சிங்கப்பூர் கடிதங்கள் 4

22

 

அன்புள்ள ஜெ

சிங்கப்பூர் இலக்கியம் குறித்த உங்கள் திறனாய்வுகளை வாசித்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் இலக்கியச் சூழலை நீங்கள் அறிவீர்கள். உண்மையான இலக்கியம்வளர நீங்கள் செய்வது ஒரு ’முக்கியமான கட்டுடைப்பு’. வருங்கால இலக்கிய தலைமுறையினரைப் பார்த்து இவைகளைக்கூறுவதாகவே நான் நம்புகிறேன்.

உங்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும்,திரித்து வளைத்து நுண்அரசியல் செய்து தன் இடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் பதற்றத்தையுமே இப்போதைய இலக்கியவாதிகள் அடைவார்கள், தேனீர் கோப்பைக்குள் புயல்களை உருவாக்குவார்கள். மாறாக காத்திரமான இலக்கிய விவாதத்திற்கு வருவார்களேயானால் தமிழ் இலக்கியம் இலத்தீன் அமெரிக்க இலக்கியம், வட்டாரஇலக்கியம் போல அசலான சிங்கப்பூர் இலக்கியம் தமிழுக்குக் கொடையாகக்கிடைக்கும், மலேசிய-சிங்கப்பூரரின் பிரச்சனைகள் தனியானவை அவைகளைப் பேசும் டைப்புகள் அசலானவைகளாக அமையும்.இலக்கியத்தரம் வரைபடங்களைத்தாண்டியது என்ற அடிப்படை உண்மையைக்கூடமீண்டும் மீண்டும் வலியுறுத்தியாகக் கூடிய சூழல்.

சமீபத்தில் நவீன் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த போதே இது நிகழுமென நான் நினைத்தேன். நா.கோ, இளங்கோவன் இத்தகைய சூழல்களையே எதிர்கொண்டார்கள்.இராம.கண்ணபிரான், ரெ.பாண்டியன், இந்திரஜித, கனகலதா போன்றோரின் நேர்மறையான .பகளிப்புகளும் இத்தகைய சூழல்களினாலே வீணாகின்றன.

சிங்கப்பூரின் நூலகத்துறையும் அரசும் சிறப்பான செயல்களைச் செய்கின்றன மேலும் செய்யத் தயாராய் இருக்கின்றன, மொழியின் வளர்ச்சி சார்ந்து ஏதேனும் பங்களிக்க சிலதனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் கூட ஆர்வம்கொண்டிருக்கின்றன. விருதுகளை விட, இளையோரை உள்ளடக்கிய பயிற்சிப்பட்டறைகளும், வாசிப்பு இயக்கங்களும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும்.
அவர்கள் தங்களின் பண்பாட்டு அடையாளங்கள் என இப்போதைய சிங்கப்பூர் இலக்கியம் காட்டும் போலி அடையாளங்களின் மீது குழப்பமும், விரக்தியும் கொண்டுள்ளனர்.திறனையும், தகுதியையுமே தலையானதாய் போற்றும் சிங்கப்பூரின் மையநீரோட்டத்தில் தமிழர்கள் பின் தங்குவதற்கான காரணங்களில் ஒன்று தமிழரின் இத்தகைய மன நிலை. விமர்சனங்களின் மூலம் தன்னை மாற்றிக் கொள்ளவும் செழுமைப்படுத்திக் கொள்ளவும் மறுப்பது மாறாக வெற்றுப் பழம் பெருமை பேசும் வழியை தெரிவு செய்வது.

சுப்பிரமணியன் ரமேஷ்.

 

அன்புள்ள சுப்ரமணியம் ரமேஷ்,

 

உண்மையில் என்ன பிரச்சினை என நீங்களே அறிவீர்கள். பயிற்சிப்பட்டறைகள் நடத்தலாம். ஆனால் அங்குள்ள எழுத்தாளர்கள் அதற்கெல்லாம் வரமாட்டார்கள். அவர்கள் பயிற்சிப்பட்டறைகளை நடத்தவே வருவார்கள். அவர்கள் அங்கே மாதாமாதம் நடக்கும் ‘இலக்கிய விழா’க்களில் சென்று சால்வையும் போலிப்பாராட்டும் பெற்று மீளவே விரும்புகிறார்கள். முதலில் அவர்கள் எழுதுவதெல்லாம் பயிற்சியற்ற குப்பை எழுத்து என்பதை அவர்களின் மூளைக்கு உறைக்கும்படிச் சொல்லவேண்டியிருக்கிறது.  இல்லை நீதான் சீமோங் த பூவா என்று சொல்ல இங்கிருந்து பிழைப்புவாதிகள்ம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

 

நா.கோவிந்தசாமி முதல் நவீன் வரை முன்வைத்த விமர்சனங்களை இந்த வெற்றுக்கூட்டம் எதிர்கொண்ட விதத்தை நான் அறிவேன். அந்த மொண்ணைத்தனமே இந்தக்கடுமையான விமர்சனமொழிக்குக் காரணம். இங்கேபோல வாழ்வதற்கே போராடும் நிலை என்றால்கூட மன்னிக்கலாம். ஒரு வளர்ந்த நாடு அளிக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு சீலைப்பேன் வாழ்க்கையையே வாழ்வோம் என்னும் அடம் தான் பொறுமையிழக்கவைக்கிறது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

சிங்கப்பூர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தீர்கள். 1990ல் இங்கே சுந்தர ராமசாமி ஒரு சிறுகதைப்போட்டிக்கு நடுவராக வந்தார். அவருக்கு  அளிக்கப்பட்ட எந்தக்கதையுமே ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் தகுதிகூட இல்லாதது, வெற்றுக்குப்பை என்று சொல்லி எவருக்கும் பரிசே கொடுக்காமல் திரும்பிச்சென்றார். அவரை வாய்க்குவந்ததுபோல திட்டினார்கள். அதன்பின் வந்து வாழ்த்திவிட்டுப்போகிறவர்களை மட்டுமே சிங்கப்பூருக்கு அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்த மாபெரும் படைப்பாளி ஏன் அப்படிச் சொன்னார் என்றுகூட எண்ணிப்பார்க்கவில்லை.

 

அதன்பின் இந்தியாவில் இருந்து வந்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றி கடுமையான கருத்தைச் சொன்னவர் என்றால் இமையம். அசோகமித்திரன் வந்து தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டுச் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். அதன்பின் இப்போது நீங்கள். இதெல்லாம் இவர்களை ஒன்றுமே செய்யப்போவதில்லை.  நீங்கள் இங்கே தனிப்பட்ட முயற்சியில் ஒரு இலக்கியப்பட்டறை நடத்தினீர்கள். எத்தனை சிங்கை எழுத்தாளர்கள் வந்தார்கள்? அத்தனைபேரும் அதே நாட்களில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பரஸ்பர சொறிதலுக்குத்தான் சென்றனர். இதுதான் இங்குள்ள மனநிலை.

 

இதெல்லாம் எளிதில் மாறாது. இதற்குப்பின்னால் உள்ளது திறமையின்மை அல்ல. அப்படியென்றால் சொல்லிக்கொடுக்கலாம். அக்கறையின்மை சுயநலம் அசட்டு ஆணவம் இதெல்லாம்தான். அதற்கு மருந்தே கிடையாது

 

[என் பெயர் வேண்டாம். நானும் இங்குள்ள இலக்கிய வன்முறையைக் கண்டு பயப்பட்டு ஒடுங்கியிருக்கும் ஒரு வாயில்லாப்பூச்சிதான்]

 

எஸ்

 

*

 

 

அன்புள்ள ஜெ,

 

என்பெயர் வேண்டாம். நான் சிங்கையின் குடியேறி.  திருமதி சூர்யரத்னாவின் ஃபேஸ்புக் குறிப்பில் இருந்து நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டவே இந்தக்கடிதம்

 

நீங்களோ நாஞ்சில்நாடனோ இங்கே வரும்போது மட்டும் தேர்ந்த வாசகர்களின் ஒரு பெரிய கூட்டம் வந்து அவையில் அமர்ந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டுக்கே பெரியகூட்டம் வந்தது. ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் ஏன் இவர்கள் செல்வதில்லை? சொல்லப்போனால் உங்கள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வந்து நேரில் அழைக்கிறார்கள். இருந்தும் ஏன் செல்வதில்லை?

 

முதல் விஷயம் சலிப்பு. திரும்பத்திரும்ப பல ஆண்டுகளாக ஒரே முகங்கள். ஒரேமாதிரி பாராட்டுகள். அசட்டு எழுத்துக்கள். வாசிப்பவர்களே கிடையாது. அதிகாரத்தை அண்டி நிதிபெறுவதைத்தவிர வேறு நோக்கமே கிடையாது. அதைவிட முக்கியமானது குடியேறிகள் – குடிமகன்கள் என்னும் வேறுபாடு. சூர்யரத்னா அசட்டுத்தனமாக அதை சமூகவலைத்தளத்திற்குக் கொண்டுவந்துவிட்டார். அது இங்கே குற்றம். எவராவது புகார் கொடுத்தால் அவர்மேல் நடவடிக்கை வரும். ஆனால் மற்றவர்கள் இதை மனதிலேயே வைத்திருப்பார்கள்.

 

ஆகவே ஒரு சின்ன விமர்சனம் கூட வைக்கமுடியாது. நீ பி.ஆர் தானே [பெர்மனெண்ட் ரெசிடெண்ட்]  என்றுதான் அடுத்த கேள்வி வரும். சகட்டுமேனிக்கு புகார்கள் அனுப்புவார்கள். வேலைபோய்விடும் என மிரட்டுவார்கள். நமக்கு எதுக்கு வம்பு என என்னைப்போன்றவர்கள் முடிந்தவரை ஒதுங்கி வாய்மூடி இருக்கிறோம்.சூர்யரத்னாவுக்கு நீங்கள் பி.ஆர் இல்லை, அரசு விருந்தினர் என்பதுகூட தெரியவில்லை பார்த்தீர்கள் அல்லவா?

 

இதுதான் நிலைமை. இந்த உண்மைக்குமேலேதான் தமிழக ஒற்றுமை, தமிழ்மேன்மை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

 

ஆர்

*

ஜெ,

என்னை போன்றோருக்கு வேலைப் போக  கிடைப்பது சொற்ப நேரம்…அதில் தினமும் சில பக்கங்களே படிக்க முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்களே என அந்த அம்மாவை ஒரு நாள் படிக்க நேர்ந்து நொந்து கொண்டேன்.

இன்றைய தினம் வரை  அந்த  பெண்மணிக்கு கிடைத்த மிகப் பெரிய விருது நீங்கள் விமர்சனம் செய்தது தான் . உங்கள் வாசகர்களின் கடித நேர்த்தியை பார்த்தாவது இவர் தமிழைக் கற்றுக் கொள்ளட்டும்.

நன்றி
பிரசாந்த்

 

 

முந்தைய கட்டுரைஅறியாமை இறக்குமதி
அடுத்த கட்டுரைஒழுக்கப்பார்வையும் கலையும்