சார்.
“அத்தனையும் பைத்தியங்கள்” படித்துவிட்டு தனியா ஸ்டாஃப் ரூமில் கண்ணில் கண்ணீர் வழிய சிரிச்சுட்டு இருந்தேன்
லிக்கர் லேது, உமன் லேதுன்னா பின்ன எதுக்குதான் அங்கே போனீங்கன்னு அவர் நினைக்கமாட்டாரா பின்ன? வரவங்க எல்லாரும் செய்யறதை பண்னாதவங்க மெண்டலுதான்
சமதானி வந்து நடுங்கிகொ|ண்டே கவனித்த இலக்கிய பூசலைப்போலவே நீங்கள் வேறு எங்கேயோ ஒரு மலைப்பிரதேத்தில் நடத்தி, அங்கிருந்த தேனீர்க்கடையையே மதியம் அடைத்துவிட்டு கிளம்பினதை எழுதி இருந்தீர்கள் அதுவும் ஞாபகம் வந்தது
உமன் லேது, குடி லேது நக்சலைட்டும் லேது, பின்ன எதுக்காக சண்டைன்னு அவருக்கு எத்தனை குழப்பமாயிருந்திருக்கும்
மழைத்தோகை வருடிச்செல்ல நதிச்சருமம் புல்லரித்தது– இது மிக மிக அழ்காக இருக்கு சார்
3 மணி நேரம் படகைத்தள்ளி கிளப்பினப்புறமும் அந்திரிக்கு மெண்டலுவேதானா எல்லாரும்?
இறுதியில் சமதானியை போலவே எனக்கும் கண்கள் கலங்கியது. இன்று பந்த் எனவே மாணவிகள் இல்லை தனியே படித்து சிரித்துக்கொண்டிருந்தேன் எதிர்பாராமல் துறைத்தலைவர் எட்டிப்பார்க்கையிலும் சிரிப்பே!!
என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? வேறேன்ன தேவிக்கு மெண்டலுதான்
ஒரு நல்ல மகிழ்வான நாளைத்தந்தீர்கள்
”அந்திரிக்கு வந்தனுமு” சார்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெயமோகன் சார்!
அருமையான அனுபவம்!! எங்களுக்கும்தான். நானும் உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது. சில நேரங்களில் இது கதையா, கட்டுரையா அல்லது நிஜமாகவே அனுபவம்தானா என்ற சந்தேகம் எழுந்தது.
ஜெகெ வின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் நாவலும் ஞாபகம் வந்தது. அதில் ஹென்றி ஆற்றில் குளிக்கும்போது சோப்பை நழுவ விட்டு,,,’சோப்பெங்கப்பா…சோப்பெங்கப்பா” என்று அனைவரும் ஆடி மகிழ்வார்கள்…அந்தரிகி மெண்டலு!!! நானும் மெண்டலானேன்!!!
அன்புடன்
இளம்பரிதி
***
அன்புள்ள ஜெ
அந்தரிகி மெண்டலு வாசித்து சிரித்தேன். ஆனால் அதன்பிறகுதான் அதிலிருந்த சீரியஸ்நெஸ் புரிந்தது. நம் சாதாரண மக்களுக்கு அவர்களின் தலைக்குமெல் அறிவுலகம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அவர்களுக்குத்தெரிந்ததெல்லாம் குடி கூத்து கும்மாளம் என்று ஓர் உலகம். ஆன்மீகம் சோசியம் என்றும் ஒரு உலகம். நம் கவிஞர் பத்துப்பேர் போயிருந்தால் சமதானி சமாதானமாகியிருப்பார். குடித்து கும்மாளமிட்டு அவரையே வெறுக்கச்செய்துவிட்டு வந்திருப்பார்கள்
முன்னாடியே வாசித்திருக்கிறேன். அந்தப்படகத்தள்ளும் படத்தை போட்டிருக்கலாம்
ஜெயராமன்
***