ஜன்னல், குங்குமம் தொடர்கள் —கடிதம்

 

v0_master

இனிய ஜெயம்,

நேற்று இரவு யூ ட்யூபில் தாய்ப்பால் புகட்டுவது சார்ந்த கல்விக்காணொளி ஒன்று கண்டேன். இந்தியத் தாய், மதலையை அள்ளி, குமிண் இதழை இடது முலையில் பொதிந்து கொள்கிறாள். இயல்பாக வலது முலையில் அமுதம் ஊறி சடசடவென சொட்டுகிறது. அள்ளிப் பொத்திய விரல்கள் வழியே வழிகிறது. புறங்கையை புல்லரிக்கவைத்து, நுரையீரலை மூச்சிக்கு ஏங்க வைத்து, பரவசத்துக்குள் தள்ளிய காட்சித் துணுக்கு.

அம்மாவிடம் கேட்டேன், ”அம்மா புள்ளன்னா என்னன்னு நினைச்ச? அம்மா புள்ளைய நினச்சாலே போரும் அவளுக்கு பால் ஊறும”. அங்கு துவங்கித்தான் இன்று” சாப்டியாப்பா” எனும் அம்மாவின் பரிவை உம் எனும் ஒற்றை உறுமலில் கடந்து செல்லும் பெரும்போக்குக்கு வந்திருக்கிறேனா என்பதை ஒரு கணம் எண்ணிக் கொண்டேன். அய்யம்மா [அப்பாவின் அம்மா] சொல்லும் பாரதக் கதையில், குந்தி இழந்த கர்ணனை, திறமையை வெளிக்காட்டும் களத்தில்தான் முதன் முதலாக மீண்டும் பார்க்கிறாள். கண்ட கணம் அவளது ஸ்தனங்கள் அமுதம் சுரக்கிறது. நீலம் நாவலில் வரும் தாய், கண்ணனுக்கு இடது முலையை அளித்துவிட்டு, ததும்பி வழியும் வலது முலையை உள்ளங்கையால் பொத்திக்கொள்கிறாள். பெருகி வெடித்த காட்சிக்குமிழிகளில் இருந்து மீண்டும் எழுந்து வந்தாள், பாம்பும் கீரியும் கதையின் தாய். கீரியைக் கொன்ற பின்பே அவள் தவறை அறிகிறாள். அவள் இப்போது அழுவது கீரி என்ற மிருகத்துக்காக அல்ல, கீரிப் பிள்ளை என்ற தன்னுடைய பிள்ளைக்காக, பிள்ளைக்கு அளித்த முலை நிற்காமல் சுரக்கிறது, நிறுத்தவே இயலவில்லை. கணவன் இறந்ததும் அது குருதியாக சுரக்கிறது. பிள்ளையை தாய் கொன்ற கதை.

நேர் எதிரானது பிள்ளைக் கல் கதையில் வரும் ஆனைதம்பியின் நிலை. கடந்து வந்த அத்தனை மேன்மையையும் ஒரு கணத்தில் மறந்து, நிறைசூலி மனைவியை ஒரே உதையில் கொல்லுகிறான். செத்தவள் கேதம் தீர பிள்ளைக் கல் நட்டு வழிபடுகிறான். செத்தவள் அடங்காமல் ஆவியாக வந்து அழுகிறாள். ஆனைதம்பி மனம் பேதலித்து அந்த பிள்ளைக் கல்லில் தலை மோதிப் பிளந்து இறக்கிறான். பின்னர் ஆவியாக அலையும் அந்தத் தாயின் இரு ஒல்கலையில் அமர்ந்து இரு குழவிகள் முலையருந்திக் கொண்டிருக்கிறது. மாமா சொல்கிறார் அந்த இன்னொரு குழந்தை ஆனைத்தம்பி. தாயை பிள்ளை கொன்ற கதை.

கணவனே ஆயினும் அவனை பெண் தனது அடி ஆழத்தில் அவனை தனது குழந்தையாகக் கொண்டே அதில் அமைகிறாள். பாம்பும் கீரியும், பிள்ளைக் கல் இரு கதைகளிலும் அதன் உள்ளோட்டமாக அமையும் இந்த நோக்கு, என்ன சொல்ல… அதுதான் என் ஜெயம்.

நிற்க. இவை போக முகங்களின் தேசம் தொடரில் நீங்கள் எழுதியவற்றிலேயே முதலிடம் பிடிப்பது இன்றைய ஏழரைப் பொன் பதிவு. முன்பொரு சமயம் கேரளத்தில் திரிந்து கொண்டிருந்தேன். என் கூட்டுக் குடும்பத்தில் தாத்தா அப்பா இரண்டு சித்தப்பாக்கள் இரண்டு மாமாக்கள் என அடுத்தடுத்து ஒவ்வொருவராக அற்பாயுளில் கிளம்பி சென்றுகொண்டே இருந்தார்கள். என் சித்தப்பா இறந்து அவரது இறுதிக் கடனை முடித்து விட்டு சேரன்மாதேவியில் இருந்து அப்படியே பாசன்ஜர் ஏறி கொல்லம் வந்து, அங்கிருந்து நான் கேள்வியே பட்டிராத கேரள கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்தேன். கல்லுதாழம் எனும் ஊரில், மழை பெய்யும் ஓர் இரவு. அங்கிருந்த முந்திரி கம்பனி காவலாளி தனது அறையில் எனக்கு இடம் தந்தார். இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பகலில் புறப்படும் போதுதான் அறிந்தேன், நான் தொலைந்து போகவோ, தற்கொலை மனநிலை கொண்டு திரிவதாகவோ அவர் எண்ணி இருந்தார்.

நண்பர் ஒருவர் இளவயது. சில நாட்கள் அலைந்து திரிந்ததில் கடும் அசதி. கேரள துறைமுக நகரம் ஒன்றினில் கடற்கரையில் அந்தியில் சென்று அமர்ந்தார். சில முகமதிய வணிகர்கள் அவர் வசம் பேச்சு கொடுத்தனர். தேநீருடன் இயல்பாக நண்பரின் ஊர் பெயர் கடந்த காலம் அனைத்தையும் விசாரித்து இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். விடிந்த பின்பே அவர்கள் நண்பரை எதோ தற்கொலை செய்து கொள்ள வந்தவர் என எண்ணியதாக சொல்லிச் சிரித்தனர். அங்கிருந்து நண்பர் இதை எனக்கு தொலை பேசினார். அந்த நண்பர் அஜிதன்.

ஏழரைப்பொன் பதிவில் வரும் சூழல் சித்தரிப்பு, உண்மையில் பொறாமை கொள்ள வைக்கிறது. இளம் காற்றில் எஞ்சிய மழையின் நினைவு என்ற கவித்துவ வரி, அப்படியே டிராகுலாவாக மாறி உங்களை கடித்து உறிஞ்சிவிடலாமா எனத் தோன்றியது. நீங்கள் குறிப்பிட்ட சதானந்தம் மானுடத்தை அரவணைத்து முன் கொண்டு செல்லும் சாரமான கருணை ததும்பும் சதானந்தன்களின் ஒரு துளி.

எப்போதும் போல் மானசீகமாக உங்கள் கரங்களுக்கு என் அன்பு முத்தம்.

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசுபமங்களா, நினைவுகளின் தொலைவில்…