[ 4 ]
தொல்புகழ்கொண்ட இக்ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் கிடைக்கும்படி கோல் நிறுத்தினான். பிறிதொரு எண்ணமே அவனுக்கு இருக்கவில்லை.
யுவனாஸ்வன் ஒன்பது மனைவியரை மணந்து பன்னிரு ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மணிமுடிக்கென மைந்தர் வேண்டுமென அவனிடம் அமைச்சர்கள் சொன்னபோது அதை அரசுசூழ்தலென்றே அவன் எடுத்துக்கொண்டான். தங்கள் மடியிலாட மகவுகள் தேவை என்று மனைவியர் சொன்னபோது அதை பெண்டிரின் இயல்பு என்று மட்டுமே புரிந்துகொண்டன். நாளும்பொழுதும் களம் வகுப்பதிலும் அரசு சூழ்வதிலும் அறமுரைப்பதிலுமே ஈடுபட்டிருந்தான். ஓயாது போரை எண்ணியிருந்தமையால் அவன் முகம் கற்சிலை போலிருந்தது. அசைவுகள் இரும்புப்பாவை போலிருந்தன. விழிகளில் முகமறியும் நோக்கே இருக்கவில்லை. குருதிபலி கோரும் கொடுந்தெய்வம் என்றே அவனை உணர்ந்தனர் சுற்றமும் சூழரும்.
கல் கனியாது அனல் பிறப்பதில்லை என்று நிமித்திகர் சொன்னார்கள். அரசனுக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்றால் அவன் நெஞ்சு நெகிழவேண்டும். உடல் மென்மை கொள்ளவேண்டும். மண்ணில் பிறக்க விழையும் குழவியர் விண்ணில் நின்று கீழே நோக்குகிறார்கள். அருந்தவம் இயற்றுபவர்களையே அவர்கள் தேர்வுசெய்கிறார்கள். உளம்கனிந்த மடிகளிலேயே வந்து பிறக்கிறார்கள். இப்புவியில் நன்றோ தீதோ கோரப்படாது அளிக்கப்படுவதில்லை. மைந்தருக்கான பெருவிடாயை அவனுள் நிறைக்கவேண்டுமென அமைச்சர் விழைந்தனர். அவன் உடல் வேள்விக்குளமாக வேண்டும். அதில் விழைவெரியவேண்டும். ஆணவம் ஆகுதியாகவேண்டும்.
ஒருமுறை இரவுலாவச் சென்றபோது கால்களைத்து யுவனாஸ்வன் ஓர் அரசமரத்தடியில் தனித்து ஓய்வெடுக்கையில் முன்னரே அமைச்சர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி எளிய சூதர்மகள் ஒருத்தி சற்றுமுன் பிறந்த தன் மகனுடன் அப்பால் படுத்திருந்தாள். காய்ச்சலுக்கான நச்சுமருந்து புகட்டப்பட்ட அவள் நோயுற்று மயங்கிக்கிடக்க அந்தக் குழந்தை வீரிட்டழத்தொடங்கியது. அவ்வொலியை முதலில் யுவனாஸ்வன் ஏதோ பறவை ஒலியென எண்ணினான். பின்னரே குழவியின் அழுகையென அறிந்தான். குழவிக்குரல்கள் எப்போதும் மானுடத்தை நோக்கியே எழுகின்றன, வேண்டுகின்றன, ஆணையிடுகின்றன, சீறுகின்றன. அதை ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிக்குரல் என்றே உணர்கின்றனர்.
செவிகுத்தும் அதன் அழுகையைக் கேட்டு அமர்ந்திருக்கமுடியாமல் அவன் எழுந்துசென்று நோக்கினான். அத்தனை தொலைவுக்கு அச்சிறிய குழந்தையின் குரல் வந்துசேர்ந்திருப்பதை உணர்ந்து வியந்தான். சருகில் கிடந்து குழந்தை செவ்விதழ்ச் செப்பு கோண கூவியழுதது. அங்கே சூதர்மகள் காய்ச்சல்கண்டு சுருண்டுகிடப்பதையும் குழவி அழுகையால் உடல்சிவந்து கைகால்கள் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க தொண்டைதெரிய ஓசையிடுவதையும் கண்டான். தன் அமைச்சர்கள் வருகிறார்களா என வழிகளை பார்த்தான். அவர்கள் நீர்கொணரச் சென்றிருந்தனர். ஏவலரும் உடனில்லை.
அவன் அச்சூதமகளை காலால் மிதித்து எழுப்பினான். அவள் தன்னுணர்வில்லாத காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்து அடங்கின. மெலிந்த உடல் அலைபாய்ந்தது. அழுது துடித்த குழவி ஓசையின்றி வலிப்புகொள்ளத் தொடங்கியது. யுவனாஸ்வன் அதை கையிலெடுத்தான். வாழைத்தளிர்போல அது கைகளில் குழைந்தது. மென்பட்டென வழுக்கியது. சுடர்துடிக்கும் அகல் என பதறச்செய்தது. அதை கையிலேந்திபோது கைகளுடன் கால்களும் நடுங்கின. அதை கீழே போட்டுவிடக்கூடாதென்று எண்ணி நெஞ்சோடணைத்துக்கொண்டான்.
நெஞ்சில் அதன் நெஞ்சத்துடிப்பை உணரமுடிந்தது. ததும்பும் சிறுகலம் என அதை ஏந்தியபடி அவன் அங்குமிங்கும் நிலையழிந்தான். என்ன செய்வதென்றறியாமல் சூழநோக்கினான். அவன் நெஞ்சத்துடிப்பை உடலால் உணர்ந்த அக்குழவி தன் கைகளால் அவன் மார்பின் முடியைப் பற்றிக்கொண்டது. பறவைக்குஞ்சுபோல நகம் நீண்ட அதன் கைகள் அவன் உடலைப் பற்றியபோது அவன் சிலிர்த்தான். அதை கையிலெடுத்தபோதே கனியும் கொஞ்சும் மன்றாடும் உளக்குரல் தன்னுள் ஊறியதை அறிந்தான். அக்குழவி அதை அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு தன் உடலை நெளித்து எம்பி தவிக்கும் வாயைக் குவித்து அவன் முலைக்கண்களைக் கவ்வி சப்பியது.
கூசித்திகைத்து அவன் பின்னடைந்தாலும் அது தன் வாயை எடுக்கவில்லை. அவன் மெய்விதிர்க்க சிலகணங்கள் நின்றான். தளர்ந்த கால்களுடன் மெல்ல பின்னடைந்து வேர்களில் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கலங்கி வழியலாயின. உடல் மெய்ப்புகொண்டு குளிர்ந்தடங்கி மீண்டும் அதிர்ந்து எழுந்தது. ஆழப்புண்பட்ட துளைவழியாக தன் குருதி வடிந்தோடுவதைப்போல உணர்ந்தான். முழுக்குருதியும் வழிந்தோட உடல் எடையழிந்து ஒழிவதாகத் தோன்றியது. கைகால்கள் இனிய களைப்பால் தொய்ந்தன. விழியிமைகள் சரிந்து ஆழ்துயில்போல ஒன்று அவனை ஆட்கொண்டது. அதில் அவன் பெண்ணென இருந்தான். அவன் கைகள் குழவியின் புன்மயிர்த்தலையை தடவிக்கொண்டிருந்தன.
அகலே நின்று நோக்கிய அமைச்சர்கள் ஓடி அருகணைந்தனர். முலையுறிஞ்சிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொண்டுவந்திருந்த பாலை துணியில் நனைத்து ஊட்டினர். அந்நேரமும் அதை பிரியமுடியாதவனாக அவன் எழுந்து அதை நோக்கி கைநீட்டினான். அரண்மனைக்குக் கொண்டுசெல்லும்போது அக்குழவியை தன் கையிலேயே வைத்திருந்தான். அவன் மடியிலேயே அது உறங்கியது. இரவு தன்னருகே படுக்கவைத்து அதை தடவிக்கொண்டிருந்தான். தன் முலைக்கண்கள் ஊறுகிறதா என்றே ஐயம்கொண்டான். மீண்டும் இருளில் அதன் வாயில் முலைக்கண்களை அளித்து உடல் உருகலானான்.
அன்னை நோய்நீங்கி மறுநாள் விழித்ததுமே அக்குழவியை கேட்டாள். அவளை என்னருகே வந்தமர்ந்து முலையூட்டச்சொல் என்றான் அரசன். அவள் தன் குழந்தையைக் காண அரசனின் அறைக்குள் வந்தாள். அங்கு உடல்குறுக்கி அமர்ந்து முலையளித்தாள். குழவியை தன் அருகே இருந்து விலக்க அரசன் ஒப்புக்கொள்ளவில்லை. அரசப்பணியையும் நெறிகாத்தலையும் குழவியை கையிலேந்தியபடியே செய்தான். தனித்திருக்கையில் புவியில் பிறிதொன்றில்லை என்பதுபோல அக்குழவியையே நோக்கிக்கொண்டிருந்தான். கைவிரல்களால் ஓயாது வருடியும் மீளமீள முகர்ந்தும் அதை பார்த்தான். அதன் மென்தசையை முத்தமிட்டுச் சுவைத்தான். அதன் மூச்சொலி காதில்கேட்க காதுகளில் பிஞ்சுவயிற்றை சேர்த்துக்கொண்டான்.
பன்னிரு நாட்களுக்குப்பின் ஒருநாள் அமைச்சர் அக்குழவியையும் அன்னையையும் இரவிலேயே அரசனிடமிருந்து பிரித்து அவர்களின் அரச எல்லைக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டனர். முகமறியா மக்கள்திரளில் அவள் முழுமையாக கலந்து மறையும்படி செய்தனர். விடிகாலையில் விழிப்புகொண்ட அரசன் அறியாமலேயே கைநீட்டி குழந்தையைத் துழாவி அதைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். “எங்கே? என் குழந்தை எங்கே?” என்று கூவியபடி அரண்மனை இடைநாழிகளில் பித்தனைப்போல ஓடினான். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் குழந்தையைப்பற்றி கேட்டு அழுதான். தூண்களை ஓங்கி மிதித்தான். ஏவலரை அறைந்தான்.
குழந்தையும் அன்னையும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்ததும் மேலாடை இல்லாமல் முற்றத்தில் இறங்கி கூவியபடி ஓடிய அவனை அமைச்சர் பற்றிக்கொண்டுவந்தனர். அவனிடம் மெல்ல மெல்ல அவர்களை மீண்டும் காணமுடியாது என்று சொல்லி புரியவைத்தனர். “அது அவள் குழந்தை. அன்னை தன் குழவியை இன்னொருவருக்கு விட்டுத்தரமாட்டாள். அரசன் ஆயினும். பேரன்புடையவன் ஆயினும். அவள் தப்பிச் செல்வது இயல்புதான். அரசே, உங்கள் உடலில் எழுந்த மைந்தரே உங்களுக்குரியவர்கள்” என்றனர்.
அழுது அரற்றியும் பித்தன்போல புலம்பியும் ஏங்கி சொல்லிழந்தும் அவன் அரண்மனையில் இருந்தான். அவன் தேவியர் அவனை தேற்றமுடியவில்லை. அவன் எவரும் தன்னருகே வருவதை விரும்பவில்லை. அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.
விழிதிறந்தாலோ கைநீட்டினாலோ அது கலைந்துவிடுமென்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது. உடற்தசைகள் முறுக்கவிழ்ந்து தளர்ந்தன. குழவி மெல்ல அவன் முலைக்கண்ணை சுவைக்கத் தொடங்கியது. அவன் ஆழுணர்வில் அதில் திளைத்தான். குழவி அவனை உண்டபடியே இருக்க அவன் துயிலில் ஆழ்ந்தான். அங்கே அக்குழவியுடன் அறியா நிலங்களில் நடந்தான். விழித்துக்கொண்டபோது அருகே குழவி இல்லை என்னும் தெள்ளிய உணர்வு எஞ்சியிருந்தது, ஆனால் துயர் இருக்கவில்லை. குழவி கிடந்த அந்த மென்மையான மரவுரிக்குவையை கையால் நீவியபடி அவன் விழி கசிந்துவழிய படுத்திருக்கையில் தன் மேலாடை நனைந்திருப்பதைக் கண்டான். அவன் இருமுலைகளும் சுரந்திருந்தன.
யுவனாஸ்வன் மைந்தர் பிறப்பதற்கான வேள்விகளை இயற்றலானான். பிருகுநந்தனர் என்னும் பெருவைதிகர் அவன் அவையிலமர்ந்து அந்த வேள்விகளை அவனுக்காக ஆற்றினார். ஏழு புத்ரகாமேஷ்டிகளை அவன் செய்தான். ஏழாவது வேள்வியனலில் எழுந்த இந்திரன் “ஊழ்வினையின்படி இவ்வரசனுக்கு மைந்தர் இல்லை. இவன் அன்னையின் கருவுக்குள் பார்த்திவப்பரமாணுவாக இருக்கையிலேயே முடிவானது அது. விதைகள் அற்றது இவன் உடல்” என்றான். “ஊழ் பிரம்மனின் நெறி. வேதம் பிரம்மனையும் ஆளும் நெறிகொண்டது” என்றார் பிருகுநந்தனர். “வேள்விக்கு எழும் அத்தனை தெய்வங்களும் இங்கு வருக! பிரம்மனே வருக!”
மீண்டும் ஏழு புத்ரகாமேஷ்டி வேள்விகளை பிருகுநந்தனர் அமைத்தார். அமைச்சர்கள் உளம்சோர்ந்தனர். தேவியர் நம்பிக்கை இழந்தனர். கருவூலம் ஒழிந்துவந்தது. அரசன் படைக்களம் மறந்தான் என்றறிந்து எல்லைகளில் எதிரிகள் கொழுக்கலாயினர். அவன் நெறியவைக்கு வராமையால் குடிகள் கட்டவிழ்ந்தனர். “அரசருக்கு மைந்தர் இல்லை என்பதே ஊழ் என்றால் அவ்வண்ணமே ஆகுக! அரசரின் இளவல்கள் எவரேனும் அவருக்குப்பின் முடிசூடட்டும்” என்றனர் அமைச்சர். “நாங்கள் முதுமைகொண்டுவிட்டோம். எங்கள் வயிறுகள் கருக்கொள்ளும் ஆற்றலிழந்துவிட்டன. இப்பிறவியில் இப்படி என எண்ணி அமையவும் கற்றுவிட்டோம்” என்றனர் அரசியர்.
ஆனால் யுவனாஸ்வன் ஒரு சொல்லையும் செவிகொள்ளவில்லை. “உயிரின் இறுதித்துளி எஞ்சுவதுவரை மைந்தனுக்கான வேள்வியிலேயே இருப்பேன். என் உடல் முளைக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்” என்றான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவன் மைந்தன் என்னும் நினைவிலேயே வாழ்ந்தான். அவன் உறுதிகொண்ட உடல் நெகிழ்ந்து குழைவுகொண்டது. முகத்தில் மயிர் உதிர்ந்து பெண்மை வந்தது. முலைகள் உன்னி எழுந்தன. இடைசிறுத்து தொடைபெருத்து நடை ஒல்கியது. இதழ்கள் நீர்மைகொண்டன. கண்கள் நீண்டு கூர்கொண்டு கனவுசூடின. குரலில் யாழும் குழலும் கலந்தன.
பதினான்காவது வேள்வியில் எழுந்த பிரம்மனிடம் பிருகுநந்தனர் சொன்னார் “இங்கு நிகழும் அனல்வேள்வி என்பது அரசன் தன் உள்ளத்தால் செய்யும் எண்ணவேள்வியின் மறுவடிவே. இவ்வேள்வியைக் கடந்தாலும் அவ்வேள்விக்கு நீங்கள் நின்றாகவேண்டும், படைப்பிறையே. அருள்க!” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க!” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக! இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க!” என்றார் பிருகுநந்தனர். “அவ்வாறே” என்று பிரம்மன் சொல்லளித்தார்.
தர்ப்பையால் அனலைத் தொட்டு கங்கை நீர்க்குடத்தை வருடி அதில் நான்முகன் அருளை நிறைத்தனர். முறைமைசெய்து வேள்வி முடிந்து அந்த நீர்க்கலத்துடன் வேள்விச்சாலையிலிருந்து அருகிலிருந்த கொட்டகைக்குச் சென்ற வேதியர் அங்கேயே அமர்ந்தனர். ஆடைகளை மாற்றிக்கொண்டு மஞ்சத்துக்குச் செல்ல விழைந்தவர்கள் களைப்பால் அங்கேயே அவ்வண்ணமே படுத்துத் துயின்றனர். கொட்டகைக்கு நடுவே இருந்த சிறு பீடத்தில் பொற்கலத்தில் அந்த நீர் இருந்தது.
அவ்விரவில் வேள்வி முடிந்த மணியோசைகளையும் சங்கொலிகளையும் கேட்டுக்கொண்டே அருகே இருந்த வேள்விக்காவலனுக்கான பந்தலில் அரைத்துயிலில் இருந்த யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல் கனவு கண்டான். உலர்சுள்ளியைப்போல அவன் கை பற்றிக்கொண்டது. கால்களும் தலையும் எரியலாயிற்று. முலைகள் கனலாயின. வயிற்றில் தழல்சுழன்றது. அந்த அனல் அவன் உடலின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்தில் இருந்தே எழுந்தது என்றறிந்தான். விழித்துக்கொண்டபோது தன் உடல் விடாயில் தவிப்பதை உணர்ந்தான். அத்தகைய பெருவிடாயை அவன் முன்பறிந்ததே இல்லை. தொண்டையை கைகளால் வருடியபடி எழுந்து ஓடி கொட்டகைக்கு வந்தான். அங்கே பொற்கலத்திலிருந்த கங்கை நீரைக்கண்டு பிறிதொன்று எண்ணாமல் அதை எடுத்துக் குடித்தான்.
ஓசைகேட்டு விழித்துக்கொண்ட பிருகுநந்தனர் கையில் ஒழிந்த குடத்துடன் நின்றிருந்த யுவனாஸ்வனைக் கண்டு திகைத்தார். என்ன நிகழ்ந்ததென்று உடனே புரிந்துகொண்டார். அனைத்து வைதிகரும் பதறி எழுந்து அரசனைச் சூழ்ந்தனர். “என்ன செய்துவிட்டீர்கள், அரசே?” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது?” என்றார் பிருகுநந்தனர். “நிகரற்ற வல்லமைகொண்டவனாகிய மைந்தன் இந்த நீரில் நுண்வடிவில் உறைகிறான். பருவுடல் கொள்ள பெருவெளியில் அவன் காத்திருக்கிறான்.” யுவனாஸ்வன் “நான் அறிந்திலேன். இவ்வண்ணம் எப்படி நிகழ்ந்தது என்றே எனக்குத் தெரியவில்லை” என்றான்.
நிமித்திகரை அழைத்து வருகுறி தேர்ந்தனர். பன்னிரு களம் அமைத்து கல்லுருட்டி கணக்கிட்டு நிமிர்ந்த முதுநிமித்திகர் சாந்தர் சொன்னார் “அந்தணரே, தான் எனத் திரண்ட மைந்தன் பருவுடல்கொள்வது உறுதி. தந்தையை வெல்லும் ஆற்றல்கொண்டவன் ஆவான். ஏழு பெருவேள்விகளை நிகழ்த்தி குலம் வாழச்செய்வான்.” பின்னர் எவர் விழிகளையும் நோக்காமல் “நான் சொல்வது குறிகள் காட்டுவதை மட்டுமே. அந்த மைந்தன் அரசரின் உடலிலேயே கருவுறுவான். அங்கு உயிருடல் கொண்டு பிறப்பான்” என்றார்.
ஆனால் பிருகுநந்தனரோ யுவனாஸ்வனோ திகைப்புறவில்லை. அந்தணர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அரசரின் பெருவிழைவு தன் உடல்முளைக்கவேண்டும் என்பதே. அவ்வாறே அருளின தெய்வங்கள்” என்றார் நிமித்திகர். “ஆம், அவ்வண்ணமே ஆகுக! அதுவும் நல்லூழே” என்றார் பிருகுநந்தனர். அரசன் நெடுமூச்செறிந்தபோது முலைகள் எழுந்தமைந்தன. கனவுடன் கண்முனைகள் கசிவுகொண்டன. இடைநலுங்க அணிகள் குலுங்க அவன் நடந்து தன் அறையைச் சென்றடைந்தான். அங்கு மஞ்சத்தில் களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகைக்கும் மைந்தனின் முகத்தைக் கண்டான். மெய்விதிர்ப்பு கொள்ள “என் தெய்வமே” என நெஞ்சில் கைவைத்து அழுதான்.
அரசனின் வயிறு பெருத்தது. வரிகளோடிச் சரிந்தது. அவன் முலைக்கண்கள் கருமைகொண்டன. புதுமணல்போல மென்வரிகளுடன் முலைக்குவைகள் பருத்துச் சரிந்தன. அவன் உதடுகள் கருமைகொண்டு மூச்சில் இனிய ஊன்மணம் கலந்தது. கழுத்தும் கையிடுக்குகளும் கன்றின. கண்வெளுத்து நடை தளர்ந்தது. அரண்மனைச் சுவர்களை உடைவாளால் சுரண்டி சுண்ணத்தை உண்டான். திரி எரிந்த சாம்பலை சுட்டுவிரலால் தொட்டுச் சுவைத்தான். குங்குமத்தையும் களபத்தையும் சிறு இலைப்பொட்டலமாக எடுத்துவைத்துக்கொண்டு தின்றான். சிறு ஒலி கேட்டும் திடுக்கிட்டான். நிற்கையிலும் நடக்கையிலும் தன் வயிற்றையே எண்ணிக்கொண்டான். தனியாக அமர்ந்து வானை நோக்கி கனவுகண்டான். சிறுபறவைகளையும் வண்ணப்பூச்சிகளையும் கண்டு குழந்தைபோல முகம்மலர்ந்து சிரித்தான்.
மாதங்கள் செல்ல அரசனின் வயிறு பெருத்து வலப்பக்கம் சரிந்தது. வலக்கை ஊன்றி பெருமூச்சுடன் எழுந்தான். புரியாத ஐயங்களும் அச்சங்களும் கொண்டு உளம் கலங்கி தனிமையில் அழுதான். மத்தகம் தூக்கி கொம்பு ஒளிவிட இருளிலிருந்து வரும் களிற்றுயானையை மீண்டும் மீண்டும் கனவுகண்டான். இரவில் முழுத்துயில் இல்லாது கண் சோர்ந்து எழுந்தான். கைகள் குடைச்சல்கொள்ள நாளெல்லாம் மஞ்சத்தில் அசைவில்லாது அமர்ந்திருந்தான். கால்கள் வீங்கின. பின் முகம் உப்பி ஒளிகொண்டது. கண்ணிமைகள் கனிந்து தொங்கின. சிறு அசைவுக்கே நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. மழலைச்சொல் உரைப்பவன் ஆனான். அனைவர்மீதும் கனிவும் அனைத்தின்மீதும் எரிச்சலும் மாறிமாறி வந்து அவனை அலைக்கழித்தன.
அரசன் வயிற்றில் மைந்தன் இருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவன் வளர்ந்து கையும் காலும் கொள்வதை தொட்டுப்பார்த்து சொன்னார்கள். முழுவளர்ச்சியடைந்த மைந்தன் ஒலிகளுக்கு செவிகொடுத்தான். காலால் தந்தையின் வயிற்றை உதைத்து உந்தி முழைகாட்டினான். அவன் அசைவை அறிந்து யுவனாஸ்வன் உடல்விதிர்க்க கூசிச்சிரித்து துள்ளினான். அந்த முழைமேல் கைவைத்து கூச்சலிட்டு நகைத்தான். “உயிர்கொண்டிருக்கிறான்! உயிர்!” என்று கூவினான். “என் உயிர்! என் உயிரை நானே தொடுகிறேன்!” ஊழ்கத்தில் என என் உயிர் என் உயிர் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
அம்மைந்தன் எப்படி பிறக்கமுடியும் என மருத்துவர்களுக்கு புரியவில்லை. அரசன் இறக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினர். பாரதவர்ஷமெங்கும் தூதர்களை அனுப்பினர். அகத்தியரின் வழிவந்த முதுமருத்துவர் ஒருவர் அவர்களின் அழைப்புக்கிணங்கி வந்தடைந்தார். இடையளவே உயரமிருந்த அவர் பெரிய உருண்டை விழிகளும் ஓங்கிய குரலும் கொண்டிருந்தார். “விலாபிளந்து மைந்தன் எழுவான். ஏனென்றால் மண்ணின் விலாபிளந்தே செடிகள் எழுகின்றன.”
அரசனுக்கு மூலிகைகொடுத்து மயங்கவைத்து அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் அவன் வயிற்றின் தசைகளைக் கிழித்து கனி அகழ்ந்து விதையைப் பிதுக்குவது போல மைந்தனை வெளியே எடுத்தனர். குருதிவழிய குளிர்கொண்டு அவன் அழுதான். அவன் உடலிலக்கணம் நோக்கி “அரியவன். ஆள்பவன்” என்றார் அகத்தியர். அழுகை கேட்டு உள்ளே ஓடிவந்த அமைச்சர்கள் “எங்கே? அரசர் எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா?” என்றார்கள். தசைகளைப் பொருத்தி குதிரைவால்மயிரால் சேர்த்துத் தையலிட்டு தேன்மெழுகும் அரக்குமிட்ட பட்டுத்துணியால் சுற்றிக்கட்டி பக்கவாட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த யுவனாஸ்வன் குருதிமணத்துடன் துயின்றுகொண்டிருந்தான்.
குழந்தையின் அழுகுரல்கேட்டு ஒன்பது அன்னையரும் ஓடிவந்தனர். “அமுது! முதலமுது!” என அகத்தியர் விரைவுபடுத்தினார். சேடியர் ஓடிச்சென்று நறும்பாலை கொண்டுவந்தனர். அதை தூயபஞ்சுத்திரியில் தொட்டு மைந்தன் வாயில் வைத்தனர் அன்னையர். அவன் அதைத் துப்பி வழியவிட்டு செந்நிறக் கைகளைச் சுருட்டி ஆட்டி அடிக்கால்கள் சுருங்க கட்டைவிரல் சுழிக்க அதிர்ந்த வயிற்றுடன் அழுதான். அரியதொன்று இரண்டாகக் கிழிபடும் ஒலியுடன் அழுத அவனைக்கண்டு செய்வதறியாமல் அவர்கள் திகைத்தனர்.
“முலையூட்டும் சேடி ஒருத்தியை கொண்டுவருக!” என அமைச்சர் சாம்யர் ஆணையிட்டார். ஏவலர் ஓடி முலைப்பெண்டிர் எழுவரை கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டதுமே மைந்தனின் உடல் நீலம்பாரித்து விரைப்புகொண்டது. அவன் உதடுகள் அவர்களின் முலைக்கண்களை கவ்வவில்லை. நாண் இழுபட்ட சிறு வில் என அவன் அவர்கள் கைகளில் இறுகியிருந்தான். ஏழு முலைப்பெண்டிரும் அவனை ஊட்டமுடியவில்லை. முலைப்பாலை அவன் வாயில் பீய்ச்ச வைத்தபோதும் உண்ணாமல் கடைவாய் வழிய அவன் துடித்து நடுங்கினான்.
“குழவி கருவறைக்குள்ளேயே குருதிவழியாக அன்னையின் முலைப்பாலை அறிந்துள்ளது. அந்த மணமே அதை முலைக்காம்பு நோக்கி இழுக்கிறது. இம்மைந்தன் அதை அறிந்திருக்கவில்லை” என்றார் அகத்தியர். “என்ன செய்வது? இறப்புதான் இளவரசரின் ஊழா?” என்றார் அமைச்சர் சாம்யர். “அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது?” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை?” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்?” என்றான் யுவனாஸ்வன். “அவனுக்கு அன்னைமுலை உகக்கவில்லை. அவனுக்கு அமுதூட்ட வழியில்லை” என்றார் அமைச்சர்.
இடக்கையை ஊன்றி உடலை அசைத்துத் தூக்கி கைநீட்டிய யுவனாஸ்வன் “மாந்தாஸ்யதி!” என்றான். என்னை உண்ணுக என்றுரைத்து தந்தையால் தூக்கி நெஞ்சோடணைக்கப்பட்ட குழவி அள்ளி அவன் மார்பை பற்றிக்கொண்டது. அவன் முலைகளில் வாய்சேர்த்து உறிஞ்சி உண்ணலாயிற்று. அவனை அன்னையர் மாந்தாதா என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தாயுமானவன் கையால் வளர்க்கப்பட்ட அவன் பிறரைவிட அரைமடங்கு உயரமானவனாக வளர்ந்தான். மூன்று மாதங்களில் பல் தோன்றியது. ஆறு மாதங்களில் பேசினான். எட்டு மாதத்தில் நடந்தான். ஒரு வயதில் வில்லேந்தினான். ஏழு வயதில் களம்புகுந்தான். பன்னிரு வயதில் பரிதொடர்வேள்வி செய்து மாமன்னன் என புகழ்பெற்றான்.
ஆஜகவம் என்னும் அவன் வில்லின் நாணோசை தீயவருக்கு இடியென்றும் நல்லவருக்கு யாழென்றும் ஒலித்தது என்றனர் சூதர். வெற்றித்தோள்களுடன் எழுந்த மைந்தனை நோக்கி நிறைவுகொண்ட யுவனாஸ்வன் ஒருநாள் கான்புகுதலுக்கு ஒருங்கினான். அவன் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்த மைந்தனிடம் “நான் உன்னிடம் சொல்வது ஒன்றே. நான் உன்னிடம் சொன்ன முதல் சொல் அது, என்னை உண்ணுக! எப்போதும் உன் நாவிலிருக்கட்டும் அச்சொல்” என்றான். அவனை கானக விளிம்புவரை சென்று வழியனுப்பிவைத்தான் மாந்தாதா.
தந்தை சொன்னதன் பொருளை மறுநாள் முதல் அவன் உணரலானான். காலையில் முதன்முதலாக அவன் கண்ட ஏவலனை நோக்கி சொல்லெடுக்கும் முன் ‘என்னை உண்ணுக!’ என்றது அவன் அகம். அகம்படியாளனை, அணுக்கனை, அமைச்சரை, காவலரை, அவையோரை நோக்கி அவன் எச்சொல் எடுப்பதற்கு முன்னரும் அச்சொல் எழுந்து நின்றது. அவையில் கைவிலங்கு பூட்டப்பட்டு நின்றிருந்த அயல்நாட்டு ஒற்றனின் தலைகொய்ய ஆணையிட எழுந்தபோதும் ஊடாக வந்தது அச்சொல். அருகே சென்று தலையை கையால் வருடி அஞ்சி உணர்வழிந்திருந்த அவன் விழிகளை நோக்கி அதை சொன்னான். அவன் விழிநீர் பெருக அரசனின் கால்களில் விழுந்தான்.
அரசாளும் அன்னை என்று மாந்தாதா மக்களால் அறியப்பட்டான். வற்றாத முலைப்பால் எழும் உடல்கொண்டவன் அவன் என்றனர் சூதர். பல்லாயிரம் ஊற்றுக்கள் எழுந்து ஓடைகளாகவும் ஆறுகளாகவும் பெருகும் வறனுறல் அறியா நறுஞ்சோலை என்றனர் கவிஞர். அவன் கால்பட்ட இடங்களில் பசுமரங்கள் முளைத்தன. அவன் சொல்கொண்டு வாழ்த்திய குழவியர் சொல்பெற்றனர். அவன் கைதொட்ட நோயாளர் ஆறுதல்கொண்டனர். அவன் அரசமுனிவரில் முதல்வனென்றனர் படிவர்.
அவன் உலகுநீத்தபோது விண்ணில் இந்திரவில் எழுந்து கரையாமல் நின்றது. பொற்துருவலென ஒளியுடன் மழைபொழிந்தது. சான்றோர் கூடி அவனை மண்ணில் புதைத்தனர். நிலமென விரிந்தான் அரசன், அவன்மேல் வேர்கொண்டெழுந்தன குடிகள் என்றன கதைகள். அவன் உடல்மேல் எழுந்து விதைத்தொடர் என ஆயிரம் ஆலமரங்கள் எழுந்தன என்றன தொல்குடிச் சொற்கள். இறுதி ஆலமரம் கிளைவிரித்து கனிகொண்டது. பல்லாயிரம் பறவைகள் அதன்மேல் சிறகு குவித்தமர்ந்தன. அதன் கீழ் வந்தமர்ந்த இளஞ்சூதனின் அறிதுயில் செவியில் சென்று யுவனாஸ்வன் உரைத்தான் “என்னை உண்ணுக!”
விழித்தெழுந்து திகைத்து அமர்ந்தான் அச்சிறுவன். அச்சொல்லை அறியாது அவன் வாய் அரற்றத்தொடங்கியது. பின் அவன் ஒவ்வொரு எண்ணத்துக்கு முன்னரும் அச்சொல் இணைந்துகொண்டது. நாளடைவில் அவன் நாவுரைக்கும் எச்சொல்லும் அச்சொல்லென்றே பொருள்கொண்டன. அன்னமெனக் கனிந்தது அவன் கை. ஒருநாளும் ஒழியாது அவனை உண்டு வயிறு குளிர்ந்தனர் மானுடர். முதிர்ந்து முழுமைகொண்டு கடந்துசெல்வதற்கு முன் அவன் அச்சொல்லை தன்னை அணுகிய பிறிதொருவனுக்கு உரைத்தான். நாவிலிருந்து நாவுக்குச் சென்று அச்சொல் அங்கே அழியாது வாழ்ந்தது. வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. அங்கு அன்னம் ஒழிந்த தருணமே அமையவில்லை.