உயர்திரு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். விஷ்ணுபுரம் விருது குறித்து அறிந்தேன்.
கல்யாண்ஜியோ, வண்ணதாசனோ, அவரின் இலக்கியம் மிக மென்மையானது. வெற்றிலையை மெத்தென்ற தொடையில் வைத்து நீவி நீவி அடியையும் நுனியையும் வலிக்காமல் கிள்ளி, களிப்பாக்கை அதோடு சேர்த்து, சுண்ணாம்பை சரியான அளவில் கட்டைவிரல் நகத்தால் நோண்டி எடுத்து வெற்றிலையில் தடவி புகையிலையை அதன் ஓரமாக வைத்து, மடித்து, மடித்து குறட்டுக்குள் அடைத்து கொள்ளும் இலாவகம். காரியமே கண்ணாக இயங்கும் புலன்களின் ஒருங்கிணைப்பு. கடைவாயில் களிப்பாக்கை சத்தமின்றி கடித்து சாறெடுத்து வெற்றிலை கூட்டணிக்கு வலு சேர்க்கும் ஒருங்கமைவு. இவை போல அத்தனை நேர்த்தியாக அழகியலை யதார்த்தத்தில் பின்னி பின்னி உலகம் முழுவதையும் அன்பின் பெருக்கத்தில் அணுகும் அவரின் கதை(மனப்)போக்கு அபாரமானது. அவருக்கு விருதளிப்பது மிக பொருத்தம்.
விருது என்றால் ஒருநாள் கூடி கலைந்து, நோக்கம் மறந்து, சுயதம்பட்டங்களுக்குள் வீழ்ந்து போவதல்ல. ஏன் விருது, எதற்காக விருது, என்றும் அவரின் இலக்கிய பணிகள் குறித்து விவாதித்தும், ஆவணப்படத்திலும் நேரிலும் அவரை கொண்டாடி, கொண்டாடி அளிக்கும் விருது விஷ்ணுபுரம் விருது.
இயல் விருது, விஷ்ணுபுரம் விருது, இவைகளெல்லாம் சாகித்ய அகாடமி விருதை போல முக்கியத்துவம் வாய்ந்தவை.
தங்களுக்கும் விருது பெற்ற எழுத்தாள கவிக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
கலைச்செல்வி.
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசனுக்கு விருது அளிக்கும் செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அவரை நான் எழுத்தாளர்களுக்குள் ஒரு பாடகன் என்றுதான் நினைக்கிறேன். அவருடைய கதைகள் எல்லாம் எனக்குப் பாடல்களாகவே தெரிகின்றன. பாடல்களுக்கு இருக்கும் மென்மையும் உருக்கமும் நஸ்டால்ஜியாவும் அவருடைய கதைகளிலும் இருக்கின்றன.
அவர் சொல்லும் உலகம் கடந்துபோன ஒன்று என்று சிலர் சொல்வார்கள். அப்படித்தான் எல்லாம் கடந்து போகிறது. அதையெல்லாம் மொழியிலே அழியாமல் வைப்பதற்காகத்தானே இலக்கியத்தை எழுதுவது
சபரிகிரிநாதன்
***
அன்புள்ள ஜெயமோகன்
வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி மனம் நிறைய மகிழ்ச்சியை அளித்தது. தாமிரவருணியின் குளிரும் பொதிகைத்தென்றலின் மணமும் கொண்ட எழுத்து அவருடையது. நொய்மையான மனம் கொண்டவர்கள் அவருடைய கதாபாத்திரங்கள். ஆகவே அவர்கள் நுட்பமான விஷயங்களை அறியமுடிகிறது. அவரும் அப்படித்தான். எங்கும் எவரிடமும் போய் அவரெல்லாம் நிற்க முடியாது. விருதும் பட்டமும் அவரைத்தான் தேடிவந்தாகவேண்டும். நீங்கள் செய்திருப்பது மிகச்சிறந்த எழுத்தாளருக்கு மிகச்சிறந்த கௌரவம் வாழ்த்துக்கள்
சுப்ரமணியம்
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசன் என் ஆத்மாவுக்கு மிக நெருக்கமான எழுத்தாளர். அவருடைய சின்னுமுதல்சின்னு வரை நான் பலமுறை வாசித்த நாவல். மிக ஆரம்பத்தில் எதற்கு இத்தனை செய்திகளைச் சொல்கிறார் என்று தோன்றியது. கடைசியில் மெதுவாக அவர் சொல்வது அந்தச் சின்னச்சின்ன விஷயங்களைத்தான் என்று புரிந்தது. அதுதான் கதை என்று தெரிந்ததுமே வாழ்க்கையையும் அப்படிப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் வண்ணதாசன் அளிக்கும் அனுபவம்
மகேஷ்