சிங்கப்பூர் இலக்கிய உலகத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் வாசித்த முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இராம கண்ணபிரானின் ‘சோழன் பொம்மை’ ‘இருபத்தைந்து ஆண்டுகள்’ என்னும் இரு சிறுகதை நூல்களும் அடங்கும். இவை முறையே 1980, 81 ஆண்டுகளில் வெளியாகிய நூல்கள்.
இராம கண்ணபிரான் சிங்கப்பூர் இலக்கியத்தின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக கணிக்கப்படுபவர். சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புக்களை நாம் மதிப்பிட முடியும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முற்றிலும் அன்னிய நிலம். பல்லினப்பண்பாடுள்ள தேசம். குறிப்பாக குடும்பத்திற்கு வெளியே தமிழ் காதில் விழாத சூழல்.
ஆகவே இருவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று எழுதுவதற்கான வாழ்க்கைக்களங்கள் மிகக்குறுகிவிடுகின்றன. இரண்டு தமிழ்நடை உருவாகி வரமுடிவதில்லை.
நடை என்பது செவியால் உருவாக்கப்படுவது. மக்கள் பேசும் மொழி செவிவழியாக ஆசிரியன் மனத்துக்குள் புகுந்து தேங்கி ,விசைகொண்டு, நுட்பங்கள் அடைந்து நடையாக ஆகிறது. மொழிநடையின் அடிப்படை என்பது செவியே. வாழ்க்கையில் பல்வேறு அன்றாடக்களங்களில் புழங்கும் மொழியின் கசங்கலும் கொப்பளிப்புகளுமே நடையை உருவாக்குகிறன. வசைபாடவும், கொஞ்சவும் ,சட்டம் பேசவும், சாத்திரம் பேசவும் ஒருமொழி பயன்படுத்தப்படும்போதே அது மாறுபட்ட மொழிநடைகளை உருவாக்குகிறது. மொழி என்னும் அலைப்பரப்பின் நுரை என நடையைச் சொல்லமுடியும்.
அந்த வாய்ப்பு அன்னியமொழிச்சூழலில் வாழும் எழுத்தாளருக்கு அருகிப்போகிறது. அதன்பின் எஞ்சியிருப்பது பிறமொழிகளின் முயங்கலால் அமையும் சில புத்தழகுகள் மட்டுமே. ஆனால் அன்றைய சிங்கப்பூரின் எழுத்து என்பது தமிழ் அடையாளத்தை வகுத்துக்கொள்வதிலும் தமிழ்ப்பண்பாட்டை நிலைநாட்டுவதிலும் மையக்கவனம் கொண்டது. அவ்வாறு தமிழடையாளம் நோக்கிக் குறுகும்போது பிறமொழியின் சாயல்கள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன. ஆகவே நடை உருவாகும் ஒரே வாய்ப்பும் அடைக்கப்படுகிறது.
உண்மையில் சீன,மலாய் இனங்களை நோக்கி பார்வையைத் திருப்பிக்கொண்டு விரிந்த நோக்கைக் கொள்ளமுடியும் என்றால் வாழ்க்கைக்களங்கள் முடிவிலாது பெருகும். ஆனால் மறுபடியும் தமிழ்ப்பண்பாட்டுச் சீர்திருத்தம் என வரையறைசெய்துகொள்ளும்போது ஆகவே எழுதுவதற்கு இருந்த களம் என்பது தமிழ்மக்களின் குடும்பவாழ்க்கை மட்டுமே.
இராம.கண்ணபிரானின் இவ்விரு தொகுப்புகளில் உள்ள கதைகளின் முதன்மையான குறைகள் மேலே சொல்லப்பட்ட எல்லைகள் வழியாக உருவாகி வருபவை. இவை வண்ணங்களும் நுட்பங்களும் இல்லாத பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ள கதைகள். இவற்றின் களம் திரும்பத்திரும்ப குடும்ப உறவுகள்.
இராம கண்ணபிரான் ‘கோபு என்னை மன்னி’ என்னும் கதை இப்படி ஆரம்பிக்கிறது. ‘பொறிதட்டியது அருணகிரிக்கு. தன் காதுகளை அவனால் நம்பமுடியவில்லை. கணக்கர் கலிப்பகையார் பொய்சொல்லியிருப்பாரோ என ஐயுற்றான்’ . கலிப்பகையார், மணக்குடவர், இளங்கீரன்,திருமங்கை போன்ற பெயர்கள் கதாபாத்திரங்களுக்குச் சாதாரணமாக வருகின்றன. உரையாடல்களும் அச்சுநடையிலேயே உள்ளன.உதாரணமாக அக்கதையின் உரையாடல்பகுதி இப்படி இருக்கிறது.
‘நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள். அருணகிரி, தொடர்ந்து நீ பண்ணையைப்பார்த்துக்கொள். கோபு, நீ அருணகிரிக்கு உதவியாக இரு. நம் குடும்ப உறுதிமொழியை என்றும் காப்பாற்று. ஒழுக்கம் இன்றியமையாதது’ என்று முடித்தார்.
இவ்விரு கூறுகளும் இலக்கியத்திற்கு எவ்வகையில் முக்கியமானவை என வாசகர்கள் உணரமுடியும். கதைமாந்தரின் பெயர் வேறு எந்த அடையாளமும் இல்லாமலேயே வாசகனுக்கு எவ்வளவோ நுணுக்கமான சித்திரங்களை உருவாக்கக்கூடியது. கதாபாத்திரத்தின் வயது, ஊர், சாதி, சமூகப்படிநிலை என. எழுத்தாளன் அதை யோசித்துப்போடமுடியாது, அனிச்சையாகவே அது அமையும். அவ்வாறு அமைவது இலக்கியவாதியின் முக்கியமான நுண்ணுணர்வு
இன்னொன்று பேச்சுநடை. அச்சுநடை இருக்கலாமா என்றால் இருக்கக்கூடாது என்ற நெறி ஏதுமில்லை. ஆனால் ஒரு கதாபாத்திரம் பேசும்போது நாம் அதை கேட்பதுபோலத் தோன்றவேண்டும். அக்கதாபாத்திரத்தின் முகபாவனைகளும் உணர்வுகளும் நம்மை வந்தடையவேண்டும். அதற்குத்தான் பேச்சுமொழி. பேச்சுமொழியாக இருந்தால் மட்டும்போதாது, அந்தப்பேச்சேகூட நம்பும்படியாக இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஏற்ப, தருணத்திற்கு ஏற்ப.
மேலே சொன்ன இருகூறுகளையும் புனைவின் ‘நம்பவைத்தல் கலை’ க்கு இன்றியமையாதவை என்று சொல்லலாம். இராம கண்ணபிரானின் கதைகள் அவ்வகையில் முதல்படியிலேயே தோல்வியடைந்துவிடுகின்றன.
புனைவெழுந்த்து தொடங்கிய காலகட்டத்தில் இத்தகைய கதைகள் ஏராளமாக வெளிவந்தன. புதுமைப்பித்தன் இத்தகைய கதைகளை கிண்டலடித்து ‘இந்தப்பாவி’ என்னும் கதையை 1935லேயே எழுதிவிட்டார். மேலும் அரைநூற்றாண்டுக்குப்பின் இராம கண்ணபிரானின் இக்கதைகள் வெளிவந்துள்ளன.
இக்கதைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவை மு.வரதராசனார், கு.ராஜவேலு போன்றவர்களின் கதைகள் என ஊகிக்கலாம். உண்மையில் திருமங்கை அமைதி பிறந்தது போன்ற கதைகள்மு.வரதராசனாரின் கதைகளின் வலுவான சாயல்கொண்டவை. ஆனால் புதுமைப்பித்தனின் கிண்டல் வந்தபின் கால்நூற்றாண்டு காலம் கழித்து எழுதிய மு.வரதராசனாரின் படைப்புகள் காலாவதியாகி மேலும் கால்நூற்றாண்டுக்குப்பின் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன
இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழில் புதுமைப்பித்தன் மௌனி குபரா காலகட்டமும் லா.ச.ரா. க.நா.சு காலகட்டமும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் காலகட்டமும் முடிந்து வண்ணதாசன் வண்ணநிலவன் காலகட்டம் ஆரம்பித்துவிட்டிருந்தது என்பதை ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்லவிரும்புகிறேன்.
மு.வரதராசனார் உள்ளிட்ட இந்த மரபுசார் எழுத்தின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் மரபின் அத்தனை பிற்போக்கு, ஏன் மானுட விரோத நோக்கும் மண்டிக்கிடக்கும் என்பதே. உதாரணமாக திருமங்கை என்னும் கதை. மனைவியை கொடூரமாக நடத்துகிறான் கதாநாயகன். அவன் தன் கர்ப்பிணி மனைவியை அடித்தே கொல்கிறான். அவள் தன் அழகிய தங்கையை அவனுக்கு இரண்டாம்தாரமாக ஆக்கிவிட்டு மடிகிறாள். அவன் மனம்திரும்பி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறான்.
இன்னொரு கதை கோபுரநிழல் கணவனிடம் கோபித்துக்கொண்டு ஒரு பெண் ரயிலில் தன் அக்கா வீட்டுக்குச் செல்கிறாள். கணவன் வந்து அழைத்தபோது அவள் அவனுடன் வர மறுக்கிறாள். அதைக் கேட்டு ஒரு ஹிப்பி அவளை ‘அழைக்கிறான்’. அவள் அவனை கன்னத்தில் அறைகிறாள். அங்கே படுத்திருந்த ஒரு ‘பெரியவர்’ எழுந்து அவளுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் அவனை பொதுஇடத்தில் சண்டைபோட்டு அனுப்பியதனால்தான் அப்படி நிகழ்ந்தது என்றும் அறிவுரைகூறுகிறாள். அவள் திருந்துகிறாள். கோபுரநிழல் என்னும் தலைப்பைக் கவனியுங்கள். கணவன் கோபுரமாகக் காட்டப்படுகிறான் இங்கு.
சிங்கப்பூர் இலக்கியப்போக்கின் இரண்டாவது காலகட்டம் என நான் நினைக்கும் சீர்திருத்தக் காலகட்டக் கதைகள் இவை. சீர்திருத்தக்கருத்துக்களைச் சொல்லும் நோக்கமே ஓங்கியிருக்கிறது. ‘ நாடோடிகள்’ என்னும் கதை ‘தன் இனத்தின் மொழி மற்றும் பண்பாட்டைத் துறந்து’ அன்னியநாடுகளுக்குச் செல்பவர்களை நேரடியாகக் கண்டிக்கிறது. சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றும் பார்த்திபன் இச்சிந்தனைகளை எண்ணிக்கொள்வதாக அது எழுதப்பட்டிருக்கிறது.
பெரும்பாலான கதைகள் செயற்கையான ஒரு களத்திலேயே நிகழ்கின்றன. மிகச்செயற்கையான திருப்பங்கள். முடிச்சுகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பெண் ‘லாரன்ஸ் கம்பெனி எங்குள்ளது? தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்கிறாள். கேட்கப்பட்டவன் அவளை ‘அந்தக்கம்பெனி எங்குள்ளது என்று எனக்குத்தெரியும் .காட்டுவேன்’ என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வருகிறான். உடனே அவள் அவனுக்கு மனைவி ஆகிறாள் . அவள் சிறுவயதில் காணாமல் போன அவன் அத்தைமகள். அது முடிச்சு.
இன்று இலக்கியரீதியாக இக்கதைகளை ஒருகாலகட்டத்தில் என்ன சிந்தனையோட்டம் சிங்கப்பூரில் இருந்தது என்பதை அறியும் ஆவணங்களாக மட்டுமே கொள்ளமுடியும். அன்றைய சீர்திருத்தக்கதைகளின் பாணியில் கருக்கள் நிகழ்வதற்கான செயற்கையான ஒரு சூழல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குள் ஊடாகத்தெரியும் சமூகசித்திரத்தை ஒரு வாசகன் தொட்டறியமுடியும்
உதாரணமாக, நாடோடிகள் கதையில் தமிழ்ப்பண்பாட்டை நிலைநிறுத்தப்போராடும் பார்த்திபன் உயர்சாதியினன். அவனால் நாட்டைவிட்டு ஓடும் பண்பாடற்ற செயலைச் செய்பவன் என வரையறை செய்யப்படும் தனபால் மலவண்டி ஓட்டிக்கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தவன். படித்து உயர்நிலையை அடைகிறான் தனபால். முழுக்கமுழுக்க ஆங்கிலேய வாழ்க்கையைத் தெரிவுசெய்கிறான். அந்த வெள்ளைய மோகத்தை பார்த்திபன் வெறுக்கிறான். தனபால் தமிழ்ப்பண்பாட்டை உதறிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போகிறான். அதற்குக் காரணம் பணம் அல்ல, தன் பின்னணியை மறைத்து சமூகஅவமதிப்பைக் கடப்பது. அங்கே அவன் மனைவி மறைகிறாள். ‘பண்பாட்டை’ உதறிவிட்டுச் சென்றது தப்பு என்று கடிதம் மூலம் பாவமன்னிப்பு கோரும் தனபாலைக் காட்டி முடிகிறது கதை.
இந்தக்கதையில் ஆசிரியர் கடைசியில் தன்பாலைக் கண்டித்து ஒரு பெரிய சீர்திருத்தச் சொற்பொழிவையே தனபாலின் வார்த்தைகளாகவே எழுதிச்சேர்த்திருக்கிறார். அதை ஆசிரியரின் கோணம் என அப்படியே தள்ளிவிட்டு தனபாலின் இக்கட்டை, தவிப்பை நோக்கி நாம் சென்றோம் என்றால் ஆசிரியர் எழுதத்தவறிய ஒரு கதையைச் சென்றடைகிறோம். மொரிஷஸில் கூலி வேலைசெய்து, சிங்கப்பூரில் மலவண்டி ஓட்டி, ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போய், அமெரிக்காவை நாடும் தலித் குடும்பம் ஒன்று நாடுநாடாகத் தன் அடையாளத்தைத் துறப்பதற்காகத் தவித்தலைவது மிகப்பெரிய ஒரு காவியத்துயர். அடையாளத்தைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்னொரு பக்கம் அது. இன்றைய ஒரு எழுத்தாளன் அதை ஒரு பெருநாவலாகவே எழுதிவிடமுடியும்.
இன்னொரு உதாரணம் ‘புதிய உலகு’. மிக உயர்பதவிக்குச் சென்ற கனகு என்னும் பெண் குடும்பத்தலைவியாக இல்லாமலாகிவிட்டோமா என அடையும் குற்றவுணர்ச்சியையும் அதற்கு ஆசிரியர் நேரடியாக வந்து அவள் கணவன் வாய் வழியாகச் சொல்லும் தீர்வும் கொண்டது இக்கதை. ஆனால் சிங்கப்பூர் சூழலில் பெண்கள் அடைந்த, அடையும் அடிப்படையான ஒரு அறத்தடுமாற்றத்தைச் சொல்லும் கதை ஒன்றை நாம் வெளியே எடுக்கமுடியும்
கையில் பிரம்புடன் வகுப்புக்கு வந்து மேஜைமேல் தட்டி ‘அமைதி! அமைதி!’ என்று கூவிவிட்டு பேசத்தொடங்கும் ஆசிரியரின் குரலில் அமைந்த கதைகள் இவை. சிங்கப்பூரின் ஒருகாலகட்டத்தின் வாழ்க்கைச்சிடுக்குகள் அறியாமலேயே வெளிப்பட்ட கதைகளைக்கொண்டு இத்தொகுப்புகளை இலக்கியவரலாற்றில் இடம்பெறச்செய்யமுடியும்.
[இருபத்தைந்து ஆண்டுகள் இராம கண்ணபிரான். தமிழ்ப்புத்தகாலயம்சென்னை 1980
சோழன் பொம்மை தமிழ்ப்புத்தகாலயம் சென்னை 1981]