பொய்யெழுத்தின் திரை

 

இரு சிறுகதைத் தொகுதிகளை ஒரேநாளில் வாசித்தேன். சூர்யரத்னா எழுதிய ‘நான்’ நூர்ஜகான் சுலைமான் எழுதிய ‘தையல் மெஷின்’ இத்தகைய கதைகள் இந்தியாவில் நாளுக்கு நூறு என எழுதப்படுகின்றன. அவற்றை வாசிப்பவர்கள் அனேகமாக எழுதியவர்களின் சொந்தக்காரர்கள் மட்டுமே. அவற்றை பொருட்படுத்தவேண்டியதில்லை.

ஆனால் சிங்கப்பூர் சூழலில் எழுதவருபவர்கள் குறைவு. ஆகவே அவர்களை இந்த அரசும் அமைப்புகளும் ‘பாரபட்சமில்லாமல்’ ஊக்கப்படுத்துகின்றன. விருதுகளும் பரிசுகளும் விரைவிலேயே வந்துவிடுகின்றன. தமிழகத்து இலக்கியமேதைகள் கனவுகாணமுடியாத பரிசுகள் அவை. மிக விரைவிலேயே இவர்கள் தாங்கள் படைப்பாளிகள் என்னும் எண்ணத்தை அடைந்துவிடுகிறார்கள். விமர்சனங்கள் அறவே இல்லாத இச்சூழலில் கடைசிவரைக்கும் தாங்கள் எங்கிருக்கிறோம் என்றே இவர்களுக்குத் தெரிவதில்லை.

சூர்யரத்னா எந்த மொழியிலாவது கதை என எதையாவது வாசித்திருக்கிறாரா என்னும் ஐயம் வாசிக்கையில் எனக்கு ஏற்பட்டது. வாசித்து முடிக்கையில் எதையாவது எப்போதாவது வாசித்திருக்கிறாரா என்றே தோன்றிவிட்டது. வாசகன் என்பவனுக்கு அடிப்படை அறிவும் ரசனையும் இருக்கக்கூடும் என்னும் அடிப்படை அறிவு இந்த அம்மையாருக்கு இருப்பதுபோலத் தெரியவில்லை. அத்தனை கதைகளுமே ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குரிய மொழிநடையில் அந்த அளவுக்கே அறிவுத்திறனும் வாழ்க்கைப்புரிதலும் உடையவர்களை நோக்கி எழுதப்பட்டவை போலிருக்கின்றன.

சிறுகதை என்பது ஒரு வாழ்வுச்சூழலை ஓரிரு நிகழ்வுகளின் வழியாக ‘காட்டுவது’. வாசகனும் அங்கே கற்பனையில் வாழச்செய்வது. தடையற்ற, அணியற்ற கூரியநேர்மொழியில் வாசகனை தன் உலகுக்குக் கொண்டுசெல்வது. நுண் தகவல்களால் ஆனது. அத்துடன் வாசகன் ஊகித்துவிடும் கதையின் உச்சத்தை அவனை மீறி மேலெடுத்துச்சென்று விடுவது. அவனுக்கு ஒரு வியப்பையும் அதனூடாக அவன் அறியாத கதை ஒன்றையும் சொல்வது.

சூரியரத்னாவின் கதைகள் எல்லாமே நேரிடையாக நான் என ஆரம்பிக்கின்றன. நான் பதினாறு வயதிலேயே என் பெரியம்மாவோடு வெளிநாடு வந்துவிட்டேன். இந்த ஊரிலேயே மீதிப்படிப்பையும் முடித்து நான் பட்டதாரியாக நல்ல ஒரு வேலையில் மேலதிகாரியாக இருக்கிறேன் என்னும் பாணியில் ஆரம்பித்து மிக வழக்கமான, தமிழ் வணிகசினிமாக்களில் சாதாரணமாகக் காணக்கிடைக்கும் ஒரு ‘கதையை’ சொல்கின்றன. கடைசியில் ‘அவர் மனம் அந்த வானத்தைப்போல’ என்பதுபோன்ற வரிகளில் முடிகின்றன.

இவை சிறுகதைகள் அல்ல. முடிவில் வாசகனின் ஊகத்தை மீறி எழாத ஒன்று சிறுகதையே அல்ல. சொல்லப்போனால் இவை கதைகள் கூட அல்ல. ஏனென்றால் கதை என்பது நிகழ்வுகளின் சித்தரிப்பினூடாக முன்னால் செல்வது. இவை நிகழ்வுகளைச் சுருக்கிச்சொல்கின்றன. இவற்றை ஒருவகையான ‘எழுதப்பட்ட பேச்சுக்கள்’ அல்லது தொணதொணப்புகள் என்றே சொல்லலாம்.

குறையொன்றும் இல்லை என்னும் ‘கதையே’ உதாரணம். ‘என்னைப்போன்ற உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் வாழ்பவர்கள்’ என சொல்லிவிட்டு அன்றாட வாழ்க்கையைப்பற்றிய ஒரு விவரிப்பு. அதுவும் மிகமிக சாதாரணமாக. பெரும்பாலும் சினிமாக்களில் இருந்து பெற்றுக்கொண்ட ஒருசில காட்சிகள். இறுதியில் ‘உடல் அமைப்பில் மட்டுமே ஒழிய எங்களிடம் வேறு குறை ஒன்றும் இல்லை’ என முடிகிறது கதை. உலக இலக்கியத்தை விடுங்கள், வாழ்வின் விதவிதமான நுட்பங்கள் எழுதிக்குவிக்கப்பட்ட தமிழில் இதை ஒருவர் கதையென எழுதவேண்டுமென்றால் எத்தனை அறியாமை தேவை! முழுமுற்றான அறியாமை அன்றி வேறேதும் இந்தத் தன்னம்பிக்கையை அளிக்குமா என்ன?

சூர்யரத்னாவின் அனுபவ உலகம் அனேகமாக ஏதுமில்லை. அவர் தமிழ் சினிமாக்களைத்தான் கதைக்கான கருக்களுக்கு நம்பியிருக்கிறார் என்பது அப்பட்டம். ஒரு ராஜா ராணியிடம் என்னும் கதை அப்படியே 1990களின் தமிழ்சினிமாக்களில் இருந்து உருவப்பட்டது. அழகிய வட இந்திய வாலிபன் சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துகொள்கிறான். இந்தியாவில் வேறு மனைவியை மணந்துகொள்கிறான். உண்மை தெரிந்ததும் அவள் தப்பி வந்து விவாகரத்து வாங்குகிறாள். மகனைக்கேட்டு நேரில் வரும் அவன் உறவினர்களை திட்டி அனுப்புகிறாள். அவ்வளவுதான்.

மொத்தக்கதையிலும் ஒரு நிகழ்ச்சிகூட சித்தரிக்கப்படவில்லை. சும்மா சொல்லிவைக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த மொத்தத் தொகுதியிலும் ஒரு கதையில்கூட ஒரு நிகழ்ச்சிகூட சித்தரிக்கப்படவில்லை. ‘சொன்னபடி மூன்றுபேரும் சந்தித்தோம். பெரிய இவன் மாதிரி பத்து நாளில் கடனை அடைப்பதாக சவடால் பேச்சு பேசினேன். சொல்லிவிட்டேனே ஒழிய சத்தியமாக பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்னும் பாணியில் சொல்லப்பட்டிருக்கின்றன அனைத்துக் கதைகளும்.

இந்தக்கதைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிந்ததனால் மட்டுமே இவற்றை வாசித்தேன். விருதும் ஊக்குவிப்பும் இலக்கியத்திற்குத் தேவைதான். ஆனால் சிறிய அளவிலேனும் திறமையோ, மிகஎளிய அக்கறையோகூட வெளிப்படாத இந்த வகையான எழுத்துக்கள் எதேனும் காரணங்களுக்காக அங்கீகாரம் பெறுவதென்பது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான முன்னுதாரணத்தை அளிப்பது.

*

தையல் மிஷின் தொகுதியில் நூர்ஜகான் சுலைமான் எழுதியுள்ள கதைகள் இதைவிட சற்றே மேம்பட்டவை எனச் சொல்லத்தக்கவை. மேலதிகமாக உள்ள தகுதி இவை ஓரளவு ஆத்மார்த்தமானவை என்பதே. தான் அறிந்த வாழ்க்கையை எழுத நூர்ஜகான் முயல்கிறார். ஆனால் சிறுகதை என்னும் வடிவை வாசித்தறிந்த தடயமே எக்கதைகளிலும் இல்லை. ஆகவே எவையும் கதையாகக்கூட ஆகவில்லை

முதல்கதை அன்புமகன் அன்வருக்கு ‘என்ன முஸ்தபா வேலை முடிஞ்சிருச்சு போலிருக்கு’ என தொடங்கும்போது ஏதோ உடனே நிகழப்போகிறது என தோன்றலாம். ஆனால் முஸ்தபா முதல்மனைவியும் குழந்தையும் இருக்க ஒரு மலாய் முஸ்லீம் பெண்ணை காதலித்து மணம்புரிய, முதல்மனைவி விவாகரத்தாகிச் செல்ல, அவர் இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து, அந்தப்பிள்ளைகள் வளர்ந்து, இரண்டாம் மனைவி இறந்து, அவர் தனிமை அடைந்தபின் தன் முதல்மனைவியின் பிள்ளைகளுக்கு எழுதும் ஒரு கடிதம் வரைச் சென்று முடிகிறது கதை. ஒரு தொலைக்காட்சித்தொடருக்குரிய கதை என்று சொல்லலாம்.

நூர்ஜகானின் கதைகள் எல்லாமே மிகச்சாதாரணமான ‘செண்டிமென்ட்’களைப் பேசுபவை. பணம்சேர்த்து வீடு வாங்குகிறார்கள் ஒரு தம்பதியினர். அதை மகன் பேருக்கு எழுதிவைக்கிறார்கள். அவர்கள் அதை விற்று வேறு வீடு வாங்குகிறார்கள். பெற்றோர் அங்கே அன்னியமாகி வீட்டைவிட்டு கிளம்பிச்செல்கிறார்கள். என்ன வேடிக்கை என்றால் சிங்கப்பூரின் உழக்குக்குள் அவர்கள் ‘கண்காணா’ திக்குக்கு செல்கிறார்கள். இன்னொரு கதையில் கிழவர் சாகக்கிடக்கிறார். மறைந்த மனைவியை நினைத்து மனம் வெதும்புகிறார். கனவு காண்கிறார்.

பெரும்பாலும் இந்தக்கதைகள் கதை வடிவம், மொழி எதிலும் எப்பயிற்சியும் இல்லாமல் எழுதப்பட்டவை. சிங்கப்பூரின் வாழ்க்கையையோ பிரச்சினைகளையோ இவற்றில் காணமுடியவில்லை. இத்தகைய கதைகளை கடுமையாக நிராகரிக்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் உண்மையிலேயே சிங்கப்பூரைப்பற்றி நேர்மையுடன் எழுதப்படும் கதைகளை இத்தகைய கதைகளின் பெருக்கம் மறைத்துவிடும். ஒரு சூழலையே காலப்போக்கில் வெட்டவெளியாக ஆக்கிவிடும். பிறர் குனிந்துநோக்கி எள்ளிச்சிரிக்கும் நிலைக்குக் கொண்டுவந்துசேர்த்துவிடும்.

[‘நான்’ சூரியரத்னா

’தையல் மிஷின்; நூர்ஜகான் சுலைமான்: தங்கமீன் பதிப்பகம்]

 

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

நா கோவிந்தசாமி

சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்

கமலாதேவி அரவிந்தன்

உதுமான் கனி

புதுமைதாசன்

பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1

சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிரேமை -கடிதங்கள்