பெருநகர்த் தனிமை

puthumai

எந்த அர்த்ததில் உலக இலக்கியச் சூழலில் சிறுகதை என்று சொல்கிறோமோ அந்த அர்த்ததில் புதுமைதாசன் கதைகளை சிறுகதை என்று சொல்லிவிடமுடியாது. இவை சிறுகதைக்குரிய வடிவ இயல்புகளை அடையவில்லை, ஆசிரியர் அவற்றை அறிந்திருக்கவில்லை என்றே ஊகிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வாசகனாக எனக்கு இவை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன. இவை எளிய நடைச்சித்திரங்கள், அல்லது அனுபவக்குறிப்புகள். அந்த அளவிலேயே சென்றுபோன சிங்கப்பூரின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை

புதுமைதாசனால் வளர்த்தாமல், வீண்சொல்லாடாமல் கதை சொல்ல முடிகிறது. கூடுமானவரை உபதேசங்கள் இல்லை. வேடிக்கைபார்ப்பவனின் மனநிலை எல்லா கதைகளிலும் கைகூடுகிறது. அதனால் ஆசிரியனின் தலையீடு இல்லாமல் கதைமாந்தரைப்பார்க்கமுடிகிறது. அத்துடன் தனித்தமிழ் உபாதைகளும் இல்லை. ‘என் நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததனால் மருந்து வாங்க ஜெனரல் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன்’ என இயல்பாகக் கதையை ஆரம்பித்துச் சொல்லிச்செல்கிறார்.

வாழமுடியாதவள் கண்ணுச்சாமியின் மனைவியின் கதை. மலாய்ப்பெண். வேலைக்காக பினாங்கு வந்த கண்ணுச்சாமி போர்ச்சூழலில் மாட்டிக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறான். பல ஆண்டுக்காலம் ஊருடன் கடிதத்தொடர்பே சாத்தியமில்லை என்னும் நிலை. இங்கே மலாய்ப்பெண்ணை மணந்துகொள்கிறான். நிலைமைச் சரியானதும் மனைவியை கூட்டிக்கொண்டு ஊருக்குச் செல்கிறான். பெரும்பாலானவர்கள் மலாய்ப்பெண்ணை கைவிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். கண்ணுச்சாமி அப்படிச் செய்யவில்லை.

அது பிழை என தெரிகிறது. கண்ணுச்சாமியின் கையிருப்புப் பணம் கரைந்ததும் அவர் அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் சேர்ந்து அந்த அப்பாவிப்பெண்ணை திட்டி அவமதித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அவள் கிணற்றில் விழுந்து இறக்கிறாள். கண்ணுச்சாமி கண்ணீருடன் சிங்கப்பூருக்கே திரும்பி வருகிறான். தமிழர் விருந்தோம்பல் பற்றிய பிலாக்காணங்கள் நிறைந்திருந்த ஒரு சிந்தனைச் சூழலில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதில் அந்த பண்பாட்டுப்பெருமிதம் இல்லை, மாறாக யதார்த்தம்நோக்கித் துணிச்சலாகச்செல்லும் பார்வை இருக்கிறது. இதுவே உண்மையில் நவீன இலக்கியத்தின் அடிப்படை

சோதிடமோகம், [ காலக்கணக்கு] உதிரித் தெருச்சண்டியர்த்தனம் [உதிரிகள்] என சிங்கப்பூரின் அறியப்படாத வாழ்க்கைத்துளிகள் வந்துகொண்டே இருக்கின்றன புதுமைதாசன் கதைகளில். இந்த வணிகப்பெருநகரின் விதிகளை அறியாமல் பங்குச்சந்தையில் பணமிழந்து மறைபவர், [ஓய்வு] முற்றிலும் அன்னியநகரின் ஒரு பகுதியுடன் மட்டும் உணர்வுரீதியான உறவுகொண்டு அங்கே வந்துகொண்டே இருப்பவர் [வெறுமை] என இதுகாட்டும் மனிதர்களை அணுகியறிய முடிகிறது. அவர்கள் அனைவருமே சிங்கப்பூர் என்னும் மாபெரும் அமைப்பைப்பார்த்து பதைபதைத்து நின்றுவிட்டவர்கள் என்று தோன்றுகிறது. அதைப்புரிந்துகொள்ளவும் முடிகிறது, நான் இங்கே இன்னும் ஐந்துவருடம் இருந்தால் அப்படித்தான் ஆகிவிடுவேன்.

அத்துடன் புதுமைதாசன் படைப்புகளில் மட்டுமே வழக்கமாக சிங்கப்பூர் கதைகளில் உள்ள ‘தமிழ்க்குறுகல்’ இல்லை. அவரது உலகம் சீன, மலாய் பண்பாடுகளுடன் இயல்பாக இணைய முயல்கிறது. நல்லெண்ணத்துடன் சகமனிதர்களாக அவர்களை அணுகுகிறது. அவர்களின் மேன்மையையும் நமது சிறுமைகளையும் தொட்டு அறியவும் சுயவிமர்சனம் செய்யவும் முயல்கிறது. உண்மையில் ஒரு தருணத்தில் அப்படி மனம்திறந்து மானுடனாக நின்றிருக்கும் நிலையையே படைப்பாளியின் தன்னியல்பு என்கிறோம்.

உதாரணமாக தெளிவு என்னும் கதை. தண்ணிபோட்டுவிட்டு வந்து தன் கற்பை சந்தேகப்பட்டு சலம்பல் பண்ணும் தமிழ்க்கணவனின் மண்டையில் புட்டியால் ஒரு போடு போடும் அந்த சீனப்பெண்ணை மிகமிக விரும்பினேன். அவரை நேரில் பார்க்கநேர்ந்தால் ‘ஆச்சி, சொவமா இருக்கேளா?’ என்று கேட்காமலிருக்கமாட்டேன்.

இத்தகைய கதைகளினூடாக நாம் அடையும் நுட்பமான வாழ்க்கைச்சித்திரம் வேறெந்த சமூக ஆய்வுகளிலும் சிக்காதது. பல அவதானிப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, பொதுவாகவே தமிழர்களுக்கு மலாய், சீன பண்பாட்டைச்சேர்ந்த பெண்கள் ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்னும் முன்முடிவு இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமளித்தது, கூடவே நம்பவும் வைத்தது. அது ப.சிங்காரம் சொன்னதுபோல கண்ணகிஉளச்சிக்கல். பெண்களிடம் அந்தச்சிலம்பு இருக்கிறதோ இல்லையோ ஆண்கள் சதா தம்பெண்களை நோக்கி அதை குலுக்கிக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒருவகையான கட்டுப்பெட்டித்தனத்துடன், அதை பேணும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட போலியான சுயமேன்மை மனநிலையுட்ன் வேறு இனத்தவரை அணுகியறியாமல் வேலி இட்டுக்கொண்டு வாழும் நிலையில் இந்த மனநிலையை தலைமுறைகளாகவே பேணுகிறார்கள் தமிழர்கள். புதுமைதாசனின் பல கதைகளில் இந்த அம்சம் வருகிறது. வாழமுடியாதவள் கூட இதைப்பேசும் கதைதான். அக்கதையில் இதே மனநிலையை இந்தியாவிலுள்ளவர்களும் சீன மலாய் மக்கள் மேல் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

மலாய் மொழியின் சொல்லாட்சிகளையும் இவர் கதைகளில்தான் காணமுடிகிறது. இந்த நாடு அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பது பல்லினப் பண்பாட்டு உரையாடலே. அதன்மூலம் உருவாகும் அழகுகளும் அறிதல்களுமே இந்நாட்டு இலக்கியத்தை தனித்தன்மை கொள்ளச்செய்யமுடியும். அதற்கான அழகிய தொடக்கம் இவர் கதைகள். ஏன் அது தொடராமல் போயிற்று என ஆச்சரியமாக இருக்கிறது.

புதுமைதாசன் கதைகளில்தான் அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது. உதாரணம் துணை. பெருநகரில் செருப்பு தைக்கும் ஒருவனின் வாழ்க்கை என்பது ஒருவகை உலகளாவியத் தன்மைகொண்ட அனுபவமாகத்தான் இருக்கிறது.இங்கும் தலித் வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கைக்கு பக்கத்தில்தான் இருந்திருக்கிறது.

சிங்கப்பூர் உருவாகும் காலகட்டத்தில் இங்கிருந்த கம்பொங் என்னும் சிறிய குடியிருப்புகளின் வாழ்க்கைச்சித்திரத்தை அதிக அலட்டல் இல்லாமல் புதுமைதாசன் சொல்லிச்செல்கிறார். அவர் கலைஞர் என்பதனால் பின்னர் வந்த வசதியான குடியிருப்புகளை விட நெருக்கியடித்து வாழ்ந்த அந்தச்சேரிகளே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. சீனர்களுடனான நெருக்கம் அச்சூழலில் இருந்து அவர் அடைந்ததாக இருக்கலாம்.

புதுமைதாசன் புதுமைப்பித்தன் மேல் ஆர்வம் கொண்டு அப்பெயரைச் சூட்டிக்கொண்டார். இயற்பெயர் பி கிருஷ்ணன். எழுபதுகளில் எழுதபட்ட கதைகள் இவை. தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றின் பின்னணியில் இவை வடிவரீதியாகப் பின்தங்கிய கதைகளே. உண்மையில் புதுமைதாசன் படைப்புகளில் எவையுமே வடிவமுழுமையடைந்தவை அல்ல. எக்கதையையுமே அவர் எழுதிமுழுமைப்படுத்த முயலவுமில்லை. [ஆனால் அவர் நல்ல வாசகர் என்பது தெரிகிறது. அன்று தமிழின் இலக்கியச்சூழலை ஆக்ரமித்திருந்த காண்டேகர் போன்ற படைப்பாளிகளை ஒரு கதையில் குறிப்பிடுகிறார்]

ஆனால் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை. புதுமைப்பித்தன் அவரைப்பார்த்திருந்தால் ‘வாடா பங்காளி’ என்று கூப்பிட்டு ஆச்சியிடம் “ஏளா, இவன் நம்மாளு கேட்டியா?’ என்று உந்திய பல்லைக்காட்டி குரல்வளை குதியாட சிரித்திருக்கவும் கூடும்.

***

புதுமைதாசன் சிறுகதைகள். பாமா பிரசுரம் 1993

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்

இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

 கமலாதேவி அரவிந்தன் கதைகள் பற்றி

முந்தைய கட்டுரைவம்புகளின் சிற்றுலகம்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்