அன்புள்ள அண்ணன்,
இப்பொழுது தான் பனைமரச் சாலையை நிறைவுசெய்தேன். பிரசவித்த மனநிலை என்பதைவிட பனம்பழம் உதிர்த்த பனை மரம்போல சலனமற்று இருக்கிறது மனசு. பனை எனும் பிரம்மாண்டத்தின் முன்னால் குருவியாக நான் உட்கார ஏதேனும் நிழந்திருந்தால் அதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. நான் உயர்ந்து நோக்கும் பலரும் இதைவிட பலபடிகள் முன்னோக்கி சென்று பெரும் பங்களிப்பாறியிருக்கவேண்டிய தருணத்தில், நான் ஒரு ஆத்மார்த்தமான முயற்சியை எடுக்க கடவுள் எனக்கு ஒரு நல் வாய்ப்பை அளித்தார் என்றே கொள்ளுகிறேன்.
பலவித சிக்கல்களுக்கு மத்தியில் எனது பயணம் நடைபெற்றதே பெரும் அதிசயம்.அதை விடுங்கள். நீங்கள் சிங்கபூர் செல்லும் முன்பு பார்க்கவேண்டும் என நினைத்து முடியவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் வாசகர் படையை என்னை நோக்கி திருப்பிவிட்டீர்கள். நான் 500 வார்த்தை எழுதினால் அவர்கள் 600 வார்த்தை எழுதுகிறார்கள். நல்ல பயிற்சி பெற்ற உலக வாசகர்களை உங்களாலேயே அடைந்தேன். நீங்கள் என்னை அறிமுகப்படுத்தி இரண்டே வாரத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியை பேராசிரியை லோகமாதேவி ஒழுங்கு செய்தார்கள், தினமும் பின்னூட்டமும் இட்டார்கள், கதிர் முருகன் உங்களால் எனக்கு கிடைத்த ஒரு தம்பி, சரவணன், இளங்கோ, நம்மூரைச் சார்ந்த சாகுல் ஹமீது, திருச்சி. டெய்சி மற்றும் அகிலன் ஆகியோர் கடிதங்கள் எழுதி ஊக்குவித்தனர். அனெகர் தொலைபேசியிலும் அழைத்க்டு வாழ்த்து தெரிவித்தனர். முதல் அழைப்பு சென்னையிலிருந்து ஒரு பேராசிரியை அழைத்தது என நினைக்கிறேன்.
நேற்று தான் சொல்வனத்தில் வெளியான கட்டுரையை வாசித்தேன், அதுவும் நீங்கள் என்னை அறிமுகம் செய்ததாலேயே சாத்தியமாகியிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
அனைத்திற்கும் நன்றி
தம்பி
காட்சன் சாமுவேல்
அன்புள்ள காட்சன்,
நலம்தானே?
உங்கள் பயணம் முக்கியமானது. நான் முதல் ஆர்வம் கொண்டது அதில்தான். அத்துடன் உங்களுக்கு எழுதவும் வருகிறது
இறைசேவை முதன்மையானது, ஆன்மாவுக்கு அணுக்கமானது. ஆனால் ஒருவர் அவருக்கு எது தனித்திறனோ அதில் இறைச்சேவை ஆற்றுவதே முழுமையானதாக அமையமுடியும். நீங்கள் செவை செய்யலாம். பேசலாம். ஜெபிக்கலாம். எழுதும்போது கிறிஸ்து மேலும் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்
ஜெ