கெஜ்ரிவாலின் சரிவு

Arvind-Kejriwal-2AFP

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

பலநாட்களாகவே கேஜ்ரிவாலின் அரசியல் நிலை பற்றியும், அவர் ஆட்சி நடத்தும் விதம் பற்றியும் தங்களிடம் கேள்வி கேட்க எண்ணி இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் மக்கள் தந்த அருமையான வாய்ப்பை வெகுகாலம் முன்பே நழுவ விட்டுவிட்டார். இருந்தபோதிலும் நீங்கள் அவரிடம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை அறிந்து வாளாவிருந்தேன்.

தற்பொழுது அவரது கட்சி உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறது. அவருடன் முன்பு இணைந்து இருந்த பிராசாந் பூஷன், யோகேந்திர யாதவ் முதலானோர், கேஜ்ரிவால் தீர விசாரிக்காமல் கண்டவர்களுக்கும் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதையும், அமைச்சர் ஆக்குவதையும் அவ்வப்போது எச்சரித்த போதிலும், இவர் எதையும் கண்டு கொள்ளாமல் தனது ஆணவத்தால் மனம் போன போக்கில் செயல்பட்டு அதன் பலனை “சந்தீப் குமார்” போன்றவர்களால் அனுபவித்து வருகிறார்.

(இதில் ஒரு பெரிய அவலம் என்னவென்றால் இந்த சந்தீப் குமாரின் நிலை சந்தி சிரித்த போது, கொஞ்சமும் கூசாமல் கேஜ்ரிவாலின் இணை “அஷுதோஷ்” காந்தியையும், நேருவையும் இந்த கேடு கெட்டவரோடு ஒப்பிட்டு இவரின் மோசமான நடத்தைக்கு ‘வக்காலத்து’வாங்கினார்!. )

தற்போது நீங்கள் மிகவும் மதிக்கும் ”அன்னாஹஸாரே” அவர்களே கேஜ்ரிவாலின் மீது நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் (My hopes on Kejriwal is over)

அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,

அ. சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி

ஆம் ஆத்மிக்குள் நடப்பவை ஆச்சரியமளிக்கவில்லை, வருத்தமளிக்கின்றன

ஆம் ஆத்மி என்று பெயர் சுட்டுவதைப்போலவே அது சாமானியர்களின் தொகுதி. சராசரி இந்தியச் சாமானியர்களின் அத்தனைப் பிரச்சினைகளும் அதற்குள் இருப்பதும் இயல்பே

அதன் ஒரே அஜெண்டாவாக இருந்தது ஊழல் ஒழிப்பு. அதற்காக அது அவசரமாக ஒருங்குதிரட்டப்பட்டது. ஊழலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையின் விளைவு அது. அந்த வேகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால் அவ்வாறுதான் செய்யவேண்டும்

ஆனால் ஒர் உறுதியான கொள்கையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு படிப்படியாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட அமைப்பின் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் அதற்கு இருக்க வாய்ப்பில்லை. கேஜ்ரிவால் அப்படி பிறரை ஆழமாகப்பாதிக்கும் ஆளுமையும் அல்ல. அவர் ஒரு எதிர்ப்புவடிவம், அவ்வளவுதான்

காந்தியேகூட மேலே சொல்லப்பட்ட உண்மையை சௌரிசௌரா காவல்நிலைய எரிப்பில் இருந்து புரிந்துகொண்டு எதிர்ப்பரசியலை உதறி அடிப்படையான பயிற்சிகொண்ட தொண்டர்களை உருவாக்கியபின்னரே அடுத்த கட்டப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதுவே பலன் அளித்தது. ஆனால் அவர்களில் கூட பின்னாளில் பலர் வழிதவறினர்.

அண்ணா ஹசாரே மற்றும் கேஜ்ரிவாலில் எதிர்ப்பு இந்திய அரசியலில் ஒரு பெரிய ஆக்கபூர்வ நிகழ்வு. ஊழலுக்கு எதிராக இந்திய சமூகம் பொறுமையிழந்திருக்கிறது என்பதை ஓங்கி அறிவித்தது. அது வெல்லவேண்டுமென நான் விரும்பினேன், விரும்புகிறேன். ஆகவே கெஜ்ரிவாலின் வெற்றியை கொண்டாடினேன்

இன்று அதன் சரிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிழைகளிலிருந்து அவ்வியக்கம் மீண்டுவரவேண்டும் என்று விரும்புகிறேன். அது அழியவேண்டுமென விரும்பவில்லை. அதன் அழிவை மகிழ்ந்துகொண்டாடுபவர்களுடனும் நான் இல்லை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
அடுத்த கட்டுரைபதினேழாம் நூற்றாண்டின் இந்தியா