ஜெயகாந்தனின் முகம்

s uthuman ghani photo

பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது மு.தளையசிங்கம் ஜெயகாந்தனை ஒரு ’மாபெரும் இலக்கிய சக்தி’ என்று குறிப்பிட்டதை பற்றி பேச்சு வந்தது. மு.தளையசிங்கத்தின் கலைப்பார்வையில் சுந்தர ராமசாமிக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால் ஜெயகாந்தன் சுந்தர ராமசாமி ஏற்றுக் கொள்ளக்கூடிய படைப்பாளி அல்ல. மிகையான அறிவுத்தன்மையும்,ஓங்கிய குரலும் ஜெயகாந்தனின் படைப்புகளின் கலைக்குறைபாடுகளாக அவர் எண்ணினார். ”அப்படியென்றால் மு.தளையசிங்கம் போன்ற ஒரு படைப்பாளிக்கு எப்படி ஜெயகாந்தன் ஏற்புடையவரானார்?” என்று நான் கேட்டபோது, ”அவர்கள் ஜெயகாந்தனை அன்றி தமிழின் பிறமுக்கியமான படைப்பாளிகளை அறிந்ததில்லை” என்று சுந்தர ராமசாமி பதில் சொன்னார்.

“ஜெயகாந்தனிடம் காணும் இதே குறைகள் புதுமைப்பித்தனிடமும் உண்டல்லவா அவருடைய பெரும்பாலான கதைகள் அறிவுத்தளத்தில் இருந்து எழுதப்பட்டவைதான். கணிசமான கதைகளில் உரத்த குரலும் உள்ளது” என்று நான் சொன்னேன். சுந்தர ராமசாமி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. புதுமைப்பித்தனின் கதைகளின் உரத்த தன்மையானது அவரது அங்கதத்தால் சமன் செய்யப்படுகிறது என்பதனால் அது கண்ணுக்குப்படவில்லை என்பது எனது எண்ணம்.

ஜெயகாந்தனின் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கிய அறுபதுகளில் இருந்து தமிழின் இலக்கியப்பார்வையில் ஒரு முக்கியமான நிலைபாட்டை க.நா.சுப்ரமணியம் தலைமை தாங்கி முன்னெடுத்த நவீன இலக்கியப் பரப்பு உருவாக்கிக் கொண்டது. அடங்கிய குரல், விலகிய பார்வை, கதை என்னும் வடிவம் இல்லாமல் வெறும் நிகழ்வுகளாகவே வாழ்க்கையைச் சொல்லும் போக்கு என சில அம்சங்கள் கொண்டது அது. க.நா.சு அவருடன் வட்டார வழக்கு மற்றும் கிராமிய வாழ்க்கையின் இயல்புவாதச் சித்தரிப்பு ஆகியவை கொண்ட படைப்புகளைத் தீவிரமாக முன்வைத்தார். இந்த அலை நவீன இலக்கியம் என்னும் வட்டத்திற்குள் ஜெயகாந்தனின் படைப்புகளின் இடத்தை குறைத்தது. க.நா.சு அகிலன், நா.பார்த்தசாரதி போன்றவர்களை வணிக எழுத்து என நிராகரித்தார். ஆனால் ஜெயகாந்தனை மறுத்தபடியே இருந்தார். ஜெயகாந்தனின் பெரும்பாலான முன்னுரைகள் க.நா.சுவுக்கு எதிரானவை என்பதை இன்று வாசிப்பவர்கள் உணரமுடியும்

ஜெயகாந்தனின் படைப்புகள் பலவிதமான கலைக்குறைபாடுகள் கொண்டவை எனினும் அவருடைய வலுவான கதாபாத்திரங்கள் தமிழிலக்கியத்துக்கு ஒருபோதும் மறக்கத்தக்கவை அல்ல. பல சமயம் அவருடைய கதைகளை நினைத்துப்பார்க்கும்போது வாசித்ததை விட கூடுதலான அனுபவம் வருவதையும் உணரமுடியும். க.நா.சுவால் தமிழில் நிகழ்ந்த இந்த எதிரியக்கம் இல்லாததனாலேயே இலங்கையிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஜெயகாந்தனுடைய பாதிப்பு அதிகமாக இருப்பதை பார்க்கிறேன். தளையசிங்கத்துக்கு ஜெயகாந்தன் மேல் வந்த ஈடுபாட்டுக்கு காரணம் இது.

சிங்கப்பூர்ச் சிறுகதைகளை கூர்ந்து வாசிக்கும்போது பெரும்பாலும் அனைவரிடமும் ஜெயகாந்தனின் நேரடி பாதிப்பு உள்ளது என்பதைக் காணமுடிகிறது.. அவருடைய கதைகள் இங்கு அதிகமாக கிடைத்திருக்கலாம் என்பது ஒரு காரணம். அவர் பேசிய பண்பாட்டு முரண்கள் மேல் இயல்பாகவே இங்குள்ளவர்களின் கவனம் அதிகமாக விழுந்திருக்கிறது என்பது இன்னொரு காரணம். ஏனெனில் வெளியுலகை அதிகமாக சந்திக்கும் வாய்ப்புள்ள ஒரு வணிகச்சூழலில், பல்லினப் பண்பாட்டு பின்னணியில் வாழ்ந்த இவர்களுக்கு வாழ்க்கையை மெல்லிய நுண்ணுணர்வுகளாக அன்றி பண்பாட்டு மோதலாகவே பார்க்கும் கட்டாயம் இருந்தது என்று படுகிறது. புதுமைதாசன், இளங்கண்ணன் போன்றவர்களின் படைப்புகளில் இருக்கும் ஜெயகாந்தனின் பாதிப்பு தனியாகக் கூர்ந்து ஆராயத்தக்கது. இலங்கைப் படைப்பாளிகளான தளையசிங்கம், தெளிவத்தை ஜோசப் போன்றவர்களிடம் மலையகப்படைப்பாளிகளான சி.முத்துசாமி போன்றவர்களிடமும் இருக்கும் ஜெயகாந்தனின் பாதிப்புகளை ஒப்பிட்டு எவரேனும் ஒரு நல்ல ஆய்வை செய்ய முடியும்.

சிங்கப்பூரில் ஜெயகாந்தனின் நேரடியான பாதிப்பு கொண்ட ஒரு எழுத்தாளராக உதுமான் கனியை பார்க்கிறேன். இக்கதைகளை வாசிக்கும்போது எப்படியோ மலேசியாவின் மூத்த எழுத்தாளரும் ஜெயகாந்தனின் நண்பருமான சை.பீர்முகம்மது அவர்களின் நினைவும் கூடவே வருகிறது. முதன்மையாக ஆசிரியன் வாசகனை நோக்கி அழுத்தமான குரலில் பேசும் அந்த தோரணையில் ஜெயகாந்தன் வந்துவிடுகிறார். வியப்பொலிகள், குறுகிய சொற்றொடர்களில் வரும் உணர்ச்சிகரமான கூற்றுகள் போன்றவை ஜெயகாந்தனுக்கே உரியவை.

உதுமான் கனியின் புனைவுலகம் ஜெயகாந்தனின் பாணியில் அறிவுத் தளத்தில் நிகழும் பண்பாட்டு மோதல்களினால் ஆனது. ஆனால் கொள்கைகள் சார்ந்து உபதேசங்களை முன்வைக்காமல், பண்பாட்டு மேன்மைகள் போன்ற பொய்யான பரவசங்களுக்கு ஆளாகாமல் ஓரு முதிர்ச்சியுள்ள அறிவுத்தளத்தில் நின்றே அப்பண்பாட்டு சிக்கலை அவர் எதிர்கொள்கிறார். உதாரணமாக விடியாத துருவஇருள். சிறுகதை இலக்கணம் கச்சிதமாக அமைந்த நல்ல கதை.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று மதத்தை சேர்ந்த தன் காதலிக்கு விடை கொடுக்க வந்திருக்கும் கதாநாயகன். விமானம் தாமதமான அந்த சிறிது நேர இடைவெளியில் ஒரு காப்பி அருந்துவதற்காக இருவரும் போகும் தருணம். அதில் நிகழும் உரையாடல்கள். அவ்வளவுதான் அந்தக் கதை. ஆனால் உண்மையிலேயே பண்பாட்டு துருவப்படுத்தல்களுக்கு முன் மனித உறவுகள் எவ்வளவு அற்பமானவை என்று ஒருவித பிரமிப்பை கதை உருவாக்கிவிடுகிறது. லட்சியவாதம் பேசலாம். ஆனால் நடைமுறை இரும்பாலானது. வாசகனும்கூட ஒரு எளிய முடிவைச் சொல்லிவிடமுடியாத இக்கட்டு. அதை மிகக்குறைவான, மிக நம்பகமான உரையாடல் மூலம் இக்கதை சொல்லிவிடுகிறது.

உண்மையில் ‘ஒன்றுமே நிகழாத’ ஆனால் வலுவான ஒரு கதை எழுதுவது என்பது எழுத்தாளனுக்கு பெரிய அறைகூவலே. அதை சாதித்திருப்பதனாலேயே இத்தொகுதியின் சிறந்த கதையாக அமைகிறது. ஜெயகாந்தன் கதாபாத்திரங்கள் போலவே இருவருமே அறிவுத்தளத்தில் நின்று கொண்டு பேசுகிறார்கள். ’விடியாத துருவஇருள்’ என்னும் தலைப்பு ஜெயகாந்தனின் கதைகளின் தலைப்புகளைப்போலவே கதையை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய தன்மை கொண்டிருக்கிறது.

முதல் கதையான சலனம் சிறுகதை என்பது எந்த விளைவுக்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிறதோ அதற்காக மிகச் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றுப் பாடபுத்தகத்திற்குள் வைத்து பாலியல் நூலை பார்க்கும் மாணவனை கையும் களவுமாக பிடிக்கிறார் ஆசிரியை. அந்த புத்தகத்தை பறிமுதல் செய்கிறார். அந்தப்புத்தகத்தை திரும்பிப் பெறும்பொருட்டு ஆசிரியையைப் பார்ப்பதற்காக செல்கிறார் மாணவன். ஆசிரியை அந்த வகையான எழுத்துக்கள் எப்படி பெண்களை வெறும் போகப்பொருட்களாகக் காட்டுகின்றன என்பதை சொல்லி அவனைக் கண்டித்து அனுப்புகிறார்.

ஆனால் இக்கதையின் நுட்பம் அல்லது மையம் அமைந்திருப்பது ஒரு கணத்தில் ஆசிரியையே தன்னை பாலியல் ரீதியாக கவரும்பொருட்டுதான் இந்தப்புத்தகத்தை பறிமுதல் செய்து ஒளித்து வைத்திருக்கிறார் என்று மாணவன் எண்ணுவதாக வரும் நுண்ணிய மனத்திரிபின் வெளிப்பாட்டில்தான். அதை மிக இயல்பாக தொட்டுச்செல்லும் கதை அத்தகைய நூலைப் படிப்பதன் உளவியல் என்ன என்பதை தொட்டுவிடுகிறது. சிறுகதையே இவ்வாறு ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்படவேண்டிய விஷயங்களுக்காக அமைந்ததுதான். ஜெயகாந்தனின் ரிஷிமூலம் போன்ற கதைகளின் உலகைச்சேர்ந்த ஆக்கம் இது.

இத்தொகுதியின் சிலகதைகள் ஒருங்கு கைகூடாத வடிவத்துடன் மிகையுணர்ச்சிகளை தொட்டுத் தாவிச்செல்லும் வடிவம் கொண்டுள்ளன. உதாரணமாக அஸ்தமனம், சராசரி. ‘சராசரி’யை ஒரு மோசமான ஜெயகாந்தன் கதை என்று எளிதாகச் சொல்லிவிடமுடியும் கதையில் வரும் அந்த எழுத்தாளன் தன்னைப்பற்றிக் கூறும் மொழிநடையே நேரடியாக ஜெயகாந்தனிலிருந்து ஊறி வந்தது போல் தோன்றுகிறது.

உதுமான் கனியின் இத்தொகுப்பை இரண்டாகப்பிரிக்க முடியும். ஜெயகாந்தனிலிருந்து தொடங்கி சற்றே முன் சென்று தனக்குரிய அழகியலைக் கண்டடைந்த கதைகள், ஜெயகாந்தனாகவே நின்றுவிட்ட கதைகள். ஜெயகாந்தனாகவே நின்றுவிட்ட கதைகள் உண்மையில் ஜெயகாந்தனை விட பலபடிகள் கீழே நிற்கின்றன. ஏனெனில் உதுமான் கனி ஜெயகாந்தன் அல்ல.

ஆனால் இத்தொகுதியின் முக்கியமான கதை அஃறிணை உயர்திணை. சிறுகதையின் இன்றியமையாத சவாலான சொல்லிமுடித்தும் பெருமளவை எஞ்சவைக்கும் தன்மை கொண்ட கதை இது. இரு சரடுகளாக கதை நகருகிறது. ஒரு சரடு முச்சந்தியில் வாழும் ஒரு நாய் தன் குட்டிகளுடன் கொள்ளும் உல்லாசமும் போராட்டமும். பிறிதொன்று மனைவியும் குழந்தைகளும் இருக்கும்போது ரகசியமாக கணவனை இழந்த பிறிதொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பவனின் வாழ்க்கை.

இரு வாழ்க்கைகளுக்கும் இடையே இப்புவியின் நிகழ்வுவலையில் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இறப்பு என்னும் புள்ளியில் அவை இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. அந்தக் கணத்தில் இருந்து பின்னால் திரும்பிச் செல்லும்போது இரு வாழ்க்கைகளும் ஒன்றையொன்று அர்த்தப்படுத்த ஆரம்பிக்கின்றன. சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது.தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளின் வரிசையில் தயங்காமல் இதை வைக்கலாம்.

உதுமான் கனி இத்தொகுதியை நெடுங்கால எழுத்து வாழ்க்கைக்கு பின்னால் தொகுத்திருக்கிறார். மிகக் குறைவாகவே அவர் கதைகள் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. இளையவன் என்ற பெயரில் எழுதியபின் தன் சொந்தப் பெயரில் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் வழக்கறிஞராகவும் இருந்த அவர் இளமையிலேயே இறந்தார். அவர் தொடர்ச்சியாகவும் நிறையவும் எழுத முடியாமல் ஆனது சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பெரும் இழப்பே.

உதுமான்கனி நினைவுகள் ஷாநவாஸ்

========================================================

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

முந்தைய கட்டுரைரொம்பச்சேட்டை
அடுத்த கட்டுரைசிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்