என் ஆசிரியர்களில் முதன்மையானவர் என்று எப்போதுமே ஆற்றூர் ரவிவர்மாவைச் சொல்வேன். மலையாளத்தின் நவீனக்கவிஞர்களில் ஒருவர், தமிழிலிருந்து ஏராளமான படைப்புகளை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர். அவரது மகள் ரீத்தாவின் கணவர் ஆந்திராவில் மாச்செர்லா என்னும் ஊரில் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். மாச்செர்லாவுக்கு நான் ஒருமுறை பணமே இல்லாமல் சென்று சேர்ந்தேன்
என் பயணங்களில் ஒன்றில் ஹைதராபாத் செல்லும் வழியில் திடீரென்று கையில் பணமில்லாத நிலையை அடைந்தேன். திருட்டுபோகவெல்லாம் இல்லை, கையில் மொத்தம் எவ்வளவு பணமிருக்கிறது என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. கிளம்பியபோது கணக்கு இருந்தது. சிலநாட்களில் மறந்துவிட்டது. தேவையானபோது எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டும் பேருந்துச்சீட்டு எடுத்துக்கொண்டும் அவ்வப்போது மலிவான விடுதிகளில் தங்கிக்கொண்டும் போய்க்கொண்டே இருந்தேன். மனம் வெளியிலும் உள்ளிலுமாக அலைந்துகொண்டிருந்தது.
ஒரு பேருந்து நிலையத்தில் ஹைதராபாதுக்கு பேருந்தைப்பிடிக்க நின்றிருக்கும்போதுதான் ஒரு கடும்குளிர்போல அடிவயிறு அதிர என்னிடம் மொத்தமே இருபத்துமூன்று ரூபாய்தான் எஞ்சியிருக்கிறது என்று கண்டுபிடித்தேன். ஹைதராபாத் செல்ல அது போதாது. ஊருக்குத்திரும்பிச்செல்ல கொஞ்சமும் போதாது. கையில் மதிப்புமிக்க பொருள் என ஏதுமில்லை.
என்ன செய்வதென்றறியாமல் அந்தப் பேருந்து நிலையத்தையே நாலைந்து முறை சுற்றிவந்தேன். ஒரு பஸ்ஸின் பெயரைப் பார்த்ததும் மூளை மின்னியது, மாச்செர்லா! அங்கே செல்ல எவ்வளவு டிக்கெட் ஆகும் என கேட்டேன். பதினெட்டு ரூபாய்தான். தொலைவு இல்லை. சாப்பிடவும் பணம் எஞ்சுவது அளித்த பரவசத்துடன் அருகே இருந்த சாலையோர உணவகம் நோக்கிச் சென்றேன்.
அந்தக்கடைக்கும் சாலைக்கும் நடுவே போடப்பட்டிருந்த பெரிய மரத்தடிமேல் ஏறியதும் ஒருவன் என் சட்டையைப் பிடித்துக்கொண்டான். கிசுகிசுப்பாக “பணம் கொடு…ஒருவேளை சாப்பிட பணம் கொடு… நீ மகராஜா. நீ மகாராஜா” என்றான். நான் திகைத்து “பணம் இல்லை” என்றேன். “உன்னிடம் பணமிருக்கிறது. எனக்குத்தெரியும். நான் உன் சகோதரன். ஒருவேளை உணவு மட்டும் வாங்கிக்கொடு. நான் இறந்துவிடுவேன்”.
அவனுடைய இருகால்களுமே மிக ஒல்லியாக, இறாலின் கொம்புகள் போல இருபக்கமும்,வளைந்திருந்தன. அவன் என் இடுப்பளவே இருந்தாலும் கைகள் உறுதியானவை. என்னசெய்வதென்று தெரியாமல் நான் “வேறு யாரிடமாவது கேள். நான் வெளியூர்” என்றேன். “சகோதரா, நானும் மனிதன். நானும் வெளியூர்” எனக்கு தெலுங்கு சரியாகத் தெரியாது. ஆனால் இக்கட்டுகளில் மொழி புரியத்தொடங்கிவிடுகிறது. என் கைகால்கள் நடுங்கின. நான் காலையில் சாப்பிடவில்லை. மாலை ஆகிவிட்டிருந்தது.
“யோசிக்கிறாய் சகோதரா… அத்தனை யோசிப்பது தராமலிருக்கவா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்… நன்றாக இரு” என்று அவன் என் சட்டையை விட்டுவிட்டு திரும்பினான். அது எனக்குள் மிகப்பெரிய உடைவை உருவாக்கியது. நான் கைநீட்டி அவன் தோளைப்பிடித்தேன். “ஐந்துரூபாய் தருகிறேன்…” என்றேன்.
“போதும்… நான் சாப்பிட்டுவிடுவேன்”. அவன் குரல் மிக ஆழத்திலிருந்து ஒரு நடுக்கத்துடன் எழுந்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டன. பசி தாளமுடியாமலிருக்கிறான் என்பதை பசியை அறிந்த என்னால் மிக நெருக்கமாக உணர முடிந்தது. ஐந்து ரூபாயை அவன் கிட்டத்தட்ட பறித்துக்கொண்டு அக்கடைக்குள் சென்றான். இரண்டு பெரிய தட்டுகள் நிறைய தக்காளிச்சாதம் வாங்கிக் கொண்டான். வெறிகொண்டு சாப்பிடத் தொடங்கினான்
வெளியே நின்று அவன்சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். என் வயிறு பசியில் கொப்பளித்து நெஞ்சை அடைத்தது. பார்க்கக்கூடாது என நினைத்தாலும் பார்க்காமலிருக்க முடியவில்லை. எதற்காக ஒரேசமயம் இரண்டு தட்டு தக்காளிசாதம் வாங்கிக்கொண்டான்? இரண்டாவது தட்டு சாதத்தைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டான். ஒருதட்டு தக்காளிச்சாதம் இரண்டரை ரூபாய்தான். இங்கே மலிவான உணவு அதுதான் போல. அப்படியென்றால் பாதிப்பாதியாகக்கூட சாப்பிட்டிருக்கலாம்.
அவன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். சட்டை நனைய தண்ணீர் குடித்திருந்தான். என்னைப்பார்த்து புன்னகையுடன் “சாப்பிட்டுவிட்டேன்…” என்றான். அவனுடைய அப்பட்டமான மகிழ்ச்சியைக் காண ஆச்சரியமாக இருந்தது. “என் பெயர் ராமராவ்” என்றான். “சூப்பர்ஸ்டாரின் பெயர்” என்றேன். “ஆம், நானும் அவரும் ஒரே ஊர். நான் அவரைப்போலவே பாடுவேன். என் தொழிலே பாட்டுத்தான்”.
“அப்படியா?” என்றேன். “ஆம், நன்றாகவே பாடுவேன். தெருவில்பாடி பணம் சேகரித்து அண்ணனிடம் கொடுப்பேன். என் வீட்டில் நான் பணம் கொடுத்துத்தான் சாப்பிட்டுவந்தேன். எவர் தயவிலும் இல்லை. ஆனால் என் அண்ணி என்னை துரத்திவிட்டாள். சும்மா துரத்தவில்லை. என்னை அவமதித்துத் துரத்தினாள். நான் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாள்”.
அவன் மேலே சொல்லட்டும் என நான் காத்திருந்தேன். “அவள் குளிப்பதை நான் பார்த்ததாகச் சொன்னாள். என் அண்ணா என்னை இழுத்துப்போட்டு அடித்தான். என்னை பிடித்து இழுத்து சைக்கிளில் வைத்துக்கட்டி கொண்டுவந்து பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து டிக்கெட் எடுத்து அனுப்பிவிட்டான். எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அழவில்லை. கெஞ்சவும் இல்லை”
“முதலில் அண்ணாவிடம் நடந்ததைச் சொல்லலாம் என நினைத்தேன். திரும்பத்திரும்பச் சொல்ல முயன்றேன். ஆனால் அண்ணா அதைக்கேட்காமல் என்னை அடித்துக்கொண்டே இருந்தார். அப்போது தெரிந்தது, அவர் அண்ணி சொன்னதை நம்பவில்லை என்று. அவருக்கு என்னை வீட்டைவிட்டுத் துரத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே அதைச்செய்கிறார். நான் அதன்பின் ஒன்றுமே சொல்லவில்லை”
“பஸ் எடுத்ததும் அண்ணா இனிமேல் இங்கே வராதே என்று கூவினார். நான் வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். பஸ் எங்கே போகிறதென்று தெரிந்துகொள்ளக்கூட முயலாமல் அமர்ந்திருந்தேன். இதோ இங்கே வந்ததும் இறங்கு, இனிமேல் டிக்கெட் இல்லை என்றான் கண்டக்டர் .இறங்கிவிட்டேன் நான் நேற்றுகாலை சாப்பிட்டது. அதன்பின் இதுவரை தண்ணீர்கூட குடிக்கவில்லை. என்னால் பசிதாளமுடியாது” அவன் சொன்னான்
நான் புன்னகையுடன் ”இப்போது சாப்பிட்டுவிட்டாய் அல்லவா?” என்றேன். “நீ என் உயிரைக் காப்பாற்றினாய்..” என்று என் கைகளைப்பிடித்தான். “அதெல்லாம் இல்லை, என்னிடம் அதிகப்பணம் இல்லை. நான் மாச்செர்லா போகிறேன்…என் சொந்த ஊர் கேரளா. அங்கே வேலைசெய்கிறேன்” என்னைப்பற்றி விரிவாக அறிமுகம் செய்து கொள்ளவில்லை, ஏனென்றால் அவனிடம் ஒரு ஐந்துரூபாய் கொடுக்கும் அளவுக்குக்கூட என்னிடம் பணம் இருக்கவில்லை.
அவன் என் சட்டையை மறுபடியும் பிடித்துக்கொண்டு “இரு சகோதரா, நான் பாடுவதைக் கேட்டுவிட்டுப்போ. சாப்பிட்டபின்னர்தான் எனக்கு குரல் வந்திருக்கிறது” என்றான். நான் “என் பஸ் போய்விடும்” என்றேன். “நான் பாடுகிறேன்… கேட்டுவிட்டுப்போ…கேட்டுவிட்டுப்போ சகோதரா” அவன் அந்தப்பிடியை விடவே இல்லை. அவன் நினைத்ததை செய்பவன், பிறருக்கு ஆணையிடும் குரல்கொண்டவன். என்னால் மீறமுடியவில்லை “சரி” என்றேன்
அவன் நேராக அந்த பேருந்துநிலைய வாசலில் சென்று நின்று சுற்றுமுற்றும் நோக்கி கீழே கிடந்த தீப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டான். அவன் விரல்கள் அதில் துடித்தன. சீரான தாளம் எழுந்தது. பலர் திரும்பிப்பார்த்தனர். அவன் பாடிய பாடல் இன்னமும் நினைவிருக்கிறது. “ராகமயி ராவே அனுராகமயி ராவே” நாகேஸ்வரராவ் நடித்தபடம். அஞ்சலிதேவி உடன் ஆடுவார். ஆனால் அப்போது அந்தப்பாடலை முதல்முறையாகக் கேட்டேன்.
மிகச்சில கணங்களிலேயே அவன் குரல் அப்பகுதியை ஆட்கொண்டது. மாசற்ற வெள்ளி ஓடை. செம்பருந்தின் துல்லியமான வட்டங்கள். அது கர்நாடக இசையை அடிப்படையாகக்கொண்ட பாடல். கண்டசாலா பாடியது. கண்டசாலாவிடம் எப்போதுமே ஒரு துயர் உண்டு. அவன் குரலில் துயரமே இல்லை. செம்பருந்தேதான். அதற்கு துயரமே இல்லை. அது துயரமில்லாத வானவெளியைச் சேர்ந்தது. கதிரொளி படும்போது பொன்னென ஆகும் வரம் கொண்டது.
எட்டுபாட்டுகளை அவன் பாடினான். எல்லாமே புகழ்பெற்ற சினிமாப்பாடல்கள். அவன் ஒவ்வொரு பாட்டுக்கு பின்பும் எந்தவகையிலும் கெஞ்சாமல் “பாட்டு பிடித்திருந்தால் மட்டும் நான் சாப்பிட பணம் கொடுங்கள்” என்றான். மக்கள் இருபத்தைந்து பைசா முதல் ஒருரூபாய் வரை கொடுத்தார்கள். பாடிமுடித்தபோது ஒருவர் ஐந்துரூபாய் கொடுத்து இன்னொரு என்.டி.ஆர் பாட்டு பாடும்படிச் சொன்னார்.
ஒன்றரை மணிநேரத்தில் அவன் இருபத்திமூன்று ரூபாய் சம்பாதித்திருந்தான். நான் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு “அற்புதமான பாட்டு” என்றேன். அதை தெலுங்கில் “மதுர சங்கீதம்” என்று சொன்னேன். அவன் என்னிடம் “சகோதரா இந்தப்பாடல்கள் நீ அளித்த சோறு. அந்த நன்றியுடன் நான் நீ தந்த பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்றான். “இல்லை,வேண்டாம்” என்றேன்.
அவன் “நான் பலரைப்பார்த்தேன். நல்ல உடைகள் அணிந்தவர்கள். பணம் இருப்பவர்கள். இருந்தும் ஏன் உன்னைப்பிடித்தேன்? ஏனென்றால் நீயும் என்னைப்போன்றவன் என்று தோன்றியது. உன்னைத்தான் நான் சகோதரன் என்று அழைக்கமுடியும். என் சகோதரனிடம் நான் சோறு கேட்கவேண்டும். அது பிச்சை இல்லை” என்றான்
நான் அழுதுவிட்டேன். அவன் கைகளைப் பற்றியபடி “அப்படியென்றால் நீ எனக்கு அந்த தக்காளிச்சோறு வாங்கிக்கொடு. நான் சாப்பிட்டு ஒருநாள் ஆகிறது. என்னிடம் ஊருக்குப்போகும் அளவுக்கே பணம் இருக்கிறது” என்றேன். அவன் என் கைகளைப்பற்றி வேகமாக ஆட்டினான். “நீ என் சகோதரன். சொன்னேனே, நீ என் சகோதரன். ஆகவேதான் எனக்கு நீ தந்தாய்…” அவன் என்னை இழுத்தான் “வா, நான் உனக்கு முழுச்சாப்பாடு வாங்கித்தருகிறேன்”.
”இல்லை வேண்டாம். எனக்குத் தக்காளிச்சோறே போதும்“ என்றேன். “வா” என்று என்னை இழுத்துச்சென்றான். “என்னிடம் பணமிருக்கிறது. எல்லாம் உன் பணம்…” ஒர் ஓட்டலில் நுழைந்து சோறும் தீபோல எரிந்த காரக்குழம்பும் கெட்டித்தயிருமாகச் சாப்பிட்டேன். “பீடா போட்டுக்கொள்” என்றான். “போடுவதில்லை” என்றேன். “அப்படியென்றால் லட்டு சாப்பிடு” என்று வாங்கிக்கொண்டுவந்தான். பதிநான்கு ரூபாய்க்குமேல் பில் வந்ததைக் கண்டேன்.
நான் அவனிடம் விடைபெற்றேன். அவன் பத்து ரூபாயை என் கையில் வைத்து “பஸ்ஸுக்கான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படிப்போவாய்… இதை வைத்துக்கொள்” என்றான். நான் மறுக்க மறுக்க என் பையில் போட்டான். “சென்றுவா சகோதரா… என்றைக்காவது பார்ப்போம்” என்றான். நான் அவனைத் தழுவி விடைபெற்று பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
வெறும் நான்கே ரூபாயுடன் அறியாத ஊரில் அவன் அன்றிரவைக் கழிக்கப்போகிறான். ஆனால் நான் அவனுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. என் நிலைமைதான் இரக்கத்திற்குரியது. வாழ்க்கையைப்பற்றிய அவநம்பிக்கைகளில் தனிமையில் சோர்வில் சென்றுகொண்டிருந்தன என் நாட்கள். அவன் எங்கும் வெல்பவன். எப்போதும் அவனுக்கு எதுவும் குறையாது.அவனுடைய அந்த கைகளால் அவன் பல்லாயிரம்பேருக்குச் சோறூட்டுவான்.
‘ஆடிக்கொரு மழைபோதும் ஆலமரத்துக்கு’ என்று என் பாட்டி சொல்வாள். ஆலமரம் எங்கும் முளைக்கும், எப்படியும் தழைக்கும், நூறடி ஆழத்திலிருந்து நீர் கொண்டுசென்று கனிகளாக பெருகும். அதில் பல்லாயிரம் பறவைகள் வாழும். அந்த வரத்துடன் மண்ணில் விழுகிறது அதன் சிறியவிதை
[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]