சிங்கப்பூரில் இருக்கும்போதே தோன்றியது, கேதாநாத் செல்லவேண்டும் என. அடுத்த வெண்முரசு நாவலுக்குரிய மனநிலைக்காக. அது சிவனிடமிருந்து பார்த்தன் பாசுபதம் வாங்கிய நிகழ்வில் சென்று முடியும் நாவல். பெயர் மட்டுமே இன்று மனதில் உள்ளது ‘கிராதம்’
கிராதார்ஜூனியம் என ஒரு குறுங்காவியம் சம்ஸ்கிருதத்தில் புகழ்பெற்றது. கிராதம் கதகளியில் முக்கியமான ஒன்று. காட்டுமிராண்டிவேதம் நோக்கிய ஒரு பயணம். ஆனால் இந்தமுறை சைதன்யா வரவேண்டுமென விரும்பியமையால் முதல்முறையாக விதிகளைத் தளர்த்தி பெண்களைச் சேர்த்திருக்கிறோம். இனிமேல் விதி விதியேதான்
இன்றுகாலை 7 மணிக்கு விமானத்தில் சண்டிகர் கிளம்புகிறோம். வழக்கம்போல ராக்கெட் ராஜா ஏற்பாடு.