இருத்தல், சந்திப்பு -கடிதங்கள்

 

unnamed

சார் வணக்கம்

லடாக் பயண அனுபவம் வாசித்தேன். லடாக் அடிக்கடி சென்று வரும் என் பல்கலை ஆசிரியரின் அனுபவங்களைக் கேட்டுக் கேட்டு அங்கிருக்கும் தாவரங்களுக்காக லடாக் செல்லவேண்டும் என நினைத்திருந்தேன் இதுவரை.

உங்கள் அனுபவத்தை படித்தபின் அங்கு போகவேண்டும் என்று மட்டுமல்ல, போனபின்பு அங்கேயே இருந்துவிடலாமென்றும் கூட தோன்றுகிறது. எதன் பொருட்டு இப்படி நாமெல்லாரும் பரபரப்பாய் அலைகிறோம்? எத்தனை இனிமை அவர்களின் இந்த மெதுவான வாழ்க்கை?

காலம் என்னை கடந்து செல்வதை நான் ஒவ்வொரு கணமும் உணர்கிறேன் அதற்காக வருந்தவும் கூட செய்கிறேன் பல சமயங்களில் (குறிப்பாக பிறந்தநாளின் போதும், பிறந்த குழந்தைகளை காணும் போதும்).

காலை 5.30 மணியிலிருந்து ஓயாமல் பதட்டமாக இரவு 10, 11 மணிவரை அலையும் எனக்கு நீங்கள் விவரித்த “கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு ஹூக்காவை பிடித்தபடி இளவெயிலில் மலைச்சரிவுகளைப் பார்த்தபடி நாளெல்லாம் அமர்ந்திருக்கும் காலமற்ற அவர்களின் வாழ்க்கை” ஏகத்துக்கும் பொறாமையை அளிக்கிறது.

அவர்களுக்கு இன்று மட்டுமே எனக்கோ நேற்று இன்று நாளை எல்லாமே இருக்கிறது. வரும் ஞாயிறு என்ன சமைப்பது என்று. அதற்கு முந்தின 3 நாட்களில் யோசித்து இட்லிக்கோ அடைக்கோ மாவு தயாரிக்கிறேன். என் மகன்களின் வருங்கால மனைவிகள் அவர்களுக்கு நன்றாக வயிறு நிறைய சமைத்துப் போடுவார்களா என்று இப்போதெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

பரபரப்பான அலைச்சல் மிகுந்த என் வாழ்க்கையின் மீதும், உட்காரவிடாத ஒடிக்கொண்டே இருக்க சொல்கிற பதற்றமாக பதட்டமாக கவலையோடே இருக்கிற உள்ளத்தின் மீதும் கோபமும் அவமானமுமாய் இருந்தது இந்த லடாக் கட்டுரை படித்தபின்னர்.

நான் நினைப்பதுண்டு சார், மின்மயானத்திற்கு என்னை கொண்டு செல்கையிலும் குக்கர் வைத்துவிட்டு 3 விசிலில் நிறுத்தச்சொல்லிவிட்டுதான் போவேனென்று!!!!

புன்னகையுடன் மடியில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தரும், அந்த ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலைச்சிகரங்களும், அந்த மக்களும் அவர்களின் நீர்த்துளிக்கண்களும் நூற்றாண்டுகளை மிகச்சாதாரணமாய்க் கடந்து எள்ளுப்பேத்திகளை கையில் வைத்துக் கொஞ்சும் அவர்களின் பாக்கியமும், என்ன சார் சொல்லுவது? they live and i exist என்றுதான் தோன்றுகிறது

comfort zone லிருந்து வெளியே வரப்பழக்கமில்லாத அல்லது விரும்பாத எனக்கு, நீங்கள் கையில் எடுத்துக்கொண்டிருக்கும், பனிபோல குளிர்ந்த அந்த குட்டி ரித்திகா உங்கள் கண்ணை நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நிழற்படம் உங்கள் எழுத்துக்களின் மீதான மதிப்பையும் உங்கள் அனுபவங்கள் மீதான பொறாமையையும் ஒரு சேர ஏற்படுத்துவதை தடுக்கவே முடியவில்லை சார்

நன்றியுடன்

லோகமாதேவி

*

அன்புள்ள லோகமாதேவி

எவரும் தனக்குள் இல்லாத ஓர் உலகை வெளியே உருவாக்கிக் கொள்ளமுடியாது. நித்யா சொல்வதுண்டு, எங்கும் செல்லாமலிருந்தாலும் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் என

நானும் மிகமிகப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பவன்தான். ஆனால் அவ்வப்போது என் அமைதியை நானே பார்க்கும் சில தருணங்களை உருவாக்கிக் கொள்கிறேன்

ஜெ

***

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

வாழ்க்கை எப்போதும் சில அடுத்தவினாடி ஆச்சரியங்களை ஒளித்துவைத்து இருக்கிறது, உங்களை கடந்த ஞாயிறு அன்று நேரில் சந்தித்ததருணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம், உங்களின் ஆக்கங்களை பல வருடமாக படித்து வருகிறேன், உங்களின் வலைத்தலைத்தையும் எட்டு வருடங்களாக படித்து வருகிறேன், இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல்கடிதம்.

நான் எனது இரண்டு நண்பர்கள் உடன்விழாவிற்கு வந்திருந்தேன், ஒருவர் உங்களை எனக்கு அறிமுகம் செய்தவர் இன்னொருவர் உங்களின் நான் கடவுள், கடல் திரைக்கதை வசனத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர், அவருக்கு அறம்தொகுப்பை பரிசளித்தேன்.

உங்களின் எழுத்துக்களை ஒருவருடமாக ஐந்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களை சென்னை புத்தக கண்காட்சிக்குஅழைத்து சென்று அறம் மற்றும் ரப்பர் நாவலை வாங்க செய்தேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிறு தயக்கத்துடனே உங்களை அணுகி புகைப்படம் எடுத்துகொண்டேன், அற்புதமான பேச்சு -காந்தி பற்றின எனது எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்தது.

சுகா அண்ணாச்சி உடன் புகைப்படம் எடுத்து கொண்டோம்.

விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் என்தாயாரும் மனைவியும் ஒன்று சேரகேட்டார்கள் “இன்னிக்கு ஜென்மசாபல்யம் கிடைச்சிருக்குமே”

ஆம் என்று உரக்க கூறினேன். இத்துடன் நான் உங்களை எடுத்த ஒருபுகைபடத்தை இணைத்து உள்ளேன்.

கடிதத்தில் எழுத்து பிழை இருந்தால் அடியேனை மன்னித்து அருளுமாறு கேட்டு கொள்கிறேன், முதல் தமிழ் கடிதம் அடித்து முடிக்கவே ஒன்றரைமணி ஆகியது.

என்றும் அன்புடன்,

அசோக் சேஷாத்திரி

*

அன்புள்ள அசோக்,

அந்நாள் நல்ல சந்திப்புகள் நிகழ்ந்தன. நீண்ட இடைவேளைக்குப்பின் ஊருக்கு வந்த மகிழ்ச்சி என்னிலும் இருந்தது. சுகா உட்பட அனைத்துப் நண்பர்களையும் ஒரே நாளில் சந்தித்தேன்

நாம் மீண்டும் சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12
அடுத்த கட்டுரைமொழியும் நிலமும்