[ 9 ]
நூறு கிளைகளும் ஆயிரம் விழுதுகளும் கொண்டு தனிமரமே காடென்றான மைத்ரி என்னும் ஆலமரத்தடியில் அமைந்த சிறுகொட்டகையில் திசையாடை அணிந்த சமணப்படிவர் தன் முன் அமர்ந்திருந்த தருமனிடம் அறவுரை சொன்னார். “அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்?”
“கேள், பசிகொண்டவன் அடுமனைப்பணி ஆற்ற முடியுமா? நாவூறுபவனால் அறுசுவை சமைக்கமுடியுமா? பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது” என்றார் அருகப்படிவர். “விழைவறுக்காது சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் சொல்பவனின் விழைவால் வளைந்தது. விழைவுகொண்டவனின் செயல்களனைத்தும் அவன் விழைவால் திசைமாற்றப்பட்டவை. விழைவுகொண்டவனின் அறிவென்பது அவ்விழைவு கொண்ட ஆயிரம் உருவங்கள் மட்டுமே.”
“மானுடருக்குரிய விழைவுகளில் உயிர்ப்பற்று தெய்வங்களால் பொறுத்தருளப்படுகிறது. அதன்பின்னர் மைந்தருக்கான விருப்பம் அவர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் அவையும்கூட உண்மையை மறைப்பவை, உள்ளத்தை திரிப்பவை. முற்றிலும் விழைவை வென்றவனுக்குரியதே முற்றறிவென்று அறிக!” தருமன் அவர் சொற்களைக் கேட்டபடி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். அடுமனைப்புகை கலந்த காற்று மழைநீர்த்துளிகளுடன் வீசியது. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து பறவைகள் மழையூறிய சிறகுகளை வீசி உலரச்செய்தபடி கிளம்பிச்செல்லும் ஒலி தலைக்குமேல் நிறைந்திருந்தது.
நூறு மைந்தரைக் கண்டு நிறைந்து முதிர்ந்து கம்பூன்றி தளர்ந்து நடந்தார் சோமகன். நூறு மைந்தரின் ஆயிரம் பெயர்மைந்தரைக் கண்டு மேலும் நிறைந்து அவர்களின் பன்னிரண்டாயிரம் மறுபெயர் மைந்தரையும் கண்டு அவர்களின் பெயர்கள்கூட தெரியாமல் முகமும் புரியாமல் ஆனார். நோய்கொண்டு உடல் நைந்து படுக்கையில் கிடந்தார். காலமும் இடமும் அறியாமலாயின. அறிந்த உறவுகள் எவரும் சூழ்ந்திருக்கவில்லை. உடலெங்கும் விடாய் நிறைந்து தவித்தது. ஆனால் வாயில் நீரூற்றப்பட்டபோதுதான் அது நீருக்கான விடாய் அல்ல என்று தெரிந்தது. குரல்வளையில் அனல் எரிந்துகொண்டே இருந்தது. நினைவுகள் முழுமையாக அழிந்தன. தன்னிலை அதன்பின் அழிந்தது. தன்னருகே கிடந்த கை எவருடையதோ எனத் தோன்றியது. அப்போது அவர் அருகே குனிந்த இளமைந்தன் ஒருவன் ‘மூதாதையே, இதோ நீர்’ என்றான்.
அவன் தன் கைகளில் இருந்த மரக்குடுவையிலிருந்து நீரை அவர் நாவில் ஊற்றினான். அந்த நீரை கண்களால் பார்க்கமுடிந்தது. நாவை அது தொடவில்லை. எம்பி எம்பி அந்த நீரை கவ்வ உளம்தவித்தாலும் உடல் உள்ளத்தை அறியவில்லை. ‘இன்னும், இன்னும்’ என்று அவர் கூவினார். அது சொல்லாகவில்லை. பின்பு நடுக்கத்துடன் அவர் அவனை அறிந்தார், அது சௌமதத்தன். ‘ஜந்து!’ என்று அவர் கூவினார். அவன் அவர் குரலைக் கேட்காத நெடுந்தொலைவில் இருந்தான். முகம் ஒளிகொண்டிருந்தது. விழிகள் வேறெங்கோ என திரும்பியிருந்தன. இத்தனை அழகனா இவன் என வியந்தார். ‘ஜந்து!’ என மீண்டும் அழைத்தார்.
ஜந்து புன்னகையுடன் மறைந்தான். நீர்ப்பாவை மீது காற்றுபடிந்ததுபோல அவன் உருவம் கலைந்ததும் அவர் மீண்டும் ‘ஜந்து’ என முனகினார். அருகே நின்றிருந்த அவர் பெயரன் சோமகன் குனிந்து அவர் இதழ்களை நோக்கி ‘எதையோ சொல்கிறார்’ என்றான். ஏவலன் அவர் இதழ்களில் காதுவைத்துக் கேட்டு ‘ஜந்து என்கிறார்’ என்றான். ‘எதை சொல்கிறார்?’ என்று சோமகன் கேட்டான். ஏவலன் மேலே நோக்கி ‘பல்லி ஏதாவது உத்தரத்தில் ஓடியிருக்கலாம்’ என்றான். ‘இங்கு எந்த உயிரும் இல்லையே?’ என்றான் அணுக்கமருத்துவன்.
அவர் மீண்டும் அதையே சொல்ல செவிகொடுத்துவிட்டு ‘ஆம், ஜந்து என்றுதான் சொல்கிறார்’ என்றான் இன்னொரு ஏவலன். ‘பொருளற்ற சொல்… அவர் தன் அழிந்துபோன இளமையில் எங்கோ இருக்கிறார். அதை நாம் இன்று இங்கிருந்து அறியமுடியாது’ என்றார் மருத்துவர். ‘அந்நிகழ்வை எப்படி உள்ளம் மீட்டெடுக்கிறது?’ என்றான் சோமகன். ‘இளவரசே, முதுபிதாமகரின் வாழ்க்கையில் எங்கோ ஏதோ உயிருடன் அவருக்கு ஓர் எதிர்கொள்ளல் நிகழ்ந்திருக்கிறது’ என்றான் ஏவலன்.
மருத்துவர் ‘அது அவ்வண்ணம் முதன்மையான செயலாக இருக்கவேண்டுமென்பதில்லை, இளவரசே. வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளம் நீர் கரையோரக்காட்சிகளை என இயல்பாகவே பதிவுசெய்துகொள்கிறது. அந்நிகழ்வுகளில் சிலவற்றில்தான் தெய்வங்கள் நுழைந்தாடுகின்றன. மிக எளிய அன்றாடச் செயலாகவும் இருக்கலாம். அந்நிகழ்வை மட்டும் நீரை பாறைப்பிளவு தேக்கிக்கொள்வதுபோல உள்ளம் காத்துக்கொள்கிறது’ என்றார். சோமகன் ‘ஜந்து என்றால் என்ன பொருள்? வியப்பாக உள்ளது’ என்றான்.
முதிய ஏவலன் ஒருவன் ‘நம் குடிக்குரிய கைவிடப்பட்ட ஆலயம் ஒன்று நகரின் தெற்குமூலையில் உள்ளது. உங்கள் தந்தையார் உயிருடனிருந்த காலம் வரை அங்கே மாதம்தோறும் கருநிலவு ஏழாம் நாளில் குருதிபலி கொடுத்து வணங்கிவந்தார். அரசகுலத்து மைந்தர் ஒருவரின் நடுகல் அது என்பார்கள். அவர் பெயரை ஜந்து என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்’ என்றான். ‘ஆம், அந்த ஆலயத்தை நானும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அதனருகே நின்ற ஆலமரம் வளர்ந்து அது வெடித்தது. சில ஆண்டுகளுக்கு முன் யானையொன்றின் கால்பட்டு இடிந்தழிந்தது. சிலை சரிந்து பாதி மண்ணில் புதைந்து அங்கே கிடக்கிறது’ என்றான் இன்னொரு ஏவலன்.
‘அந்த ஆலயத்தை சீரமைக்க பிதாமகர் விழைகிறார் போலும். அவ்வாறே செய்வோம்’ என்றான் சோமகன். முதியவரின் செவியருகே குனிந்து ‘ஆலயத்தை மீண்டும் கட்டுகிறோம். ஜந்துவின் ஆலயம் கட்டப்படும்’ என்று கூவினான். அவர் அதை கேளாத் தொலைவிலிருந்தார். எதிரே நின்றிருக்கும் ஒருவரை நிலைகுத்தி நோக்குபவர் போலிருந்தன விழிகள். ‘போதும், அழைத்துச்செல்!’ என அவர் எண்ணினார். அவ்வெண்ணம்கூட அவருக்கு வெளியே எங்கோ எழுந்ததுபோலிருந்தது. அதைக் கேட்டு அக்கணமே அருகே இருந்த நிழல் எருமையாகியது. அதன் மேல் அமர்ந்திருந்த அவன் கயிற்றுச்சுருளை வீசி ‘வருக!’ என்றான்.
நிழலெருமை மீதேற்றி எமன் அவரை அழைத்துச்சென்றான். செல்லும் வழியில் ஒளிமிக்க வானின் நடுவே நிறுத்தி புன்னகையுடன் எமன் கேட்டான் ‘அரசே, சொல்க! இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு? எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்?’ அவன் கேட்பதன் பொருளுணர்ந்து அவர் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினார். அவரை அவன் இருண்ட பாதைகள் வழியாக அழைத்துச்சென்றான். அவர் அங்கே விம்மல்களையும் அழுகுரல்களையும் கேட்டார். ‘அவை என்ன?’ என்றார். ‘உடலழிந்த விழைவுகள் அவை. உடல்காத்து இங்கு நின்றுள்ளன.’ அவர் கடந்து செல்கையில் தன் குரலையும் கேட்டார். ‘ஜந்து ஜந்து’ என்று அது அரற்றிக்கொண்டிருந்தது.
“அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவதறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!” அருகப்படிவரின் குரல் ஓய்ந்தபின்னர் நெடுநேரம் அவர் எஞ்சவிட்ட அமைதியை கேட்டுக்கொண்டு தருமன் அமர்ந்திருந்தார். பின்னர் பெருமூச்சுடன் “நான் என் நினைவறிந்த நாள் முதல் மெய்யையும் அதை பீடமெனக்கொண்ட மாறா அறத்தையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். நூல்களில், முனிவர் சொற்களில், சொல்வளர்காடுகளில்” என்றார்.
“நானறிந்த ஒவ்வொன்றையும் மேலுமறிந்த ஒன்று கடந்துசென்றதையே உணர்ந்தேன். பிருஹதாரண்யகத்தின் முழுமைக்கல்வியை சாந்தீபனி குருநிலையின் இணைவுக்கல்வி கடந்துசென்றது. அதுவே முழுமை என்றெண்ணி அங்கிருந்தவனை இவ்வடுமனைக்கு வரச்சொன்னவர் இளைய யாதவர். இங்கு வந்து என் சித்தத்தால் அறிந்ததை உடலால் மீண்டும் அறிந்தேன். சொற்கள் சருகென விழுந்து இம்மண்ணில் மட்கியபின் எஞ்சும் உப்பு என்னவென்று இங்கு அறிந்தேன். அத்தனை மெய்யறிதல்களும் ஒன்று பிறிதை நிகர்த்து ஒருமுனையென்றாகும் கணம் வரை வந்தேன். இது விடுதலை என்ற நிறைவுடன் இருந்தேன்.”
“அருகப்படிவரே, அடிகள் பணிந்து கேட்கிறேன். நான் இங்கிருந்து செல்லக்கூடும் இடமென்பதென்ன?” என்று தருமன் கேட்டார். “இங்கிருந்து இதைப்போல பிறிதொரு இடம் சென்று கடந்துசெல்ல நான் விழையவில்லை, அடிகளே. நான் சென்ற இடமே இறுதியென்றாகவேண்டும். நான் அறிந்ததே எனக்கு இறுதிவரை எஞ்சவேண்டும்.” அருகப்படிவர் அவரை நோக்கியபடி விழிநிலைத்து அமர்ந்திருந்தார். காற்று ஓடிச்செல்லும் ஓசையைக் கேட்டபடி தருமன் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார். அருகர் மீண்டும் பேசத்தொடங்கியபோது ஒரு சொல்கூட நிகழாது சித்தம் அங்கேயே நின்றிருந்ததை உணர்ந்தார்.
“அரசே, இதுவரை நீ தேடிய அறமென்பது என்ன? அது நீ இங்கு நாட்ட விழைந்த அறம். இங்கு தொடரவேண்டியதென நீ நாடிய அறம். அது அறமல்ல, உன் விழைவென்று நீ ஏன் அறியவில்லை?” என்றார். “அருகரே, நான் இவ்வுடலில் இப்பொறிகளுடன் இவ்வுள்ளத்துடன் இக்காலவெளியில் எஞ்சுவதுவரை எனக்குரிய அறத்தை மட்டும்தானே அறியமுடியும்?” என்றார் தருமன். “ஆம், நீ என்பது உன் விழைவல்ல. களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”
“நீ இங்கு அன்னமளித்து ஆணவத்தை வென்றாய். அனைத்தறிவுகளையும் நிகரெனக்கொண்டு அறியாமையை வென்றாய். ஆனால் உன் கையிலிருந்து விழைவை அறுத்து இங்கு நீ அமைந்துள்ளாய் என எண்ணுகிறாயா?” என்றார் அருகப்படிவர். “இல்லை” என்று தருமன் தலைகுனிந்தார். அருகப்படிவர் அவர் சொல்லப்போவதற்காக காத்திருந்தார். “இல்லை, உத்தமரே” என்று சொல்லி தருமன் பெருமூச்சுவிட்டார். நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் “இல்லை, நான் இதை பிறிதொருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். இல்லை” என உடைந்த குரலில் சொன்னார். அருகப்படிவர் அவரை தன் அன்னை விழிகளால் நோக்கியபடி காத்திருந்தார்.
“நான் அவளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. “நான் அவள் ஒரு சொல்லேனும் என்னிடம் கனிந்து சொல்வாள் என எதிர்பார்க்கிறேன். இக்காட்டுக்குள் நுழைகையில் என் உள்ளம் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. எரிமேல் மண்ணள்ளிப்போடுவதுபோல சொற்களைக் குவித்து அதை அணைத்தேன். அதன் வெம்மை என் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்தது. இங்கு வந்தபின் இரவுபகலென ஆற்றிய வெறிகொண்ட உழைப்பில் அது முற்றிலுமாக அணைந்தது. சென்ற மாதங்களில் ஒருகணம்கூட நான் அதை எண்ணியதில்லை.”
“ஆனால் இப்போது நீங்கள் கேட்டதும் என் உள்ளம் கொந்தளித்தெழுந்து ஆம் என்றது. ஒரு அணுவிடைகூட என் ஏக்கம் தீரவில்லை என்று உணர்ந்தேன். ஆம், அது மறைந்தவை மீளவேண்டுமென விழையும் மூடனின் துயரம் மட்டுமே. எதுவும் திரும்பாது என்னும் மாறாநெறியால் கட்டப்பட்டது இப்புவிவாழ்க்கை. ஆயினும் அதுவே விழைவு. ஒருநாள் ஒரு சொல்லால் அவள் என் தலைதொட்டால் போதும். பிறிதொன்றும் வேண்டேன்.” அச்சொற்களை பிறனாகி நின்று அவரே கேட்டு உளமுருகினார். இறுதிச்சொல் மெல்லிய கேவலுடன் வெளிவந்தது. கண்ணீர் தாடிமயிர்களுக்குள் வழிய அவர் உடல்குலுங்கி விசும்பி அழுதார்.
கேவல்களுடனும் மூச்சொலிகளுடனும் அவர் அழுதுமுடிக்கும் வரை மிக இயல்பாக அருகப்படிவர் காத்திருந்தார். நெஞ்சுலையும் நீள்மூச்சுகளுடன் அவர் மெல்ல மீண்டு அமைதியடைந்தார். ஆலமரத்துச் சருகுகள் நிலம்நோக்கி சுழன்றிறங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் கீழ்த்திசையில் முகில் திரண்டது. அங்கே மின்னல் ஒன்று கிழிபட்டுத் துடித்தணைவதை காணமுடிந்தது. களிற்றின் பிளிறல்போல இடியோசை தொலைவில் ஒலித்தடங்கியது.
“நான் என்ன செய்வது, அருகரே?” என்றார் தருமன். அவர் “அவளை அறிக! அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி” என்றார். “நான் எப்போதும் அவளை அறியவே முயல்கிறேன்” என்றார் தருமன். “தவமின்றி அறிதலில்லை” என்றார் அருகப்படிவர். “அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை. தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.”
“ஒவ்வொரு கல்விநிலையிலிருந்தும் கிளம்பும்போதே நீ அடுத்து செல்லவேண்டிய இடமென்ன என்று முடிவுசெய்திருந்தாய். அங்கு அறியக்கூடுவது என்ன என்பதையும் அறிந்திருந்தாய். அறிந்ததை அறிந்து ஆணவம் நிறைந்ததன்றி நீ எதையும் அறியவில்லை. அந்த ஏமாற்றத்தை அக்கல்விநிலைமேல் சுமத்தி அதை நீங்கினாய்” என்றார் அருகப்படிவர். “நீ அறியவேண்டிய மெய்மை உனக்கு முற்றிலும் அயலானதென்றால் உன் ஊழால் மட்டுமே அதை சென்று சேர்வாய்.” சொல் நிறைந்துவிட்டது என்பதற்காக கையால் அருட்குறி காட்டினார். தருமன் தலைவணங்கினார்.
[ 10 ]
மைத்ராயனியத்திலிருந்து கிளம்பும் எண்ணத்தை தருமன் பிரபவரிடம் சொன்னபோது அவர் ஓடையில் இடைவரை நீரில் நின்றிருந்தார். மழைக்காலம் முடிந்து இரண்டாவது இளவேனில் தொடங்கிவிட்டிருந்தது. முகில்கள் வானில் மிதந்து நின்றிருந்தாலும் எப்போதாவது மென்தூறல் சொரிவதற்கப்பால் மழையென ஆகவில்லை. காடு பசுமைகொண்டு தளிர்நிறைந்து கறைமணம் கொண்ட குளிர்காற்றை உயிர்த்தபடி சூழ்ந்திருந்தது. ஓடையின் நீர் கலங்கல் தெளிந்தாலும் சேற்றுமணத்துடன் இருந்தது.
அவரது சொற்களைக் கேட்டு நிமிர்ந்துநோக்கி “எப்போது கிளம்புகிறீர்கள்?” என்றார். “நாளை காலை கருக்கிருட்டில்” என்றார் தருமன். “நன்று!” என்றார் பிரபவர். மேலும் ஒருசொல் உரைக்காமல் நீரில் மூழ்கி எழுந்து குழல்படிவுகளை கையால் அடித்து நீர் களைந்தார். அவர் மேலும் பேசாமலிருந்ததே இயல்பானதென்று தருமனுக்குத் தோன்றியது. மேலும் சற்று நேரம் காத்திருந்தபின் அமைதியாக தலைவணங்கி அவர் தன் மரவுரிச்சுருள்களுடன் திரும்பிநடந்தார்.
நகுலன் “இம்முறை நாம் செல்வதெங்கே?” என்றான். “ஒவ்வொருமுறை நாம் கிளம்புகையிலும் நாம் செல்லவேண்டிய இடம்குறித்து எவரேனும் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.” தருமன் “இம்முறையும் அறிவுறுத்தல் உள்ளது. ஆனால் அது இடமாக அல்ல, செல்லும் வழியாக” என்றார். நகுலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு “நாம் நாளை கிளம்புவோம்” என்று சொன்னார். “மூத்தவரே, குறைந்தது நாம் எத்திசை நோக்கி திரும்பவேண்டும் என்றாவது முடிவுசெய்யவேண்டும்” என்றான் நகுலன். “நாம் நாளைவரை பொறுப்போம். இன்னும் ஓர் இரவு எஞ்சியிருக்கிறது” என்றபடி தருமன் கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டார்.
முதலில் எழுந்தவன் அர்ஜுனன். அவன் சிற்றகலை ஏற்றும் ஒலிகேட்டு நகுலனும் சகதேவனும் எழுந்துகொண்டார்கள். நகுலன் கால்களைத் தொட்டு “மூத்தவரே!” என்று அழைக்க தருமன் தன் கைகளை விரித்து நோக்கியபடி எழுந்தார். “முதற்புள் ஒலித்தது” என்றான் நகுலன். “திரௌபதியை எழுப்பு. அதற்கு மந்தனை அனுப்பு” என்றார் தருமன். நகுலன் வெளியே சென்று திண்ணையில் வெறும்தரையில் மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்த பீமனின் கால்களைத் தொட்டு உலுக்கினான். “மூத்தவரே! மூத்தவரே” என்றான். “யார்?” என்றான் பீமன். “மூத்தவரே, நாம் இப்போது கிளம்பவேண்டும். முதற்புலரி” என்றான் நகுலன்.
“நீங்கள் கிளம்புங்கள், நான் வந்து சேர்ந்துகொள்கிறேன்” என்றபடி அவன் புரண்டுபடுத்தான். “மூத்தவரே” என நகுலன் மீண்டும் உலுக்கினான். “என்ன வேண்டும் உனக்கு?” என்று சினந்தபடி பீமன் கண்களை திறந்தான். “சென்று அரசியிடம் கிளம்பும்படி சொல்லுங்கள். மூத்தவரின் ஆணை!” பீமன் “ஏன், நீ சொன்னால் என்ன? நீங்கள் கிளம்பும்போது நானும் எழுந்துகொள்கிறேன். செல்லும் வழியில் நீராடுவேன்” என்றான். “மூத்தவரே, நீங்கள் செல்லவேண்டுமென்பது மூத்தவரின் ஆணை.” பீமன் எரிச்சலுடன் எழுந்து ஆடையை சுழற்றி அணிந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருட்டுக்குள் நடந்து சென்றான்.
அவர்கள் நீராடி வரும்போது பீமன் அதே திண்ணையில் துயிலில் இருந்தான். “மந்தா!” என்று தருமன் சினத்துடன் அவன் தோளை தன் காலால் தட்டினார். “என்ன செய்கிறாய்? எழு!” பீமன் எழுந்து “அரசி கிளம்பிவிட்டாள். நீங்கள் கிளம்பும்போது நானும் உடன்வருவேன். அதுவரை துயிலலாமே என எண்ணினேன்” என்றான். தருமன் ஏதோ சொல்லவந்தபின் அதை வென்று உள்ளே சென்று ஈர ஆடைகளை அகற்றினார். நகுலன் “அவர் நேற்று துயிலவில்லை. காட்டுக்குள் இருந்தார்” என்றான். “ஏன், புதிய குரங்குக்கூட்டம் ஏதாவது வந்ததா?” என்றார் தருமன். நகுலன் புன்னகை செய்தான்.
அவர்கள் வெளிவந்தபோது நகுலன் மீண்டும் பீமனை உலுக்கி “கிளம்புகிறோம், மூத்தவரே” என்றான். அவன் எழுந்து “இத்தனை இருளில் கிளம்பி என்ன செய்யப்போகிறோம்? இது காடு. வெயிலே இருக்காது” என்றான். தருமன் பேசாமல் முன்னால் செல்ல நகுலன் “அவர் எவ்வழி செல்வது என இன்னமும் முடிவுசெய்யவில்லை” என்றான். “நன்று, எவ்வழி சென்றால் உணவு கிடைக்குமென நான் குரங்குகளிடம் கேட்டுச்சொல்கிறேன்” என்றபடி பீமன் பின்னால் வந்தான்.
அருகிருந்த குடிலில் இருந்து திரௌபதி கையில் ஒரு சிற்றகலுடன் நடந்து வந்தாள். அவள் முகம் சிறு சுடருக்குமேல் பெரியதழலெனத் தெரிந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி நின்றனர். எண்ணியிராது வந்த உளஎழுச்சியால் தருமன் நோக்கை விலக்கி உதடுகளை இறுக்கிக்கொண்டார். அவள் அருகே வந்து அந்த அகல்விளக்கை அருகே இருந்த பிறையில் வைத்தபின் அவர்களுடன் நின்றுகொண்டாள். பீமன் “விடிவெள்ளி வந்துவிட்டது, கிளம்பப்போகிறோம்” என்றான். அவள் தலையசைத்தாள்.
தருமன் கொட்டகையின் முற்றத்திற்கு வந்து நின்றார். பின்கட்டில் அடுமனையாளர்கள் துயிலெழத் தொடங்கியிருந்தனர். மெல்லிய குரலில் பேச்சொலிகளும் பாத்திரங்கள் முட்டிக்கொள்ளும் ஒலியும் கேட்டது. எங்கிருந்தாவது ஏதாவது குரல் வருமென்பதுபோல அவர் தலைகுனிந்து நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் அவரை நோக்கியபடி நிற்க அப்பால் நோக்கியபடி அர்ஜுனன் நின்றான். திரௌபதி அங்கில்லாதவள் போலிருந்தாள். பீமன் துயில் முழுக்கக் கலையாதவன் போல் தோன்றினான். மெல்லிய காற்று காட்டின் குளிருடன் வந்து அவர்களின் குழல்களை அசைத்து கடந்துசென்றது. அக்காற்றில் வந்தவைபோல நெடுந்தொலைவில் குரங்குகளின் ஒலி கேட்டது.
பின்கட்டுக்குச் சென்று பிரபவரிடம் விடைபெற்றாலென்ன என்று ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றும் தெரிந்தது. அங்கு தங்கியிருந்த நாட்களில் எப்போதும் எதையும் அவர் சொன்னதில்லை. நேர் எதிரில் மைத்ரி விழுதுக்காடுகள் சூழ வேர்களால் மண் கவ்வி கிளைகள் இருளில் துழாவிக்கொண்டிருக்க நின்றிருந்தது. அதிலிருந்த பறவைக்குலங்கள் அனைத்தும் முழுதடங்கி அமைதிகொண்டிருந்தன. அதை நோக்கிக்கொண்டிருந்தபோது அங்கு கேட்ட ஒருசொல்லும் நினைவுக்கு வரவில்லை என்பதை எண்ணி வியந்தார். அதை முதன்முதலாகக் கண்டபோது எழுந்த வியப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.
நெடுமூச்சுடன் அவர் காலெடுத்தபோது “பகா!” என்று ஓர் ஒலி கரியவானில் எழுந்தது. பெரிய பறவை ஒன்று அவர் தலைக்குமேல் மிக அண்மையில் கடந்துசென்றது. அதன் மெல்லிய காற்றசைவைக்கூட அவரால் உணரமுடிந்தது. இருளுக்குள் ஒரு வெண்ணிற இறகு மெல்லச் சுழன்று இறங்கி தரையிலமைவதை கண்டார். குனிந்து அதை எடுத்தார். அது ஒரு வெண்ணிற நாரையின் இறகு. “சாரஸப் பறவை” என்று திரும்பி சகதேவனிடம் சொன்னார். அவன் தலையசைத்தான். “எங்கோ சிறுகுளமொன்றை காக்கின்றது” என்று அவர் மீண்டும் சொன்னார். அது வந்த திசையை நோக்கியபடி ஒரு கணம் நின்றபின் “நாம் அவ்வழி செல்வோம்” என்றார்.