இந்தக் கொடுஞ்சூரால் அதை நாம் இழக்கிறோம்.” குருநிலையின் எட்டு முதன்மை முனிவர்கள் தங்களுக்குள் ஒன்றாகி அதைப்பற்றி பேசிக்கொண்டனர். பேசப்பேச சினமும் துயரும் கொண்டு ஒன்றுதிரண்டனர்.
அவர்கள் அதை அத்ரியிடம் சொன்னார்கள். அவர் விழிசொக்கும் பெரும்போதையிலென இருந்தார். “ஆம், நானும் அறிகிறேன் அந்த மணத்தை. கருக்குழந்தையின் குருதி போல, புதிய கிழங்கில் மண் போல, மழைநீரில் முகில்போல அது மணக்கிறது. அதன் ஊர்திகளே இவையனைத்தும்” என்றார். அவர்கள் சோர்ந்த முகத்துடன் எழுந்தனர். “இவரிடம் சொல்லிப்பயனில்லை. தன்னை இழந்துவிட்டார்” என்றார் கருணர். “அவர் அறிந்த ஒன்றை நாம் அறியவில்லை என்று பொருளா இதற்கு?” என்றார் கனகர். “தன்னை இழந்தபின் அறிந்தாலென்ன அறியாவிட்டாலென்ன?” என்றார் கர்த்தமர்.
“வந்தவன் யார்?” என்றார் கனகர். “நாம் அவனை நேரில் கண்டோம். இரந்துண்ணும் காட்டாளன். அவனிடம் காடுகள் தங்கள் இருளுக்குள் தேக்கிவைத்துள்ள மாயம் ஒன்றிருந்தது. சற்றுநேரம் நம் கண்களைக் கட்ட அவனால் முடிந்தது. பிறிதென்ன?” சூத்ரகர் “தன் காட்டுத்தெய்வத்தை நம் ஆசிரியரின் நெஞ்சில் நிறுத்திவிட்டுச் சென்றான். இதோ நம் குருநிலை வாயிலில் கல்லுருவாக நின்று பூசெய்கை கொள்கிறது அது” என்றார். “அவன் நம் மீது ஏவப்பட்டவன், ஐயமே இல்லை” என்றார் அஸ்வகர்.
“சூழ்ந்திருக்கிறது காடு. நோயும் கொலையும் குடிகொள்ளும் வன்னிலம் அது. அதை விலக்கியே இவ்வேலியை நம் குருநிலைக்குச் சுற்றிலும் அமைத்தனர் முன்னோர். அந்த வேலியை நாமே திறந்தோம். அவனை உள்ளே விட்டதே பெரும்பிழை” என்றார் கனகர். “அவன் இரவலன்” என்றார் சூத்ரகர். “ஆம், ஆனால் காட்டாளர் நம் எதிரிகள். இரவலராகவும் இங்கொரு வேதமறிந்த அந்தணன் மட்டுமே உட்புக முடியும் என்று நெறியிருந்தது அல்லவா? அதை எப்போது மீறினோம்?” அவர்கள் அமைதியடைந்தனர். “என்றோ ஒரு இடத்தில் நாம் நம்மை நம் முன்னோரைவிடப் பெரியவர்களாக எண்ணிக்கொண்டோமா? அதன் விளைவைத்தான் சுமக்கிறோமா?”
“ஆயிரம் ஆண்டுகாலம் வேதச்சொல் கேட்டு தூயமணம் கொண்டு நின்றிருந்த தேவதாருக்களில் மலநாற்றம் கலந்துவிட்டிருக்கிறது. வேதச்சொல் கொண்டு கூவிய பசுக்களின் அகிடுகளில் குருதிச்சுவை கலந்த பால் சுரக்கிறது” என்றார் கனகர். “நாம் நம்மை இழந்துவிட்டோம். இந்தக் காட்டாளரின் கல்தெய்வத்திற்குப் பூசைசெய்யவா தேவதாருக்கள் மணம் கொள்கின்றன? இதன் மேல் ஊற்றவா நம் பசுக்கள் அமுதூறுகின்றன? இதை வழுத்தவா வேதச்சொல் எடுக்கிறோம்?”
நாளுக்குநாள் அவர்களின் அச்சமும் விலக்கமும் கூடிவந்தன. முதலில் மாறிமாறி அதைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்தேய்ந்து அமைதியடைந்தார்கள். சொல்லப்படாதபோது அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அது பேருருக்கொண்டு வளர்ந்தது. அதை எதிர்கொண்டு நோக்கவே அவர்கள் அஞ்சினர். எனவே அதன்மேல் எண்ணங்களையும் செயல்களையும் அள்ளிப்போட்டு மூடி அழுத்தினர். உள்ளூறி வளர்ந்து அவர்களின் குருதியில் கலந்தது. அவர்களின் விரல்நுனிகளில் துடித்தது. அவர்களின் காலடிச்சுவடுகளில் பதிந்துகிடந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் பிறர் காலடிகளை உடனே அடையாளம் கண்டுகொண்டனர்.
ஒருநாள் தாருகக்காட்டுக்கு கூன்விழுந்து ஒடுங்கிய சிற்றுடலும் வெண்ணிற விழிகளும் உடைந்து பரவிய கரிய பற்களும் கொண்ட வைதிகர் ஒருவர் தன் இரு மாணவர்களுடன் வந்தார். தொலைவில் வரும்போதே நடையின் அசைவால் அவரை வேறுபடுத்தி நோக்கி நின்று கூர்ந்தனர். அருகணைந்ததும் அவருடைய முதன்மை மாணவனாகிய கரிய நெடிய இளைஞன் “எங்கள் ஆசிரியர் அதர்வத்தைக் கைப்பற்றிய பெருவைதிகர். இவ்வழி செல்லும்போது இக்குருநிலையைப்பற்றி அறிந்தோம். ஓய்வுகொண்டு செல்ல விழைகிறோம். அவரை அடிபணிந்து அருள்பெறும் நல்வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம்” என்றான்.
அவர்கள் திகைப்புகொண்டாலும் அச்சொல்லில் இருந்த முனைப்பே அதை ஏற்கச்செய்தது. கனகர் “எங்கள் குருநிலைக்கு வருக, அதர்வ வைதிகரே!” என்றார். வெளிறிய குறிய உடல்கொண்டிருந்த இரண்டாவது மாணவன் “இக்குருநிலையின் தலைவரே வாயிலில் வந்து எங்கள் ஆசிரியரை வரவேற்கவேண்டுமென்பது மரபு” என்றான். “அவ்வண்ணமே” என்று அஸ்வகர் திரும்பி உள்ளே ஓடினார். அத்ரிமுனிவர் தன் இரு மாணவர்களுடன் வந்து வாயிலில் நின்று வரவேற்று அதர்வ வைதிகரை உள்ளே அழைத்துச்சென்றார்.
மகாகாளர் என்று பெயர்கொண்டிருந்த அவர் வந்த முதல்நாள் முதலே அங்குள்ள அனைவராலும் வெறுக்கப்பட்டார். வெறுக்கப்படுவதற்கென்றே ஒவ்வொன்றையும் செய்பவர் போலிருந்தார். எப்போதும் மூக்கையும் காதையும் குடைந்து முகர்ந்து நோக்கினார். அக்குள்களை சொறிந்தார். அனைத்துப் பெண்களையும் அவர்களின் முலைகளிலும் இடைக்கீழும் நேர்நோக்கில் உற்றுநோக்கினார். அவர்கள் திகைத்து அவர் விழிகளை நோக்கினால் கண்கள் சுருங்க இளித்தார். உணவை இடக்கையால் அள்ளி வாயிலிட்டு நாய்போல் ஓசையெழ தின்றார். அவ்விரல்களை ஒவ்வொன்றாக நக்கியபின் இலையையும் வழித்து நக்கினார்.
உணவுண்ணும் இடத்திலேயே காலைத்தூக்கி வயிற்றுவளி வெளியிட்டார். அவ்வோசைக்கு அவரே மகிழ்ந்து மாணவர்களை நோக்கி சிரித்தார். அடிக்கடி ஏப்பம் விட்டு வயிற்றைத்தடவி முகம்சுளித்து மாணவர்களை கீழ்ச்சொற்களால் வசைபாடினார். அவர் இருக்குமிடத்திற்கே எவரும் செல்லாமலானார்கள். அவர் அங்கிருப்பதையே எண்ணவும் தவிர்த்தனர். குருநிலையின் வேள்விக்கூடத்திற்கும் சொல்கூடும் அவைக்கும் அவர் வந்தமரும்போது அவர் அமரக்கூடும் இடத்தை முன்னரே உய்த்தறிந்து அங்கிருந்தோர் விரல்தொடுமிடத்தில் சுனைமீன்கூட்டம் போல விலகிக்கொண்டனர்.
ஒருநாள் சுகந்தவாகினியில் நீராடி எழுந்த கனகர் மரவுரியை உதறும்போது எழுந்த எண்ணம் ஒன்றால் திகைத்து அசையாமல் நின்றார். உள்ளத்தின் படபடப்பு ஓய்ந்ததும் தன் தோழர்களிடம் திரும்பி “ஒருவேளை இவர்தான் நமக்காக வந்தவரோ?” என்றார். “யார்?” என்றார் அஸ்வகர். “இந்த அதர்வர். இவர் அபிசாரவேள்வி செய்யக்கற்றவர். நாம் எண்ணியது ஈடேற இவரை அனுப்பியதோ ஊழ்?” அவர் சொல்லிச்செல்வதற்குள்ளாகவே அவர்கள் அங்கு சென்றுவிட்டிருந்தனர். ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களே தங்களுக்குள் மறுத்துக்கொண்டார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.
கருணர் “ஆனால் இவர் இழிகுணத்தவர். இவரிடம் என்ன ஆற்றல் இருக்கக்கூடும்?” என்றார். அதன் மறுமொழியை அவரே அறிந்திருந்தார். கனகர் அந்த எதிர்ப்பால் ஆற்றல்கொண்டு “நமக்குத் தேவை இழிவின் ஆற்றல்தான். அந்த கல்லாக் காட்டாளன் முன் நம் சிறப்புகள் செயலற்றதைத்தான் கண்டோமே! அவனை வெல்ல இவரால்தான் இயலும்” என்றார். “இவர் கற்றது நாமறிந்த நால்வேதம் அல்ல. கிருஷ்ணசாகையுடன் அதர்வம் நம் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது கீழ்மையின் உச்சம் என்கிறார்கள். அதன் சொற்கள் எழுந்தால் பாதாளநாகங்கள் விழியொளியும் மூச்சொலியுமாக எழுந்து வந்து நெளியும். ஆழுலக இருள்மூர்த்திகள் சிறகுகொண்டு வந்து சூழ்வார்கள். இவர் அவர்களின் உலகில் வாழ்கிறார்.”
“ஆம், இவரே” என்றார் சூத்ரகர். “இவரைக் கண்டதுமே நான் அதைத்தான் நினைத்தேன்.” கர்த்தமர் “இல்லையேல் இவரே நம்மைத்தேடி வரவேண்டியதில்லை” என்றார். மிகவிரைவிலேயே அவர்கள் கருத்தொருமித்தனர். “ஆம், இவரிடமே பேசுவோம். இவர் விழைவதை நாம் அளிப்போம்” என்றார் அஸ்வகர். “நாம் என்ன விழைகிறோம்?” என்றார் சூத்ரகர். அதை அவர்கள் அதுவரை எண்ணவில்லை என்பதனால் சற்று தயங்கினர். “நாம் விழைவது வெற்றியை” என்றார் கனகர். “அந்தக் காட்டாளனை முழுதும் வென்றடக்கவேண்டும். அவன் இங்கு அடைந்துசென்ற வெற்றியின் கெடுமணமே நம்மைச் சூழ்ந்துள்ளது. தோற்று அவன் ஆணவம் மடங்குகையில் இந்த நாற்றமும் அகலும்.”
“அவனை வேதமே வெல்லவேண்டும்” என்று அஸ்வகர் கூவியபடி கனகரின் அருகே வந்தார். “வேதமென்பது மலர்மட்டுமல்ல, சேற்றை உண்ணும் வேரும்கூடத்தான் என அந்தக் கிராதன் அறியட்டும்.” கனகர் “ஆம், அதர்வம் காட்டாளர்களின் சொல்லில் இருந்து அள்ளப்பட்டது. ஆயிரம் மடங்கு ஆற்றல் ஏற்றப்பட்டது. காட்டுக்கீழ்மையால் உறைகுத்தப்பட்ட பாற்கடல் அது என்கின்றது பிரஃபவசூத்ரம். அந்த நஞ்சை அவன் எதிர்கொள்ளட்டும்” என்றார்.
அத்தனை விசையுடன் சொல்லப்பட்டதும் அவர்கள் அதன் வீச்சை உள்ளத்தால் உணர்ந்து அமைதிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்காமல் முற்றிலும் தனித்து நின்றிருந்தார்கள். கனகர் தன் மரவுரியை மீண்டும் உதறிவிட்டு “உங்களுக்கு ஒப்புதலென்றால் நானே அவரிடம் சென்று பேசுகிறேன்” என்றார். “ஆம், தாங்களே பேசுங்கள்” என்றார் சூத்ரகர். பிறர் தலையாட்டினர்.