கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி

kupara[6]

 

கு.ப.ராஜகோபாலன் தமிழ் விக்கி

கு.ப.ராஜகோபாலனின் படைப்புகளைப்பற்றி மிகுந்த பிரேமை கொண்ட ஒரு எழுத்தாள நண்பரும் நானும் பேசிக் கொண்டிருதோம். கு. ப. ராஜகோபாலன்தான் தமிழிலக்கியத்தின் உச்சம் என்ற எண்ணம் கொண்டவர் அந்நண்பர். ‘ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் செதுக்கி அடுக்குபவர் ‘ என்று அவர் கு.ப.ராஜகோபாலன் பற்றி சொன்னார். ‘செதுக்கிச் செதுக்கி ஒரு நகைபோல கதைகளை உருவாக்கியவர். ஒரு வார்த்தையைக்கூட வெளியே எடுக்கமுடியாது. ஒரு வார்த்தையைக்கூட சேர்த்துவிடவும் முடியாது. .தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகள் சிறுகதைகளில் மட்டுமே உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளின் உச்சம் கு.ப.ராஜகோபாலனின் கதைகள் தான் ‘

நான் அவரை உடனே மறுக்கவில்லை ,ஆனால் ‘எதன் பொருட்டு ? ‘ என்று கேட்டேன். அவருக்குப் புரியவில்லை . ‘ கு.ப.ராஜகோபாலன் தன் மொழியையும் வடிவத்தையும் மேலும் மேலும் நேர்த்தி கொள்ளச் செய்ததன் நோக்கம் என்ன ? ‘ .அவர் சற்று எரிச்சலுடன் ‘இலக்கியத்துக்கு என்ன நோக்கம் இருக்கவேண்டும் ? ‘ என்றார். நான் ‘ ‘ இலக்கியத்துக்கு தெளிவான நோக்கம் இருக்கவேண்டும் என்று நான் சொல்ல முனையவில்லை .இலக்கிய வடிவத்துக்கு நோக்கம் இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வந்தேன். வடிவம் ஒரு கொள்கலம். ஒரு பாதை. அதில் நிரப்பப் படுவதே அதன் வடிவத்தை நியாயப்படுத்தமுடியும். இலக்கற்ற பாதை என்று ஒரு பாதைஇருக்க முடியாது ‘ என்றேன்

‘ ‘இலக்கிய வடிவத்தை ஏன் அப்படிப் பார்க்கவேண்டும் ? ஏன் ஓரு சங்கீத ஆலாபனையாகக் காணக்கூடாது ? ஒரு ராகம் வெறும் வடிவம்தான். அந்த வடிவத்துக்குள் நாம் அர்த்தங்களை , உணர்ச்சிகளை கொட்டி நிரப்பி அனுபவிக்கிறோமே ‘ என்றார் நண்பர் .அது ஆர்வம் அளிக்கும் ஒரு தரப்புதான். கண்டிப்பாக இலக்கியத்தில் அப்படியொரு வகைமாதிரி உண்டு. வடிவமே அனுபவமாக ஆகும் இலக்கியக் கூறு என்றால் அது அணி [அலங்காரம்] மட்டும்தான் . நீண்டகாலம் சம்ஸ்கிருத இலக்கிய மரபில் அதுவே இலட்சிய இலக்கியமாக இருந்தது. ஒரு குறுகிய காலம் — சிற்றிலக்கியங்களின் காலகட்டத்தில் — தமிழிலும் அப்படி இருந்தது. தமிழிலக்கியத்தில் அந்த அம்சம் கொண்ட எழுத்து லா.ச.ராாமாமிருதத்தின் எழுத்தும் , கோணங்கியின் கதைகளும்தான்.

ஆனால் கு .ப.ராஜகோபாலனின் கலை அத்தகையது அல்ல. அது அலங்காரங்களுக்கு நேர் எதிரானது. சொல்லும் விதத்தில் பல்வேறு சாத்தியங்களை அவர் சோதனை செய்யவில்லை. ஜாலங்களை முயற்சி செய்யவில்லை .கச்சிதமான ,முழுமையான ,கூறல்முறைக்காகவே முயன்றார். ஆகவே அவருக்கு கூறப்படும் விஷயம் முக்கியமானதே.எந்த அளவுக்கு அது சொல்லப்பட்டது என்பதை வைத்துத்தானே கச்சிதமா இல்லையா என்று சொல்லமுடியும் ?என் தரப்பை சிறு சிந்தனைக்கு பிறகு நண்பர் ஏற்றுக் கொண்டார். ‘ஆம். கு.ப. ராஜகோபாலன் தன் இலக்கிய ஆக்கங்கள் மூலம் தொடர்ந்து ஒன்றை சொல்ல முயன்றார் என்றே படுகிறது. அதை மனதின் உள்ளோட்டங்கள் என்று சொல்லலாம் ‘ ‘ என்றார் . ‘அவை வெளியே தெரியாதவை ,ஆதலால் அவற்றை வெளியே சொல்லும்போது அவை இயல்பு மாறி விடுகின்றன. அவற்றை உணர்த்தவே முடியும். கு.ப.ராஜகோபாலன் முயன்றது அதற்காகவே. தன் கதைகள் மூலம் சொல்லாமல் உணர்த்தப்படவேண்டிய விஷயத்தையே அவர் முன்வைத்திருக்கிறார். ‘ நண்பரின் இவ்விளக்கம் கு ப ராஜகோபாலனின் ஆக்கங்களைப்பற்றிய சிறந்த மதிப்பீடு என்பதில் ஐயமில்லை. ஆனால் இது அவர் மீது முன்வைக்கப்பட்டுவரும் வழக்கமான கருத்தே

தமிழின் மூத்த விமரிசகர்கள் பெரும்பாலும் கு.ப.ராஜகோபாலன் மீதுசற்று அதிகப்படியான கரிசனத்துடனேயே எழுதியுள்ளார்கள். கறாரான விமரிசகரான எஸ்.வி. சுப்ரமணிய அய்யர் புதுமைப்பித்தனுக்கு அளித்த [வடிவச்சிதைவு குறித்த] சிறு எதிர்மதிப்பீட்டைக் கூட அவருக்கு அளிக்கவில்லை. சி சு செல்லப்பா அவரை கொண்டாடினார். க.நா சுப்ரமணியம் புதுமைப்பித்தனுக்கு சமானமான அல்லது சற்று மேலான ஓர் இடத்தை அவருக்கு அளித்தார். புதுமைப்பித்தனிடம் சோதனைகள் அதிகம், கு.ப.ராஜகோபாலனிடம் வெற்றிகள் அதிகம் என்றார் க.நா.சுப்ரமணியம் . இதைச் சுட்டிக்காட்டி தன் ‘தமிழ்ச் சிறுகதைவரலா ‘ற்றில் எம் வேதசகாயகுமார் புதுமைப்பித்தனுடையது அடர்காடு. பெரியமரங்களும் சிறுசெடிகளும் உள்ளது. கட்டற்றது. கு.ப.ராஜகோபாலனின் எழுத்து சீர்ப்படுத்தப்பட்ட தோட்டமே என்றார் .வெங்கட் சாமிநாதன் அவரை தமிழின் சாதனையாளராகவே காண்கிறார். சுந்தர ராமசாமிக்கு சிறுகதைவடிவத்தின் சிறந்த மாதிர்ியை அடைந்தவர் அவர் என்று படுகிறது. இந்த சாதக மதிப்பீடுகளுக்கு இவர்களைத்தூண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது சோகமான வாழ்க்கையும் ,அவல முடிவும். இரண்டு அவர் நவீனத்தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பது.வேறு காரணங்களும் இருக்கலாம்.

முன்னோடிகளை பேரிலக்கியவாதிகளாக கருதும் மனமயக்கம் எல்லா இலக்கிய மரபிலும் உள்ளதுதான் . ஒரு இலக்கியச் சூழலில் புதிய போக்கு ஒன்றை உருவாக்குவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. அதற்கு பின்னால் பொது ஓட்டத்தில் இருந்து விலகி இயங்கும் ஆன்ம பலமும் , வெளியுலகு மீதான ஆரோக்கியமான தொடர்பும், தன் சுய ஆளுமை மீதான ஈடுபாடும் உள்ளன. முன்னோடி என்பது இலக்கியத்தில் கண்டிப்பாக ஒரு எளிய பீடம் அல்ல. ஆனால் அபூர்வமாகவே முன்னோடிகளில் பேரிலக்கியப்படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். குறைவாகவே முன்னோடிகள் செவ்விலக்கியத்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள் [ கிளாஸிக் என்ற சொல்லின் இரு அர்த்தங்களுக்கு இவ்விரு சொற்களையும் பயன்படுத்துவது என் வழக்கம். ஒரு சூழலின் உச்ச இலக்கியப்படைப்புகளை ஆக்கியவர் பேரிலக்கியவாதி. ஒர் இலக்கிய மரபின் அடிப்படைகளை உருவாக்கிய படைப்புகளை ஆக்கியவர் செவ்விலக்கியவாதி] புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான செவ்விலக்கியவாதி. பேரிலக்கியம் என்பது எளிீய விஷயமல்ல. கு.ப. ராஜகோபாலன் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம் நவீனத்துவச் சிறுகதைவடிவின் அடிப்படைகளை உருவாக்கியவர்.

கு.ப. ராஜகோபாலனின் படைப்புகளை இன்று படிக்கையில் மிக மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட அவரது கதைகளே பொருட்படுத்தும்படியாக உள்ளன என்பதைக் காணலாம். ‘காணாமலே காதல் ‘ என்ற தொகுதியில் உள்ள அவரது சரித்திரக் கதைகளை நல்லுபதேசத் தட்டைப்படைப்புகள் என்று நிராகரிக்கலாம்.  கனகாம்பரம் என்ற தொகுதியில்தான் சில நல்ல கதைகள் உள்ளன. ஆற்றாமை, விடியுமா, சிறிது வெளிச்சம் , பண்ணைச்செங்கான்…. இக்கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லித்தான் அவரது கதைகள் இத்த்னை காலம் சிலாகிப்பைப் பெற்றுள்ளன. ஒரு கோணத்தில் பார்த்தால் அவரது கதைகள் சாதாரணமாகக் கிடைக்காமல் இருந்தமைதான் அவரது இலக்கிய இடத்தை இத்தனைகாலம் தக்கவைத்துக் கொள்ளக் காரணமா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.

‘ஆற்றாமை ‘ தமிழில் ஒரு முக்கியமான கதை . அதன் கலைத்தன்மையால் என்பதைவிட அது தொடர்ந்து தமிழுக்குப் பல கதைகளை உருவாக்கும் முன்வடிவமாக அமைந்தது என்ற வகையில். பாலுணர்வுகள்மீது பலவகையான பாசாங்குகள் நிரம்பிய நம் கலாச்சார சூழலில் பாலுணர்வுகளும் வன்முறையும் கலாச்சாரத்தின் அடியோட்டமாக ஓடுவதன் சித்திரத்தை அளிக்கும் அழகிய பல கதைகளை இதை முன்மாதிரியாகக் கொண்டு தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். பாலுணர்வின் தன்னிச்சையான வல்லமைக்குக்கும் சமூக நெறிகளுக்கும் இடையேயான நுட்பமான மோதலை, அன்பும் பாலுணர்வும் இடம் மாறும் நுட்பமான சிக்கல்களை தமிழ்ச்சிறுகதை மிக வெற்றிகரமாகவே தொட்டுக் காட்டியுள்ளது. உள்ளழுத்தப்பட்ட காமம் குரோதத்தின்த்தின் விளிம்பை தொட்டுப் பின்வாங்குவதைச் சொல்லும் கதையான ஆற்றாமை ஒரு முக்கியமான முன்னோடியான முன்னகர்வேயாகும்.

ஆனால் அம்முன்னகர்வு வெறுமே வடிவம் சார்ந்தது மட்டுமே. இக்கதை கூறும் வாழ்க்கைப்பார்வை எவ்வகையிலும் நமக்கு புதிதல்ல. காம குரோத மோகங்கள் ஓடும் நதியாக மானுட மனதை காட்டிய பேரிலக்கியங்கள் உள்ள மண் இது. மீண்டும் மீண்டும் காமம் போன்ற அடிப்படை விஷயத்தைத்தானே இலக்கியம் சொல்லமுடியும் என்று கேட்கலாம். உண்மை, ஆனால் பேரிலக்கியங்கள் மனதின் ஒரு கோணத்தைக் காட்டுவதில்லை. இருளும் ஒளியும் சேர்ந்து உருவாகும் எல்லையற்ற நிழலாட்டத்தின் கணம்தோறும் பெருகும் சித்திரப்பெருவெளியை அவை காட்டுகின்றன. கு.ப.ராஜகோபாலன் அன்றாட வாழ்க்கையின் திரையை விலக்கி காமத்தை காட்டி நிறுத்திவிடுகிறார். ‘ஆற்றாமை ‘யில் அப்பெண்ணின் மனம் நமக்கு தெரியும் கணத்தில் ஏற்படும் திறப்பு மட்டுமே அதன் அனுபவம் .அதற்கு பிறகு முன்னகர ஏதும் பாதை இல்லை. அதுவரை நம்மை இட்டுவந்த கு.ப.ராஜகோபாலனின் தொழில்நுட்பத்திறனை எண்ணி மகிழ்வதன்றி.

கு.ப.ராஜகோபாலனின் சிறந்த கதைகளில் ஒன்றான ‘சிறிதுவெளிச்ச ‘த்தை காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய ‘மரப்பாவைகள் ‘ என்ற சிறுகதையுடன் நான் ஒப்பிட்டுக் கொள்வதுண்டு. மரப்பொம்மைகள் விற்கவரும் ஒருவனுக்கும் வீட்டில் உள்ள இளம்பெண்ணுக்கும் இடையே நடக்கும் சிறு மனெளரசல்தான் அக்கதை. இருவருமே தங்கள் காமத்தின் ஏக்கத்தை உணர்ந்து , ஒருவருக்கொருவர் உணரச்செய்து எல்லைதாண்டாது திரும்பிச்செல்வதைப்பற்றிய அக்கதை கிட்டத்தட்ட கு.ப.ராஜகோபாலனின் கதைதான். ஆனால்கதில் அந்த மரப்பொம்மைகள் சொல்லப்படுவதற்கும் குறிப்புணர்த்தப்படுவதற்கும் அப்பால் ஒரு கவித்துவமான குறியீட்டுத்தளத்துக்கு கதையைக் கொண்டு செல்ல்கிறது. கு.ப.ராஜகோபாலன் தன் கவிதையை புனைவின் மெளனம் கொண்டதாக மட்டுமே அமைத்துள்ளார். கவித்துவமெளனத்தினை எந்தக் கதையிலும் முயன்றது இல்லை. மெளனம் கனம் கொள்வதும் முடிவின்மையை வாசிப்பில் உணரச்செய்வதும் கவித்துவம் கொள்ளும்போதுதான். இந்த முக்கியமான அம்சத்தை முதலிலேயெ சொல்லிவிடவேண்டியுள்ளது.

காமத்தின் உள்ளோட்டம் உருவாக்கும் உணர்வெழுச்சிகளின் நுட்பமான வெளிப்பாடு என்பது தமிழ்ச் சமூகத்துக்கு மொத்தமாகப் பொருந்திவரக்கூடிய ஒன்றா என்ன ? தமிழ் சமூகத்தின் மேல்தட்டில் இருந்த சில சாதியினரின் உலகுக்குள் மட்டுமே உள்ள விஷயம் அல்லவா அது ? உறவுகளுக்குள் கவனமும், அதன் விளைவான நாசூக்கும் உருவாகிவிட்ட சாதிகளுக்கும் வற்கத்தினருக்கும் உரியது அது என பொதுவாகச் சொல்லலாம் . அதன் சமூகவியல் தளங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை . அதீத உடைமைமனநிலை , உடல் உழைப்பின்மை ஆகியவற்றால் வெகுவாக திரிபுபட்ட காமம் அது . அதாவது கூடத்துக்கும் புழக்கடைக்கும் இடையே நிறைய தூரம் இருந்த வீடுகளுக்கு உரியது. அதன் சிக்கல்கள் பல அப்படியே அடுத்த தள மக்களுக்கு பொருந்துவன அல்ல. உதாரணமாக பிற்பாடு எழுதவந்த பல படைப்பாளிகள் காமத்தைப்பற்றி எழுதியவிதமே வேறாக இருந்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கு அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை உதாரணம் காட்டலாம். ‘அழகம்மாள் ‘ ‘கனிவு ‘ ‘புற்றில் உறையும்பாம்புகள் ‘ ஆகிய கதைகளை கு.ப.ராஜகோபாலனின் காமம் சார்ந்த கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இக்கதைகளிலும் காமத்தின் கரவும் ரகசிய ஆட்டங்களும் உள்ளன, ஆனால் அவை நாசூக்கும் பூடகமும் கொண்டவையாக இல்லை .

ஒரு குறிப்பிட்ட சூழலுக்குரிய சித்தரிப்பாக ஒரு ஆக்கம் இருப்பது குறையல்ல. அது தன் முதற்கட்ட சித்திரத்தை வாசக மனதிலே உருவாக்கியபிறகு மேலும் வளர்ந்து மானுடத்தன்மையை அடையவேண்டும். தல்ஸ்தோயின் எழுத்துக்களில் ருஷ்ய பிரபுகுல வாழ்க்கையின் யதார்த்தமே உள்ளது . ஆனால் அதன் உச்சங்கள் மானுடம் தழுவிய அகச்சிக்கல்களை நோக்கி நகர்கின்றன. இதுதான் முக்கியமானது .கு ப ராஜகோபாலனின் பெரும்பாலான கதைகளில் பேசுதளம் மட்டுமல்ல பேசப்படும் ஆழமும் அப்படி ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் நின்றுவிடக்கூடியதாகவே உள்ளது. முரண்பாடாகத் தோன்றும் ஒரு விஷயம் உண்டு. அவ்வுலகின் விரிவான சித்திரத்தை அவர் முன்வைக்கவில்லை, அதிலிருந்து ‘உயரிய ஓர் யதார்த்ததை ‘ அவர் உருவாக்கமுயல்கிறார். அவ்வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை , காமம் சார்ந்த சிக்கல்களை மட்டுமே கருத்தில்கொண்டு அதை இலட்சியவாதச்சாயலில் மறுஆக்கம் செய்து அளிக்கிறார். ‘வாழ்க்கை இலக்கியமன்று. வாழ்க்கை முடிவடைகிற இடத்தில் இலக்கியம் ஆரம்பமாகிறது ‘ என்ற கு.ப.ராஜகோபாலனின் வரி முக்கியமாகஇங்கே கவனிக்கத்தக்கது.

ஆக கு.ப. ராஜகோபாலனின் பங்களிப்பு எந்த தளங்களில் நிகழ்கிறது ? நீண்ட விவசாயசமூக வரலாற்றில் இருந்து அடுத்தகட்ட சமூகக் கட்டமைப்பை நோக்கி வந்த உயர்தள மக்களின் காமம் சார்ந்த ஒருசில உளவியல் சிக்கல்களை அவர் எடுத்துப் பேசினார் என்பதே பொருத்தமானது. முந்தைய சமூகக் கட்டமைப்பின் பாலியல் சார்ந்த அடக்குமுறை , இடக்கரடக்கல்கள், நாசூக்குகள், சுத்த அசுத்த போதங்கள் ஆகியவை நவீன காலகட்டத்தில் அடையும் மோதல்களையும் திரிபுகளையும் நுட்பமாகப் பார்க்க முயன்றார். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரை மிகமிகக் குறுக்குவது அவர் பாலியல் சார்ந்தே அந்தப் பெரும் கலாச்சாரமாற்றத்தை பார்த்தார் என்பதே. உறவுகளின் பல்வேறுபட்ட இணைவுகளை நாம் அவரது படைப்புலகில் காணமுடியவில்லை . பாலுறவின் சிக்கல்கள் கண்டிப்பாக முக்கியமானவையே ஆகும். ஆனால் அதற்குச் சமானமான முக்கியத்துவம் கொண்ட வேறு மோதல்களும் சிக்கல்களும் உள்ளன. பொதுவாகச் சிலவற்றை அடையாளப்படுத்துகிறேன். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகும் மோதல் . நம் மதநம்பிக்கைகள் மற்றும் குலதெய்வங்களுக்கும் நமது நவீனத்துவப்பார்வைக்கும் இடையேயான மோதல். நமது இனக்குழுசார்ந்த வாழ்க்கைமுறை நவீனகாலத்தின் வாய்ப்புகள்மூலம் முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கைமுறையுடன் உறவுகொள்ளும்போது ஏற்படும் சிக்கல் . மாறுபட்ட மதிப்பீடுகள் ஒழுக்க சந்திக்கும்போது உருவாகும் தடுமாற்றங்கள். நம்மில் எவருக்கேனும் இவை சிறிதேனும் இல்லாமல் உள்ளதா என்ன ?

இந்தியா நவீனமயமானபோது பண்டைய இந்தியா நவீன இந்தியாவை சந்தித்துக் கொண்ட கலாச்சார , வரலாற்றுப் புள்ளிகளை இந்திய எழுத்தாளர்கள் பலவகையில் தீவிரமாக எழுதிய்ள்ளனர். கு ப ராஜகோபாலனுக்கு முன்னுதாரணமாக அமைந்த தாகூர் எழுதிய கோரா என்ற பெரும் நாவல் ஓர் உதாரணம். இந்து மரபைப்பற்றி ஒரு தீவிரமான ஆசாரப் பார்வையை கொண்ட கோரா அவன் பிறப்பால் ஒரு வெள்ளையன் என்ற உண்மையை அறியும்போது வாழ்க்கையின் இயல்பான கட்டுக்கடங்காத தன்மையை சந்தித்து ஆழமான ஒரு மோதலை அடைகிறான், தரிசனத்தையும். கு.ப.ராஜகோபாலன் தாகூரிலிருந்துகூட பெண்களை மட்டுமே கவனித்து பெற்றுக் கொண்டிருக்கிறார். தாராசங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதன் ‘ நாவலில் ஆயுர்வேதம் X நவீனமருத்துவம் என்ற குறியீட்டினூடாக இந்த மாபெரும் கலாச்சார நகர்வின் முழுமையும் மானுடவரலாற்றின் சிக்கலான உள்நகர்வும் சித்தரிக்கபடுகின்றது. யு.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா இன்னொரு முக்கியமான உதரணம். அங்கே பிராணேசாச்சாரியார் மரபின் பிரதிநிதியாக நின்று மாறிவரும்காலத்தை சந்தித்து ‘சந்தையில் ‘ வைத்து தன் சாரத்தைக் கண்டடைகிறார். எஸ் எல் பைரப்பாவின் வம்சவிருட்சம் இன்னொரு முக்கிய உதாரணம். இந்த படைப்புகள் காட்டும் உக்கிரமும் தீவிரமும் யதார்த்தமும் கொண்ட மோதல்களுக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் எந்தவிதமான ஒப்புமையும் இல்லை.

புதுமைப்பித்தனின் ‘கல்யாணி ‘, ‘கோபாலபுரம் ‘ போன்ற கதைகள் கு.ப. ராஜகோபாலனின் கருக்களை கையாண்டவை எனலாம். இவற்றில் மன ஓட்டங்களை சொல்ல முயல்கிறார் புதுமைப்பித்தன். கதையில் அவரும் ஒரு குரலாக ஒலிக்கிறார். விமரிசனங்களை வெளிப்படையாக முன்வைக்கிறார். ஆனால் கு.ப. ராஜகோபாலனின் கதைகள் சொல்லவேண்டிய அனைத்தையும் குறிப்புணர்த்தவே முயல்கின்றன. அடையாளம் காண்பது என்பதுடன் அவரது பயணம் முடிந்துவிடுகிறது. ஒன்று சொல்லவேண்டும், அக உணர்வுகள் சார்ந்து எழுதப்பட்ட புதுமைப்பித்தன் கதைகள் எல்லாமே விமரிசனக்குரல் ஊடுருவுதலாலும் வெட்டவெளிச்சமான கூறுமுறையாலும் கலைக்குறைபாடு உள்ள படைப்புகள்தான். இங்கு வடிவரீதியாக ஜெயிப்பவர் கு.ப. ராஜகோபாலன்தான்.

 

[மேலும் ]

 

முந்தைய கட்டுரைமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47