மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

“மீண்டும் புதியவர்களின் கதைகள்” பற்றி எழுதிய சில குறிப்புகள். மிகத் தாமதமான பதிவு என அறிவேன். இருப்பினும் இதை பகிர்வதற்கு இரு காரணங்கள் (1) என் வட்டத்தில் தமிழ் எழுத்தைப் பற்றி விவாதிக்க எவரும் இல்லை (2) எனக்கு ஆங்கிலத்தில் தான் இயல்பாகவும் துல்லியமாகவும் எழுத முடிகிறது. ஆகவே இதுவும் ஒரு பயிற்சி.

  1. பூ

நல்ல கதை. ஒரு சமூக பண்பாட்டு நிகழ்வை (கிராமத்துத் தெய்வங்களின் பின்புலம்) தனி மனிதனின் கதையோடு (கிருஷ்ணனுள் தன் தாயைக் குறித்து நடக்கும் மனப்போராட்டம்) அழகாக இணைக்கிறது.

அடுக்குகள் நிறைந்த கதை. அதனால் கடைசி வரை சுவாரஸ்யம் குறையாமல் இட்டுச் செல்கிறது.

ஆனால் ஒரு நல்ல முயற்சி அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் நின்றுவிட்டது என்று நினைக்கிறேன். சிறப்பான சிறுகதையாக மதிப்பிட எழுத்து முறையில் சில தடைகள் தோன்றியது.

இத்தகைய கதைகளில் குறியீட்டிற்கும் மிகை உணர்ச்சிக்கும் மிக மெல்லிய சரடு அளவு வித்தியாசம் மட்டுமே உள்ளது. அந்த சரடை தாண்டாமல் செல்ல இரு முக்கியமான அம்சங்கள் தேவை என்று படுகிறது.

  1. சொல்வதற்கும் உணர்த்துவதுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு abstract painting போல, வண்ணத் தீட்டல்களை மட்டும் அளித்து வாசகரின் கற்பனைக்கு இடம் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு…

”ஆனால் அப்போதுகூட அவர் உடைந்து போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய நட்டல் எலும்பு இன்னும் முறியவில்லை. ஊரே உறைந்து போன சமயத்தில் கூட அடியந்திர வேலைகளை அவரே முன் நின்று செய்தார் .ஆனால் அது முறிந்த தினம் வத்சலாவின் பதினாறாம் நாள் விசேசத்தில். அன்று வீடு முழுவதும் சுண்ணம் அடித்து அவளது அறையைச் சுத்தம் செய்தார்கள் அவளது படுக்கை முதற்கொண்டு பழகிய பொருட்கள் எல்லாம் எடுத்து ஆற்றில் விடப்பட்டன அவளது பெட்டியில் இருந்த பொருட்களைச் சுத்தம் செய்தபோதுதான் அந்தப் படம் அவர் கண்களில் பட்டது அது ஒரு பழைய படம். அவளுக்கு எப்படியோ கிடைத்திருக்கிறது அதை ஏனோ அவள் தனது பெட்டியில் வைத்திருக்கிறாள் அதை அவர் கண்டார் அவர் நட்டல் முறிந்தது அப்போதுதான்”

பெரியப்பாவின் மீது ஏற்பட்ட தாக்கம், அது எப்பொழுது நிகழ்கிறது, எப்பொழுது நிகழவில்லை என்பதை நேரடியாக விளக்கிவிடுகிறார். கேசவன் எல்லாவற்றையும் ஒப்பிப்பதை விட, கதையினூடாக உணர்த்தியிருக்கலாம்.

  1. குறியீடுகள் மீது நம்பிக்கை. “ஏனோ அந்த மணம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று தோன்றியது……..” “அதை ஏனோ அவள் தனது பெட்டியில் வைத்திருக்கிறாள் அதை அவர் கண்டார் அவர் நட்டல் முறிந்தது அப்போதுதான்” “ஏனோ கண்ணீர் கசிய அவன் அதை அங்கிருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்”. மிகச்சிறிய விஷயம் தான். ஆனால் ஆசிரியரே கதாபாதிரங்களுக்கு அப்பால் நின்று பேசும்பொழுது அது கதைக்குள் நுழைய தடையாக விளங்குகிறது.

”நான் – கிருஷ்ணன்” என்று மாரி மாரி சொல்வது கதைக்கு பெரிதாக எதையும் அளிக்கவில்லை. அதை தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் மாற்றி அமைத்தால் சிறப்பான் சிறுகதையாக அமையக்கூடும். அல்லது, எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றால் சிறுகதை இதற்கு பொருத்தமான வடிவம் இல்லை என்பது என் கருத்து.

 

  1. அப்பாவின் குரல்

மிகவும் பிடித்தது. மிகை உணர்ச்சிகள் இல்லாமல் நமக்குள் நடக்கும் போராட்டத்தை சித்தரித்திருக்கிறார் ஜெயன்.

பெற்றோர்களிடமிருக்கும் கசப்பான குணங்கள் நம்மை பாதிப்பது இயல்பு. குறிப்பாக சமமின்மையை விளைவிக்கும் குணங்கள்.

இதை அறிந்தும் நம் நடத்தையில் அதே குணங்கள் புகுந்து விடுகின்றன. அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே ‘நம்மை’ தீர்மானிக்கின்றது. ’அப்பாவும் இப்படித்தான் செய்தார்’ என்று நியாயப்படுத்தினால் அது ஒரு வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியின் விளிம்பில் நின்று மீண்டு வருகிறான் விஜயா.

கதையில் மற்றொரு போராட்டமும் நடக்கிறது. பெற்றோர்களை நற்குணங்கள் உள்ளவர்களாக மட்டுமே நினைக்க மனம் விழைகிறது. தீமையைக் கண்டு கொண்டாலும் அதை மூடி மறைத்து மழுப்புவது எளிது. உண்மையின் வெளிச்சத்தில் அறிந்து உணர்ந்து எதிர்நோக்கும் தருணம் விடுவிப்பாக இருக்கக் கூடுமே ஒழிய வெற்றியாக இருக்கலாகாது.

இந்த இரண்டு புள்ளிகளையும் மிக நுட்பமாக சித்தரித்தமைக்கு ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

“எளவு இந்த எலக்கியம் மயிரு மத்ததுணி படிக்கலண்ணா இந்த தேவடியாள நாலு சவுட்டு சவுட்டி ஏசிட்டு நிம்மதியாவது இருக்கலாம்”. இந்த வரி மட்டும் சற்று ஒவ்வாமல் இருக்கிறது. இது விஜயா அல்ல, ஜெயனாக இருக்கலாம். கதையிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.

 

  1. கடலாழம்

பலமுறை படித்தபிறகுதான் கதையை முழுமையாக உள்வாங்க முடிந்தது.

கதை மிக இயல்பாக கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே அலைபோல இயங்குகிறது. மரணம் என்பது மீனவர்களின் வாழ்க்கையில் ஒரு அன்றாட உண்மை. அதற்கிணையாக கிறிஸ்டோபர், கடல் சார்ந்த வாழ்க்கையின் அபாயங்களையும் இழப்புகளையும் மிகைப்படுத்தாமல் “matter of fact” தொனியில் நமக்கு அளிக்கிறார்.

”சுறாமீன் வந்து எப்போது வேண்டுமானாலும் காலைக் கடித்து இழுத்துச்செல்லலாம். எத்தனை சுறாக்களையும் அதன் குஞ்சுகளையும் கொன்றிருப்போம்” என்ற வரி, “old man and the sea”யை நினைவூட்டியது. The old man had the same quality of piety in his relation to nature. இயற்கையை சார்ந்து வாழ்பவர்களின் சமநிலையையும் மனப்பாங்கையும் ஒரே வரியில் உணர்த்திவிட்டார். .

மீன்பிடிக்கும் முறைகள் பற்றி கூறுகையில் கதாபாத்திரங்களை பற்றியும் ஒரு சித்திரம் உருவாகிறது. பத்றோஸ் “மட்டு” உபயோகித்து சுறா மீனைப் பிடிக்கப் பழகியவர். இறுதி வரை அவர் பதற்றமே அடையவில்லை. கிளீடன் ”மடி”யோடு தினமும் விளையாடுபவன். மத்தியாஸை கூட தன்னுடன் வர விடாமல் மறுத்தவன். கடைசி வரை அவன் கன்னாசை திருப்பிக்கேட்கவில்லை.

மத்தியாஸுக்கு அவனை நம்பி படகில் வந்தவர்பால் பொருப்புணர்ச்சியும் பாதுகாக்கும் இயல்பூக்கமும் இருக்கிறது (தாய் யானையைப் போல). முடிவை அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் உணர்வுரீதியாகக் கதை உச்சத்தைத் தொடவில்லை. மீனவர்களைப் பற்றி கூறிய அளவுக்கு மத்தியாஸை பற்றி கூறாதது ஒரு காரணமாக இருக்கலாம். The story did not create enough empathy with the character.

இல்லை என் வாசிப்பின் குறைபாடாகவும் இருக்கலாம்.

  1. பரிசுத்தவான்கள்

வட்டார மொழி கதையை முழுதாக உள்வாங்கத் தடையாக இருந்தும் கதையை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.

கதையின் கட்டமைப்பு என்னைக் கவர்ந்தது. First person narrative மிகப்பொருத்தமாக விளங்கியது. அதை சிறப்பாக கையாண்டுள்ளார் காட்சன்.

கதை கூறுபவருக்கும் அனிதாவுக்கும் அன்யோன்யமான உறவு ஒருகாலத்தில் இருந்ததே அவருடைய கரிசனைக்கு காரணம். அவரிடம் இருப்பது வெரும் curiosity அல்ல. ஆனால் கதை நடக்கும் காலத்தில் அவர்கள் தொடர்பில் இல்லை. ஆகவே நேரடியாக அனிதாவிடம் சென்று கேட்க இயலாத நிலை. கதைக்கூறுபவர் அனிதாவின் நிலையை தன் வீட்டை நோக்கி வரும் செய்திகளிலிருந்துதான் புரிந்துகொள்கிறாள். கதைமுழுவதும் வீட்டுக்குள்ளேயே இயங்குகிறது.

நடந்தவை, துளித்துளியாகவும் நேர்மாறாகவும் வந்துசேர்கின்றன. சிறிது சிறிதாக கதை (கூறுபவர்க்கும் வாசகர்க்கும்) துலங்குகியும் முழு உண்மையும் வெளிவர வில்லை. வரவும் வராது. இருவருக்குள் நடப்பதை, நடந்ததை மற்றவர்களால் உத்தேசிக்கத்தான் முடியும், முழுதாக புரிந்து கொள்வது மிகக்கடினம். அதனால் இக்காரணத்தைக் காட்டி ஒருவரை விமர்சிப்பதன் தவரை உணர்த்துகிறது பரிசுத்தவான்கள். யதார்த்த தளத்தில் கதையின் மையம் முற்றிலும் வேராக இருந்தும், இதுவும் கதையின் ஒரு முக்கியமான பேச்சுப்பொருள் என நினைக்கிறேன்.

சிறிதளவும் பாவனைகள் இல்லாத நேர்த்தியான எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

 

  1. கதாபாத்திரங்களின் பிரதேசம்

அனைத்து கதைகளையும் குறைந்தது இரண்டு முறையாவது படித்தேன். கதாபாத்திரங்களின் பிரதேசம் மட்டும் முதல் வாசிப்பிலும் இரண்டாம் வாசிப்பிலும் மிக முரண்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் வாசிப்புக்கு பிறகு ’பிடிக்கவில்லை’ என்று குறித்திருந்தது ஆச்சரியத்தை அளித்தது.

அடுக்குகள் நிறைந்த கதை, இருத்தலியத்தை முன்வைக்கிறது. இறப்பின் பொருள், மற்றும் இறப்பின் பன்முகங்களை – its omnipresence, its randomness, its cruelty – பரிசீலனை செய்கின்றது. மரணத்தை வென்று உயிர் பிழைக்கச் செய்யும் அந்த மூலாதாரமான உள்ளுணர்வைப் பற்றியும் பேசுகின்றது (யட்சன் ஆற்றிலிருந்து தப்பிக்கும் தருணம்). முடிவில் குருதாஸ் மரணத்தின் முகமாக வருவது வாழ்க்கை தொடக்கமும் முடிவும் ஊடே இணைந்த சக்கரம் என்று உணர்த்துகிறது.

சில வரிகள் மிக அழகாக அமைந்திருந்தன. (அவனுக்குள் நலிந்து வதங்கிய நினைவொன்று தன் மீது படிந்த சாம்பல் புழுதியை அகற்றிக் கொண்டு துளிர்விட்டு முளைத்தது – very evocative)

நல்ல முயற்சி.

  1. நிர்வாணம்

பல கதைக்கருக்களை பின்னிச் செல்கிறது நிர்வாணம். வார்த்தைகளின் எண்ணிக்கையளவில் சிறிய இடத்தை வசித்தாலும், அம்மாவின் கதாபாத்திரம் தான் என்னைக் கதையினுள் ஈர்த்தது.

தன் கணவனின் மறுமணத்தால் அவள் இழந்தது அவருடன் இருந்த பிரத்தியேக உறவு மட்டுமல்ல மகன் மீது தாய் கொண்டிருக்கும் தனிப்பட்ட உரிமையையும் தான். அவளுடைய மெளனமும் அலட்சியமும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் கருவிகள்.

”நாம தான் என்னவோ பெண்மை, பூமி மாதாங்கறோம்…..” என்ற வரியையும் மீறி, நீதி கூறாமல், கதாபாத்திரத்தின் நிலைப்பாட்டை யதார்த்தம் வழுவாமல், உண்மையாக முன்வைக்கிறது.

பள்ளி நாட்களின் விவரணை, குறிப்பாக the attempts at light humour, சிறிது செயற்கையாக தோன்றியது.

  1. நீர்க்கோடுகள்

இந்தக் கதையில் உள்ள வெளிப்படையான கரு, மகளின் இழப்பு. ஆழமான வடு ஆறிவிட்ட தோரணையோடு வாழ்க்கை முன்நகற்கிறது. ஒரு கட்டத்தில் the wound is reopened. மித்ரா மீது ஹென்ரிக்கு ஏற்படும் ஈர்ப்புக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். தன் மண வாழ்வில் பெற்ற அன்பு கூட அந்த இழப்பை ஈடு செய்யவில்லை என்று உணரும் தருணம் குற்ற உணர்ச்சியையும் உருவாக்கும். அது ஸ்டெல்லா-ஹென்ரி இடையே கடக்க முடியாத பெரும் பரப்பு போல் நிற்கின்றது.

சில இடங்களில் இந்த புரிதலை மறுபரிசீலனை செய்ய கதை நம்மை உந்துகிறது. மித்ரா-ஹென்ரியின் உறவு அவ்வளவு சுலபமாக வரையறைகளுக்குள் பொறுத்த முடியாது என்றும் நினைவூட்டிக்கொண்டே செல்கிறது. ஹென்ரிக்கே அந்த உறவு என்ன என்பதை விளக்கிக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் முதல் கருவே சற்று வலுவாக முன்வருகிறது.

தெளிவற்ற நிலையைச் சித்தரிக்கும் கதைக்கு இந்த மொழி நடை மிகவும் நேர்முகமாக வெளிப்படுகிறது.

ஒரு கோணத்தில் பார்த்தால், மித்ரா-ஹென்ரியின் உறவு துணை (மித்ரா) கதாபாத்திரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. I wonder if the story would have been more powerful had the defining moment emerged through Henry-Stella’s relationship.

  1. அழைத்தவன்

ஆழமான பாதிப்பை உருவாக்கவேண்டிய கதை, சலனத்தை மட்டுமே உண்டாக்கிச் செல்கிறது. கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தை நிகழ்ச்சிகள் மூலம் விரிவாக்கியிருக்கலாம் என்று தோன்றியது.

“மகிழ்ச்சியின் தேடலா வாழ்க்கை இருக்கக்கூடாது சொர்ணம். அர்த்தத்தின் தேடலா இருக்கணும். அவனை பாத்துக்கறது அர்த்தம் உள்ளதா தெரியுது”. (மறுபடியும்)

சொல்வதை விட உணர்த்தியிருந்தால் கதையின் தாக்கம் அதிகரித்திருக்கும்.

கதையில் மீதம் இன்னும் நிரைய இருந்தது. பெற்றோர்களின் இயலாமை, குற்ற உணர்வு, அந்நிலைகளுக்குள் நடக்கும் மனப்போராட்டம்…..

வயிறு நிறைந்த பட்டாம்பூச்சி போல உட்கார மறுத்து தொட்டு தொட்டு செல்கிறது, அழைத்தவன்.

 

  1. நூலகத்தில்

எழுத்து இயல்பாக, தடையின்றி அமைந்திருந்தது. Stream of consciousness எழுத்துமுறை போல. பலதரப்பட்ட வாசிப்புக்கு இடம் கொடுக்கும் கதை. கதையின் வலிமையும் அதுவே.

எனக்குக் கதையின் மையமாக தோன்றியது –

நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள் இரண்டுமே, அந்த கதாபாத்திரத்தின் கற்பனையின் விளைவுகள். அது தெரிந்ததும் அவன் எந்த வித விடுவிப்பும் பெறவில்லை. (முக்கியமாக, தீய கனவுகளிலிருந்து மீண்டது கூட). இரண்டு அனுபவமும் நீடிக்காதென்பது அவனை மனச்சோர்வடையச் செய்கிறது.

அனுபவங்களிலிருந்து பிறக்கும் உணர்வெழுச்சிகள் நம் மனதால் உருவாக்கப்படுகின்றன. ஆகவே நம்மால் கட்டுப்படுத்தவும் முடியும். அப்படியானால் அவை மாயை தானே? அந்த மாயையின் திறை விலகுவது வெறுமையை ஏன் விளைவிக்கிறது? உணர்வெழுச்சிகள் இல்லாத வாழ்க்கையில் என்ன மிச்சம் இருக்கும் என்ற வினாவை எழுப்புகிறது லூசிஃபரின் கதை.

  1. கடைசிக் கண்

கதைக் கரு, கதைக்கூறு, வாழ்க்கையின் உண்மையிலிருந்து பிறந்த தரிசனம், எல்லாம் இருந்தும், கதை சலிப்பூட்டியது. எழுத்து முறையே அதற்குக் காரணம்.

மூன்று-நான்கு பத்தியினுள் கதை அடங்கிவிட்டது. மற்றபடி நிகழ்வுகளும் விவரணைகளும் மையக்கதையிலிருந்து தனித்து நிற்கின்றன. அவை கதையை இயல்பாக வெளிப்படுத்தவோ அல்லது கதைக்கு அடுக்குகளையோ அளிக்கவில்லை. தனித் தனியாக எழுதி பிறகு இணைத்தது போல அமைந்திருந்தது.

  1. சீர்ம

சீர்மையைப் பற்றி எழுதுவதை வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டுள்ள ஒருவர் வாழ்கையின் சீரின்மையை மிக மிக அருகே கண்டடைகிறார். அதனூடே ஏற்படும் தத்தளிப்பும், புரிதலுக்கான தேடலையும் நுட்பமாக எழுதியிருக்கிறார் அரவிந்த்.

புற்றுநோய் இழைக்கும் இழப்பு பல முறை எழுதப்பட்டுள்ளது. இழப்பின் நிழலில் வலுவாகும் காதல் – அதுவும் பல முறை எழுதப்பட்டுள்ளது. கதையின் இக்கோணங்கள் தனிப்பட்டு நிற்கவில்லை. How can it – relationships are not distinguishing, nevertheless, they are deeply essential to our happiness. கென் மூலமாக இதையும் தெரிவிக்கிறார் ஆசிரியர்.

 “பிறகு ஒருநாள் ஏதோவொரு உந்துதலில் அந்த அகல்விளக்கை என் வாசிப்பு மேஜையின் நேரெதிரே ஏற்றி வைத்தேன்…… கவனம் நழுவும் போதெல்லாம் தலையை உயர்த்தி தீபத்தின் கூர்முனையை உற்றுப் பார்த்தபடி இருப்பேன். கிளை பிரியும் மனம் மறுபடி ஒன்றுசேர்ந்து ஒன்றுசேர்ந்து விருட்சமாகும். அது ம்யூர் காடுகளின் செம்மரங்களைத்தாண்டி வளரும். அதன் மீது பறவைகள் பூத்து அமரும். அதன் வேர் காட்டை அளக்கும். அதன் பசுங்கொடி கானகத்தை பின்னி இணைக்கும்.”

“இரண்டாம் மாடியின் பரபரப்புக்கு தொடர்பே இல்லாமல் எங்கள் கை இணைப்புகளில் உருவானதோர் உலகத்தில் இருந்தோம்.”

“பூச்சிக்கடிதான் என்ற வார்த்தை அனிச்சையாக வந்து விழுந்த மறுகணம் துணுக்குற்று தலையில் கைவைத்து அமர்ந்தேன்.”

“God, Thou great symmetry” என்ற வரி திமிங்கலம் அதன் அத்தனை எடையையும் தூக்கி கடலில் இருந்து எம்பி குதிப்பது போல் என் அடிவயிற்றிலிருந்து எழுந்து வந்தது.”

கூர்ந்த அவதானிப்பும், அழகுணர்ச்சியும் நிறைந்த எழுத்து. கதையை விட மொழி நடை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தது.

—–

வாசித்து விமர்சிப்பது சுலபம். ஒரு நல்ல இலக்கிய வாசகர், அவருடைய வாசிப்பின் தரத்திற்கேற்ப எழுதுவது என்பதே பெரிய சவால். நீச்சல் கற்று கொள்வது போல தோன்றுகிறது. மனம் போகும் இடத்துக்கு கை கால்கள் பின் வருவதில்லை. சோர்வடையும் தருணங்கள் பல. உங்கள் பார்வைக்கு வந்ததும், உங்கள் தளத்தில் கிடைத்த பின்னூட்டங்களும் புதிய எழுத்தாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கும்.

ப்ரியம்வதா

***

அன்புள்ள ப்ரியம்வதா

உங்கள் பெயருக்கு பிரியமானவற்றைச் சொல்பவள் என்று பொருள், கறாராகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் விமர்சனப்பார்வை சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் எடுத்து அதன் மையத்தைத் தொட்டு எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு வாசகர்களுக்கு உதவியானது – எந்த விமர்சனமும் வாசகனை நோக்கியே செய்யப்படுகிறது

தொடர்ந்து எழுதுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46
அடுத்த கட்டுரைகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி