வணக்கம்.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதை அறிவித்திருக்கும் செய்தியைப் படித்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். நான் எழுதத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அவரை விரும்பத் தொடங்கி இன்றுவரை என்னுடைய விருப்பப்பட்டியலில் தொடரும் எழுத்தாளர் அவர். சிறுகதைகளில் அவர் கையாண்டிருக்கும் பல நுட்பங்கள் எதிர்காலத்தில் தமிழில் படைப்பிலக்கியம் ஒரு பாடமாக வைக்கப்படுமெனில் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கான பாடங்களாக இருக்கும். எத்தனை முறை படித்தாலும் சலிப்பேற்படுத்தாத கதைகள்.
இந்த வாழ்க்கையை ஆயிரம் கோணங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு அவர் கதைகள். இத்தருணம் என் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் ஒன்று. இவ்விருதை அவருக்கு அர்ப்பணிப்பது என்பது ஒருவகையில் மகன் தந்தைக்காற்றும் நன்றி. அவரை வணங்கும் உங்கள் கைகளுடன் என் கைகளையும் இணைத்துக்கொள்கிறேன். நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
பாவண்ணன்
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நான் நீண்டநாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தது இது. அவரை நாம் போதுமான அளவுக்கு கௌரவிக்கவே இல்லை. விஷ்ணுபுரம் விருது என்பது வெறுமே விருதை அளிக்கும் நிகழ்ச்சி அல்ல. அது கொடுக்கும் அமைப்பை முன்னிறுத்துவதும் அல்ல. விருதுபெறும் படைப்பாளியை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை மற்றவர்களுக்குக் காட்டும் நிகழ்ச்சி.
ஆகவே அதை அவர் பெறுவது மிகமிக மகிழ்ச்சி அளிப்பது. என் ஆதர்ச எழுத்தாளர் வண்ணதாசன். அவரை சொல்லெண்ணி வாசித்தவன். இன்றைக்கும் வாசித்துக்கொண்டிருப்பவன். அவருக்கு விருது என்பது எனக்கே விருது போல. வாழ்த்துக்கள்
மகாதேவன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
வண்ணதாசன் அந்தப்பெயரை ஏன் சூடிக்கொண்டார் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு கண்ணதாசனையும் வல்லிக்கண்ணனையும் பிடிக்கும். வல்லிக்கண்ணதாசன் என்று பெயர் வைத்து அதை வண்ணதாசன் என்று சுருக்கிக்கொண்டார்
ஆனால் அந்தப்பெயரே அவரது எழுத்தாக ஆகிவிட்டது. அவர் வண்ணங்களைக் காட்டக்கூடிய எழுத்தாளர். சிவப்பு என்று சொல்கிறோம். ஆனால் அதிலேயே எவ்வளவு சிவப்பு! என் ஆச்சி ஒருமுறை பட்டுரோசா பற்றி சொல்லும்போது ‘குளிச்ச உள்ளங்காலு நெறம்’ என்று சொன்னார். நாம் வண்ணங்களைச் சொல்லிச் சொல்லிச் சலிப்பது கிடையாது இல்லையா. கத்தரிப்பூ நிறம், வாழைப்பூ நெறம் தீப்பெட்டி நெறம், எள்ளுப்பூ நெறம் என்று வயலட்டையே நூறுவகையாகச் சொல்கிறோம்
அதேமாதிரி வாழ்க்கையின் வண்ணங்களைச் சொல்லிச் சொல்லி சொல்லவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவருக்கு விருது என்பது வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு விருது அளிப்பதுதான்
எஸ். அருண்
***
அன்புள்ள ஜெ,
வண்ணதாசனுக்கு விருது என்னும் செய்தி இன்றைக்கு தினமலரிலேதான் வாசித்தேன். மகிழ்ச்சி அடைந்தேன். எழுதவேண்டும் என நினைத்தேன்
உங்கள் குறிப்பிலே நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அவரை நெகிழ்ச்சியைச் சொல்பவர் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். அவர் மனிதகுணாதிசயங்களின் கதாசிரியர். அப்படிப்பார்த்தால் விதவிதமான சாதாரண மனிதர்களை அவர் காட்டிய அளவுக்கு தமிழில் இன்னொரு எழுத்தாளர் எழுதியதே இல்லை
ஜெயராமன்
ஜெ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கும்செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அவரை நான் இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவருடைய அன்பான கைகளைப்பற்றி குலுக்கியிருக்கிறேன்.
வண்னநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு நாவலில் அவர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். எல்லாருக்கும் அன்பான கல்யாணி அண்ணனாக. அவருடைய கதாபாத்திரம் அது. அது அவர்தானா இல்லை அவருடைய தோற்றமா என்பது ஒரு கேள்வி
ஆனால் ஒருவர் எல்லாருக்கும் அன்புடன் இருக்க முயல்வதும் அதற்காக தன்னை அமைத்துக்கொள்வதுமேகூட இந்நாளில் பெரிய விஷயம்தான் என்று நினைத்துக்கொள்கிறேன்
சுவாமிநாதன்
Vishnupuram award for Vannadasan- Hindu
======================================================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2