அன்புள்ள ஜெ,
சென்ற வார சந்திப்பில் நீங்கள் குறிப்பிட்ட J.H.Nelsonஉடைய “Madura Country – A manual” – Google Docsல் கிடைத்தது. படித்துக்கொண்டிருக்கிறேன். ஆங்கிலேயர் அளவுக்கு நம்மவர்கள் நமது மாவட்டங்களை விரிவாக இன்று பதிவு செய்கிறார்களா எனத் தெரியவில்லை.
எனில் இதைப் படிக்கும் போது என்னைக் கவர்ந்தது மற்றொன்று. தங்களோடு அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். நேரம் இருப்பின் படித்துப் பார்க்கவும்.
எனது குடும்பத்தின் பொக்கிஷமாக நான் கருதும் ஆவணம் ஒன்று எனது தாத்தாவின் தகப்பனார் கைப்பட எழுதி ஆவணப்படுத்திய ஒரு பெரிய நோட்டுப்புத்தகம். அவர் பெயர் சுப்பையா பிள்ளை(1896-1965) -(சாதியை முன்னோர் பெயரிலிருந்து பிரிக்க முடியவில்லை; பிரித்தால் யாரோ போலிருக்கிறது!!) ஆங்கிலேய அரசாங்கத்தில் வருவாய்த்துறையிலும் பின்னர் வனத்துறையிலும் பணியாற்றியவர். அவர் தனது தந்தை வழிப்பாட்டியிடமிருந்து (அப்பத்தா) தனது முன்னோர்களின் பூர்வீக வரலாற்றை வாய்மொழியாகக் கேட்டுத் தொகுத்திருக்கிறார். நல்ல தெளிவான பிரிட்டிஷ் ஆங்கில நடையில். ஏறக்குறைய நெல்சனுடைய நடை மற்றும் சொல்லாட்சி. வேலைவயிற்கற்ற ஆவணப்படுத்தும் பழக்கம் போலும்.
அவரது தாத்தாவின் தாத்தா காலத்தில் (எனக்கு ஏழு தலைமுறை முன்னர்) எங்களது இன்றைய நினைவறிந்த கிராமத்திற்கு – இன்றும் எங்கள் ஊர் என்ற அடையாளத்தை சுமக்கும் (திண்டுக்கல் அருகே இருக்கும்) அம்மையநாயக்கனூருக்கு குடிபெயர்ந்து சுற்றத்தாரையும் கொண்டு வந்து குடியேற்றி இருக்கிறார். இதுவரை தெளிவான வரலாறு, பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். முப்பாட்டன் நடையுடை தோற்றம் குறித்த தகவல்களும் பதிவு செய்திருக்கிறார். இது தவிர ஏறத்தாழ 50-60 பேருடைய ஜாதகக் குறிப்புகளும் அடங்கிய நூல் அது.
அவருக்கு மூன்று நான்கு தலைமுறை முன்னர் தென்காசி அருகே இலஞ்சியே (நீங்கள் ஒரு பள்ளி குறித்து சொன்னதும் இது நினைவு வந்தது) பூர்வீகமாக இருந்ததென்றும், கடும் பஞ்சம் வர வடக்கே நகர்ந்து பாலவநத்தம், மாந்தோப்பு என அருப்புக்கோட்டை அருகே ஒரு தலைமுறை வாழ்ந்து பின்னர் அம்மையநாயக்கனூர் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இந்த எட்டாம் ஒன்பதாம் தலைமுறை பாட்டன்கள் பெயரும் ஓரிரு சகோதர சகோதரியர் பெயர் வரை தகவல் இருக்கிறது. தலைமுறைகளாக சொந்தத்துக்குள்ளேயே பெண்கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம் இருந்ததனால் வேறு சில உறவினர் குடும்பங்களுக்கும் இத்தகைய நீள்வரலாறு இருக்கிறது.
பஞ்ச காலத்தில் இலஞ்சியில் இருந்து மேலும் வறண்ட அருப்புக்கோட்டை அருகே குடிபெயர்ந்திருப்பது சற்று வியப்பளிக்கிறது. வேளாண்மை செய்பவன் நிலத்தை விட்டு வெளியேறுவது ஏதேனும் அதீத கட்டாயத்தின் பொறுத்துதானே இருந்திருக்க வேண்டும். எனில் இவற்றுள் எந்த ஊரையும் இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை. இந்த ஊர்களை என்றேனும் சென்று பார்க்கும் ஆவல் இருக்கிறது.
தாத்தா எதையும் உணர்ச்சி கலக்காமல், மிகைப்படுத்தாமல் தெளிவான ஆவண நடையில்தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே முன்னோர் பெயர்களோடு அவரது காலகட்டத்தைத் தோராயமாக (எ.கா:ஆதிநினைவு தொடும் மூத்தவர் Warren Hastings காலத்தில் வாழ்ந்திருக்கலாம்) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனில் தாங்கள் அன்று குறிப்பிட்ட வரலாற்று ஆய்வியல் நோக்கு குறித்த சில வழிமுறைகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பகுதியின் வரலாறு, மாநில வரலாற்றோடும், மாநில வரலாறு, தேசிய வரலாற்றுடனும், இன்னும் விரிந்து உலக வரலாற்றுடனும் ஒத்திசைய வேண்டிய கட்டாயம் – அதற்கான சான்றுகள்.
இது குல வரலாறேயாயினும் அப்போதைய (1700-1800) தமிழக வரலாறு குறித்தும், பெரும் பஞ்சமாகிய தாது வருடத்துக்கு முன்பும் இத்தகைய புலம்பெயர்தல் நிகழ்ந்திருக்கிறதா, வரலாற்று ரீதியாக ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா என எதிர்நோக்குகிறேன். அந்தக் காலகட்டம் குறித்த தென்தமிழக வரலாற்றுப் புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் ஏதுமிருப்பின் தெரிவியுங்கள்.
இது தவிர ஆங்கிலேயரான Mr. Wood என்ற I.C.S ஒருவர் அளித்த ஆணிகள் பதிந்த பாதக்குறடு (அதன் மீதேறி என் குடிமூத்தோர் சந்நதம் உரைப்பாராம்) ஒன்றும் வரலாறொன்றை ஒளித்து எங்கள் இல்ல பூஜையறையில் காத்திருக்கிறது. அவர் குறித்தும் இணையத்தில் அலசி வருகிறேன். Wynad, its People and Traditions என்ற ஒரு புத்தகம் ஒன்றைத் தவிர வேறொன்றும் Mr. Wood ICS குறித்து வெளிச்சமிடவில்லை.
தாங்கள் படித்த ஆய்வுநூல்களில் ஏதேனும் வாயில் திறக்கக்கூடுமோ என ஒரு ஆவல்.
நான் நாளை காலை மதுரை செல்கிறேன் – புத்தகக் கண்காட்சிக்கு செல்ல உத்தேசித்திருக்கிறேன். தாங்கள் குறிப்பிட்ட ‘குமரி நில நீட்சி‘, ‘வடமொழி இலக்கிய வரலாறு‘ இவை பதிப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. மேலும் தங்கள் குரு நித்ய சைதன்ய யதியின் ‘அனுபவங்கள் அறிதல்கள்‘, தமிழினி வெளியிட்டிருப்பதாகப் படித்தேன். தேட விழைகிறேன்.
மிக்க அன்புடன்,
சுபஸ்ரீ
*
அன்புள்ள சுபஸ்ரீ
இந்திய வரலாற்றில் இருண்டபக்கங்கள் நிறைய உள்ளன. அவற்றைப்பற்றி பெரிதாக எதுவுமே எழுதப்பட்டிருக்காது. அவை இருவகை, ஒன்று ஆவணங்களோ சான்றுகளோ இருக்காது. இரண்டு, அவற்றை தோண்டி எடுக்கவேண்டிய தேவை இருக்காது, காரணம் அவற்றில் நாம் பெருமிதம்கொள்ள ஏதுமிருக்காது.
களப்பிரர்காலம் உதாரணம், ஆவணங்கள் இல்லை. சமண வரலாறுகளில் ஆவணங்கள் இருக்கலாம். எடுக்க எவருக்கும் ஆர்வமில்லை, அது தமிழகத்தை வென்றவர்களின் வரலாறு.
மதுரை நாயக்கர் வரலாறு சத்தியநாதையர் அவர்களால் எழுதப்பட்ட ஒரு பெரும்படைப்பு. 1920 களில் வெளிவந்த இந்நூலின் தமிழ்வடிவம் இன்னும் வெளிவரவில்லை [இந்நூல் இணையத்தில் முழுமையாகக்கிடைக்கிறது] காரணம் அது நம் பெருமிதவரலாறு அல்ல.
அதேபோன்ற ஓர் இருண்டவரலாறுதான் பிரிட்டிஷார் நம்மை வென்ற காலகட்டம். நாயக்கராட்சியின் முடிவு, பெரும்பஞ்சங்கள், அழிவு. அதைப்பற்றி ஆங்கிலேயர் எழுதிய குறிப்புகள் நிறையவே உள்ளன. ஆனால் ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல்கள் மிகவும் குறைவு
தரம்பால் எழுதிய அழகியமரம்- பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சமூக- கல்விச் சூழல் எப்படி இருந்தது என்பதற்கான அரிய ஆவண ரீதியான ஆய்வு. அதிலிருந்துதான் நாம் அடுத்தகட்ட பஞ்சம்பற்றிய வரலாற்றுக்கு வரவேண்டும். பி ஆர் மகாதேவன் மொழியாக்கத்தில் தமிழினி வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்லது.
அன்றைய நிலவுடைமைச்சூழல் பற்றி யூஜின் இர்ஷிக் முக்கியமான ஆய்வுகளை செய்துள்ளார். அவருடைய நூலை மேலும் விரிவாக்கம் செய்யும் ஆய்வாகக் கொள்ளவேண்டும். தொடர்ந்து பஞ்சங்களைப்பற்றி எழுதப்பட்ட நூல்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழில் உப்புவேலி [ராய்மாக்ஸ்ஹாம்] ஒருமுக்கியமனா நூல். பி. எம் பாட்டியாவின் இந்தியாவின் பஞ்சங்கள் முக்கியமான நூல். B. M. Bhatia Famines of India]
இச்சூழலிலிருந்து மேலெழுந்துவந்த பண்பாட்டு எழுச்சியின் சித்திரத்தைப் பெற கர்னல் ஆல்காட் போன்றவர்களைப்பற்றிய நூல்கள். தமிழில் சில நூல்கள் எழுத்துப்பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன
இந்நூல்கள் வழியாக முந்தைய நிலை, வீழ்ச்சியின் சித்திரம், அதிலிருந்து கிளம்பிய மீட்சி என மூன்று நிலைகளாக நாம் வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு மேலேமேலே விரிவாக்கம் செய்தபடியே செல்லலாம்.
இணையம் வழியான ஆய்வு ஓரளவுக்கே பயன்படுகிறது. மேலதிகமாக ஆய்வுசெய்ய நூலகங்களையே நாடவேண்டும்.
ஜெ