இலக்கியவடிவங்களுக்கு இலக்கணம் உண்டா? இலக்கணம் சார்ந்து எழுதியாக வேண்டியதில்லை. ஆனால் அவ்விலக்கணம் உருவாகிவந்த பின்னணியை, அங்கே இயங்கும் விசைகளை எழுத்தாளன் அறிந்திருக்கவேண்டும். அவ்விசைகளை எதிர்கொள்ளும் தன்மையுடன் இலக்கியப்படைப்பை அமைப்பதற்கான வழி என்பது அவ்வடிவை முனைந்து கற்பதுதான். ஏனென்றால் அந்த வடிவில் முந்தைய எழுத்தாளர்கள் கற்றுக்கொண்டவை உள்ளன.இலக்கியம் என்பது எப்போதும் ஒரு தொடர்செயல்பாடுதான்.
உதாரணம் சிறுகதை. அது ‘சிறிய கதை’ அல்ல. அது ஒரு தனித்த இலக்கியவடிவம். சிறுகதைக்கும் பிற சிறிய கதைகளுக்குமான வேறுபாடு என்ன? பிற சிறிய கதைகள் தொன்று தொட்டே உருவாகி வந்தவை. சிறுகதை இருநூறாண்டுகளுக்குள் உருவாகிவந்தது. சிறுகதை உருவான சூழலுக்கு ஒரு வரலாற்றுப்பின்னணி உண்டு. கதைகள் அச்சில் வர ஆரம்பித்தன. அவற்றை விருந்துகளிலும் சபைகளிலும் கூட்டாக அமர்ந்து வாசிக்கும் பழக்கம் மேலைநாடுகளில் உருவாகியது. வாசகனை நேருக்குநேர் பார்க்கும் வாய்ப்பு அது. அந்த வாசகன் அச்சு அளிக்கும் வசதியால் ஏற்கனவே நிறைய வாசித்தவனாக இருந்தான்
ஆகவே கதை சொல்லப்படும்போதே வாசகனும் உடன் வருவது கண்ணுக்குத்தெரிந்தது. வாசகனை ஆச்சரியப்படுத்த, அவன் கற்பனையை கடந்துசென்று தன் கதையைச் சொல்லவேண்டிய கட்டாயம் எழுத்தாளனுக்கு ஏற்பட்டது. சிறுகதை என்பது உண்மையில் ஒரு கதைவிளையாட்டு. எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமிடையே நுட்பமான ஒரு மூன்றுசீட்டாட்டம் கதைக்குள் உள்ளது. வாசகன் வாசிப்பின்போதே ஊகித்துவிட்ட கதைமுடிவை எழுத்தாளன் கதைமுடிவில் கடந்துசெல்லவேண்டும். வாசகன் ஒரு திகைப்புடன் அவன் அதுவரை உணராத ஒன்றை அறிந்தாகவேண்டும். இல்லையேல் அது சிறுகதையே அல்ல
அதற்கு பல வழிகள் உள்ளன. வாசகனை ஒருவகையில் ஊகிக்கவிட்டு பிறிதொரு முடிவை அளிப்பது இறுதித்திருப்பம் என்னும் முறை. இதுவே செவ்வியல் சிறுகதையின் வழி. இன்றும் இதுவே மைய ஓட்டம். கதையின் முடிவில் அக்கதையிலிருந்து பிறிதொன்று மேலும் விசையுடன் எழுந்து வருவது இன்னொரு வழி. முதல்வகைக்கு சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ உதாரணம் என்றால் இரண்டாம்வகைக்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ உதாரணம்.
இதைத்தவிர சிறுகதைக்கு பல அடிப்படை இலக்கணங்கள் உள்ளன. இரண்டாவதாகச் சொல்லப்படவேண்டிய முக்கியமான இலக்கணம், ‘கதையைச் சுருக்கிச் சொல்லாதீர்கள். அதைக் காட்டுங்கள்’ என்பதுதான். கதை எழுத ஆரம்பிக்கும்போதுதான் இது நிகழும். ‘முருகனுக்கு வயது இருபது. அழகான இளைஞன். பிஏ படித்து ஒரு நல்ல கம்பெனியின் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தான். இவன் மனைவி வள்ளி’ என ஆரம்பித்து எழுத ஆரம்பிப்போம். இதுதான் நமக்கு பள்ளிக்கூடக்கதையாக அளிக்கப்பட்டது. நவீன இலக்கிய வடிவமான சிறுகதை இப்படிப்பட்டது அல்ல. இதிலிருந்து விலகுவதே நவீனச்சிறுகதைவடிவுக்கான முதல் அடிவைப்பு.
மேலே சொன்னபடி சுருக்கிச் சொல்லுதல் ஒரு ‘தெரிந்துகொள்ளும்’ அனுபவத்தை மட்டுமே அளிக்கிறது. கதை அளிக்கவேண்டியது அது அல்ல. ஒரு வாழ்க்கையை நாமும் பார்த்து ‘உடன்சென்று வாழும்’ அனுபவத்தை சிறுகதை அளிக்கவேண்டும். அதற்கு அந்தக்கதை நம் கண்ணெதிரில் நிகழ்ந்தாகவேண்டும். அதை எழுத்தாளன் காட்டியாகவேண்டும்
இதைத்தவிர அடிப்படை இலக்கணங்கள் என சிலவற்றைச் சொல்லலாம். சிறுகதை வகுப்புகளில் மீளமீளச் சொல்லப்படுபவை இவை.
- ஒரு கதை நேரடியாக ஆரம்பிக்கவேண்டும். கதைக்குள் வாசகனை இழுப்பது முதலிருபத்தியிலேயே நிகழ்ந்தாகவேண்டும். சிறுகதையின் முதல் வரியே முக்கியமானது
- ஒருகதையின் நேரடியான காலம் என்பது மிகக்குறுகியது. பத்தாண்டுகள் உருண்டோடின என்பதெல்லாம் கதையில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கும்
- தேய்வழக்குகளை களையவேண்டும். ‘திக்குமுக்காடினான்’ ‘திகைப்பூண்டு மிதித்தான்’ போன்ற சொல்லாட்சிகளை
- கதைக்குள் ஒரு குவிமையம் இருந்தாகவேண்டும். அது யாருடைய கதை என்பதுதான் அக்குவிமையம். யார் கதையைச் சொல்கிறார்கள் என்பது இன்னொன்று. அந்தக்குவியம் சார்ந்தே கதைசெல்வதுதான் கதையின் வடிவ ஒருமையை உருவாக்குகிறது
- நவீன இலக்கியம் நுண்சித்தரிப்புகள் மற்றும் நுண்தகவல்களால் ஆனது. வாசகன் வாழ்க்கையை கண்ணெதிரில் பார்த்தாகவேண்டும். நிகழ்வுகளைப் பொதுவாகச் சொல்லிச் செல்லக்கூடாது
- கதையின் கருத்தை கதைக்குள் ஆசிரியன் நேரடியாகவோ கதாபாத்திரங்கள் வடியாகவோ ‘சொல்ல’ கூடாது. சிறுகதை என்பது சொல்லப்படுவதல்ல, உணர்த்தப்படுவது
- கதை கச்சிதமாக முடியவேண்டும். வாசகன் கதையை உணர்ந்தபின் ஆசிரியன் பேசிக்கொண்டிருக்கக்கூடாது
- ஒரு கதை ஏன் எழுதப்படுகிறது என்பது முக்கியமானது. எளிமையான அன்றாட அறிதல்களைச் சொல்லும்பொருட்டு கதை எழுதப்படக்கூடாது. உணர்வுரீதியாக, அறிதல்ரீதியாக முன்பில்லாத ஒன்று சொல்லப்பட்டிருக்கவேண்டும்
இவை ஆரம்ப இலக்கணங்கள். சிறுகதைமேதைகள் இவற்றைக் கடந்துசென்று புதிய இலக்கணம் படைத்திருப்பார்கள்.
***
பாலு மணிமாறன் தொகுத்து தங்கமீன்கள் வெளியீடாக வந்துள்ள சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான ‘வேறொரு மனவெளி’ என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் சென்ற இருமாதங்களாக மாணவர்களிடம் திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டிருந்த சிறுகதையின் மேற்குறிப்பிட்ட ஆரம்பகட்ட இலக்கணங்களைக்கூட கொண்டிராதவை இதிலுள்ள பெரும்பாலும் அனைத்துக் கதைகளும். அதாவது சிறுகதையின் வடிவம் என்றால் என்ன என்ற புரிதலே அனேகமாக இல்லை. எனவே பெரும்பாலும் எவரும் அதை அடைய முயலவில்லை. ஒரு பயிற்சிப்பட்டறையின் ஆரம்பத்தில் எழுதப்படும் கதைகள் போலிருக்கின்றன இவை.
ஆனால் ‘இவர்களின் நிலவெளி மிகப்பெரிது. ஆழமும் அகலமும் நிறைந்தது. ஆழ்கடலின் விளிம்புகளென நிற்கக்கூடியது. நாம் நிற்பது அதன் ஓரத்தில்’ என பின்னுரை சொல்கிறது. முன்னுரை வழங்கிய நா.கண்ணன் இன்னும் மேலே சென்று புளகாங்கிதம் அடைகிறார், அவருக்கே சிறுகதை என்றால் என்ன என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகம். ‘அடிப்படைகளைக் கற்றுக்கொள்க’ என்று அன்றி வேறெதையும் இவ்வெழுத்தாளர்களிடம் ஒரு விமர்சகன் சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் ஏற்கனவே பெரும்படைப்பாளிகளாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மிகையுணர்வே எதையுமே கற்காதவர்களாக அவர்களைத் தேங்கவைத்துள்ளது. இத்தகைய போலியுரைகள் அவர்களை இன்னும் சிமிழுக்குள் அடைப்பவை
***
முதல்கதை ஜெயந்தி சங்கரின் நுடம். அம்மா வேலைக்குப் போகிறாள். குழந்தை தனிமையாக இருக்கிறது. அம்மா வீல்செயரில் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறது. அம்மாவின் செருப்பைக் கிழிக்கிறது. அம்மாக்கள் வேலைக்குப்போகாவிட்டால் பிள்ளைகள் நன்றாகப்படிக்கும் என அம்மாவின் அம்மா சொல்கிறாள். உளவியலாளர்களிடம் செல்கிறார்கள். கடைசியில் அம்மா வேலையைவிட முடிவுசெய்கிறாள்.
எவ்வளவு எளிய பார்வை இது என்பதை ஒருபக்கம் வைப்போம். உலகமெங்கும் வேலைக்குச் செல்லும் பல்லாயிரம் தாய்மார்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கத்தான் செய்கிறார்கள். பெண் வேலைக்குச் செல்வது ஒருவகை முடம் என்பதே ஒரு பின்னோக்கிய பார்வை. தினமலர் வாரமலரில் இத்தகைய கதைகள் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கின்றன என்பதையும் ஒருபக்கம் வைப்போம். இக்கதையின் வடிவமே சலிப்பூட்டுவது.சிறுகதைக்கு ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் இவ்வடிவைத்தான் தெரிவுசெய்வார்கள். ஒருவர் இன்னொருவரைப்பற்றி நேரடியாக வாசகனிடம் சொல்வது. ‘எனக்கு ஒரு நண்பன் இருந்தான்’ என்றோ ‘என் மகள் கொஞ்சம் அடம்பிடிப்பாள்’ என்றோ ஆரம்பித்து விவரணையாகவே எழுதுவது. கடைசியில் ஒரு ‘தீர்வை’ சொல்லி கதையை முடிப்பது. இது வெறும் ‘சொல்லல்’ தானே ஒழிய சிறுகதை அல்ல. சிறுகதையை நிகழும்வாழ்வாகக் ‘காட்டும்’ முயற்சிக்கு நேர் எதிரானது.
அதிலும் இக்கதையின் முதல் நான்கு பத்திகள் சலிப்பூட்டுபவை. ‘நேகாவின் போக்கு எனக்குப் புரியவே இல்லை’ என ஆரம்பித்து மகளைப்பற்றிய ஒரு விவரணை. ‘இத்தனையிலும் வேதனை என்னவென்றால் சிந்திக்கவும் சிலநிமிடங்கள் கிடைக்காத என்வேலை’ என தன்னைப்பற்றிய கூற்று. [இந்த இரண்டு வரிதான் கதையே. இதற்குமேல் இந்தக்கதையில் வாசகன் அறிய ஏதுமில்லை] அக்குழந்தையின் இயல்பு பற்றிய மதிப்பீடு ’நேகா ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று தான் அவதானித்தது, வகுப்பு ஆசிரியை சொன்னது என ஒரேவகையான சொற்றொடர்களாக திரும்பத்திரும்ப வருகிறது.
சிறுகதையின் தொடக்கம் பற்றி நூறாண்டுகளாக பன்னிப்பன்னிப் பேசப்பட்டுவிட்டது. அதன் தொடக்கம் ஒரு வாசகனை கற்பனையுடன் விரியவைக்கவேண்டும். கதையின் மைய ஓட்டத்திற்குள் இழுத்துவிடவேண்டும். சுருக்கமான கூரிய சித்தரிப்பால் அவன் கதையுடன் அந்த முதல்வரியிலேயே பேச ஆரம்பிக்கவேண்டும். பகடியால் விரியவைக்கவேண்டும். அல்லது ஏமாற்றும் அமைதிகொண்டிருக்கவேண்டும். சும்மா பேச ஆரம்பிப்பதென்பது சிறுகதையே அல்ல.
ஜெயந்தி சங்கரின் கதையில் இருப்பது உண்மையில் ஒரு படிமம். தினமும் தன்னை விட்டுச்செல்லும் அன்னையின் செருப்பு ஒரு குழந்தைக்கு என்னவாகப் பொருள்படுகிறது என்று மட்டுமே கதை குவிந்திருந்தால் அது சிறுகதை. செருப்பு அக்குழந்தையில் அடையும் ஒரு புதிய பரிமாணம் மட்டுமே கதைக்குள் வந்து மற்ற அனைத்தும் வாசகனுக்கு விடப்பட்டிருக்கலாம். அந்தச்செருப்பின் விரிவாக்கம் வழியாக அக்குழந்தை பற்றி, அச்சமூகம் பற்றி என்னென்னவோ சொல்லலாம். ஆனால் கதைக்குள் ‘அம்மா வேலையை விடுதலே ஒரே வழி’ என்னும் தீர்வு வந்ததுமே கதை விழுந்துவிடுகிறது
முனைவர் சீதாலட்சுமியின் சிறுகதை ஒரு நீளமான நிகழ்வுத்தொகை மட்டுமே. சிறுகதை அல்ல, கதையும்கூட அல்ல.. அப்பா மகனுக்கு கடிதம் எழுதுகிறார். அதிலே தன் வாழ்க்கைக்கு ஒரு துணைதேடுவதைப்பற்றிச் சொல்கிறார். நடுவில் மகனின் உறவுகள் விவாகரத்து என ஏகப்பட்ட ‘நினைவுகள்’. எல்லாமே ஓரிருவரியில். ‘ஓ காட், இந்த மனிதர்கள் எப்போதுமே இப்படித்தானா? என் விவரம்புரியாத வயதில் தாயை, தெய்வத்தை இழந்து என்னை தவிக்கவிட்டுவிட்டார்களே’ என்பதுபோன்ற வரிகள். சுருக்கமாக, சிறுகதை என்னும் வடிவின் ஆரம்பப்பாடத்திற்கு வெளியே நிற்கும் கதை.
இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் ‘அம்மா உனக்கு ஒண்ணும் தெரியாது!” என்பதுபோல ஒரு வசனத்தில் ஆரம்பிக்கின்றன. அதன்பின் ஒரு நிகழ்வு. பெரும்பாலும் சாதாரணமான ஓர் அன்றாட நிகழ்ச்சி. அதன்பின் அந்நிகழ்ச்சியின் கதாநாயகனைப்பற்றி ‘முத்துவுக்கு வயது முப்பது. ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்துவந்தான்…’ என ஆரம்பித்து கதை ஆசிரியரால் ‘சொல்லப்படும்’. ஒரு மிக எளிமையான சமூகத்தீர்வை அடைந்து அதை கதாபாத்திரமோ ஆசிரியரோ சொல்வதாக விரித்துரைத்து முடிகின்றன.
‘தேன்மொழியும் கோமுப்பாட்டியும் சந்தித்தது கடவுள் செயலா? இல்லை, அவளுக்கும் அவள் கணவருக்கும் உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. அதனால்தான் ஆதரவற்ற கோமுப்பாட்டி இவள் கண்ணுக்குப்பட்டாளோ? தேன்மொழியின் அப்பா அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். பெரியம்மாதான் அவளை வளர்த்தார். அவள் படித்து முடித்தபின் பெரியம்மாவுக்குப் பாரமாக இல்லாமல் வேலைக்குச் சென்றாள்…’ இப்படி. கதையின் தலைப்பு ‘அடுக்குமாடி அனாதைகள்! [பிரேமா சத்யன்ராஜூ]
சிறுகதையில் கதையைச் சொல்லாதே, காட்டு என்பது ஒரு அடிப்படைப்பாடம். கதையைச் சுருக்கிச் சொல்வது இலக்கியத்தின் வடிவமே அல்ல. நுண்ணிய தகவல்களுடன் கதையை கண்முன் நிகழவிடுவது, அதற்குள் வாசகன் வாழ விடுவதே கதை. இக்கதைகளின் ஆசிரியைகளில் அனேகமாக அத்தனைபேருக்கும் அதை சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கிறது.
அத்துடன் சர்வசாதாரணமான அன்றாட எண்ணங்களைக் கதையாக்கியிருக்கிறார்கள். வாசகன் இதை ஏன் பெரிதாக எடுக்கவேண்டும் என்றே எண்ணிப்பார்க்கவில்லை. உதாரணமாக, முகவரிப்புத்தகம் என்று ஒருகதை ‘வெகுநாட்களாக முகவரிகள் எழுதும் புத்தகத்தை மாற்றவேண்டும் என நினைத்துக்கொண்டேன். சிங்கப்பூர் வந்ததிலிருந்தே செய்யவேண்டுமென பட்டியலிட்ட வேலைகளில் ஒன்றாக அதுவும் இருந்தது’ என ஆரம்பிக்கிறது கதை.வெவ்வேறு உறவுகளைப்பற்றிய வழக்கமானச் சுருக்கக்குறிப்புகளுக்குப்பின் கதை இப்படி முடிகிறது. ‘ஒருவழியாக அடித்தல் திருத்தல்களுக்குப்பிறகு இரு பத்துப்பன்னிரண்டு முகவரிகள் மட்டுமே புதுப்புத்தகத்தில் எழுதத்தேறின. புத்தகத்தை மூடிவைத்தேன். புதுப்பொலிவுடன் பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் உள்ளே பல வெற்றிடங்கள் இருந்தன, என் மனதைப்போல’ [ரம்யா நாகேஸ்வரன்]
ஒரு சிறுகதையின் இறுதியில் ஆசிரியர் அக்கதையை விளக்கி மேலே பேசக்கூடாது என்பதை தமிழகத்தில்கூட பள்ளிக்கூடங்களிலேயே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து நாலைந்தாண்டுக்காலம் ஆகிறது என நினைத்துக்கொண்டேன். பெரும்பாலான கதைகள் இப்படித்தான் முடிகின்றன. ‘தாத்தாவும் பேரனும் அந்தத்தார்ரோட்டில் நடந்துகொண்டிருந்தனர். இருவரின் நடையில் இடைவெளிகள் நீண்டுகொண்டிருந்தன. நடையில் மட்டுமல்ல எண்ணத்திலும் இடைவெளிகள் நீளம்தான்!” .தலைப்பு? ஆம், ‘எண்ணத்தின் இடைவெளிகள்’ தான். [மலர்விழி இளங்கோவன்]
’ஞயம்பட உரை’ [கமலாதேவி அரவிந்தன்] கதை எழுத்தாளர்களுக்கு அம்மையார் அளிக்கும் ஒரு நல்லுபதேசம். உண்மையில் இது ஒரு இலக்கியவம்பு என்றால்கூட சற்றும் சுவாரசியமற்ற இலக்கிய வம்பு. கதையின் எல்லா வரிகளிலும் அசட்டுத்தனத்துடன் எழுதுவது ஒரு தனிக்கலை. அதில் கமலாதேவிக்கு நிகர் அவரே. ‘வக்கிரம் என்னும் சொல்லின் உக்கிரத்தை வைத்துக்கொண்டு ஒரு நாவலே படைத்தவள் நான் என்றாலும்…’ என்பது போன்றவரிகளை வாய்விட்டுச்சிரித்தபடியே வாசிக்கலாம்.
மாதங்கியின் புரு ஒரு அறிவியல் கதையாக தன்னை எண்ணுகிறது. ஆனால் அதற்கான மொழியோ சூழலோ உருவாக்கப்படவில்லை. அறிவியல்கதையின் அடிப்படை என்பது அந்த கதை முன்வைக்கும் கருவுக்கான தர்க்கம் அறிவியல்விதிகளின்படியே விளக்கப்பட்டிருப்பதுதான். இதில் ஒரு ‘மருந்தை’ கொடுத்து கிழவரை இளைஞராக்குகிறார்கள். இதை ஒரு மாயக்கதை என எடுத்துக்கொண்டால் அதற்குரிய சூழலோ மொழியோ உருவாக்கப்படவில்லை.
அனைத்துக்கும் அப்பால் இத்தொகுதியின் முக்கியமான பிரச்சினை எதை ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி இவர்களுக்குள் எழவில்லை என்பதே. மொழி, மற்றும் கூறுமுறையில் ஒரு சரளத்தன்மையை அடைந்த கதை சித்ரா ரமேஷின் பிதாமகன். ஆனால் அது சிறுகதையாக முழுமை கொள்ளவில்லை, ஓர் அனுபவப்பதிவாக மட்டுமே நிற்கிறது. அவ்வனுபவமும் அபூர்வமானதோ பெரிய திறப்பை அளிக்கக்கூடியதோ அல்ல. சிறுகதை என்பது அனுபவம் அல்ல, அதில் திறக்கும் புதிய வாசல்தான்.
இந்தத் தொகுதி பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்துள்ளது. இதில் எழுதிய பலர் அங்கிருந்து கிளம்பி மேலும் முன்னகர்ந்ததாகத் தெரியவில்லை. சிங்கப்பூரின் மிகச்சிறிய உலகுக்குள் பல்வேறு உள்போட்டிகள் வழியாக தங்களை நிறுவிக்கொள்ளமுயல்பவர்களும் அப்படியே ஒதுங்கிப்போனவர்களுமாகவே எஞ்சுகிறார்கள். சிறுகதையின் வடிவத்தை, அழகியலை இவர்கள் கற்றுக்கொண்டாகவேண்டும்.
வேறொரு மனவெளி, தங்கமீன்கள் வெளியீட்டகம்