[ 3 ]
பிச்சாண்டவருடன் நடப்பது எளிதல்ல என்று வைசம்பாயனன் கண்டுகொண்டான். மலைப்பாதைகளின் சுழலேற்ற வழியில் அவர் பருந்தென ஏறிச்சென்றார். பாறைகளில் விட்டில்போல தாவித்தாவி அமர்ந்தார். அவர் இளைப்படைவதை பார்க்கமுடியவில்லை. அவனுக்காகவே அவர் அவ்வப்போது நின்றார். அவன் மூச்சிரைக்க அவரை அணுகி நின்றபோது அவர் இயல்பாக தொலைவை நோக்கியபடி சிலைத்துக் காத்திருந்தார். அவர் உடலில் மூச்சோடுவதே தெரியவில்லை.
அன்று முழுக்க அவன் அவருடன் பயணம்செய்தும் ஒரு சொல்லேனும் அவரிடமிருந்து எழவில்லை. அவருடைய முப்புரிவேலின் எலும்புமணிகளின் ஓசை அவர் குரலென ஒலித்து அவனை அழைத்துச்சென்றது. நீரோடையில் அவர் கையள்ளிக் குடிக்கும்போது பக்கவாட்டில் அவரது முகத்தை நோக்கினான். சடைத்திரிகளாகத் தொங்கிய தாடியில் ஒட்டாமல் உருண்ட நீர்மணிகளை தலையை உதறி தெறிக்கவைத்தபோது காட்டுவிலங்கு போலிருந்தார். விலங்கு என்பதை அவன் கற்ற குருநிலைகளில் தன்னை அறியாதது, எனவே பிரம்மம் என்பதை உணரவியலாதது என்றே சொல்லியிருந்தனர். புலன்களில் விடுதலையின்றி விலங்கிடப்பட்டது. முற்றிருளே அதன் முதற்குணம்.
ஆனால் அவரைப் பார்த்தபின் எதிரே வரும் விலங்குகளை நோக்கியபோது அவை முழு விடுதலைகொண்டவை என்று தோன்றியது. காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள்கள் போலிருந்தன அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. தானற்ற ஒன்றை கணம்தோறும் உணர்ந்து திகைத்து நெஞ்சழியவில்லை. விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக் கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் என்ன?
அச்சொல்லின்மையே இயல்பென்று தோன்றியது. சொல்லெடுக்கத் தொடங்கினால் விலங்கு உருகி பிறிதுருக்கொண்டு மானுடனாகிறது. மானுடன் அவனுக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. அவன் கற்றவற்றுக்கும் தேர்ந்தவற்றுக்கும் அப்பால் சொல் என ஏதுமில்லை. அவன் அறியவேண்டியது சொற்களைத் திறக்கும் முறை. சொல்லின்மையில் இருந்து சொல்லெழும் வகை.
அவரது காலடிகளை அவன் புழுதியில் நோக்கிக்கொண்டு தொடர்ந்தான். அவை மண்ணில் சீராகப் பதிந்திருந்தன. ஓவியன் இட்ட தடங்கள் போல. அதன்பின் தன் கால்தடத்தை நோக்கினான். அவற்றில் வலக்கால் அழுத்தம் மிகுந்திருந்தது. சற்றே பக்கவாட்டில் விலகியிருந்தது இடக்கால். அத்தனை மானுடரும் அப்படித்தான் நடக்கிறார்கள் என அப்போது உணர்ந்தான். உடலின் எடைக்கும் நிலைக்கும் ஏற்ப கால்களை விலக்கியமைத்து நடப்பது மானுட இயல்பு. அவன் காலடிகளில் அவன் உள்ளம் தெரிந்தது. மேலே மேலே எனத்தாவி எழும் முதற்கால். அதற்கு நிலையமைத்து அளித்துத் தொடரும் இடக்கால். மானுடர் அனைவரும் காலடிகளால் மண்ணில் தங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
தன் காலடிகளில் பதிந்திருந்த உளவிசையைக் கண்டதுமே அதனுடன் இணைந்த தயக்கத்தையும் கண்டுவிட்டான். அவரது காலடிச்சுவடுத் தொடரை அணுகியும் விலகியும் அது உடன் சென்றது. முற்றிலும் நிகரான இரு தடங்கள் முற்றிலும் இணையாகப் பதிந்து முன் சென்றன. நிகர்நிலை கொண்ட உடல். தலையில் நெய்க்குடம் தளும்பாது செல்லும் ஆய்ச்சியின் இயல்பான சீரசைவுகள். அப்போது அவன் அந்தப் புலியை பார்த்தான். அவர்களின் காலடியோசையைக் கேட்டு அது காற்றுபட்ட தழலென சற்றே வளைந்து எழுந்தது. வாய்திறந்து வெண்கோட்டுப் பற்கள் தெரிய ஓசையின்றி சீறியது. சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற விழிகள் நோக்கற்ற வெறிப்பு காட்ட சுருட்டுப்புழு என சுருண்டு பின்னால் எழுந்து முன்னங்காலை சற்று தூக்கி ஆட்டியது.
அவன் நின்று அதை நோக்க அவர் இயல்பாக கடந்துசென்றார். அது ஓசையில்லாது தாவி நீண்டு சரிந்திருந்த மூங்கில்கழை ஒன்றில் ஏறி அதன்மேல் தூக்கி வளைந்த வாலுடன் நடந்துசென்றது. ஒவ்வொரு காலடியும் ஒற்றைக்கோட்டில் ஒற்றி ஒற்றி விழ அதற்கேற்ப இடை நெளிந்தசைய அது மூங்கில்நுனிக்குச் சென்று வால்சுழல மறுபக்கம் புதருக்குள் பாய்ந்து மூழ்கி மறைந்தது. அதன் விழிப்பாவை எஞ்சியிருக்கையிலேயே அது அங்கிருந்ததா என வியந்தது நெஞ்சம்.
அவர் முன்னால் சென்றுவிட்டிருப்பதைக் கண்டான். பாய்ந்து அவரைத் தொடர்ந்தோடி அணுகினான். அவர் அவன் நின்றதையும் வந்ததையும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. எந்நிலையில் எங்குள்ளது அவர் உள்ளம் என்பதை அவரைத் தொடர்கையில் அறியக்கூடவில்லை. அவர் தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார் என்பதை அவன் அவ்வப்போது எண்ணிக்கொண்டான். ஆனால் அவர் அதை அறிவார் என்பதை உள்ளம் நன்குணர்ந்திருந்தது.
அன்று மாலைவரை அவர்கள் நடந்தனர். வெயில் மயங்கத்தொடங்கியபோது அவர்கள் ஒரு சிறுகுன்றின் சரிவை அடைந்திருந்தனர். அதன் மேல் இரு பெரும் விரல்களால் எடுத்து வைக்கப்பட்ட கழற்சிக்காய் என ஒற்றைக்கரும்பாறை அமைந்திருந்தது. அவர் குன்றில் ஏறத்தொடங்கியதும் அவனும் தொடர்ந்தான். அப்பாறையை ஒட்டி நின்றிருந்த ஆலமரத்தின் பொருத்துக்களில் கால்வைத்து ஏறி அவர் மேலே சென்றார். அவன் மேலேற முடியாமல் மரக்கிளைநுனியில் தவித்தபோது அவனைத் திரும்பிப்பார்க்கவில்லை.
கைகளை விட்டுவிட்டு அவன் மழுங்கலான பாறைப்பரப்பை நோக்கி ஓணானைப்போல குதித்தான். மார்புக்கூடு அறைபட விழுந்து சறுக்கியிறங்குவதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவன் கைவிரல்களாலும் கால்விரல்களாலும் கவ்விக்கொண்டு தொற்றிநின்றான். ஒரு விரிசலில் வலக்கால் கட்டைவிரல் பொருந்தியதும் விழுந்துவிடமாட்டோம் என உள்ளே உலைந்த தன்னிலை உணர்ந்தது. நிலைப்படுத்திக்கொண்டபின் உடலை மேலே தூக்கி தவழ்ந்து ஏறினான்.
எழுந்து நின்றபோது மார்பும் வயிறும் சிராய்த்து அனல்பட்டதுபோல் எரிந்தன. அவர் பாறைமேல் நின்று மேற்கே விழத்தொடங்கியிருந்த சூரியனை நோக்கினார். அவன் அவர் அருகே நின்று செங்கதிர் பழுத்துக்கொண்டிருப்பதை பார்த்தான். கீழே காட்டில் குரங்குகள் எக்காளமிட்டன. போர்க்களமொன்றிலிருந்து எழும் அம்புகள் போல பறவைகள் பீரிட்டெழுந்து சுழன்றிறங்கின. காடு மெல்ல இருண்டு அடங்கியது. பறவைக்குரல்களால் ஆனதாக மாறியது. எரியும் காட்டிலிருந்து சருகுக்கரிகள் போல பறந்து அமைந்தன சிறுகருங்குருவிகள்.
இறுதிப்பறவை எழுந்து விழுந்ததும் சூரியவட்டம் முற்றணைந்தது. எஞ்சிய ஒளியில் பிச்சாண்டவர் ஊன்றிய சூலமும் கையில் கப்பரையுமாக நிழலுருவெனத் தெரிந்தார். பாறைப்பரப்பில் அமர்ந்து அவனிடம் செய்கையால் ஆடைகளைக் கழற்றும்படி சொன்னார். அவன் தன் மேலாடையையும் இடையிலணிந்திருந்த பருத்தியாடையையும் கழற்றி அவரிடம் அளித்தான். அவர் அவன் அணிகலன்களை விழிசுட்ட கழுத்திலணிந்த ஒற்றைமணி மாலையையும் கையிலிருந்த சிற்றாழியையும் காதிலிருந்த ஒற்றைமலர் கடுக்கன்களையும் கழற்றி துணிக்குமேல் போட்டான்.
முழுவெற்றுடலுடன் அவர் முன் நின்றபோது முன்னரே அவ்வாறுதான் நின்றிருந்தான் என்றே உணர்ந்தான். அவர் அருகே ஓடிய கருகிய மாணைக்கொடியை இழுத்துப்பறித்து சுருட்டி துணிகளுடன் வைத்தார். இரு கற்களை உரசி பொறி எழுப்பி அதை பற்றவைத்தார். தயங்கி எழுந்த தழல் துணியை பொசுங்கவைத்து ஊறிப்பரவி நாவெழுந்தது. அதன் அழலாட்டம் எழுந்ததும் அவர் அவனிடம் “அமர்க!” என்றார். அவர் குரலையே அவன் மறந்துவிட்டிருந்தான் என அப்போது உணர்ந்தான்.
அவன் கால்கோட்டி அமர்ந்ததும் உரத்த குரலில் “ஓம்!” என்றார். அவன் எதிர்முரலல் என அதை மீட்டொலித்தான். “ஓம்! ஓம்! ஓம்!” என அவர் முழங்கிக்கொண்டிருந்தார். அவ்வொலி எழுந்து கார்வைகொண்டு சூழ்ந்தது. இயல்பாகத் திரிபுகொண்டு “சிவம்!” என்று ஆயிற்று. “சிவமேயாம்!” என்று முற்றியது. “ஆம்! ஆம்! ஆம்!” என ஆகி அமைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த இருளில் அந்த ஒலியின் கார்வை நிறைந்திருந்தது.
அவர் அவனருகே கிடந்த ஒரு தட்டைக் கல்லைச் சுட்டி அதை எடுத்து தன் முன்னால் வைக்கும்படி செய்கையால் சொன்னார். அவன் அதை எடுத்து வைத்ததும் பிறிதொரு உருளைக்கல்லைச் சுட்டி அதை எடுத்துவைக்கும்படி விழிகளால் ஆணையிட்டார். அவன் கல்மேல் கல்வைத்து சிவத்தை நிறுவினான். எரிந்த அனல் முற்றவிந்துவிட்டிருந்தது. அவர் அதில் ஒரு சிட்டிகை அள்ளி சிவக்குறிமேல் பூசினார். எஞ்சியதை அவன் நெற்றியிலிட்டு “சிவமாகுக!” என்றார். அவன் கைகூப்பி “ஓம்” என்றான். அவர் தன் முப்புரிவேலை அவன் தலைமேல் வைத்து “சிவமேயாம்” என்றார். அவன் கண்களை மூடி அச்சொல்லை தன்னுள் நிறைத்துக்கொண்டான்.
[ 4 ]
அன்று கருநிலவு. கதுப்புகொண்ட இருளில் பிச்சாண்டவரின் அருகே வைசம்பாயனன் அமர்ந்திருந்தான். அவர்களின் தலைக்குமேல் ஒவ்வொன்றாக விண்மீன்கள் எழுந்து வந்து செறிந்துகொண்டிருந்தன. சற்றுநேரத்தில் கீழே இருந்த காட்டின் கிளைவளைவுகளைக்கூட பார்க்கும்வகையில் விழிகள் ஒளியடைந்தன. காட்டிலிருந்து இலைவெம்மையும் தழைமணமும் கொண்ட காற்றும் ஒலிகள் இணைந்து உருவான மீட்டலும் எழுந்து வந்துகொண்டிருந்தன.
“அங்கு தெரியும் அந்த விண்மீன்களை வேதச் சொற்கள் என்க! இங்கு வந்துகொண்டிருக்கும் அந்த ஓசையை வேதம் எனக்கொள்க! வானை அவை அறிவுறுத்துகின்றன. காட்டை அவை கொண்டுவந்து அளிக்கின்றன. அக்குறிகளை தொட்டுத்தேர்ந்து வழியமைப்பவன் வானை அறிகிறான். காட்டை அடைந்து அமைகிறான்” என்றார் பிச்சாண்டவர். “வேதமென்பது ஓர் அழைப்பு. பிறிதொன்றுமில்லை. ஓர் அறைகூவல். பிறிதொன்றுமில்லை. ஒரு கனவு. ஒரு தொடுகை. ஒரு முன்நினைவெழல். பிறிதொன்றுமில்லை.”
“இன்று இங்கிருக்கும் எளிய மாந்தர் முன்பு எங்கோ முழுநிலை கொண்டிருக்கக்கூடும் என்பர் முன்னோர். அங்கு அவர்கள் இழந்து இங்கு போந்ததையே வந்து நினைவூட்டுகிறதுபோலும் வேதம். வேதச்சொல் கேட்டவர் எங்குமுள்ளனர். எக்குடிக்கும் எவ்வுயிர்க்கும் வேதம் மறுக்கப்பட்டதில்லை. மெய்வேதமென்று ஒன்றில்லை. வேதமெய்மை என்பதே உள்ளது. மெய்யுணர்ந்தோர் இங்குள சொல்லெல்லாம் வேதம் முளைத்த காடென்றுணர்வர். எச்சொல்லில் இருந்தும் அங்குள உண்மையையே சென்றடைவர். வேதப்பூசலிடுபவர் அறிய ஒண்ணாத மெய்மையால் கோக்கப்பட்டுள்ளது வேதம். வேதமறியாதவரிடம் இரையிடம் புலி என விளையாடுகிறது வேதம்.”
“சருகினை எரியென தழுவிக்கொள்வதே வேதம் என்றுணர்க!. எஞ்சுவதே நீறு. நீறாவது சிவம்” என்றார் பிச்சாண்டவர். “முன்பு பனிமலையுச்சியில் எங்கோ, படர்ந்த காட்டின் ஆழத்தில் எங்கோ எவரோ உணர்ந்த வேதச்சொல் ஒன்று அரக்குமரக்காட்டில் அனலென விழுந்தது. அம்முதற்சொல் சிவம். அதிலிருந்து முளைத்தன சைவப்பெருநெறிகள் பல. உண்மை ஒன்றே, உணர்வோர் கொள்வதே வேறுபடுகிறது. அன்னம் ஒன்றுதான், வயிற்றுக்கும் சுவைக்குமென அது சமைக்கப்படுகிறது.”
அம்முதற்சொல்லைப் பெற்றவன் எவன் என்று சிந்தைநீட்டி தேடிச் செல்வது எவராலும் இயலாது. அவன் முற்றிலும் தனித்தவனாக இருந்திருக்கவேண்டும். முழுமையாக தன்னை திறந்திருக்கவேண்டும். எரிவிண்மீன் இறங்கிய குளமென அவன் அகம் கொந்தளித்திருக்கவேண்டும். அடைந்தபின் அவன் இங்கு எஞ்சிய தருணத்தில் அச்சொல்லை நாச்செவி வடிவுக்கு நமக்கு அளித்திருக்கவேண்டும். சிவம்! முற்றிலும் பொருளற்ற ஒலி. அவ்வொலிக்கு நாம் அளிக்கும் அத்தனை பொருள்களும் அது எழுந்தபின் சென்றணைந்தவையே. தூயது, அருள்வது, எஞ்சுவது, தொடர்வது, துணைப்பது, சிவந்தது, எரிவது, சினப்பது, வெல்வது, விளைவது, வினையாவது, ஆவது, அழிப்பது. அவ்வண்ணம் சொல்லிச்சென்றால் எஞ்சிய அத்தனை சொற்களும் அவ்வொரு சொல்லின் பொருளென்றே ஆகும்.
இன்றுள சிவநெறிகள் எவையெல்லாம் என ஒருவன் இந்நிலம் முழுக்க அலைந்தாலும் முற்றறிந்துவிடமுடியாது. அச்சொல் இங்குள அனைத்தையும் எரித்து தடம் பதித்தபடி சென்றபின் பல்லாயிரம் தலைமுறைகள் பிறந்திறந்துவிட்டன. மொழி பல்லாயிரம் முறை அலையிளகி அமைந்துவிட்டது. நூறாயிரம் தெய்வங்கள் உரு சூடியிருக்கும், உடை களைந்திருக்கும். இங்கே வடதிசையில் நாமறிந்தவை ஆறு பெருநெறிகள். பாசுபதம், காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம். பிற ஐந்தும் முதலொன்று பிரிந்து உருவானவை என்பார்கள். இருநிலை என்றும் ஒருநிலை என்றும் மேலும் அவை பிரிந்து விரிந்து சென்றுகொண்டிருக்கின்றன.
காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். அறுவகை அறிதலாக நின்றுள்ளது அது. அறிதற்கரியது அவ்வண்ணம் இங்கு ஆனது. அறிந்து உணர்ந்து கடந்து ஆகி அதை அடைந்தவர் தூயர். அவர்களின் சொல்விழுந்த காற்றில் கால்விழுந்த மண்ணில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம்.
விண்மீன்கள் நீண்ட இருள்சரடுகளில் சிலந்திகள்போல தொற்றிச் சறுக்கி இறங்கி அருகே வந்து அவர்களைச் சூழ்ந்து நின்றன. கைநீட்டி அவற்றைத் தொட்டு ஆட்டிவிடமுடியும் என்று தோன்றியது. ஊதினால் அவை அசையும் என்று. மெல்ல மின்னி மின்னி அவை உரையாட முயல்கின்றன என்று. பிச்சாண்டவர் தாழ்ந்த தனிக்குரலில் சொன்னார் “முன்பொருநாளில் திரிகர்த்தநாட்டில் ஏகவீரன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். தன் கோல்கொள்ளும் மைந்தனுக்காக ஏழாண்டுகாலம் அவனும் தேவியும் தவம் செய்தனர். அவ்வேட்டல் விளைந்து பிறந்த மைந்தனை நெஞ்சோடணைத்து சத்ருஞ்சயன் என்று பெயரிட்டனர்.”
கட்டற்ற உளவல்லமையால் ஆனவனாக இருந்தான் சத்ருஞ்சயன். மூன்று மலைப்பள்ளங்களால் ஆன அந்நிலத்தை இளமையிலேயே புரவியேறிப் பாய்ந்து கடந்தான். ஆறுநெறிகளையும் கற்றுக்கடந்தான். அறிவென்பது ஆணவமே என்று சூடியிருந்தான். அவனை அன்னையர் தொட்டு வழிபட்டனர். மூத்தவர் எண்ணி பெருமிதம் கொண்டனர். கன்னியர் காதல் கொண்டனர். இளையோர் வாழ்த்தி பின்தொடர்ந்தனர். ஆணவம் எளியோருக்குமேல் இறுதிவெற்றியை அளிக்கிறது. வெற்றி மேலும் ஆணவமாக ஆகிறது. ஊழ்வல்லமை இல்லாதவர் அந்த வலையில் இருந்து வெளிவருதல் இயலாது.
சத்ருஞ்சயனுக்கு அதற்கு அருளிருந்தது. ஒருமுறை அவன் மலைச்சாரலில் சென்றுகொண்டிருக்கையில் அங்கு பாறையடியில் உடலெங்கும் சாம்பல் பூசிய சடைமுனிவர் ஒருவர் சருகில் அனலிட்டு ஊன்சுட்டுக்கொண்டிருப்பதை கண்டான். புரவியிலிருந்து இறங்கி அது என்ன என்று பார்த்தான். சேற்றால் பொதியப்பட்ட எலி அது. உடல் உலுக்கி எழுந்த ஒவ்வாமையுடன் “இழிமகனே, என்ன செய்கிறாய் நீ? மானுடர் உண்ணுதற்குரியதா அது?” என்று கூவினான். பாய்ந்துசென்று காலால் அதை உதைத்து அப்பால் தள்ளியபின் நின்று மூச்சிரைத்தான்.
அவர் திரும்பி நோக்கி கரியபற்களைக் காட்டி புன்னகை செய்து “அதை உண்பதற்கு முன் சிவத்தில் மும்முறை கழுவுவேன்” என்றார். அவன் குமட்டலில் உடல் அதிர முகம் சுளித்து “உண்ணற்குரிய உணவில்லை என்றால் இறப்பதே மேல்…” என்றான். “இங்குள்ள அனைத்தும் உண்ணற்குரியவையே. ஏனென்றால் உண்பதும் உணவே” என்றபடி எழுந்தார். அவனை நோக்கிச் சிரித்து “ஊன் அனைத்தும் ஒன்றே, மைந்தா” என்றார். தன்னை அவர் சீண்டுவதாகவே அவன் எண்ணி உளம் கொதித்தான். அவர் முப்புரிவேலை எடுத்துக்கொண்டு “நீ செல்க! நான் இன்னொரு எலியை இங்கேயே பிடிக்கமுடியும்” என்றார்.
அவனுள் அக்கணம் என்ன நிகழ்ந்ததென்று அவன் அறியவில்லை. வாளை உருவி அவர் காதைச் சீவி நிலத்தில் இட்டான். சிப்பிபோல புழுதியில் விழுந்து கிடந்தது அது. குமட்டலைக் காறித்துப்பி, “ஊனெல்லாம் உணவே என்றால் இதைச் சுட்டு உண், கீழ்மகனே. இதுவும் ஊனே” என்றான். அவர் தோள்களில் குருதி சொட்டி வழிந்தது. குனிந்து அதை நோக்கி “ஆம், அதுவும் ஊனே” என்றார். அவனை நோக்கி புன்னகைத்து அதை எடுத்து எலியைச் சுட்டுக்கொண்டிருந்த குச்சியில் கொளுத்தி எரிநெருப்பில் காட்டலானார். அதன் மயிர்கள் பொசுங்குவதைக் கண்டதும் அவன் குமட்டி வாயுமிழ்ந்தான். நின்றிருக்கமுடியாமல் புரவியை பற்றிக்கொண்டான். கூசி நடுங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் திரும்பி ஓடினான்.
காட்டில் சற்றுத்தொலைவு சென்றபின் நின்று தன் தலையை கைகளால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். பற்கள் கிட்டித்து கழுத்துத்தசைகள் இழுபட்டு இறுகியிருப்பதை உணர்ந்தான். கண்கள் எரிந்து கலங்கியிருந்தன. “விளையாடுகிறானா? விளையாடுகிறானா?” என்று தனக்குள் உறுமிக்கொண்டான். இல்லை என்னை ஏமாற்றுகிறான். அது மானுடரால் முடியாது. எந்த விலங்காலும் முடியாது. ஆனால் அவனுள் ஏதோ ஒன்று அறிந்திருந்தது. மீண்டும் புரவியில் ஏறி திரும்பி விரைந்தான். தொலைவிலேயே அவன் ஊன்மணத்தை அறிந்தான். ஒரே கணத்தில் உடலை இழுத்துக்கட்டிய நரம்புகள் அனைத்தும் தளர குதிரைமேல் சடலமென அமர்ந்திருந்தான்.
அகல வருகையிலேயே அவன் கண்டுவிட்டான். அவர் அந்தக் காதை சுட்டு இலையில் பரப்பி வேலால் வெட்டிக்கிழித்து வாயிலிட்டு மென்று உண்டுகொண்டிருந்தார். அவர் காதிருந்த புண் குருதி திரிந்து சலமாகி சொட்டிக்கொண்டிருந்தது. தன்னுடலுக்குள் பிறிதொன்று புரள்வதை உணர்ந்தான். பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் ஒலி மண்டைக்குள் ஒலித்தது. குதிரை அவர் அருகே சென்று நிற்க அவன் அதன்மேல் விழித்தபடி அமர்ந்திருந்தான். வாயிலிட்டு மென்ற ஊனுடன் அவர் “சிவமேயாம்!” என்றார்.
அவன் பரிமேலிருந்து உதிர்பவனைப்போல அவர் காலடியில் விழுந்தான். மண்புழு மண் துளைத்து உட்புக முயல்வதுபோல புழுதித்தரையில் தலையை அழுத்திப் புதைத்தபடி நெளிந்தான். பின்னர் நினைவிழந்தான். விழித்தபோது அவனை நோக்கியபடி குனிந்திருந்தார். அவர் விழிகள் குழந்தைகளுக்குரிய தெளிவுகொண்டிருந்தன. “சிவம்நாம்” என்று அவர் சொன்னார். அவன் விசும்பியழுதபடி கைநீட்டி அவர் கால்களை பற்றிக்கொண்டான். சிறியவன் நான் என்று அவன் சொல்ல விழைந்தான். அவர் மீண்டும் “சிவம்நாம்” என்றார்.
வெடிப்போசையுடன் அச்சொல் திறந்துகொண்டது. அவன் உடல் அதைத் தாளாமல் வலிப்பு கொண்டது. அவன் அதிர்ந்த விழிகளுக்கு மேல் காடு நீர்ப்பாவை என அலையடித்தது. தன் இதழ்களை அவன் இறுகக் கடித்திருந்தான். குருதி ஊறி வாயை நிறைத்தது. சூடானது. உப்புச்சுவை கொண்டது. குழவியென அறிந்த முலைப்பாலின் இன்மணம் கொண்டது. தன்னிலை மீண்டபோது அவன் அதை சுவைத்து உள்ளுறிஞ்சி உண்டான்.
அவர் அவன் தோளைப்பற்றி எழுந்து அமரச்செய்தார். அவர் கையில் அந்த ஊனின் எச்சம் அப்போதும் எஞ்சியிருந்தது. அதை அவனிடம் நீட்டி “உண்க!” என்றார். அவன் அதை வாங்கி தன் வாயிலிட்டு மென்று உண்டான். அவன் நன்கறிந்திருந்த சுவை. அவன் கனவுகளை நிறைத்திருந்த சுவை. அவர் அவன் நெற்றியில் தன் முப்புரிவேலால் தொட்டு “சிவம்யாம்” என்றார்.
“அவன் அங்கிருந்தே அவருடன் சென்றான். அவர் ஒடுங்கிய இடத்திலிருந்து மேலும் நடந்தான். அவன் திரும்ப இடமில்லை. செல்ல முடிவிலி இருந்தது” என்றார் பிச்சாண்டவர். “மூன்று பெரும்பள்ளங்களை அவன் கடந்தான். விலக்கம், ஐயம், அருவருப்பு என மூன்றுருக்கொண்டது அச்சமே. இளையோனே, அச்சமென்பது என்ன? மானுடன் முடிவிலியை அஞ்சுகிறான். முடிவிலி நோக்கி எழும் இறப்பை அஞ்சுகிறான். இறப்பென்றாகும் நோயை அஞ்சுகிறான். நோய்கொள்ளும் உடலை அஞ்சுகிறான். உடலென்றான தன்னை அஞ்சுகிறான். அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”
“அச்சத்தை அறுத்தவனுக்கு அறிவு இனிதாகிறது. அகம் இனிதாகிறது. அனைத்தும் இனிதாகின்றன. இனிக்கின்றது எல்லையின்மை. இனிப்பிலிருந்து தொடங்குக! சுவையாகி வருக சிவம்!” பிச்சாண்டவர் சொன்னார். “இனியவனே, அன்னம் இனிது. அன்னத்தை உண்ணும் அன்னம் அறிவது அவ்வினிமை. அறிக, தன் குட்டியை மென்று உண்ணும் அன்னைஓநாயின் கண்கள் சொக்கும் சுவையை. தன் அன்னை உடலை உண்டு வளரும் குஞ்சுநண்டுகளின் கால்கள் கொள்ளும் துள்ளலை. தான் வாழும் இல்லத்தை உண்டு திளைக்கும் மலப்புழுக்களின் களியாடலை. சிவமாகுக அன்னம்!”
மீண்டும் இருளின் கறங்கொலி மட்டும் அவர்களைச் சூழ்ந்திருந்தது. வைசம்பாயனன் விண்மீன்களை நோக்கியபடி அமர்ந்திருந்தான். தன் உள்ளம் கொண்ட ஐயங்களை அவரிடம் கேட்கவேண்டுமென்று விழைந்தான். உரிய சொற்களைக் கோக்க முயன்று சலித்து அமைந்து நீள்மூச்சுவிட்டான். அந்த இயலாமையை நோக்கிக்கொண்டிருந்தபோது அது ஆணவமே என்று உணர்ந்தான். உரியசொற்கள் என்பவை என்ன? அவ்வுணர்வு வெளிப்படுமென்றால் அழுகையோ தேம்பலோ கூட அதற்குரியவை அல்லவா? சொல்லி அவரை வெல்ல முயல்கிறேன். அவர் முன் சொல்லத்தெரிந்தவன் என நின்றிருக்க விழைகிறேன்.
தன்னை இழுத்து அவர் முன் பணியவைத்தான். எந்தத் திட்டமும் இல்லாமல் நாகொண்ட சொற்களை அவ்வண்ணமே சொல்லலானான். “ஆசிரியரே, நான் கற்றவற்றில் இழந்தது என்ன? ஒவ்வொன்றையும் பிறிதொன்றை இழந்தே பெறுகிறோம் என்றால் கல்வி என்பது தொடரிழப்பும் அல்லவா? வேதம்நிறைந்த தொல்காடுகள் அனைத்திலும் இருந்து ஒவ்வொரு நாளும் உதிர்ந்துகொண்டிருப்பது என்ன? வேதச்சொல் சூடி, வேதமெய்ப்பொருள் உசாவி அங்கு தவமொன்றே வாழ்வெனக் கொண்டு இருந்து மறைந்த என் முன்னோர் தோற்ற இடமென்பது என்ன?”
அச்சொற்கள் எழுந்ததுமே அவையே உகந்தவை என அவன் உணர்ந்தான். அக்கணம் வரை அவன் அவற்றை உணர்ந்ததில்லை. ஆனால் எங்கோ அடிப்பாறைவெடிப்புக்குள் ஊறிய நீர் என அவை இருந்திருக்கின்றன. அவர் சொல்லப்போகும் சொற்களுக்காக அவன் காத்திருந்தான். இக்கணம் நான் காத்திருந்தது. நான் கற்ற ஒவ்வொன்றாக உதிர்த்து உள்ளம் ஒழிந்து வந்து அமர்ந்திருந்தது இதற்காகவே.
“உங்கள் குருநிலைகளை நான் கண்டிருக்கிறேன்” என்றார் பிச்சாண்டவர். “அவை காட்டுக்குள் உள்ளன. ஆனால் காட்டைச் செதுக்கி வெளியாக்கி அவற்றை அமைத்துள்ளனர். அங்கு அக்காட்டிலிருந்தே விதைகொண்டுசென்று நிழல்மரங்களை நட்டு வளர்த்திருக்கின்றனர். செடிகளைப் பேணி மலர்த்தோட்டமிட்டுள்ளனர். காட்டுப்பசுக்களை மெருக்கி பாலூற்றுகளாக்கியிருக்கின்றனர். அங்குள்ள மான்கள் வேதச்சந்தத்தில் கத்துகின்றன. அங்குள்ள குடில்களின்மேல் அமர்ந்து கிளிகள் வேதச்சொற்களை கூவுகின்றன. அக்குருநிலைகள் வேலியிடப்பட்டு காட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. இளையோனே, அவை இழப்பது சூழ்ந்திருக்கும் பசும்பெருங்காட்டைத்தான்.”
“நாளும் பலர் அக்குருநிலைகளை விட்டு கிளம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வந்த பாதையை மீண்டும் தேர்ந்து இன்னொரு குருநிலை நோக்கி செல்கிறார்கள். ஒற்றைச்சிலந்திவலையில் சிக்கியிருக்கும் சிறுபூச்சிகளே அத்தனை குருநிலைகளும் என்று அறிக!” பிச்சாண்டவர் சொன்னார். “அவர்களில் எவரோ சிலர் காட்டுக்குள் செல்கிறார்கள். சொல்வளர்காட்டைச் சூழ்ந்திருக்கும் ஒலிதளர்பெருங்காட்டை காண்கிறார்கள். அவர்களுக்கு முன்பு அவ்வழி சென்றவர்களின் காலடிச்சுவடுகளால் ஆன பாதையைத் தேர்பவர்கள் பிறிதொரு குருநிலையை சென்றடைவார்கள். இளையோனே, பாதையின்மையையே காடு என்கிறோம்.”
“அக்காட்டுக்குள் செல்பவனுக்கு கண்களில் வாழும் வானம் உதவாது. கால்களில் குடிகொள்ளும் திசைகளும் உதவாது. உடலறிந்த ஒன்றும் உடன்வராது. கருவறைப் புகுவதற்கு முன் கொண்ட கருத்து ஒன்றே கூடவரும். விலக்கி விலக்கி முன்செல்வதே காட்டைக் கடக்கும் ஒரே வழி. அங்கு அவனை வழிமறிப்பவை அவன் அஞ்சுவன அனைத்தும்தான். அச்சம் அழிந்து அவன் நின்றிருக்கையில்தான் மூவிழியும் வெண்நீறும் புலியுரியும் பிறைநிலவும் உடுக்கும் சடையும் கொண்டு கொலைதேர் கொடுஞ்சினக் காட்டாளன் ஒருவன் அவனை எதிர்கொள்கிறான்.” அவர் பெருமூச்சென “சிவமேயாம்” என்றார்.