சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2

a

இன்றுகாலை சரியாக ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய அரங்கு தொடங்கியது. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூரிலிருந்து 30 பேர். தேசிய கலைக் கழகம் சார்பில் கவிதாவும் சிங்கப்பூர் தேசிய கல்வி நிலையம் சார்பில் முனைவர் சிவக்குமாரன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக வந்து கலந்துகொண்டார்கள்.

விஜயராகவன் சுருக்கமாக வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி தொடங்கியது. முதல் அரங்கு கம்பராமாயணம். ஆனால் நேற்று வந்திறங்கியபோதே நாகர்கோயிலில் இருந்து நாஞ்சில்நாடனின் தாயார் இறந்துவிட்ட தகவல் வந்தது. கிட்டத்தட்ட நூறு வயதானவர். சிலநாட்களாகவே நோயுற்றிருந்தார். ஆகவே நாஞ்சில்நாடன் நேற்று மாலையே விமானத்தில் கிளம்பி கொச்சி வழியாக ஊருக்குச் சென்றார். நாஞ்சில் கொண்டுவந்திருந்த கம்பராமாயணக் கவிதைகளையும் அறிமுகக்குறிப்பையும் ராஜகோபாலன் முன்வைத்து அரங்கை நடத்தினார்

வழக்கம்போல கம்பராமாயணம் அரங்கை ஆட்கொண்டது. சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சிவகுமரன், அருணாச்சலம் மகராஜன் உட்பட பலர் தீவிரமாக விவாதங்களில் கலந்துகொண்டனர். விஷ்ணுபுரம் அமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளையும் போலவே கொண்டாட்டமும் சிரிப்பும் குறையாத தீவிரமுமாக நிகழ்ச்சி நடைபெற்றது

மதிய உணவுக்குப்பின் சிறுகதை அரங்கில் தி.ஜானகிராமனின் சிறுகதைகளை முன்வைத்து அருணாச்சலம் மகாராஜன் பேசினார். தி/ஜானகிராமனின் பாயசம், கங்காஸ்நானம் ஆகிய கதைளை விரிவாக முன்வைத்து தன் அவதானிப்புகளை நிகழ்த்தினார்.பலகோணங்களிலான விவாதம் நிகழ்ந்தது

ராஜகோபாலன்

 

சு. வேணுகோபாலின் புனைகதைகளில் உள்ள உளம் சார்ந்த பாலியல் அம்சத்தைப்பற்றி அரங்கசாமி பேசினார். தொடர்ந்து சு.வேணுகோபால் தன் சிறுகதைகளைப்பற்றிப் பேசி அவற்றின் உருவாக்கத்தை பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மிகத்தீவிரமான குரலில் அவர் தன்னை முன்வைத்தது ஆழமான உணர்வுநிலைகளை உருவாக்கியது

அருணாச்சலம் மகராஜன்

 

ஐந்துமணிக்கு அரங்கு முடிந்தது. நகர்மையத்தில் உள்ள Gardens By the Bay  சென்றோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே பிரம்மாண்டமான கண்ணாடி கூடாரத்திற்குள் செயற்கைச் சூழலில் அமைக்கப்பட்ட அனைத்துவகையான நிலப்பரப்புகளை சேர்ந்த மரங்களையும் தாவரங்களையும் பிரம்மாண்டமான செயற்கைமரங்களையும் கண்டோம்.

மீண்டுமொரு கொண்டாட்டமான நாள்.

 

 

புகைப்படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்

 

மேலும் படங்களைப் பார்க்க

 

 

 

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் கடலோரப்பூங்கா
அடுத்த கட்டுரைஅங்குள்ள அழுக்கு