சிங்கப்பூரில் சந்திப்பு அதுவும் முப்பதுபேர் என்றதுமே ஒன்றை முடிவுசெய்துவிட்டோம், தங்குமிடம் ஏற்பாடுசெய்து விழாவை ஒருங்கிணைப்பது மட்டுமே நம் வேலை.முப்பதுபேரையும் ‘கட்டி மேய்ப்பது’ சாத்தியமல்ல ஆகவே இங்கு வந்தபின் அவர்களைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. தாங்களே சிறிய குழுக்களாக செல்லவேண்டியதுதான். செந்தேசா கேளிக்கைத்தீவு. விரும்பியதைச் செய்யலாம்
ஆகவே நான்கு நான்குபேராகப்பிரிந்து டாக்ஸியில் செல்வதாகவும் தனித்தனிக் குழுக்களாகவே சுற்றுவதாகவும் திட்டம். நான் எல்லா நாட்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கல்லூரி வகுப்புகள் இருந்தன. எனக்கு அனுப்பப்பட்ட படங்கள் இவை. மேலும் பதிவுகளை நண்பர்கள் எழுதக்கூடும்
அனைவரையும் கூட்டிச்செல்ல திரும்பிக்கொண்டுவிட ஒரு வேன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதற்கான காத்திருப்பு. இத்தகைய சந்திப்புகளில் அரட்டையே எப்போதும் முக்கியமான நிகழ்வு
சர்வதேச அளவில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள் என்பதனால் கல்வி அளவுக்கே தொடர்புகளும் கிடைக்கின்றன. ராபர்ட் முகாபேயின் மகள் சென்ற ஆண்டு பட்டம்பெற்றவர்களில் ஒருவர். தமிழக அரசியல் பெருந்தலைவர்கள் பலரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கொள்ளுப்பேரரர்கள் இங்கே படிக்கிறார்கள்
என்னதான் இலக்கியக்கூட்டம் என்றாலும் கல்லூரி என்பதனால் ஒரு வகுப்பு மனநிலை வந்துவிட்டது. அதிலும் தோளில் பையுடன் கடைசியாக பேராசிரியர் சு வேணுகோபால் ‘பயல்களை பத்திக்கொண்டு’ செல்லும்போது