சிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்

இனிய ஜெ.

வணக்கம். ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்’ பற்றிய உரையின் வடிவம் கண்டேன். இலக்கிய உரகர்களான எங்களுக்கு, உளஎழுச்சி தரும் வெய்யோனின் ஒப்பற்ற ஒளிபாய்ச்சிய அற்புதத்தருணம் இது என்பதாய் மகிழ்கிறேன். இதற்குத்தான் பலநாட்களாக நாங்கள் காத்திருந்தோம்.

தமிழகத்திலிருந்து வந்துசெல்லும் படைப்பாளர்களில், திரு.மாலன் மட்டுமே நானறிந்தவரையில் சிங்கப்பூர் இலக்கியங்களின் மீதான தொடர்வாசிப்பும் கவனமும் கொண்டவர். அடிக்கடி அவர் இங்கு வந்துவிட்டுச் செல்வதாலும் தொடர்ந்து இங்குநடத்தப்படும் போட்டிகளுக்கும் நடுவராக இருந்து வந்தமையால், இயல்பான ஒரு அளவுகோலும் பின்புலத்தையும் கொண்டு சிங்கப்பூர்ப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்திக்கொண்டேவந்தார்.

இலக்கிய உலகில் கறார் தன்மையும், உள்ளதுகூறல் என்றவகையின் பின்புலத்திலும், சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கு தாங்கள் அளித்த இச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. இங்குள்ள, இதுவரையான படைப்பிலக்கிய உலகின் பின்புலமும் கட்டமைப்பும், படைப்பாளர்களின் எண்ண ஓட்டமும் போக்கும், வாசிப்பின் அவசியமும், வாசகர்களின் தகுதியும், மேம்படுத்திக்கொள்ளுதலின் பொருட்டான உண்மைத்தன்மையையும் என படைப்பிலக்கிய உலகின் முப்பங்காளிகளையும் ஒருசேர முன்னிறுத்தியதும் இதன் முக்கிய அம்சம்.

சிங்கப்பூரிலுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும், எழுத்தாளர்களும் இக்கட்டுரையின் அடிநாதத்தைப் புரிந்துகொண்டு அதன்பின் தொடர்ந்தால் சிங்கப்பூர் இலக்கியம் வீரியத்தோடு பல்கிப்பெருகும் என்பது மட்டுமின்றி, தங்களின் இக்கட்டுரையும், இரண்டு மாதமாக இங்குள்ள இலக்கிய நாற்றங்காலில் விதைத்திருக்கும் விதைச்செறிவும், பார்த்திவப் பரமாணுவாய் படைப்புலகில், இன்னும் சில காலத்திற்குப் பின் மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிக் கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மேன்மைமிக்க சிங்கப்பூர் படைப்பாளியான ஜெயந்திசங்கரை, மேம்போக்காய் பத்தோடு பதினொன்றாய்க் குறிப்பிட்டதற்காய்ச் சினந்து கொண்ட, உமாஸ்ரீபஞ்சு என்ற சிங்கப்பூரிலிருக்கும் வாசகியைச் சந்திக்க விரும்புகிறேன். அக்கதாபாத்திரம் அமெரிக்கா செல்லும்முன் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சி. அவரின் முகவரியைக் கொடுத்தால், ’சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்’பற்றிய தங்களுடைய கட்டுரையின் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடலை அவரோடு முன்னெடுக்கலாம். முகவரியைக் கொடுத்து இதற்கும் ஒருவழி செய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் நேரத்திற்கும் கடப்பாட்டுணர்விற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.

எம்.கே.குமார்.

***

அன்புள்ள ஜெமோ

சிங்கப்பூர் கதைகளைப்பற்றிய உங்கள் விமர்சனங்களை வாசித்தேன். ஆரம்பகட்ட கொந்தளிப்புகளுக்குப்பின் நீங்கள் சொல்லவருவது என்ன என அவர்களுக்குப்புரியும் என நினைக்கிறேன்

ஆனால் பல வரிகள் மிகக்கூரியவை. உங்கள் நிலையில் இருந்துகொண்டு இவற்றை நீங்கள் சொல்லவேண்டுமா என்பதை கேட்கவிரும்புகிறேன்

சத்யநாராயணன்

*

அன்புள்ள சத்யா,

என் விமர்சன அளவுகோல்கள் வெளிப்படையானவை. கிட்டத்த ஐந்தாயிரம் பக்க அளவுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை [ஏழு தொகுதிகள்] உள்ளுணர்வின் தடத்தில், நவீனத்துவத்திற்குப்பின் தமிழிலக்கியம் தேவதேவனை முன்வைத்து ஆகிய கவிதை விமர்சனத் தொகுதிகள், எழுதியவனைக் கண்டுபிடித்தல், எழுதும் கலை, புதியகாலம். பூக்கும் கருவேலம் [ பூமணி], கடைத்தெருவின் கலைஞன் [ஆ மாதவன்] சமகால இலக்கிய விமர்சனநூல்கள், இந்திய நாவல்களைப்பற்றிய கண்ணீரைப் பின்தொடர்தல் உலக இலக்கியம் குறித்த மேற்குச்சாளரம் இலங்கை இலக்கியம் பற்றிய ஈழ இலக்கியம் ஆகிய நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுதவிர எழுத்தாளர்களை பற்றிய நினைவுக்குறிப்புகளும் சு.ரா நினைவின் நதியில், கமண்டலநதிநாஞ்சில்நாடன் ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன

என் இலக்கிய மதிப்பீட்டில் ஒரு கலைமுயற்சியின் தோல்வியை ஒருபோதும் பிழையாக எண்ணுவதில்லை. அதை கடுமையாக விமர்சிப்பதுமில்லை. ஏன் அந்தத்தோல்வி என சிலசமயம் ஆராய்வதுண்டு, அவர்கள் இளம் படைப்பாளிகள் என்றால். மற்றபடி ஏதும் சொல்வதில்லை. முதிரா எழுத்துக்களை பெரும்பாலும் அனுதாபத்துடனேயே அணுகுகிறேன்.

கடுமையான விமர்சனம் என்பது போலி எழுத்துக்கள் மீது மட்டுமே. இலக்கியத்தில் செயல்படுவதற்கான அக்கறையோ இலக்கிய வடிவங்களை கையாள்வதற்கான உழைப்போ இல்லாமல் போலியாக எழுதி பல்வேறு சூழ்ச்சிகள் மற்று உத்திகள் மூலம் களத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்களை நோக்கியே கடுமையாக எழுதுகிறேன். காரணம் அவை களைகள். அவை அடுத்த தலைமுறைக்கு பிழையான முன்மாதிரிகள். மேலும் போலிகளுக்கு ஊக்கம் அளிப்பவை. களை நீக்காமல் விவசாயம் இல்லை

ஜெ

 

சிங்கப்பூர் நாட்கள் புகைப்படங்கள்

 

முந்தைய கட்டுரைபெருநகர்த் தனிமை
அடுத்த கட்டுரைபொய்யெழுத்தின் திரை