அன்பு ஜெமோ
நலம் தானே?
மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பை உங்கள் இணையத் தளத்தில் படித்தேன் – நம் கல்யாண்ஜிக்கு விஷ்ணுபுரம் விருது.
அழைப்பு அனுப்பி வைக்கச் சொல்லுங்க ஜெமோ, நான் கலந்து கொள்ள வேணும். உங்களோடும் நிறையப் பேசணும்
அன்புடன்
இரா முருகன்
*
அன்புள்ள முருகன்
நலம்தானே?
கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்கிறீர்கள். அழைப்பு என்னுடையது. எங்கள் நண்பர்களுக்கும் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வண்ணதாசனுக்கு விருது வழங்கப்படவுள்ள செய்தி இந்தக்காலையை அழகாக ஆக்கிவிட்டது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். நான் அவரது கதைகளை 1990 வாக்கில்தான் முதல்முதலாக வாசித்தேன். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்னும் தொகுப்பு.
அற்புதமான ஒரு தொகுப்பு அது. அன்றைய என்னுடைய வாழ்க்கையைச் சொன்னால் அந்தக்கதைத் தொகுதி எனக்கு அளித்தது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் நான் அன்றைக்கெல்லாம் வேலை இல்லாமல் இருந்தேன். குடும்பச்சூழலால் பத்தாவதுக்குமேலே படிக்கவில்லை. ஒரு கடையில் வேலைபார்த்தேன்.
பழையதாள்களை வாங்கி அட்டியாக்கி விற்கும் கடை. சாப்பாடுக்கு மட்டும்தான் பணமிருக்கும். அதுவும் ஊருக்கு ஆரம்பத்திலேயே பணம் அனுப்பிவிடுவதனால் கடைசி நாட்களில் கையில் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட பத்தாது. பெரும்பாலும் கையேந்தி பவன்களில் சாப்பிடுவேன். வாயில் வைக்கமுடியாத தக்காளிச்சாதம் உப்புமாதான் பெரும்பாலும் உணவு. ருசி என்பதையே பத்துவருஷம் நான் அறிந்தது கிடையாது.
கடையின் திண்ணையிலேயே தூங்குவேன். மழைக்காலம் பெரிய நரகம். கொசுக்கடி உயிர்போகும். உடம்பில் மண்ணெண்ணை தேய்த்துக்கொண்டு தூங்கியதுண்டு. ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம்தான் மனசு முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊரில் என்னை நம்பி அம்மாவும் தங்கச்சியும் இல்லை என்றால் செத்திருப்பேன்.
அதையெல்லாம் விட எனக்கு மத்தவர்கள் மேல் பெரிய பயம். அவமானப்படுவோமோ என்று எவரிடமும் நான் நெருங்கியது கிடையாது. கடையில் உள்ள பழைய காகிதஙகளை வாசிப்பேன். அப்படித்தான் அந்த நூலையும் வாசித்தேன். எனக்கு அது பெரிய திருப்புமுனை.
என் அப்பா எனக்கு என்ன சொல்லித்தரவேண்டுமோ அதையெல்லாம் வண்ணதாசன் தான் சொல்லித்தந்தார். மனுஷங்களை நம்பு என்று அவர்தான் சொன்னார். மனுஷர்கள் பயமும் ஆசையும் கோபமும் எல்லாம் கொண்டிருந்தாலும் மனுஷனை நம்பினால் ஏமாற்றம் கிடையாது என்று அவரது கதைகள் காட்டின.
தாய்க்கோழி குஞ்சுக்கு சொல்லிச் சொல்லி மேயக்கற்றுக்கொடுக்குமே அதேபோல வண்ணதாசன் எனக்குக் கற்பித்தார். அப்படித்தான் நான் மனுஷன் ஆனேன். இன்றைக்கு கடை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. பெரிய ஆள் எல்லாம் ஆகவில்லை. ஆனால் மனுஷன் ஆகியிருக்கிறேன். அதுக்கெல்லாம் வண்ணதாசன் தான் காரணம்.
நான் அவரை அப்பா என்றுதான் மனசுக்குள் அழைப்பேன். நேரில் ரெண்டுதடவைதான் பார்த்திருக்கிறேன். காலைத்தொட்டு கும்பிட்டபோது அவர் ‘ஏ ஏ ’என்று சொன்னார். நான் அறிமுகம் செய்யாமல் வந்துவிட்டேன். ஆனால் அன்றைக்கு ராத்திரி தனியாக இருந்து அழுதேன். நான் அவருக்கு எழுதியது கிடையாது. அவருக்கு எழுதவும் போவது கிடையாது. அவருக்கு நான் அறிமுகமே ஆகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.
நான் அவர் எழுதிய எல்லா வரியையும் நாலைந்துமுறை வாசித்திருக்கிறேன். அவர் நிறைய எழுதியிருக்கிறார். நான் அதிலிருந்து ‘வாழ்க்கையை நம்பு. இதிலே அழகு நிரம்பியிருக்கிறது. இது போதும் மனுஷப்பிறப்புக்கு’ என்றுதான் புரிந்துகொண்டேன்.
அவரைவிடப்பெரிய எழுத்தாளர்கள் இருக்கலாம். எனக்கு நீங்கள் அப்படிப்பட்ட பெரிய எழுத்தாளர் என்று சொன்னார்கள். நானும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து எனக்கு பயமாக இருந்தது. பெரிய அறிவாளித்தனம் என்று பட்டது. அதை தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
வண்ணதாசன் கதையெல்லாம் வேறு மாதிரி. எனக்கு சங்கரன்கோயில் பக்கம். ரயிலில் ஒருநாள் ஒரு வயதான நாடாச்சி என் கையைப்பிடித்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் எத்தனை பிள்ளை என்றெல்லாம் கேட்டது. கையில் இரும்பு வளையல் போட்டிருந்தது. பச்சைகுத்தின கையில் நரம்புகள் புடைத்து காணப்பட்டன. அந்த ஆச்சி மாதிரி என்னிடம் பேசுவதெல்லாம் வண்ணதாசன் கதை மட்டும்தான்.
அவர் தமிழிலேயே மிகப்பெரிய எழுத்தாளர் என்றுதான் நான் சொல்வேன். அவருக்கு நான் அறிமுகமாக ஆகக்கூடாது என்று நினைப்பேன். அவரை நினைத்துக்கொண்டே சாகவேண்டும் என்றெல்லாம் நினைப்பேன்.
நான் உங்கள் கதைகள் சிலது மட்டும்தான் படித்திருக்கிறேன். நிறைய அறிவாளித்தனம் கொண்ட கதைகளை வாசித்தால் வண்ணதாசனை இழந்துவிடுவோம் என்று பயம் எனக்கு. ஆகவே நிறைய வாசிப்பதே இல்லை. அவரைத்தான் மீண்டும் மீண்டும் வாசிப்பேன்.
நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமன் மகளைத்தான். எனக்குப்பெண்ணையும் கொடுத்து என்னை ஆளாக்கிவிட்டார். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை நல்லதாக அவர் பேசியது கிடையாது. எப்போதுமே சுடலைமாடசாமி மாதிரியாகத்தான் முகம். வண்ணதாசனை வாசிக்கவில்லை என்றால் அந்த மனுஷனைப் புரிந்துகொண்டிருக்கமாட்டேன்.
பின்னாடி ஒரு பெரிய நோய் வந்தது எனக்கு. அந்த நோயில் நான் நம்பிக்கை இழக்காமல் இருந்தேன். எலும்பிலே டிபி. இப்பவும் முழுசாகச் சரியாகவில்லை. ஆனால் இப்போது பரவாயில்லை. ஆனால் அதை நான் விலகி நின்று பார்த்தேன். துக்கமே இல்லாமல் இருந்தேன். ஆஸ்பத்திரியை ஒரு வேடிக்கையான இடமாக ஞாபகத்திலே வைத்திருக்கிறேன். அன்பான பலரை அங்கே பார்த்தேன். அதுக்கும் வண்ணதாசன் தான் காரணமாக இருந்தார்.
அதன் பின்னால் என் தங்கை மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஒன்றைச்செய்தாள். ஆனால் இன்றைக்கும் அவளிடம் அன்பான அண்ணனாகத்தான் இருக்கிறேன். வண்ணதாசன் தான் மன்னிக்கச் சொல்லித்தந்தார்.
அவர் கதைகள் மனுஷன் எப்படி ரொம்பச் சின்னவன் என்பதைத்தான் சொல்கின்றன. சிலசில தருணங்கள்தான் மனுஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அந்தத்தருணங்களிலே அவன் தன்னை சரியாக நிறைத்துக்கொண்டு பெருகிவிட்டான் என்றால் வாழ்க்கை இனிப்பானதுதான். அப்போது அவனும் பெரியவன்தான்.
ஒத்தை வரியில் ‘இன்னைக்கிருந்து நாளைக்குப்போற மனுஷனுக்கு இருக்கிற நாளெல்லாம் முக்கியம்தான்’ என்று பெரியவர்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். ஆனால் அதை வாழ்க்கையாக காட்டி அதிலே திரும்பத்திரும்ப வாழவைக்கிறார். அதனால்தான் அவர் பெரிய எழுத்தாளர்.
அவரது வாசகர்களுக்கு அவர் காட்டுகிற ஒளி தான் முக்கியம். அவர் இருட்டை எல்லாம் எழுதியிருக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். அதனால்தான் இதை எழுதுகிறேன். அது உண்மைதான். ஆனால் அவர் காட்டும் ஒளிதான் முக்கியம் என நான் நினைக்கிறேன். இருட்டைக்காட்டத்தான் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்களே. எல்லாரும் இருட்டு என்கிறார்கள். பார்த்தாலும் இருட்டுதான் தெரிகிறது. ஒருவர் ஒளியைக் கொஞ்சம் காட்டுகிறார். அதுதானே வேண்டும்.
நாங்களெல்லாம் வரண்ட மண்ணிலே வந்தவர்கள். பெரிய இருட்டுச்சுரங்கம் மாதிரியான வாழ்க்கை எங்களுக்கு. அந்த மறுபக்கம் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் போய்விடலாம். இல்லாவிட்டால் இங்கேயே சாவுதான். அந்த வெளிச்சம்தான் அவருடைய கதைகள்.
அதெல்லாம் அறிவுவாளிகளுக்குத் தெரியாது. அறிவாளிகள் வேறு வகையான வாசிப்புகளுக்குப் போகட்டும். நீங்கள் ஆண்டன் செக்கோவ் வாசித்திருப்பீர்கள். நானும் அவரை தமிழிலே முழுசாகவே வாசித்திருக்கிறேன். செக்கோவ் ஒளியைத்தானே காட்டுகிறார். நம்பிக்கைதானே தருகிறார். நம்மூரில் ஒரு செக்கோவ் என்றுதான் நான் வண்ணதாசனைச் சொல்லுவேன்.
எப்படியென்றாலும் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு கோடி வணக்கம். அவர் எல்லா விருதுக்கும் தகுதியானவர். சாகித்ய அக்காடமி கூட இன்னும் அவருக்கு எவரும் கொடுக்கவில்லை. அவருக்கு கிடைத்த இந்த பெரிய விருது நாம் அவருக்குச் செய்யும் நமஸ்காரம் என்றுதான் நினைக்கிறேன். அதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் அவருடைய பாதங்களை சேவித்துக்கொள்கிறேன்
எஸ்.செல்வராஜ்
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்று அறிவித்திருந்தீர்கள். அச்செய்தியை அறிந்ததுமே உள்ளம் மகிழ்ச்சியில் மிதந்தது. எனக்கு மிகமிகப்பிடித்த எழுத்தாளர். அவருடைய கதைகளை எல்லாம் பத்தாண்டுகளாக விடாப்பிடியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய அனுபவத்தை அளிக்கும் கதைகள் அவையெல்லாம் அவருக்கு நான் வாழ்க்கையிலும் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அவருக்கு அளிக்கப்படும் விருதுக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
நடராஜன்
***
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசன் என்னும்போது எனக்கு ஒரு பழையபாட்டும் நினைவுக்கு வரும். வெள்ளிமணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே. வெள்ளிமணி ஓசையை கேட்டதே இல்லை. ஆனால் வெண்கலம் மாதிரி ஒலிக்காது என்று நினைக்கிறேன். ரொம்பச் சன்னமாக அழகாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான கதைகள். வெள்ளைத்தாளிலே தலைமுடி விழுந்துகிடந்தால் கோடுமாதிரி தெரியுமே அதே மாதிரி வரைந்த ஓவியங்கள் அதெல்லாம்.
வண்ணதாசனுக்கு வணக்கம்
சித்ரா