வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

DSC_0125

அன்புள்ள ஜெ

நான் மனதில் நினைத்திருந்தது இவ்வருடம் நடந்தேறியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி !

சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு சலூன் கடையில் இந்தியா டுடே (தமிழ்) வாசித்துக் கொண்டிருக்கையில் வண்ணதாசனுடைய “நீச்சல்” சிறுகதை வாசிக்க நேர்ந்தது. என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி அவருடைய அனைத்து தொகுப்புகளையும் வாசிக்கச் செய்தது. எனக்கு சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்ட ஒருவரை இது ஒத்திருந்ததால் இருக்கலாம். அதையொட்டி அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்டு தனக்கு உதவியும் செய்த ஒருவரை திரும்ப சந்திக்க கிராமத்திற்கு திரும்ப வரும் ஒருவனின் கதை.

“இந்த வீடு, என் மனைவி, மகள், கார் அனைத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டி மகாதேவன் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஒரு வரி அச்சமயத்தில் என்னை வண்ணதாசனை தேடவைத்தது. அவருடைய அனைத்து கதைகளும் நெகிழ்ச்சியான கதைகள்…

அவரைப்போலவே… அணில் அவருடைய சிநேகத்திற்குரிய ஒரு உயிர் என்று நினைக்கிறேன் ! ஒரு இலை, ஒரு புல், ஒரு ஜன்னல் அல்லது ஒரு பூ போதும்… அதை ஒரு மிக அழகான கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு.

கதையின் பெயர் மறந்துவிட்டேன்… ஒரு சேர் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்கச் செல்கையில் ஒரு சிறுவனுடன் நடக்கும் உரையாடல்…. அவர் வாழ்க்கையில் மனிதர்களைப்பற்றி கவனிக்காத இடமே இல்லையோ என்று தோன்றச்செய்தது! இன்னும் எவ்வளவோ அவருடைய கதைகளைப்பற்றி கூற வேண்டியிருக்கிறது.

“வாழ்க்கையில் நடந்த ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சிகூட ஒரு அருமையான கலைப்படைப்பாகிறது என்ற ஒரு வரி வண்ணதாசனுக்கு மிகவும் பொருந்தும். அவருடைய கதைமாந்தர்களை நாம் தினமும் நமக்கு அருகாமையில் பார்க்க முடியும் என்பது அவரை படித்தவர்களுக்குப் புரியும்.

ஒருமுறை சென்னையில் மாம்பலத்தில் அவருடைய வீட்டைத் தேடி அலைந்திருக்கிறேன். அவர் நெல்லைக்கு மாறியது தெரியாமல்! மரபின் மைந்தன் வலைப்பூ அறிமுக விழாவில் கோவையில் சந்தித்து சிறிது உரையாடினேன்.

இந்த வருடம் “விஷ்ணுபுரம்” விருதுக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கிரீடத்திலுள்ள ரத்தினைக் கற்களின் மையக்கல் வண்ணதாசன்தான் என்பது என்னுடைய கருத்து !

 சுரேஷ்பாபு பாலன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். சென்ற வருடத்திலிருந்தே விஷ்ணுபுரம் விருது பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருந்தது. வண்ணதாசனுடனான என் அறிமுகம் என்பது முகநூல் வழியாவே தொடங்கியது.

உயிர் எழுத்தில் பிரசுரமாகிருந்த என் சிறுகதையைப் பற்றி அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுவரை நான் அவரை எங்கும் சந்தித்ததில்லை. அப்படி அவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தது என்னுள் புது உத்வேகமாக பீறிட்டது. அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது.

மதுரை புத்தக் கண்காட்சியில் வெய்யிலின் கவிதை தொகுப்பு வெளியீட்டில் சந்தித்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்லிய புன்னகையுடன் என்னை நினைவுகூர்ந்தவர் என் கைகளைப் பற்றி ‘நிறைய எழுதுங்க” என்றார். மிக மென்மையாக இருந்தார். நிதானமாக வெளிப்படும் குரல். வசீகரமான புன்னகை.அவரது ஆளுமை என்னுள் ஒரு சித்திரம் போல் தங்கிவிட்டிருந்தது. அதன்பின் வண்ணதாசன் என்கிற பெயரை பார்க்கின்றபோதெல்லாம் அச்சித்திரமே நினைவில் வரும்.

இலக்கியம் வாசிக்கத்தொடங்கிய புதிதில் நூலகத்தில் அவரது ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், நடுகை’ வாசித்துவிட்டு அக்கதைகளை அசைபோட்டபடியே புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். கதைகளில் சிறு அசைவுகள் கூட நுண் சித்திரமாக்கியிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.

என்னளவில் சிறுகதைகளில் வெளிப்படும் வண்ணதாசனும் கவிதைகளில் வெளிப்படும் கல்யாண்ஜியும் வேறுவேறானவர்கள். சிறுகதைகளில் மெளனமான நதியாக ஓடுவது கவிதைக்குள் நுழைந்ததும் காட்டாறுபோல பாய்ச்சலுறும். நுண்ணிய அவதானிப்பு கொண்ட சொற்கள் கூர்மையாக வந்துவிடும். சில நேரம் அக்கவிதைகள் சட்டென்று ஓங்காரமாகத் எழுந்துவரக்கூடியன

இலக்கிய வாசகர்கள் சங்கமிக்கின்ற நிகழ்வாக விஷ்ணுபுரம் விருது மாறிவிட்டிருக்கிறது. இதை இக்காலக்கட்ட இளம் வாசகர்கள்/படைப்பாளிகளுக்கு பெரும் வரம் என்றே நான் சொல்வேன். சிறுகதைகளிலும் , கவிதைகளிலும் தவிர்க்கவியலாதவொரு ஆளுமையுடன் உரையாட இவ்வருட டிசம்பருக்காக காத்திருக்கிறோம்…..

அன்புடன்
தூயன்

***

அன்புள்ள ஜெ,

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்னும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அடையச்செய்தது. அவரது வாசகர்கள் எப்போதும் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரை பொதுவாக இலக்கிய உலகம் போதுமான அளவுக்கு கண்டுகொள்லவில்லை

அதற்கான காரணங்கள் என்று எனக்குத் தோன்றுவது சில உண்டு. பார்த்தால் தெரியும். இங்கே அறிவுஜீவிகள் ஒருவரைக் கொண்டாடுவதென்றால் அவர் பலரால் வாசிக்கப்படாதவராகவும் இவர்கள் மட்டுமே கண்டுபிடித்துச் சொல்பவராகவும் இருக்கவேண்டும். அவ்வப்போது அப்படி எவரையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மிகச்சாதாரணமான எழுத்துக்களைக்கூட எடுத்துவைத்து அக்கக்காக அலசி எதையாவது கண்டுபிடித்துக்கொண்டிருப்பார்கள். பார்த்தாயா நான் உன்னைவிட அபூர்வமானவன், ஆகவே நீ வாசிக்காததை நான் தேடி வாசிக்கிறேன். இதெல்லாம்தான் பாவனை. இவர்களுக்கு பல்லாயிரம்பேர் விரும்பும் வண்ணதாசன் மீது ஈடுபாடு இருப்பதில்லை

மறுபக்கம் வணிக எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவரது எழுத்தின் பூடகமும் நுட்பமும் பிடிகிடைப்பது இல்லை. ஆகவே அவர்களும் விரும்புவதில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரமும் புகழும் வண்ணதாசனுக்கு வருவது இல்லை.

ஆனால் இதெல்லாம் போலியான பாவனைகள். மனசைத்திறந்துவைத்து வாசிப்பவர்களுக்காக வண்ணதாசன் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார் என நினைக்கிறேன்

முருகேஷ்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். வழக்கமான சம்பிரதாய வாழ்த்து சொல்லவில்லை. உண்மையாகவே எனக்கு இது கொண்டாட்டமான நிகழ்ச்சி. விஷ்ணுபுரம் விருது இதனால் பெருமைபெற்றுள்ளது

வண்ணதாசனை நான் என் இளமைக்காலம் முதல் வாசிக்கிறேன். இளமையில் அவர் எனக்கு இனிய தித்திப்பை அளித்த எழுத்தாளராகத்தான் இருந்தார். நான் வளரவளர அவரும் வளர்ந்தார். இன்றைக்கு மனிதர்களின் முடிவில்லாத முகங்களைக் காட்டும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். இன்று அவர் எனக்கு அளிப்பது வேறு உலகம்

வண்ணதாசனை நிறையபேர் இளமையில் வாசித்தபின் விட்டுவிடுகிறார்கள். பிறகு அன்றைக்கு வாசித்த நிலையிலேயே அபிப்பிராயங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வண்ணதாசனை அறியவில்லை என்றுதான் அர்த்தம்

அவர் இனிப்பை மட்டும் எழுதுபவர் என்று சிலர் சொல்வதுண்டு. நான் அவர்களிடம் நீங்கள் கடைசியாக அவரை எப்போது வாசித்தீர்கள் என்றுதான் கேட்பது வழக்கம்

முதிர்ச்சியடைந்த வாசகன் வண்ணதாசனிடம் அடைவதற்கு நிறையவே உள்ளன. இளமையில் வாசித்ததை உடைத்தபடி மீண்டும் அவருக்குள் நுழையவேண்டியிருக்கிறது

இந்தச்சிக்கல் ரூமி, கலீல் கிப்ரான் போன்ற கவிஞர்களுக்கும் உண்டு. இளமையிலேயே அவர்கள் அறிமுகமாகிவிடுகிறார்கள். அப்போது உள்ளக்கிளர்ச்சி அளிக்கிறார்கள். மறுமுறை அவர்களைச் சென்று வாசிக்காவிட்டால் நாம் நிறைய இழந்துவிடுவோம்

மகேஷ் பாலகிருஷ்ணன்

 

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது – தினமலர்

வண்ணதாசனுக்கு விருது தமிழ்இந்து

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள் -3
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள்