கைநழுவிய கலைக்கணங்கள்

IMG_4176

ஷாநவாஸின் முட்டை பரோட்டாவும் கொத்து புரோட்டாவும் என்ற தொகுதி தான் முதல் முதலாக என் கவனத்துக்கு வந்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் அதை அனுப்பி எனது கவனத்துக்குரிய படைப்பு என்று தெரிவித்திருந்தார். பொதுவாக தமிழர்கள் தாங்கள் செல்லும் இடங்களின் வாழ்க்கையை எவ்வகையிலும் அவதானிப்பதில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் தமிழர்கள் சென்றிருந்த போதும் கூட உலகத்தைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் மிகக்குறைவானவை. ஐரோப்பாவைப் பற்றிக்கூட சொல்லும்படியாக எதுவும் தமிழில் எழுதப்பட்டதில்லை.

நெடுங்காலம் பாரிசில் வாழும் ஓர் ஈழநண்பர் மதுக்கடையில் பரிமாறுபவராக இருக்கிறார். நான் பாரிசின் அடையாளமாக இருக்கும் ஒயினை பற்றி நீங்கள் ஏன் ஒரு புத்தகம் எழுதக்கூடாது என்று கேட்டபோது, எழுதும் அளவுக்கு அவர் எதையுமே அவதானித்ததில்லை என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். இதை ப.சிங்காரம் அவருடைய ஒரு பேட்டியிலே சொல்லுகிறார். செல்லுமிடங்களில் புற உலகை சற்றும் கவனிக்காமல் இருப்பது தமிழர்களின் வழக்கம் என்கிறார். ஒருமுறை அவர்கள் பினாங்கிலிருந்து கப்பலில் செல்லும்போது புயல் வந்து உயிராபத்தான நிலையை அடைகிறார். பதினைந்து வருடம் கழித்து அவ்வனுபவத்தை திரும்பி எழுத முயலும் ப.சிங்காரம் அன்று படகில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டு அவ்வனுபவத்தின் சில தகவல்களை கேட்கும்போது எவருக்குமே அன்று படகில் சென்ற அனுபவமே மெலிதாகத்தான் நினைவில் இருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதின கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. அதன்பிறகு நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்.

அந்த எதிர்பார்ப்புடன் தான் ஷாநவாசின் இத்தொகுதியை படித்தேன். ஷாநவாசின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் தொடர்ந்து வாசிப்பு இருப்பதனால் பெரிய தடங்கல்கள் இல்லாமல் மொழியைக் கையாள முடிகிறது என்பதுதான். தேய்வழக்குகளோ செயற்கையான சொல்லாட்சிகளோ மிகைக்கூற்றுகளோ இல்லாத மொழி படிப்பதற்கு உகந்ததாகவும் உள்ளது. இதற்கப்பால் இக்கதைகளை பார்க்கும்போது இத்தகைய ஆரம்பகட்ட கதைகளில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் இதில் உள்ளன. ஒன்று அன்றாட வாழ்க்கை தருணத்தை அப்படியே பதிவு செய்வதுதான் கதை என்னும் எண்ணம். இரண்டு அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுட மேன்மை, அன்பு, தியாகம், கருணை போன்ற சில தருணங்களை கண்டடைவதற்கான முயற்சி. அதைக் கண்டடைந்த உடனே அதை அப்படியே பதிவு செய்தல்.

இலக்கியத்தில் இத்தகைய கதைகளுக்கான இடம் அருகி நெடுநாள் ஆகிறது. அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுடம் வெளிப்படுகிறது என்றால் ‘ஆமாம் அதுதான் தெரியுமே மேலே என்ன?’ என்று தான் இலக்கிய வாசகன் கேட்பான். இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையாக படித்துக் கொண்டே செல்லும் போது அந்த எதிர்பார்ப்பு மெல்ல அணைந்து கொண்டே இருக்கும் அனுபவம் தான் எனக்கு ஏற்படுகிறது.

சாட்சி ஒரு உதாரணம். தனக்கு சிக்கல் வரும் என்பதற்காக ஒருவர் சாட்சி சொல்ல மறுக்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மடியில் அமர்த்தியிருக்கும் சீனப்பெண்ணும் ஒரு பார்வையாளர்தான் என்று உணர்ந்த போது மனம் திருந்துகிறார். மூன்றாவது கை சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வரும் பெண்களின் சித்திரத்தை சொல்லும் கதைகளுக்கு ஒரு மாற்றாக இருக்கிறது. இங்கே தான் கொடுமைப்படுத்தப்படுவோம் என்று நினைத்து வரக்கூடிய பெண் அவ்வாறு நிகழவில்லை என்பதை அக்குடும்பம் தனக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.

இத்தகைய கதைகள் இன்றைய சூழலில் வாசகனிடம் எந்த மேலதிக பெறுமானத்தையும் பெறுவதில்லை. மட்டுமல்ல, இவற்றிற்கு சிங்கப்பூருக்கே உரித்தான தனித்தன்மை எதுவுமில்லை. சூழல் சிங்கப்பூராக இருக்கலாம். ஆனால் இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைகள் மட்டுமே. சில கதைகள் வலுவான வேறு கதைகளின் பாதிப்புடையவை என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணம் அனுமான். சக்கியின் [Hector Hugh Munro] சோப் என்ற கதையின் வலுவான பாதிப்பு இக்கதை தொகுப்பில் உள்ளது. பல உரைகளில் நான் குறிப்பிட்டிருக்கும் ஒரு கதை அது.

கறிவேப்பிலை ஒரு சாதாரண வாசிப்பில் நல்ல கதை. ஆனால் கறிவேப்பிலையைப்பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ அதே பாணியில் விமலாதித்த மாமல்லன் இன்னும் சுமாரான ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து மீண்டும் கீழிறங்கி அதைவிட சுமாரான கதையை ஷாநவாஸ் எழுதும்போது அதை இன்றைய வாசகனால் ஒத்துக் கொள்ள முடியாது.

கறிவேப்பிலைக்கு இரு குறியீட்டு அர்த்தங்கள் உண்டு சூழல் வெளியில் பயனளித்ததும் தூக்கிப்போடப்படுவது, நட்டு வளர்க்க மிகக் கடினமானது. ‘கறிவேப்பிலைக் கன்று போல என்ற பழமொழி அதைச் சுட்டுகிறது. மிகச் சிரமமாக நட்டு வளர்க்கப்படவேண்டிய ஒன்று உறவுகளுக்குள்ளே பூப்பதை இந்தக்கதை குறியீட்டு ரீதியாக சொல்கிறது என்றே எடுத்துக் கொள்ளலாம். அதன் உச்சகட்ட வாசிப்பு சாத்தியமும் அதுதான். அது தளிர்விடும் தருணம் ஒரு சிறுகதைக்கு உரியதுதான். ஆனால் வலுவாக சிறுகதையாக ஆவதற்கு இக்கதையில் இன்னும் அதிகமான மர்மங்கள் தேவை. கறிவேப்பிலையைப்பற்றிய இன்னும் அழகிய அழுத்தமான சித்திரம் தேவை.

நிஜங்கள், அழைப்பு போன்ற கதைகள் எல்லாமே மிக எளிதான வாழ்க்கை சித்திரங்களாகவே அமைகின்றன. தனிமையில் இருக்கும் முதியவரின் இறந்து போன மனைவியின் கலைச்சேகரிப்பை இளம்நண்பன் சீரமைத்துக் கொடுக்கிறான். அதுவரை அதைத்தான் செய்யாமல் இருந்ததை அவர் உணர்கிறார். அவருக்குள்ளும் அந்த நினைவுகள் சீரடைகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்,

இக்கதைகளில் மொழி அல்லது கூறுமுறை சார்ந்து குறைபாடுகள் எதுவும் அதிகமாக இல்லை. ஷாநவாஸ் கதையின் விதிகளைப் பயிலவேண்டிய அவசியம் இல்லை. மொழியும் கைவந்துள்ளது. ஆனால் வாழ்க்கைச் சித்திரம் எப்படி கலையாகிறது என்ற ஒரு மர்மத்தை நோக்கி அவர் கவனம் திசை திரும்பும் என்றால், இப்போது எழுதியிருக்கும் எளிய வாழ்க்கைச் சித்திரங்கள் இலக்கியத்துக்கு போதாது என்ற தன்னுணர்வை அவர் அடைவாரென்றால், வலுவான கதைகளை அவரால் எழுத முடியும். இன்றைய கதை என்பது கவித்துவத்தை கைப்பற்றும்போதே முழுமையடைகிறது. இந்த விமர்சனத்தில் அவருக்கு அதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இரு உதாரணங்களை சுட்டலாம். ஒன்று பேசாமொழி. தன் மகனுக்கு முறைப்பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக சிங்கப்பூருக்கு வரும் ஊமைப்பள்ளிக்கூட ஆசிரியை பக்கத்து குடியிருப்பில் இருக்கும் பேசமுடியாத சீனப்பெண்ணுடன் சைகை மொழியால் உறவாடுகிறார். மகனுடன் பேசியும் புரிந்து கொள்ள முடியாதவள் ஊமைப்பெண்ணின் கையசைவுகளை புரிந்து கொள்கிறாள். மகனுடைய பேசாத மொழியை அவள் கண்டு கொள்கிறாள்.

இந்த கதையின் அமைப்பு ஒரு சிறுகதைக்கு மிகப்பிழையானது. எடுத்த எடுப்பிலேயே அந்தக் கதை மகனை ஒரு திருமணத்துக்கு வலியுறுத்தும்பொருட்டு அன்னை வருவதாக ஆரம்பிக்கிறது. அந்தப்பிரச்னை பேசப்பட்ட பிறகு தனியாக சீனப் பெண் அறிமுகமாகிறாள். அதன் பிறகு சீனப்பெண்ணுக்கும் அவளுக்குமான உறவை நோக்கி கதை செல்கிறது. அந்த உறவு முடிந்த பிறகு மீண்டும் மகனுடனான உறவுக்கு வந்து மகனைப்பற்றி தன் மகளுக்கு ஒரு கடிதத்தை அந்த ஆசிரியை எழுதும்போது முடிகிறது.

இக்கதையின் மையமென்பது அந்த சைகை மொழி மட்டுமே. ஆகவே அந்த சைகை மொழியில் தான் இயல்பாக அந்தக் கதை ஆரம்பிக்க முடியும். சினிமா என்றால்கூட முதல் ஷாட்டே அதுதான். வாசகனின் முழுக்கவனத்தையும் அந்த சைகை மொழியை நோக்கியே கொண்டு செல்லவேண்டும். அந்தச் சைகை மொழியின் அழகையும் உயிர்ப்பையும் காட்டவேண்டும். உண்மையில் மொத்த வெளியுலகையும் சைகைமொழி எப்படி குறியீடுகளாக மாற்றியிருக்கிறது என்பது எழுத்தாளனுக்கு மிக முக்கியமான ஒரு அழகியல் வாய்ப்பு அல்லவா. ஒரு சிறுகதையாளன் அதை தவரவிடமாட்டான்.

உதாரணமாக திருமணம் ஒரு மோதிரத்தை கழற்றுவது போல எப்படி ஆகிறது? ஆசிரியை என்பது எப்படி ஒரு புத்தகமாக மாறுகிறது? இவ்வாறு சைகைமொழி வழியாக மொத்த உலகும் குறியீடுகளாக மாறும்போது வார்த்தைகளின் உலகம் எந்த அளவுக்கு பின்னுக்கு செல்கிறது! அதுதான் இந்தக்கதையில் எழுத்தாளனின் கற்பனையைச் சிறகடிக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். ஷாநவாஸ் அந்த சாத்தியத்தை மட்டும் கண்டடைந்திருந்தார் என்றால் இக்கதையில் பல பக்கங்களுக்கு வந்திருக்கும் திருமணப்பிரச்னை, அம்மா மகன் பிரச்னை எதையுமே கதைக்குள் அனுமதித்திருக்க மாட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன் எனது உதவியாளர் ஒரு சர்வதேச போட்டிக்காக ரோமாபுரிக்கு சென்றார். அவர் வாய்பேச முடியாதவர். செவி கேளாதவர். உலகெங்கும் அவருக்கு மொழிப்பிரச்னை இருக்கவில்லை. மொழி உலகத்தை பிரிக்கும் போது மொழியின்மை உலகத்தை இணைக்கும் ஆச்சரியத்தை அன்று கண்டுகொண்டேன். அத்தகைய நுணுக்கமான தருணங்களில் தான் கதை இருக்கிறதே ஒழிய அதை இழுத்துக் கொண்டு வந்து ஒரு அன்றாட வாழ்க்கையின் பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வாக முன்வைப்பதில் அல்ல.

ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் என்ற கதையில் கண் தெரியாத ஒருவர் கதீட்ரலை பார்க்கும்படி செய்யும் ஒரு தருணம் வருகிறது. அவர் கையைப் பிடித்து ஓவியர் ஒரு கதீட்ரலை வரைகிறார். இருவரும் புதிதாக ஒரு கதீட்ரலை கண்டுகொள்கிறார்கள். இப்படிச் சொல்லலாம், அன்றாட வாழ்க்கையில் அன்றாடத்தன்மையாலேயே மறைக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் அந்த அன்றாடத்தன்மையை விலக்கிக்காட்டுவதில் தான் கலை இருக்கிறதே ஒழிய ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு வந்து அன்றாட வாழ்க்கையில் பொருத்தி பார்ப்பதில் அல்ல.

இன்னொரு கதை தோடம்பழம். குறியீட்டு ரீதியாக சிங்கப்பூரின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் மிக சம்பிரதாயமான ஒன்றாக இருக்கிறது. ’அந்த வீட்டில் காட்டு அருநெல்லி மரம் ஒன்று இருக்கிறதே, அதன் வேர்கள் எந்த மரத்தையும் வளரவிடாமல் வேரறுத்துவிடும் அருநெல்லி மரத்தை வெட்டினாலும் அதில் புதைந்திருக்கும் அதன் வேர்கள் நம்மை தோட்டம் அமைக்க விடாது’ என்பது தான் இந்தக் கதையின் மைய வரி அது அளிக்கும் குறியீட்டு சாத்தியங்கள்தான் கதை

ஆகவே அதைக் கவனி என்றுதான் அந்தக் கதாசிரியன் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். அந்த அருநெல்லி மரம் வாசகனின் மனதில் பலவகையாக வளர்ந்து கொள்ள அவன் அனுமதிப்பான். சிறுவயதிலேயே எனக்கு தோட்டமளிக்க ஆர்வமுண்டு என்று இந்தக் கதை ஆரம்பிக்கும்போதே அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. [அல்லது அந்த அருநெல்லிமரம் சட்டென்று கதைக்குள் புகவேண்டுமென ஆசிரியன் எண்ணியிருக்கவேண்டும். அப்படியென்றால் அதன் அமைப்பே வேறு] அந்த மரம் ஓரு படிமமாக எதைச் சுட்டுகிறது என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது அருநெல்லி மரத்தைச் சார்ந்து மேலும் வளரவேண்டும்.

ஷாநவாசின் இத்தொகுதியில் பல கதைகள் சிறுகதைக்கான வாய்ப்பு கொண்டவை. ஆனால் வாய்ப்பு ஆசிரியரால் கண்டடையப்படவில்லை. சிறுகதையைக் குறித்த தொடர்விவாதமும், அவ்விவாதங்கள் வழியாக உருவாகும் சாத்தியங்களைக் குறித்த பிரக்ஞையின்மையும் தான் இதற்கு காரணம் என்று தோன்றுகிறது. இன்னொரு உதாரணமாக, மனைவியின் கலைப்பொருட்களை கலைத்து குவியலாக தன் வீட்டில் வைத்திருக்கும் முதியவரின் கதையில் அந்தக் கலைப்பொருட்கள் எவை என்ற ஒரு சித்திரத்தை ஆசிரியர் அளித்திருந்தால் அந்த மனைவி நமக்கு மிக அருகில் வந்திருப்பார்.

உதாரணமாக அவள் வைத்திருந்தவை அராபிய குத்துவாள்கள் என்றால் அக்கதை என்னவாக இருக்கும்? ஆப்ரிக்க அன்னைதெய்வங்கள் என்றால் என்னவாக இருக்கும்? அவள் அடுக்கி வைத்திருந்த முறைக்கு முற்றிலும் மாறாக அவன் அடுக்கி வைத்திருப்பதாக அந்தக் கதை முடிந்திருந்தால் அது வேறொரு கதையாக அமைந்திருக்கும்.

அனைத்திற்கும் மாறாக மறைந்து போன ஒரு முதிய பெண்ணின் கலைச்சேகரிப்பை ஒர் இளைஞன் எப்படி அணுகுகிறான், அவன் அதை எப்படி மாற்றுகிறான் என்பது ஒரு எழுத்தாளனின் கற்பனையை சிறகுவிரிக்க வைத்திருக்கவேண்டாமா? அதில் உள்ளோடும் உளவியல் ஆடல் சற்றேனும் வெளிப்பட்டிருந்தால் இது சர்வதேசத் தரம் கொண்ட ஒரு சிறுகதையாக இருந்திருக்கும்.

ஷாநவாஸின் இத்தொகுப்பை தவறவிடப்பட்ட அற்புதமான சாத்தியங்களின் தொகை என்றே சொல்வேன். கதைக்கான கருக்களை தெரிவுசெய்வதில் கலைஞனின் கண்களை வெளிப்படுத்தும் ஷாநவாஸ் அவற்றை கலையாக்கும்போது தோற்பதற்குக் காரணம் எந்த நரம்புமுடிச்சில் கதாசிரியனின் கை சென்று தொடவேண்டும் என அறிந்திருக்காததுதான். மொண்ணையான பாராட்டுரைகள், வாழ்த்துரைகளுக்குப் பதிலாக கூரிய விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருந்தார் என்றால் மிக எளிதில் அந்த தடையை அவர் கடந்திருப்பார்.

[மூன்றாவது கை – (சிறுகதைகள்)

ஷாநவாஸ்
வெளியீடு : தமிழ்வனம்]

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

ந.பழனி வேலு  பற்றிய கட்டுரை

சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை

பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை

மலர்விழி இளங்கோவன்கட்டுரை

சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்

அழகுநிலா கதைகள் பற்றி

சிங்கப்பூர் கடிதங்கள் 3

சிங்கப்பூர் கடிதங்கள்: 4

 

 

 

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் -கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் -6