சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்

index

அன்புள்ள ஜெ.

ஒரு புதிய வாசிப்பனுபவம்.

இரண்டு அல்லது மூன்று குறியீடுகள் தோன்றி மறைந்தன.. மனதில். சுக்கிரன் அல்லது வீனஸ் ஒரு முகம் மட்டுமே சூரியனை நோக்கி. எனவே ஒருபுறம் அதிக வெப்பம். மறுபுறம் அதிக குளிர். என்றென்றும் பகல் தரும் கிரகம். (அல்லது இரவு தரும்). தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும், சூரியனைச் சுற்றி வரவும் சுமார் 230 பூமி நாட்கள். (ஒரு சில அறிஞர்கள் இந்தக் கணக்கில் வேறுபடுகிறார்கள்) எனினும் மனதில் அசை போட ஒரு நல்ல சிந்தனை.

நம் சந்திரனும் அது போன்றே. நமக்கு ஒருமுகமே காட்டும் ஒரு பேரழகி.

குட்டி இளவரசன் – என்கிற கதையில் (லிட்டில் பிரின்ஸ் தமிழாக்கம்) – அவன் சூரிய அஸ்தமனத்தில் அதன் அழகில் மயங்கி, அவனது சிறிய கிரகத்தில் நடந்து சென்று பலமுறை (47 தடவை?) அனுபவித்ததை கதை ஆசிரியரிடம் சொல்வான். அதுவும் நினைவிற்கு வந்தது.

பட்டி விக்ரமாதித்தன் – நாடாறு மாதம், காடாறு மாதம் என்கிற கதைகள் வேறு.

ஒரு வேளை நம் மரங்களும் அன்றாட பகலை விரும்புமோ? சுட்டெரிக்கும் வெயிலைத் தேடி, அன்புள்ள, என்புள்ள ஓருயிரின் முடிவற்ற பகலில் ஒரு சோகம்.. ஒரு அழகு.

அன்புடன்

முரளி

***

கதை முடித்தவுடன், விகடனில் வந்திருக்கிறதே, வார பத்திரிக்கைகளில் எழுத படும் contentஐ கிழி கிழி என கிழித்திருக்கிறாரே. இந்த கதை விகடனில் பிரசுரமே பகடிதானோ என்று தோன்றியது. அதுவும் முடிவு. இலக்கியம் என்றால் இடைவெளி் இருக்க வேண்டும். எதை வேண்டுமானால் போட்டு நிரப்பி கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் என்று பட்டது. கதையில் அகழ்வாராய்ச்சியெல்லாம் செய்யக்கூடாது என்பவர்களுக்கான உள்குத்து இருக்கிறதோ என்றும் தோன்றியது.

திரும்பவும் கதையின் ஆரம்ப வரிகள் படித்தால் “கணக்கு” என்ற சொல் கதையை திறந்து விட்டது.

உலகத்தை சுற்றி எண்பது நாட்களில் (Around the world in 80 days), கதை நாயகன், பிளியாஸ் ஃபாக் (Philleas Fogg), இலண்டனில் ஒரு க்ளபில், ஒரு பெரிய தொகையை பந்தயமாக வைத்து, உலகத்தையே எண்பது நாட்களில் சுற்றி வருகிறேன் என்று கிளம்புகிறான். இந்தியாவில் புது இரயில் தடம் அமைக்கபட்டுள்ளதால், இது சாத்தியம் என்று “டெய்லி டெலிகிராஃப்” செய்தி ஒன்றின் விவாதம், பந்தயமாக மாறுகிறது. சூயஸ் கனல், இந்தியா, ஹாங்காங்க், சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் வழியாக இலண்டன் வந்தடைகிறான். வழியில், யானை, உடன் கட்டையிலிருந்து ஒரு இளவரசியை காப்பாற்றுவது, கப்பலை தவறவிடுவது, வங்கி கொள்ளைகாரன் என்று ஒரு துப்பறிவு சிங்கம் இவனை பின்னால் தொடர்வது என்று கதை முழுவதும் சாகசங்கள். இலண்டன் வந்து சேரும் பொழுது 81 நாட்கள் ஆகி விடுகின்றன. பந்தயத்தில் தோற்றுவிட்டோம் (இன்றைய பணம் படி 15 கோடி ரூபாய்) என்றிருக்கையில், அவனது வேளையாள் நாட்கணக்கில் ஏதோ தவறு. உங்கள் கெடு முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன என்று வந்து சொல்ல, அடித்து பிடித்து க்ளப்பிற்க்கு சென்று பந்தயத்தை வெல்லுகின்றான்.

81 நாட்கள் 80 நாட்கள் ஆன விந்தை, International Dateline உடன் தொடர்புள்ளது. கிழக்கே சென்று உலகத்தை சுற்றினால் ஒரு நாள் நாளடேனின் படி பயணிப்பவருக்கு அதிகம் கிடைக்கும். ஃபாக் 81 நாட்கள் வாழ்ந்திருக்கிறான் ஆனால் இலண்டன் கணக்குபடி 80 நாட்கள்தான்.

உங்கள் கதையும் இதையே தொட்டு செல்லுகிறது. உயிர் விசையான சூரிய ஒளியை, இறப்பை தவிர்க்கும் பொருட்டு பாவிக்கும் ஜப்பானியனின் கதை. வாழ்வது என்பது எது, இறப்பு என்பது எது என்ற கேள்விகளை வாசகனின் மனதில் விவாதிக்க தூண்டும் கதை.

24 மணி நேரத்தில் ஒரு முறை உலகத்தை சுற்றி வருகிறான். அவன் கணக்கு படி 28 வருடங்கள். ஐன்ஸ்டீனின் சார்பியில் கோட்பாடின் மற்றும் Time dilation படி மேற்கே 1200 mph பறக்கும் விமானத்தில் சுற்றுபவன் ஒரு சுற்றுக்கு நானோ வினாடிகள் அளவுக்கு தான் அவனால் நிலத்தில் இருப்பவர்களைவிட அதிகம் வாழ முடியும். 28 வருடங்களில் ஒரு வினாடியைவிட குறைவான அளவுதான். அந்த மைக்ரோ வினாடி இறப்பை தள்ளி வைக்க 28 வருடங்கள் விமானத்தில் சுற்றல்.

இந்த கணக்கைதான், கதை சொல்லி கதையின் ஆரம்பத்தில் போட எண்ணுகிறார்.

கிரேக்க தொன்மங்களில் ஒரு கூறு உண்டு. கடவுள்கள் எப்பொழுதும் மனிதர்களை பார்த்து பொறாமை கொள்வார்கள். வாழ்வது என்பது நொடி பொழுதில் மறைந்து போகக்கூடியது. அதனால் மனிதர்கள் வாழ்வை அநுபவிக்க பல விதங்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் கடவுள் என்பவர் இறப்பே அற்றவர். சலிப்பு அளிக்கக் கூடிய வாழ்க்கை. கதையிலும் சலிப்பு என்பது நிறைய இடங்களில் வருகிறது.

இந்த ஜப்பானியரும் airport விட்டு வெளிவருவதில்லை. உலகத்தை சுற்றினாலும் உலகத்தை அனுபவிக்காதவர். Philleas fogg எண்பது நாட்களில் வாழ்ந்ததில் ஒரு துரும்பும் வாழாதவர். இவர் வாழ்பவரா? இறந்தவரா?

கதை சொல்லி இரவையும் அனுபவிக்கிறார், அதன் நீராவி தன்மையையும் உறக்கத்தில் உணர்கிறார்.

வாழ்வில் இந்த கதையை போட்டு பார்த்தால், ஒரு நாளையில் நான்கு மணி நேரம் வேலைக்கு பயணம் செய்யும் என் நண்பனின் புலம்பல் நினைவுக்கு வந்தது. அந்த நொடியில் வாழ்க்கை வாழுவது வாழக்கையா இல்லை வாழ்க்கை காலையில் குழந்தைகள் எழும் முன் புறப்பட்டு, அவர்கள் உறங்கிய பின் வீட்டிற்க்கு செல்லும் வாழ்வு. இத்தனைக்கும் அடிப்படை தேவைகளுக்கு மேல் உயரிய பொருளியல் சூழலில் வாழ்க்கை தரம். எலி ஓட்டத்தில் ஒடு்வது, சூரியன் அஸ்தமித்து இரவு வந்துவிடாமல் இருப்பதுக்கு மட்டுமே வாழுவது வாழ்க்கையா என்ற கேள்வி எஞ்சுகிறது.

சதீஷ்.

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை படித்துவிட்டு உறைந்து விட்டேன். நான் உறைந்தேனா அல்லது காலம் உறைந்ததா தெரியவில்லை. ஒரு படைப்பும் அதை படிக்கும் மனமும் கண்ணாடியில் எதிரெதிரே பார்த்துக்கொண்டு உறைவதென்பது அரிதாகவே நடக்கிறது.

பெரிய வைரக்கல் ஒன்றில் ஒளி பட்டு சிதறி ஜொலிப்பது போல், இந்த சிறுகதையை எந்த பரிமாணத்தில் பார்த்தாலும் ஒளிர்கிறது. உடைந்த வளையல் துண்டுகளை கலைடோஸ்கோப்பில் போட்டு குலுக்கி குலுக்கி பார்த்து மகிழ்வது போல், இந்த சிறுகதை மீண்டும் மீண்டும் சுண்டியிழுக்கிறது.

கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, இரவு-பகல், கிழக்கு-மேற்கு, ஆண்-பெண், அகம்-புறம், பிறப்பு-இறப்பு, ஊதா-சிவப்பு, உறவு-பிரிவு, புனைவு-உண்மை, கனவு-நிஜம், நோய்-மருந்து, குற்றம்-தண்டனை, கடந்த காலம்-எதிர்காலம் என்று சமச்சீராக எழுதி பிரமிக்க வைத்து விட்டீர்கள். இந்த கதையின் களத்தை கீழேயுமின்றி மேலேயுமின்றி அந்தரத்தில் பறக்கும் விமானத்தில் நிகழ்த்தியது, சமச்சீரின் சிறப்பை கூட்டுகின்றது.

அந்த ஜப்பானியரின் காதலி மரண படுக்கையில் இருக்கும் பொழுது நடக்கும் சம்பவங்களை, யோசித்து எழுதி நிரப்பிக்கொள்ளும் பணியை வாசகர்களுக்கும் கொடுத்து விட்டீர்கள். நன்றி. படைப்பாளியும் வாசகரும் கூடு விட்டு கூடு பாயும் தருணங்கள்தான் எத்தனை மகத்தானது?

இந்த சிறுகதையை மிகவும் ரசித்து படித்தேன் என்பது, நீங்கள் சொன்னது போல் ஃப்யூஜியாமா என்ற வார்த்தையை சொல்வது போன்றுதான். தாக்கத்தை எழுத முயன்று தோற்கிறேன். அதனால் இப்போதைக்கு கையில் வந்து அமர்ந்த இந்த நுரைக்குமிழியை ரசித்தபடி,

ராஜா,

சென்னை.

முந்தைய கட்டுரைஆழத்தின் முகங்கள்
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது