[ 3 ]
காலையில் புலரிச்சங்கோசையிலேயே எழுந்து நீராடி புதிய மரவுரியாடை அணிந்து தருமனும் பாண்டவர்களும் திரௌபதியுடன் வேள்விச்சாலைக்கு வந்தனர். வேதசாலை முழுமையாக தூய்மை செய்யப்பட்டு புதுத்தளிர்த் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கவிடப்பட்டு காத்திருந்தது. எரிகுளத்தில் பலாசமும் ஆலும் சமித்துக்களாக வைக்கப்பட்டிருந்தன. சுஃப்ர கௌசிகரின் இளமாணவனாகிய சுஷமன் அவர்களை நோக்காமல் பொருட்களை சீரமைத்துக்கொண்டிருந்தான். அவர்கள் காலைக்குளிர்காற்றில் நீராடிய ஈரம் உலர காத்து நின்றிருந்தனர். வெளியே சங்கு முழங்கியது. மித்ரன் துணையுடன் சுஃப்ர கௌசிகர் வேள்விச்சாலைக்குள் வந்தார்.
மித்ரன் சங்கை முழக்கியபடி முன்னால் வந்து எரிகுளத்தைச் சுற்றிச் சென்று நிற்க சுஃப்ர கௌசிகர் கைகூப்பியபடி வந்து தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் விழிகள் அங்கு நின்ற எவரையும் நோக்கவில்லை. பார்வையின்மை ஒளிகொண்டிருந்தது. இரு மாணவர்களும் கைகட்டி பணிந்து நிற்க அவர் “ம்” என கைகாட்டினார். சுஷமன் “அரணிக்கட்டை…” என்றான். மித்ரன் “ஆம்!” என்றபடி திரும்பி வெளியே ஓடினான். சுஃப்ர கௌசிகர் சினத்துடன் சுஷமனை நோக்க அவன் “எடுத்துவைக்கும்படி நான் சொன்னேன், ஆசிரியரே” என்றான். சினத்தால் சுஃப்ர கௌசிகரின் உடலே சிவந்துவிட்டதெனத் தோன்றியது. சீறும் மூச்சுடன் அவர் கண்களை மூடிக்கொண்டார்.
வெளியே மித்ரன் அங்குமிங்கும் ஓடும் ஒலி கேட்டது. தருமன் மெல்லிய குரலில் நகுலனிடம் “சென்று பார்” என்றார். நகுலன் ஓசையெழாது வெளியே சென்றான். நேரம் செல்லச் செல்ல சினம் தாளாமல் கட்டிப்போடப்பட்ட கரடி போல சுஃப்ர கௌசிகர் அசையத்தொடங்கினார். நகுலன் உள்ளே வந்ததும் தருமன் விழிதூக்கி வினவினார். “அந்த அரணிக்கட்டைகளில் நோய் இருப்பதனால் அவற்றை குடிலுக்குள் வைப்பதில்லை. வெளியே நின்றிருக்கும் மகிழமரத்தின் தெற்கு நோக்கிய கிளையில் மாட்டியிருப்பார்களாம். இப்போது அதை காணவில்லை. கீழே விழுந்திருக்கலாம் என்று அங்கே தேடிக்கொண்டிருக்கிறான்.”
தருமன் “போய் தேடுங்கள்” என்றார். “இல்லை மூத்தவரே, அது அங்கிருந்து எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. அதை அவனே தொலைத்திருக்கிறான். அவன் உடலசைவுமொழி அனைத்திலும் அது தெரிகிறது. நடிக்கத்தெரியாத எளிய அந்தணன்.” தருமன் “ஏன்?” என்றார். “தன் ஆசிரியர் எரியேறுதலை அவன் விரும்பவில்லை. அவன் கண்கள் கலங்கி வழிந்துகொண்டிருக்கின்றன. அவன் அழுவது இந்த அரணிக்கட்டையை தொலைத்துவிட்டதனால் அல்ல.” தருமன் “என்ன செய்வது?” என்றார். “அவனே வரட்டும். தன் நாடகத்தை அவன் முழுமைசெய்யட்டும்.”
மித்ரன் கைகூப்பியபடி கண்ணீருடன் உள்ளே வந்தான். “ம்?” என்றார் சுஃப்ர கௌசிகர். அவன் அருகே வந்து அவர் கால்களில் முகம் மண்படிய விழுந்து விம்மினான். “சொல்!” என்றார் சுஃப்ர கௌசிகர். அவன் அழுதுகொண்டே இருந்தான். “சொல், எங்கே அரணிக்கட்டைகள்?” மித்ரன் “அவற்றை வழக்கம்போல மகிழமரத்தில் மாட்டி வைத்திருந்தேன்…” என்று தலைதூக்காமலேயே சொன்னான். “அவை எங்கே?” என்றார் சுஃப்ர கௌசிகர். “அவற்றை காணவில்லை… அங்கெல்லாம் தேடினேன்.” அவர் உடல் நடுங்கியது. இருகைகளையும் கோத்து இறுக்கிக்கொண்டார். பற்கள் கடிபட தாடி அசைந்தது. பின்பு “நீ அவற்றை வீசிவிட்டாய், அல்லவா?” என்றார்.
மித்ரன் தலையை மண்ணுடன் அழுத்தியபடி படுத்திருந்தான். “எனக்கு மாற்றாக நீ எரியேறுவதாகச் சொன்னாய்… நேற்று மீண்டும் வந்து அதைச் சொல்லி மன்றாடினாய்.” மித்ரன் “ஆம், அதனால்தான். நீங்கள் எரியேற உங்கள் சாம்பலுடன் நாங்கள் செல்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை” என்றான். சுஃப்ர கௌசிகர் தன் நாவிலெழுந்த வசைச்சொல்லை அடக்கி “அதற்காக வேள்வியை நிறுத்துவதா? வேள்வியை நிறுத்துபவனுக்குரிய நரகம் எதுவெனத் தெரியுமா?” என்றார். அவன் அப்படியே கிடந்தான். அழுவதை தோள் காட்டியது. “நீ அந்தணன். வேள்வியை நிறுத்திய நீ ஊழிமுடிவுவரை நரகத்தீயில் எரிவாய்.” மித்ரன் அசைவில்லாது கிடந்தான். “இவ்வேள்வியை முழுமை செய்வதாக சொல்லளித்து வந்தவன் நான். மூன்று முதற்தெய்வங்களும் வந்து ஏழுலகை அளித்தாலும் அதிலிருந்து நான் விலகப்போவதில்லை.”
அவன் எழுந்து கண்ணீரைத் துடைத்து “அதை நான் அறிவேன். இதை நான் ஏன் செய்தேன் என்று என்னால் இப்போது எண்ணக்கூட முடியவில்லை. புலரியில் பின்கட்டுக்குச் சென்றபோது அரணிக்கட்டையை பார்த்தேன். அப்போது தோன்றிய உணர்வெழுச்சியில் அதை எடுத்து வீசிவிட்டேன். அதன்பின் தோன்றியது, உங்களை என்னால் தடுக்கமுடியாதென்று. ஆனால் அந்த அரணிக்கட்டை திரும்பக் கிடைக்கும்வரை நீங்கள் இருப்பீர்கள். ஆகவே நன்று செய்ததாகவே உணர்கிறேன்” என்றான். சுஃப்ர கௌசிகர் “அதற்காக வேள்வியை நிறுத்துவதா? நீ அடையப்போவதென்ன என்று அறிவாயா?” என்றார்.
“ஆம், அறிவேன். அவ்வுலகில் நரகம். இவ்வுலகில் என் குடிக்கு தீராப்பழி. ஆனால் உங்கள் தீச்சொல்லைவிட அவை பெரியவை அல்ல. அவையனைத்தும் என் மேல் விழட்டும். நான் செய்ததற்கு வருந்தவில்லை. அவ்வாறு தோன்றியபின் அஞ்சி விலக்கி பின் நீங்கள் எரிபுகுவதைக் கண்டு நின்றிருப்பதைவிட அது மேல்.” அவன் பெருமூச்சுடன் தன்னை மேலும் இறுக்கிக்கொண்டான். “நான் சித்தமாக இருக்கிறேன். உங்கள் சொற்களை என் மேல் பெய்யலாம். இனி உங்களை விழிநோக்கவும் தகுதியற்றவன் என அகற்றலாம். என் நெஞ்சில் உங்கள் பாதங்களுடன் இக்காட்டில் உங்களுக்கு முடிந்தவரை அண்மையில் எங்கேனும் இருந்துகொண்டிருப்பேன். நீங்கள் எரிபுகும் அன்றே நானும் எரிசூடுவேன்.”
அவர் தலைகுனிந்து கண்மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். இறுகி மடிந்திருந்த விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன. நிமிர்ந்து “எந்நிலையிலும் உன்மேல் தீச்சொல்லிட என்னால் இயலாது. இது என் வாழ்த்து. நீ நூறாண்டு வாழ்வாய். பெருவைதிகனாக புகழ்பெறுவாய். செல்வமும், நற்குடியும், இறுதியில் கான்புகலும், கனிந்தபின் வீடுபேறும் உனக்கு அமையும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். “இவ்வேள்வி நிறைவுறுமென தெளிவாக உணர்கிறேன். நான் எரிபுகுந்து நிறைவுகொள்வேன். என் சாம்பலுடன் நீங்கள் அவந்திக்கு மீளவேண்டுமென ஆசிரியனாக நான் ஆணையிடுகிறேன்.” மித்ரன் கைகளைக் கூப்பி கண்ணீர் வழிய உதடுகள் துடிக்க தலைகுனிந்து மண்டியிட்டிருந்தான். சுஷமன் கைகூப்பி அழுதுகொண்டிருந்தான்.
“வேள்விக்காவலராக பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி வந்து நின்றிருக்கிறார். ஆம், இவ்வெரி மரவுரி சூடி நின்றிருக்கும் இவரையே அவ்வாறு காட்டுகிறது. அவரும் இளையோரும் எனக்கு அந்த அரணிக்கட்டையை மீட்டுக் கொண்டுவந்து அளிப்பார்கள்.” தருமன் முன்னால் சென்று குனிந்து வாய்பொத்தி “ஆணை, வைதிகரே!” என்றார். “எத்திசைக்குச் சென்றாலும் எங்கிருந்தேனும் அந்த அரணிக்கட்டைகளுடன் இங்கு வருக! அதுவரை நான் இங்கேயே இருப்பேன். இப்பீடத்திலமர்ந்தபின் இனி எரிதான். எழுந்திருப்பதென்பதில்லை” என்றார் சுஃப்ர கௌசிகர். தருமன் கைகூப்பி “அவ்வாறே” என்றபின் திரும்பி தம்பியரை நோக்கிவிட்டு வெளியே சென்றார்.
நால்வரும் அவரை தொடர்ந்தனர். தருமன் “அரசி இங்கிருக்கட்டும். நாம் ஐவரும் சென்று அதைத் தேடி எடுப்போம்…” என்றார். அவர்கள் கொல்லைப்பக்கம் சென்று அங்கு நின்றிருந்த மகிழமரத்தை அணுகினர். அதைச் சுற்றி புல் வளர்ந்த நிலம் இருந்தது. அடுமனைச் சாம்பல் அப்பால் ஒரு குழியில் குவிக்கப்பட்டிருந்தது. நிலத்தை ஒருமுறை விழிகளால் சுற்றி நோக்கிய அர்ஜுனன் “அரணிக்கட்டைகள் இங்கில்லை, மித்ரன் அதைச் சுழற்றி வீசியதாக சொன்னான். அவை எறிதொலைவுக்கு அப்பால் சென்றிருக்க முடியாது. ஆனால் இங்கு அவை இல்லை என்பதனால் பிறிதொன்று நிகழ்ந்துள்ளது. மித்ரன் அதை சொல்வான் என நான் நினைக்கவில்லை” என்றான்.
அர்ஜுனன் மகிழ மரத்தடியில் இருந்து சாம்பல்குவை வரை சென்று நின்றான். இடையில் கைவைத்து தரையை கூர்ந்து நோக்கியபடி சென்று நிமிர்ந்து “அந்த அரணிக்கட்டை ஒரு கலைமானின் கவர்கொம்பில் மாட்டப்பட்டுள்ளது” என்றான். தருமன் நோக்க “அதன் காலடித்தடங்கள் இவை. அது இங்கே சாம்பல் உண்ணும்பொருட்டு வந்திருக்கிறது. கலைமான்கள் அப்படி வரும் வழக்கம் உண்டு. இன்று காலை இந்த மான் மட்டுமே வந்திருக்கிறது. தூக்கி வீசப்பட்ட அரணிக்கட்டை அதன் கொம்பில் விழுந்திருக்கலாம். இதோ இங்கிருந்து அது அஞ்சி விலகி ஓடியிருக்கிறது” என்றான். “ஒரே தாவலில் இத்தனை தொலைவு சென்றிருக்கிறது என்பதிலிருந்து அது அஞ்சிப் பதறியிருப்பதை உய்த்துணரலாம்.”
அவர்கள் அனைவரும் உடனே அங்கு நிகழ்ந்ததை அகவிழியால் கண்டனர். தருமன் “ஆயினும் அது ஒரு உய்த்தறிதல் மட்டுமே. உறுதியெனக் கூற இயலாதல்லவா?” என்றார். பீமன் விரைவாக மரத்திலேறி உச்சிக்கிளைக்குச் சென்று “ஆம் மூத்தவரே, அந்த மான் அதோ மலைச்சரிவின் அருகே பாறைமேல் நின்றிருக்கிறது. அதன் கொம்பில் அரணிக்கட்டைகளையும் காண்கிறேன். இருகட்டைகளையும் இணைக்கும் சரடு அதன் கொம்புக்கிளையில் நன்றாகவே சுற்றியிருக்கிறது” என்றான். “கிளம்புக!” என்றார் தருமன். “இளையோனே, அரணிக்கட்டைகளை ஏந்தியமையால் அந்த மான் அந்தணனுக்கு நிகராக ஆகிவிட்டது. அதை கொல்லலாகாது. அது புண்படவும்கூடாது. உயிருடன் பிடிக்கவேண்டும், அதற்கு நோகாது அரணிக்கட்டைகளை கைப்பற்றவேண்டும்” என்றார்.
அர்ஜுனன் தலைவணங்கி நாணலம்புகளை அள்ளிக்கொண்டு தன் மூங்கில் வில்லுடன் முன்னால் சென்றான். தொடர்ந்து மூவரும் ஓட பீமன் மரக்கிளைகள் வழியாக அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருக்கையிலேயே கால்கள் பட்டு உருண்ட கற்கள் சென்று விழுந்த ஒலியில் மான் உடலதிர்ந்து செவிகளைத் திருப்பியது. இன்னொருமுறை அதிர்ந்தபின் துள்ளி புற்பரப்புக்கு அப்பால் சென்றது. பிறிதொருமுறை துள்ளி பாறையொன்றில் ஏறி மறுபக்கம் சென்று மறைந்தது. “செல்வோம்… அது எங்கு ஓடினாலும் செல்லும் தடத்தை விடாதிருக்கமுடியாது… அது களைப்புற்றே ஆகவேண்டும்” என்றான் அர்ஜுனன்.
பாறையுருளைகள் அவர்களுடன் சேர்ந்து ஓசையிட்டபடி உருண்டு கீழிறங்க அவர்கள் பாய்ந்து அந்த மலைச்சரிவின் எல்லையாக அமைந்த சிறிய ஓடையை அடைந்தனர். கந்தகநீரின் மஞ்சள் தடங்கள் விளிம்பாகப் படிந்த ஓடை நீரோசையுடன் பாறைகளில் முட்டிச்சுழித்து சிதறி வளைந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. ஓடைக்கு அப்பால் உருளைப்பாறைகள் மேலிருந்து புரண்டுவந்து சிதறிப்பரவிய மலைச்சரிவு வெண்ணிறமான கந்தக மண்ணுடன் வளைந்து மேலேறிச்சென்று மலையென எழுந்தது. அதன் புழுதிப்பரப்பில் மானின் கூரிய இரட்டைக்குளம்புத்தடம் சென்றிருந்தது. பீமனும் இறங்கி அவர்களுடன் வந்தான். பன்றிப்பாறைகள் வழியாகவும் கூரிய முட்களுடன் நின்ற குட்டைப்புதர்களினூடாகவும் அவர்கள் சென்றனர்.
பாறைப்பரப்பில் குளம்புத்தடம் மறைந்தது. பீமன் குப்புற விழுந்து முகர்ந்து “இவ்வழி” என்றபின் தொடர்ந்து சென்றான். அவர்கள் தொடர்ந்து ஓடினர். அர்ஜுனன் பாறைமேலிருந்து பாறைக்கு விட்டில்போல தாவிதாவிச் சென்றான். “இந்தப் பாறைக்கூட்டங்கள் நடுவே வாழும் மான் அது. பிற மான்களைவிட இருமடங்கு விரைவை கற்றுக்கொண்டிருக்கிறது” என்றான் பீமன். தொலைவில் மீண்டும் மானின் குளம்புச்சரடு தெரியலாயிற்று. அதோ என கைகாட்டிவிட்டு அர்ஜுனன் பாய்ந்துசெல்ல அவர்கள் தொடர்ந்தோடினர். மிக அப்பால் ஒரு பாறைமேல் மானின் தலை எழுந்தது. செவிகோட்டி அவர்களை அது நோக்கியது. இயல்பாக அர்ஜுனன் அம்பை நாட “விஜயா, வேண்டாம்!” என்றார் தருமன்.
மான் மீண்டும் மறைந்தது. மலைச்சரிவில் அவர்கள் தொற்றியும் பாய்ந்தும் ஏறிச்சென்றனர். அவர்கள் கால்வைத்த பாறைகள் இளகி உருண்டு கீழே சென்று அந்த ஓடையில் நீர்தெறிக்க விழுந்தன. ஒன்றுடன் ஒன்று முட்டி ஒலியெழுப்பின. அவர்களின் கால்கள் பதிந்த குழிகளில் இருந்து வெண்ணிறமான மெல்லிய கந்தகப்புகை எழுந்தது. பல பாறைகளின் அடியிலிருந்து உலைமூடிபோல கந்தகப்புகை சீறிக்கொண்டிருந்தது. மேலே பெரும்பாறை ஒன்றின்மேல் ஏறிய அர்ஜுனன் “அது நெடுந்தொலைவு சென்றுவிட்டது” என்றான். பீமன் “அது களைத்தே ஆகவேண்டும்” என்றான். தருமன் “செல்வோம். அதைக் கொள்ளாமல் நாம் திரும்புவதில்லை” என்றார்.
மேலேறிச் சென்றபோது மலைச்சரிவு வெண்மணல் பரவிய நிலவெளிபோல ஆகியது. நூற்றுக்கணக்கான வெண்ணிற ஆவித்துளைகள் நாகமூக்குகள் போல சீறிக்கொண்டிருந்தன. நடுவே கரிய உருளைப்பாறைகள் நின்றிருந்தன. தொலைவளைவு வரை மான்குளம்புத்தடம் இருபுரிக் கயிறுபோல சென்றிருந்தது.
[ 4 ]
களைத்து மூச்சிரைக்க ஐவரும் ஒரு பாறைநிழலை அடைந்தனர். அதற்குமுன் அத்தகைய உயிரை தவிக்கச்செய்யும் விடாயை தருமன் அறிந்ததில்லை. உடலில் இருந்து அத்தனை நீரும் ஆவியாகிச் சென்றுவிட்டதைப்போல. வியர்வை குளிர்ந்து உலர்ந்து மேலும் வியர்வை எழாமலாகி தோல் சுருங்கி எரியத்தொடங்கியது. காதுமடல்களும் மூக்குக்குழாய்களும் உதடுகளும் விரலிடுக்குகளும் அனல்பட்டதுபோல காந்தின. விழுவதுபோல நிழலில் அமர்ந்த தருமன் “இளையோனே, நீரில்லாது இனி ஒரு அடியும் என்னால் எடுத்துவைக்க முடியாது” என்றார். “கந்தகநிலம். காற்றும் கந்தகம் கலந்துள்ளது” என்றான் நகுலன்.
பீமன் பாறைமேல் தொற்றி மேலேறிச் சென்று உச்சிக்குவை மேல் நின்று நான்குபக்கமும் நோக்கியபின் திரும்பிவந்தான். “மூத்தவரே, அங்கே வடகிழக்காகச் சென்றால் ஒரு பாறைச்சுனை தெரிகிறது. நீலநீர் உள்ளது” என்றான். “அங்குவரை செல்ல என்னால் இயலாது. நீயே சென்று நீர் கொண்டுவா!” என்றார் தருமன். “ஆம் மூத்தவரே, அனைவரும் களைத்திருக்கிறோம்” என்றான் நகுலன். பீமன் “இங்கிருங்கள். நான் நீருடன் வருகிறேன்” என பாறைகள் மேல் தாவிச்சென்று மறைந்தான். “நீர் என்னும் சொல்லே இன்னும் மூன்று நாழிகை உயிர்தங்கப் போதுமானது” என்றான் நகுலன்.
“அந்த மான் இந்த கந்தகநிலத்தில் பிறந்து வளர்ந்தது. அதன் குருதியிலும் கந்தகம் நிறைந்திருக்கும்” என்றான் அர்ஜுனன். “ஆகவேதான் அது சாம்பலுண்ண அங்கு வருகிறது. அது களைப்பறியவில்லை. இந்நிலத்தின் அனைத்துக் கரவுப்பாதைகளையும் அது நன்கறிந்திருக்கிறது.” அவர்கள் அந்நிலத்தை நோக்கியபடி சோர்ந்து கிடந்தனர். பாலைநிலமா வெண்களரா என்று தெரியாத நிலம். ஆங்காங்கே பச்சைமுள்ளெலிகள் முட்பன்றிகள் உடல்குவித்து அமர்ந்திருப்பதுபோல சிறிய புதர்கள். மரங்களே இல்லை. சீறும் கந்தகத்துளைகள் சிலவற்றிலிருந்து நீர் ஊறி வழிந்து ஓடைகளாக ஓடி இறங்கியது. அந்த ஓடைகளின் விளிம்பில் வெண்களிமண் படிந்து இறுகி பளிங்குத்தடமென ஆகியிருந்தது.
வெண்நிலம் மீது விழுந்த வெயில் வெம்மை மிகுந்திருந்தது. அலையலையாகச் சூழ்ந்து அது பார்வைக்கு முன் திரையிட நோக்குந்தோறும் விழிநீர் வழிந்தது. மூச்சு நிறைந்த நெஞ்சக்குவையே அனல்கொண்டது. காறித்துப்பிய எச்சிலிலும் கந்தகச்சுவை இருந்தது. “அழுகிய ஊன் நாற்றம்” என்றார் தருமன். “மண்ணுக்குள் வாழும் அனல்வடிவான விராடபுருஷனின் புண்ணின் சலம் இது என்று சொல்வார்கள்.” நகுலன் தலையசைத்தான். “அவன் உடல்திறந்து அனல் பொங்கி எழுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். கந்தமாதன மலைக்குமேல் நெருப்பு ஆயிரம் சிறகுகளுடன் எழுந்திருக்கிறது. நீரென நெருப்பே ஓடி மலைச்சரிவுகளைத் தழுவி அருவியாகியிருக்கிறது. மண்ணுறையும் விராடபுருஷன் விண்ணை நோக்க எழும்தருணம் அதுவென்பதனால் மலை வெண்கொற்றக்குடை சூடியிருக்கும் என்கிறது பராசரரின் புராண மாலிகை.”
சகதேவன் துயின்றுவிட்டான். நகுலன் அவனை நோக்கி “மிகவும் களைத்துவிட்டான், மூத்தவரே. கந்தகமலையில் இத்தனை உயரம் ஏறுவதென்பது அவன் உடலுக்கு ஏற்றதல்ல” என்றான். தருமன் “நாம் எவருமே இத்தனை தொலைவுக்கு ஏறியதில்லை. விஜயனும்கூட களைத்திருக்கிறான்” என்றார். நகுலனும் சற்றுநேரத்தில் துயில்கொண்டான். அவர்களை நோக்கிக்கொண்டிருந்தபோது தருமன் கண்களும் சொக்கின. வெண்ணிறமான நிலம் கண்ணிமைகளுக்குள் அலையடித்தது. அது ஆயிரக்கணக்கான நாரைகளாக மாறி வானிலெழுந்தது. விழித்துக்கொண்டபோது தெரிந்தது, அந்த நாரையிறகிலிருந்தது அந்நிலத்தின் மணம்தான்.
“இளையோனே” என்றார் தருமன். அர்ஜுனன் “மூத்தவரே” என திரும்பினான். “நெடுநேரமாகிறது. மந்தன் இன்னும் வரவில்லை.” அர்ஜுனன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். ஏதேனும் இடர் நிகழ்ந்திருக்கலாம். நான் சென்று பார்த்துவிட்டு நீருடன் வருகிறேன். நீங்கள் இங்கிருங்கள்” என்று எழுந்தான். “நாம் சேர்ந்து செல்வோமே” என்றார் தருமன். “இளையோர் களைத்திருக்கிறார்கள்… நான் சென்று வருகிறேன்” என்றான் அர்ஜுனன். “விஜயா, நான் அஞ்சுகிறேன். ஏனென்று தெரியவில்லை, நெஞ்சு பதைக்கிறது” என்றார் தருமன். “என்ன கனவு கண்டீர்கள்?” என்றான் அர்ஜுனன். “இந்த களர்நிலத்திலிருந்து வந்த நாரை அது.” அர்ஜுனன் “நானும் அதையே நினைத்தேன். அவ்விறகிலிருந்த எரிமணம்” என்றான்.
“அது நம்மை இங்கு இட்டுவந்திருக்கிறது. வெண்குடைசூடி இதற்கு அப்பால் நின்றுள்ளது கந்தமாதனம்” என்றார் தருமன். “அனல்சிறகுகளுடன் எழும் பறவை அது என்கின்றது புராணமாலிகை.” அர்ஜுனன் “நாம் ஊழை நம்பி கானுறைபவர்கள். எதுவரினும் நம் திறனையும் மூதாதையர் அருளையும் நம்பி எதிர்கொள்வோம்” என்றான். வில்லம்புடன் வெளியே சென்று நிழலசையும் இயல்பான விரைவுடன் பாறைகள் மேல் மறைந்தான். அவன் தோற்றம் மறைந்தபின்னரும் மயங்கிய விழிகளில் மயக்குரு எஞ்சியிருந்தது.
மீண்டும் தருமன் துயில்மயங்கினார். அதில் அந்த நாரையை அருகே நோக்கினார். அது தன் கழுத்தில் அரணிக்கட்டைகளை மாட்டியிருந்தது. “நான் இங்கிருந்து எரிவிதைகளைச் சுமந்து சென்றேன். மாளவத்தின் காடுகளில் விழுந்தது என் எச்சமே” என்றது. “அது முளைத்து அங்கே பலிகொள்ளத் தொடங்கியது. என்னை நிறைவுசெய்யவே சுஃப்ர கௌசிகர் இங்கு வந்திருக்கிறார்.” சிறகடித்து எழுந்து பறந்து அகன்றது. வானமெங்கும் வெண்ணிற நாரைக்கூட்டம். நாரையாலான முகில்கள். அவர் “ஏன்?” என்றார். “நான் பலிகொண்டு முடிக்கவில்லை. ஆகவே வேள்வி நிறைவுறவேண்டியதில்லை” என்றது அவர் அருகே அமர்ந்திருந்த இன்னொரு நாரை. அதன் விழிகள் நாகங்களுக்குரியவையாக இருந்தன.
அவர் விழித்துக்கொண்டபோது உடலையே அசைக்கமுடியவில்லை. கண்ணீர் வழிந்து இரு பக்கங்களிலும் ஓடி உலர்ந்திருந்தது. “இளையோனே” என நகுலனை தட்டினார். இருவரும் உடனே எழுந்துகொண்டனர். நகுலன் “கனவு” என்றான். “என்ன?” என்றார் தருமன். “உங்களை ஒரு பெரும்பறவை வந்து தூக்கிச்சென்றது. செந்நிறமான தழல்சிறகுள்ள பெரும்பறவை. அது வெண்குடை சூடியிருந்தது.” சகதேவன் “ஆம், அதே கனவை நானும் கண்டேன். நான் என்ன என்ன என்று கேட்டேன். அறமென்பது என்ன என இவனை மெய்யுருக்கி கற்பிப்பேன் என்றது. நான் அதனிடம் சொன்னேன், நாங்கள் ஊழை நம்பி கானுறைபவர்கள். எதுவரினும் எம் திறனையும் மூதாதையர் அருளையும் நம்பி எதிர்கொள்வோம் என்று.”
“பார்த்தன் சென்றும் நெடுநேரமாகிவிட்டது. நாம் சென்று பார்ப்போம். இங்கு இப்படி அமர்ந்திருப்பதில் பயனில்லை” என்றார் தருமன். “ஆம், அதையே நானும் எண்ணினேன். நானும் நகுலனும் சென்று நோக்கி வருகிறோம். தாங்கள் இங்கு உறைக!” என்றான் சகதேவன். “உங்களை அனுப்புவதா?” என்றார் தருமன். “நாங்கள் இருவருமாகச் செல்கிறோம், மூத்தவரே. இது ஏதேனும் பொறி என்றால் அது உங்களுக்காகவே. நீங்கள் சென்று அகப்பட்டுக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் சகதேவன். “அவர்கள் இருவரும் தோளாலும் வில்லாலும் அணுகினார்கள். நாங்கள் மதியால் அணுகுகிறோம். அவர்கள் காணாததை கண்டுவிடக்கூடும். அவர்கள் அளித்த எச்சரிக்கையும் துணையுள்ளது.”
தருமன் மேலும் சொல்லெடுக்க முயல “மறுக்கவேண்டாம், மூத்தவரே! என் சொல்லை நீங்கள் மறுப்பதில்லை” என்றான் சகதேவன். “ஆம், நீ அனைத்துமறிந்தவன், இளையோனே” என்றார் தருமன். அவர்கள் இருவரும் எழுந்து தலைவணங்கி நடந்து சென்றனர். அவர்கள் செல்வதை நோக்கியபடி பாறைநிழலில் உடல் சுருக்கி தருமன் அமர்ந்திருந்தார். அவர்கள் செல்வதை முழுமையாக நோக்கக்கூட முடியாதபடி அனல்கொண்ட விழிகளின் நீர்மை மறைத்தது. வாயை சப்புக்கொட்டியபோது முற்றிலும் ஈரமில்லாமல் அது தோல்பை எனத் தோன்றியது. தொண்டையில் மணல் அடைத்திருப்பதைப்போல இருந்தது.
மீண்டும் அருகே அந்த நாரை தோன்றியது. அதன் கண்கள் மனிதநோக்கு கொண்டிருந்தன. “முன்பு காட்டில் என் தோழர்கள் இருவர் மரக்கிளையில் அமர்ந்திருந்தார்கள். இந்த நச்சுநிலத்தில் அவர்கள் உண்டு சுமந்துசென்ற நஞ்சை நிலமுதிர்த்தார்கள். அது அங்கு தவத்திலாழ்ந்திருந்த கொங்கணர் என்னும் அந்தணர்மேல் விழுந்தது. நஞ்சென உணர்ந்த அக்கணமே அவர் நிமிர்ந்து நோக்கி தன் விழிகளில் தவத்தீயை கொண்டுவந்து அவர்களை எரித்தழித்தார். ஆனால் அவர்மேல் விழுந்த நஞ்சு அவரில் முளைத்தது. தவம் அழிந்த வெறுமையில் அது கிளைவிட்டுப் பெருகியது. ஆறாச்சினமும் ஆணவமும் கொண்டவராக அவர் காடுநீங்கி நாட்டுக்குள் புகுந்தார். அவர் உடல் அருகிருப்போர் அகன்றோடும்படி கொதித்தது. விழிகள் அனலெரிந்தன.”
இரந்தபடி மிதிலைநகருக்குள் சென்றுகொண்டிருந்த கொங்கணர் அங்கே தன் நோயாளிக்கணவனுக்கு பணி செய்துகொண்டிருந்த குலமகள் ஒருத்தியின் வீட்டு முற்றத்தில் சென்று நின்று ‘அன்னம் அளிப்பாயாக!’ என மும்முறை ஆணையிட்டார். கணவனுக்கு பணி செய்துகொண்டிருந்தமையால் அவ்வழைப்பைக் கேட்கும் காதுகள் அவளுக்கு இருக்கவில்லை. அவள் நான்காம் முறை அவர் குரல் கேட்டு வெளியே வந்ததும் ‘மும்முறை என் குரலைக் கேட்காத நீ பிழைபுரிந்தவள். உன் அன்னம் நஞ்சு!’ என்று கூவிய கொங்கணர் அவளை தன் தீவிழியால் நோக்கினார். அவள் குளிர்ந்த நீர்மலர் போல் நின்றிருந்தாள்.
ஆணவம் சுருங்கி சிறுத்த கொங்கணர் ‘நீ ஆற்றும் தவமென்ன? அதை எனக்கு அளி. நான் உன் மாணவனாகிறேன்’ என்றார். ‘நான் இந்நகரின் சந்தையில் ஊன் அறுத்து விற்கும் வேடன் ஒருவனிடமிருந்தே என் தவத்தைக் கற்றேன். அவரை இங்கு தர்மவியாதர் என அழைக்கிறார்கள்’ என்றாள். கொங்கணர் சந்தையை அடைந்து அங்கே இளங்கன்றின் கழுத்தை முறுக்கித்திருப்பி கத்தியை ஓங்கிக்கொண்டிருந்த தர்மவியாதரின் முன் சென்று நின்றார். கைகளைக் கூப்பியபடி ‘எனக்கு தவமென்பது என்ன என்று உரையுங்கள்’ என்று கோரினார்.
‘இந்தக் கன்றின் கால்களைப் பிடி’ என்றார் தர்மவியாதர். ‘இவ்விழிசெயலைச் செய்தால் நான் எப்படி மீட்படைய முடியும்?’ என்றார் கொங்கணர். ‘என் மாணவன் நீ என்றால் இது நீ செய்யும் பணிவிடை’ என்றார் தர்மவியாதர். கன்றின் கால்களை பற்றிக்கொண்டார் கொங்கணர். அதன் குரல்வளையைக் கிழித்து குருதிப்பெருக்கைப் பீய்ச்சிவிட்டு தோலை உரித்து அகற்றி துண்டுபோட்டு விற்பனைக்காகப் பரப்பிவிட்டு தர்மவியாதர் முதல் மெய்மையை சொன்னார் ‘கடமை எந்நிலையிலும் இழிவாவதில்லை. முழுமையாக தன்னை அளித்துச் செய்யப்படும் கடமையே தவம்.’
‘இக்கன்றை நான் கொல்லவில்லை. ஏனென்றால் இதன்மேல் நான் வஞ்சமோ சினமோ கொள்ளவில்லை. இதைக் கொல்வதில் நான் மகிழவுமில்லை. இது பிரம்மவடிவம் என நான் அறிந்திருக்கிறேன். மைந்துக்கு முலையூட்டும் அன்னையும் நானும் ஒரே உளநிலையில் இருக்கிறோம்’ என்றார் தர்மவியாதர். ‘என்னுடன் இரு. என்று உன் உள்ளமும் அவ்வாறே உணர்கிறதோ அன்று நீ தவம் புரியலானாய்.’ அங்கே ஏழாண்டுகாலம் தர்மவியாதரின் மாணவராக இருந்தார் கொங்கணர். அவர் சொன்னவற்றை எல்லாம் நூலாக யாத்தார். ஒருநாள் அவரே உணர்ந்தார், தன் உள்ளம் கனிந்திருப்பதை. துண்டுகளாக வெள்ளாடு ஒன்றை வெட்டிக்கொண்டிருந்தபோது விழிநீர் பெருகி சொட்டியது.
‘சொல்க!’ என்றார் தர்மவியாதர். ‘ஆசிரியரே, நான் எரித்தழிந்த அந்தப் பறவைகளை மீட்டு உயிரளிப்பதென்றால் எத்தனை தவம் வேண்டும் எனக்கு?’ என்றார் கொங்கணர். ‘வடக்கே செல்க! அங்கே கந்தமாதன மலையின் அடியில் உள்ளது யக்ஷவனம். அங்குள்ள சுனையின் கரையிலமர்ந்து தவம் செய்க! நீ அனைத்தையும் மீட்டுருவாக்குவாய். மீள்வாய்’ என்றார் ஆசிரியர். கொங்கணர் வந்து இங்குள்ள பகசரோவரம் என்னும் பொய்கையின் கரையில் அமர்ந்து தவம் செய்தார். அந்தப் பொய்கையைச் சூழ்ந்திருந்த கந்தகச்சேற்றில் புதைந்துகிடந்த அத்தனை நாரைமுட்டைகளும் விரிந்தன. ஆயிரக்கணக்கான நாரைகள் சிறகுகொண்டு எழுந்தன. அவர் அவற்றைக் கண்டு நிறைந்து விண்புகுந்தார்.
தருமன் விழித்துக்கொண்டபோது பொழுது சாயத்தொடங்கியிருந்தது. பாறைநிழல்கள் உருகிவழிந்து நீண்டிருந்தன. வானம் முகில்கள் அற்று நீலமாக விரிந்திருந்தது. எழுந்தபோது தலைசுற்றி அவர் பின்னால் சரிந்து விழுந்தார். பாறையைப் பற்றியபடி நின்றார். நாவால் உலர்ந்த வாயை மீண்டும் மீண்டும் நக்கிக்கொண்டார். கண்களை மூடி சற்றுநேரம் நின்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். ஒவ்வொன்றாக நினைத்து எடுத்து கனவுக்கும் நினைவுகளுக்கும் இடையே துலாநிறுத்தி நனவை சமைத்தெடுத்தார். பின்பு நீள்மூச்சுடன் கிளம்பி அவர்கள் சென்ற அத்திசை நோக்கி சென்றார்.