பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

பாலாவின் இவன் தான் பாலா என்ற சுயசரிதை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்.

அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது?’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்

அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது. அதில் அவர் என்ன கண்டார் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் அவர் சொல்வதுண்டு. பேச்சு அற்றுப்போய் உலகில் இருந்து அன்னியமானாலும் உள்ளூர ஆன்மாவும் சுயமரியாதையும் கொண்ட இடலாக்குடி ராசாவில் அவர் தன்னை பார்த்தார். அத்துடன் அத்தகையதோர் கதையை தன்னாலும் எழுதிவிட முடியும் என உணர்ந்தார். ’நான் என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு இத்தகைய கதாபாத்திரங்களை உருவாக்க முடியும் என்று பதில் கொண்டார்

அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது தமிழகத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்று. பிற்பாடு நண்பர் சுகா நாஞ்சில்நாடனை கூட்டிவந்து அறிமுகம்செய்தபோது பாலா அவர் காலடியில் அப்படியே விழுந்து வணங்கினார் ‘என்னை ஆட்கொண்ட குரு’ என. ஆனால் ஆட்கொண்டது கலைஞனின் வழியாக வெளி வரும் வாழ்க்கை என்ற குரு அல்லவா?

ஒருகதை நம்மை ஓங்கி உதைத்து திறப்பதென்பது ஒரு விசித்திரமான மர்மம். புதுமைப்பித்தனின் ‘மகாமயானம்’ அபப்டி தன்னை திறந்ததை சுந்தர ராமசாமி பதிவுசெய்திருக்கிறார். ‘அட இதுவல்லவா கலை’ என்ற பெரும் பிரமிப்பையும் ‘இதை நானும் உருவாக்க முடியும்’ என்ற தன்னுணர்வையும் ஒரேசமயம் அக்கதை தனக்களித்ததாக, அந்த பெரும்பரவசம் ஒரு உடல்நிகழ்வாகவே இருந்ததாக, சுந்தர ராமசாமி சொல்வதுண்டு.

இடலாக்குடி ராஜாவை நாஞ்சில்நாடனுக்காக அவரது நண்பர் சுல்தான் நடத்தும் இணையதளத்தில் மீண்டும் வாசித்தேன். இப்போது அதில் எனக்கு சேதுவை, சித்தனை, ருத்ரனை காணமுடிகிறது

இடலாக்குடிராசா

முந்தைய கட்டுரைகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்
அடுத்த கட்டுரைகோதையின் மடியில் 2