இந்தியாவின் மகத்தான சுவாரசியம் என்பது அதன் முடிவற்ற வண்ணங்கள். அவ்வண்ணங்கள் அனைத்தும் பிசிறின்றி இணைந்து உருவாகும் ஒற்றைப்பெரும்பரப்பு. முதல்பார்வையில் ஒன்றென்றும் மறுபார்வையில் முடிவிலா பலவென்றும் தோற்றம் காட்டும் பண்பாட்டுக்கூறுகள்.
சினிமாப்பாடல்கள் வழியாக மீண்டும் மீண்டும் அவ்வண்ணங்களையும் ஒருமையையும் பார்த்துக்கொண்டிருப்பேன். இன்று ஒரு கடந்தகால ஏக்கமனநிலை. ஆகவே என் இளமையில் கேட்ட பாடலொன்றை தேடி எடுத்தேன். இந்தப்பாடலின் மலையாளத் தனித்தன்மை நெஞ்சை நனைத்தது. பழகிய செவிகளை சற்று புதுப்பிக்க முடிந்தால் அந்த மலையாளமணத்தை எவரும் உணரமுடியும்
இதிலுள்ள தாளம் இடைக்கா என்னும் வாத்தியத்தை நினைவூட்டும்படி உள்ளது. நடுவே செண்டை. கண்ணூர் தலைச்சேரி பகுதியின் நாட்டுப்புற இசையின் சாயல் மெட்டில் உள்ளது. படகுப்பாட்டு. அத்துடன் குரல். அது மலையாளத்தின் குரலான ஜேசுதாஸ்.
இசை கே.ராகவன். மலையாள சினிமாவின் மூத்த இசையமைப்பாளர். பெரும்பாலும் நாட்டுப்புறமெட்டுகளை ஒட்டியே இசையமைத்தவர்.
இது கடம்பா என்னும் மலையாளப்படத்தில் உள்ள பாடல். செக்ஸ் கலந்த யதார்த்தபடம் என்னும் ஒரு வகைபாடு அன்றெல்லாம் இருந்தது. உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கும். கூடவே மெல்லிய காமம். 1982ல் வெளிவந்த படம்