ஜெ,
அருமையான கட்டுரை. ஆஃபாயில்களும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களும் என்று ஒரு சினிமாத்திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முழுநீள நகைச்சுவைக்காவியம். யூஸ் பண்ணிக்கிறேன்.
ஆர். அருண்
***
அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி நீங்கள் எழுதிக்கொண்டுப்பவற்றை வாசித்தேன். நானும் நீங்கள் நீங்கள் சொன்னதையே நினைத்தேன். அங்கே ஒரு canon உருவாக்க நினைக்கிறீர்கள் என்று. எந்த ஒரு இலக்கியச்சூழலிலும் அவசியமானது அதுதான். canon இல்லாமல் ஒரு இலக்கியமரபை மதிப்பிடவோ அல்லது அதிலிருந்து அடுத்த கட்டத்தை உருவாக்கவோ முடியாது. அடுத்த தலைமுறைக்கு முன் இதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இன்னின்ன குறைநிறைகள் உள்ளன என்று சொல்வதன்மூலம்தான் canon உருவாகிவரமுடியும்
தமிழுக்கு அவ்வகையில் க.நா.சு மிகப்பெரிய பங்களிப்பாற்றியிருக்கிறார். இன்று நீங்கள் செய்யும் அதே பணிதான். அவர் அன்றைய நட்சத்திரங்களான கல்கி, சாண்டில்யன், தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரை நிராகரித்தார். ஆகவே அன்று அவரை வசைபாடினார்கள். ஆனால் அவர் சொன்னதே நிலைக்கிறதை இன்று காண்கிறோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.பரா, ந.பிச்சமூர்த்தி என்னும் மரபு அவர் உருவாக்கியதே.
அந்தத்தலைமுறையில் பலர் எழுதிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அதில் நால்வரைத்தான் க.நா.சு முன்னிறுத்துகிறார். இதுதான் canon உருவாக்குதல். அதை நீங்கள் செய்கிறீர்கள். அங்குள்ள அரைவேக்காடுகளுக்கும் போலிகளுக்கும் கடுப்பு கிளம்பும்தான். ஆனால் க.நா.சுவின் குரலை முன்னெடுக்க அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பிரமிளும் வந்ததுபோல அடுத்த தலைமுறை வரும். வந்தால் அவர்களுக்கு நல்லது.
சாரங்கன்
***
ஜெ
டிவிட்டரில் சும்மா சூர்யரத்னா என அடித்துத் தேடிப்பார்த்தேன். என் வாழ்க்கையிலேயே அப்படிச் சிரித்தது இல்லை. அற்புதமான பல டிவிட்டுகள். விளையாடியிருக்கிறார்கள்
நன்றி. You made my day!
ஜெயபாலன்
***
அன்புள்ள ஜெமோ,
நீங்கள் விமர்சகர். பெரியமனிதர். ஆனால் சின்னத்தனங்களைச் செய்கிறீர்கள். சூர்யரத்னா கதைகளைப்பற்றி எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன். என்னவேண்டுமென்றாலும் எழுதுங்கள். உங்கள் சுதந்திரம். ஆனால் உங்கள் கருத்தைக்கண்டு அந்த கருமாந்தரத்தை வாசித்த என்னைத்தான் செருப்பால் அடிக்கவேண்டும். என்ன ஒரு vulgar amateurism! தாங்க முடியவில்லை. இவையெல்லாம் எப்படி நூலாக அச்சாகின்றன? எப்படிப் பரிசு பெறுகின்றன? தமிழக விருது இந்த குப்பைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காசு வாங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது என் சந்தேகம். அந்தத் தமிழக அமைப்பு மீது ஏதாவது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நினைத்துக்கொண்டேன்.
ஜெயராமன்
***
அன்புள்ள ஜெ
உங்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்த விமர்சனத்திற்குப் பதிலாக எழுதப்படுவனவற்றை கவனிக்கிறீர்களா? பாலு மணிமாறன் என்னும் ஆசாமி கீழ்த்தர வசைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார். அவர்தான் பிரசுரகர்த்தராம். காசு வாங்கி புத்தகம்போடுபவர் என நினைக்கிறேன். அவர்மேல்கூட நீங்கள் சட்டநடவடிக்கை எடுக்கலாம். கூடவே மாலன் போன்ற பிழைப்புவாதிகள் போய் ஜால்ரா அடிக்கிறார்கள். இந்த கூச்சலுக்கு அப்பால் நாலைந்து நல்ல இளம் படைப்பாளிகள் நீங்கள் எழுதுவதை வாசித்தால்கூட நல்லதுதான் என நினைக்கிறேன்
எஸ். கருணாகரன்
***
அன்புள்ள ஜெ
அந்தம்மாவின் எதிர்வினையை வாசித்தேன். நீங்கள் ரொம்ப லக்கி. நீங்கள் ஒருவரைப்பற்றி ஒன்று சொன்னால் அவர்களே பாய்ந்துவந்து அது உண்மைதான் எனறு நிரூபித்துவிடுவார்கள். என்ன ஒரு மொழிநடை. அதைவிட என்ன ஒரு ஆங்கிலம். அட! சிங்கப்பூரில் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கைடு நன்றாக விற்க வாய்ப்புண்டு போலயே. அதிலுள்ள வசைகள், எளிமையாகக்கூட எதையும் புரிந்துகொள்ள முடியாத ஆர்ப்பாட்டம். [விளக்கு பிடிப்பது, எதையோ தேய்த்துக்கொண்டதுபோல எரிவது…] நடுவே மாலன் போன்ற ஆசாமிகள். இவர்களுக்கெல்லாம் அவர்தான் சரி. அவர் சும்மா ஆடமாட்டார். என்னவோ வசமாகச் சிக்கப்போகிறதென நினைக்கிறேன்
கல்யாணராமன்
***
அன்புள்ள ஜெ,
சிங்கப்பூர் இலக்கியச்சூழல் பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மையில் பீதியைக் கிளப்புகிறது. அங்கே ஆக்கபூர்வமான ஒரு உடைவு நிகழாமல் ஒன்றுமே வளராது. அதற்கு முதல்தேவை அங்குள்ள அதிகார அமைப்புக்கள் இந்தமாதிரியான போலிக்குரல்களை அடையாளம் கண்டு களையெடுப்பதுதான். சூழலை எவரும் மிரட்டிவைத்திருக்க அரசு அனுமதிக்கக்கூடாது. இதைப்பற்றி சிங்கப்பூர் அரசுக்கே ஒரு மனுவை எழுத்தாளர்கள் அளிக்கலாம் என நினைக்கிறேன்
எஸ். ராமச்சந்திரன்
***
அன்பு ஜெயமோகன்,
நலமா?
சூர்யா ரத்னாவின் கதை ஒன்றைப் படித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்கிற லட்சணத்தில் தான் இருக்கிறது. ஆனால் உங்கள் பதிவில் கடுமையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அவரின் பிழைப்பைக் கெடுக்கிறதாய் நினைத்திருப்பதால் தான் அவர் இவ்வளவு மோசமான எதிர் வினையைப் புரிந்திருக்கிறார்.
அவரின் எழுத்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த விமலா ரமணியின் எழுத்து போன்றது வெவ்வேறு ஒழுக்க மதிப்பீடுகள் இருக்கும் போதும். இவை பெரிய எல்லைகளைத் தொட முடியாது என்று தான் தோன்றுகிறது. ஆனால் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட படி ‘குயில் கூவும் கானகங்களில் காகத்துக்கு இடம் உண்டு!‘.
அன்புடன்,
அஸ்வத்
***
அன்புள்ள ஜெ,
விமர்சனங்களுக்கு பதிலடியாக காவல்துறையை நாடியிருக்கும் போக்கு அதிர்ச்சிக்குரியது. இலக்கியம் பண்படுதலுக்கானது என நான் நினைக்கிறேன். இலக்கியவாதிகளாக அறிவித்துக் கொள்பவர்களே பண்படவில்லையென்றால் அவர்களின் படைப்பே அணுகத் தகுதியற்றது என்று நினைக்கிறேன். எவ்வளவு விமர்சனங்களை கருத்தியல் சார்ந்து வைத்தாலும் தமிழின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தப்போகிற எழுத்தாளுமை நீங்கள். உங்களுக்கு எதிரான இந்த தாக்குதலை தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு எதிர்க்காவிட்டால் அதற்காக பணி செய்வதையே நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்தப்போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது.
அன்புடன்,
அகில் குமார்
***
மதிப்பிற்குரிய ஜெ,
முகநூலில் சூர்யரத்னா என்னும் நாலாந்தரப் பெண் எழுத்தாளர் தங்களைப் பற்றி எழுதியதைப் படித்து மிகுந்த அருவருப்பு அடைந்தேன்.இலக்கியம் என்னும் கருத்து உருவாக்கம் கருத்து மோதல் மூலமே உருவாக முடியும் என்பதை அறியாத இந்த ஜென்மங்கள் எழுத்தாளர் என்று சொல்லித் திரிகின்றன.
இவர் எதையும் வாசித்தது இல்லை என்பது திண்ணம்.அவர் பதிவில் தெரியும் திமிர் (Is this guy, that guy) பொதுவாக கொஞ்சம்பணம் சம்பாதித்தவர்களிடம் காணக் கிடைப்பது. இவர்கள் தங்களை தாமாகவே உயர்த்தி பிடித்து கொண்டு மற்றவர்களை ஏறி மிதித்து அனைத்தையும் பணத்தால் மதிப்பிடுபவர்கள். அவருக்கு ஜால்ரா தட்டுபவர்களும் இருப்பதால் தாங்கள் பெரிய இதுகள் என்று புளாங்கிதம் அடைகிறார்கள். அதில் அம்மணிக்கு constructive criticism வேறு செய்ய வேண்டுமாம்
அரிபாலாஜி
===========================================================
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்
சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்
பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி
சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1