கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?

1

 

 

அன்பு ஜெ,

சமயம் சார்ந்த வழிகாட்டுதல்களுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேறு.

உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோரதெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாயகாளி, பூமாகாளி, பாதாளகாளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்தத் தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.

ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சி பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ளன. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகர்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

நன்றி.

ஜெகதீஸ்வரன் நடராஜன்

***

1
பிரத்யங்காரா

 

அன்புள்ள ஜெகதீஸ்வரன்

தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல் வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.

ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா, கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]

இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.

 

1
வராஹி

 

ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.

பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?

பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.

 

1

இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?

இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.

கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.

இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.

 

index
அகோரநரசிம்மர்

 

அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?

என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.

 

1
திபெத்திய போதிசத்வர்

 

அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.

இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.

ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்

 

1
ஜெஹோவா

 

கடைசியாக இரண்டு விஷயங்கள்.

ஒன்று: ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித் தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.

அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்

அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.

இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்

அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.

இரண்டு: கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.

அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
அடுத்த கட்டுரைகனவுத்தமிழகம்