வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5

maxresdefault

அன்புள்ள ஜெ ,

 

வண்ண தாசன் அவர்களுக்கு விஷ்ணுபுர விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி.

என் சிறுவயது நாட்களை எண்ணிக்கொள்கிறேன், ஆழ்வார்திருநகரி,நாங்குநேரி, பாளை,  என்று தாமிரபரணி ஆற்றின் கரைகள் தான் இன்றுவரை என் சொர்க்கபுரி, விளையாடி, குளித்து, களைத்து, உடலில் சிராய்ப்பு ஏற்படாமல் வீடு திரும்பிய நாட்கள் அரிது, ”சைபால்”  தேக்கப்படாத என்   முட்டியோ, முழங்காலோ நான் பார்த்ததே இல்லை,  ஆனாலும் இன்றுவரை மனம் முழுவதும் சுற்றிக்கொண்டிருப்பது என்னவோ ஊரில் தான்.

 

 

இப்படி விட்டுவிட்டு வந்த அத்தனை அனுபவங்களையும், தன கதைகளின் மூலம் எனக்கு மீட்டு தந்தவர் என்கிற முறையில் வண்ண தாசன் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்,

 

 

மென்மையான கதை சொல்லி என்கிற விமர்சனம் அவர்மேல் இருக்கலாம்,  நிஜத்தில் ஒவ்வொருவரும் பரபரப்பும் பதற்றமும், ‘செயல்படுதல்’ என்கிற பெயரில் ஆக்ரோஷமான ,கொந்தளிப்பான   மனோநிலையும்  கொண்ட மனிதர்களாவே இருக்கிறோம்,  வண்ணதாசன், போன்ற ஒரு படைப்பாளி தன படைப்பின் மூலம்,  நம்மில் இருக்கும்  மென்மையான பகுதியை தொட்டு எடுக்கிறார் என்றால், அது , அவர் நமக்குள் செய்யும்  நல் மாற்றம் தானே.

 

 

”ஒளியிலே தெரிவது” தொகுப்பை வாசித்து நான் அப்படியான அனுபவங்களையே மீட்டுக்கொண்டேன்,  ‘ அருணாசல காந்தி’ யும், செண்பகா என்கிற செண்பக அக்காவும், என் கை பிடித்து  அழைத்து சென்ற என் பக்கத்து வீட்டு அக்காவின் மாற்று பெயர்கள் தான்.

இந்த கதைகளின் மூலம் என்னுள் இன்னும் இருக்கும் அரை டவுசர் பையனை காண முடிவது ஒரு காலாதீத அனுபவம் அல்லவா.

 

 

இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் பெரும்பாலும் , ‘ பின்னால் திரும்பி பார்த்து, நினைவுகளை அசை போடும்’ கதைகள் . பெரும்பாலும் இந்த ‘கதை’ எனும் கருவியை வைத்துக்கொண்டு இதனூடாகவே, என்னுள் இருக்கும்  என் கிராம வாழ்க்கையை வாழ்ந்துவிட கிடைத்த பரிசு என்பேன்.

 

 

அதே போல் ”சிநேகிதிகள்” கதையில்  வரும் நாச்சியாரும்,, கிருஷ்ணம்மாவும், இன்றுவரை தாமிரபரணி ஓடும் கரை ஊர்களில் காணக்கிடைக்கும், மனுஷிகள்.

கடந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போது , தோளில் ஈரமான துவைத்த துணியை, சுமந்து வந்த நடு வயது பெரியம்மாக்களை காணுகையில், இவர்களுக்கும் ”சொல்ல’  ஏதாவது காதல் கதை இருக்குமே என்று தான் நினைத்துக்கொண்டேன்,

 

 

இப்படி ஒவ்வொரு கதையிலும் நான் தனிப்படட முறையில்   ஒரு ”ஊர் வாழ்க்கை” வாழ, மனதுக்கு அணுக்கமாக இருந்த படைப்புகளுக்கு நன்றியும் வாழ்த்தும்.

 

 

என்றும் அன்புடன்..

 

சௌந்தர் 

சத்யானந்த யோகமையம்

சென்னை

*

 

அன்புள்ள ஜெ

 

வண்ணதாசனின் கதைகளை வாசிக்க ஆரம்பித்து இருபதாண்டுக்காலம் ஆகிவிட்டது. இன்னமும் வாழ்க்கையை வெவ்வேறு நிறங்களில் சொல்லிக்கொண்டே இருக்கும் கதைகளாகவே அவை என்னுடன் இருந்துகொண்டிருக்கின்றன. போய்க்கொண்டே இருப்பவளாகிய ஜூடி அன்னத்தை நினைத்துக்கொண்டேன். இன்று வரை அப்படி எத்தனை போய்க்கொண்டே இருக்கும் பெண்களை நான் கண்டிருக்கிறேன். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இரண்டாவது தலைமுறையாக அவர்களைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

 

மனித வாழ்க்கை ஒரு அர்த்தமற்ற இழப்பு. ஒரு பெரிய துயரப்பாடல். அதைச் சொல்ல எப்போதும் கண்களில் ததும்பிய கண்ணீருடன் ஒரு கலைஞன் வேண்டும். அவன்தான் வண்ணதாசன்.

 

ரவி முருகேசபூபதி

*

அன்புள்ள ஜெ.

 

வணக்கம்.   உங்களோடு தினமும் தொடர்பில் இருப்பவன் நான். இணையத்தில். வாசிப்பு அயர்வு தரும்போது யூ.ட்யூப்பில் உங்கள் பேச்சுக்களைக் கேட்பவன். சமீபத்தில் கேட்டது காந்தீயம் தோற்கும் இடங்கள்.

 

 

சொல்லப்போனால் உங்கள் எழுத்தை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பவன்.  நான் ஒரு யோகா மாணவன். வருடா வருடம் மதுரை காந்தி மியூசியத்தில் எங்கள் யோகா மாணவர்கள் காந்தி ஜெயந்தி கொண்டாடும்போது அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு ஒரு சிறு சொற்பொழிவு ஆற்றுவேன். அதற்குப் பெரிதும் உதவுவது தங்களின் “இன்றைய காந்தி”. இந்த 2.10.16ல் நான் பேசியது “காந்திஜியின் எளிமை”. உங்களின் கருத்துக்களைத்தான் சொன்னேன். ஞாபகமாகக் கடைசியில் அண்ணலைப் பற்றிய ஜெயமோகன் அவர்களின் இந்தப் புத்தகத்தை தவறாமல் படியுங்கள் என்றும் சொல்லி விட்டேன். மனசாட்சி கேட்டால்தானே…!
நம் வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுக்கப்பட்டுள்ளதை உங்கள் இணையத்திற்குப் பிறகு முகநூலில் அறிவித்த முதல் ஆள் நான்தான். என்ன எழுதினேன் என்பதை இத்துடன் இணைத்துள்ளேன். பிடித்தால் சந்தோஷம்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை

எனக்கு மிகவும் பிடித்த மனநெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்…அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம்.

 

பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்…. செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்…அதை அவர் சொல்லியிருக்கும் அழகிருக்கிறதே…அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை…அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார்.அவருக்கு விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று…!

 

உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும். எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசளிக்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது.

.
ஆனால் இப்படித் தகுதியாய்விருது பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது…விருதினால் அவருக்கும் பெருமை…விருதுக்கும் பெருமை…!!! நான் இப்படிச் சொல்வதை நிச்சயம் கல்யாண்ஜி ஏற்றுக் கொள்ள மாட்டார். அவரின் பெருந்தன்மை அப்படி…! பண்பான மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்….

 

 உஷாதீபன்
முந்தைய கட்டுரைவெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஏழரைப்பொன்