லவ்வுல்லா!

RollGA004-3

 

எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் வழியாக உண்மையிலேயெ தங்களை கண்டடைகிறார்களா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. அந்த சந்தேகத்தை எனக்கு உருவாக்கியது சுந்தர ராமசாமியிடம் நான் நெருங்கி பழகியதுதான். எழுத்தினூடாக இயல்பாக வெளிப்பட்ட சுந்தர ராமசாமிக்கும் அவர் தன்னை புரிந்துகொண்டு முன்வைத்த விதத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அவருடைய மொத்தப்புனைவுலகையும் அவர் வெளிப்பட்டவை அவர் வெளிப்பட விரும்பியவை என இரண்டாகப்பிரித்துவிடலாம்.

முதிராஇளமையில் அன்றைய இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் சுந்தர ராமசாமி அவருடைய இலட்சிய மனிதர் ஜீவா. எளிய மனிதருள் இருந்து எழுந்து வந்த மாபெரும் மனிதாபிமானி. தத்துவம் வழியாக ஜீவா கார்ல்மார்க்ஸைச் சென்றடையவில்லை, மனிதாபிமானம் வழியாகச் சென்றடைந்தார். சொல்லப்போனால் இறுதிவரை அவருக்கு ஐரோப்பிய தத்துவ மரபில் இருந்து உருவாகி வந்த மார்க்சியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கு பிடிபடவே இல்லை. மாறாக தன் முன் காலுக்குச் செருப்புமில்லாமல்கால்வயிற்றுக் கூழுமில்லாமல் பாழுக் கு உழைத்து பசையற்றுப் போன எளிய மக்களைப்பார்த்து எழுந்த கனிவும் கோபமும் அவரை மார்க்ஸ் நோக்கி கொண்டு சென்றது.

உண்மையில் மார்க்ஸை தத்துவவாதிகள் அணுகியதைவிட இன்னும் அணுக்கமாக அணுகி பார்க்கவைத்தது அந்த அணுகுமுறை. மார்க்சியத்திலிருந்து சுந்தர ராமசாமி கணக்கு பேசி முடித்து துண்டை உதறி தோளில்போட்டு வெளிவந்ததை ஒரு புளியமரத்தின் கதையின் முன்னுரையில் அவர் எழுதியிருக்கிறார். உண்மையில் அது அவர் விரும்பிய ஒரு குடும்பமுறிவு. ஆனால் இறுதிவரை அது நிகழவே இல்லை. நானறிந்த சுந்தர ராமசாமி இறுதி மூச்சுவரை அந்தப்பழைமையான மார்க்ஸிஸ்ட்டாகவே வாழ்ந்து மறைந்தார்.

மார்க்சியத்தின் அரசியல் செயல்திட்டங்களில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பொருளியல் மேல் அவர் நம்பிக்கை இழந்தார். ஆனால் அதன் லட்சியவாதமான மனிதாபிமானத்திலிருந்து அவர் விலகிச் செல்லவே இல்லை. அவருடைய மிகச்சிறந்த படைப்புகள் அனைத்திலுமே வெளிப்படுபவர் இந்த சுந்தர ராமசாமி தான். ’பிரசாதம்’, ’வாழ்விலே ஒரு முறை’, ‘கோயில்காளையும் உழவு மாடும்’, ‘ரத்தினாபாயின்  ஆங்கிலம்’ என அவரது அனைத்து சிறுகதைகளையும் இணைக்கும் கருத்தியல் பொதுச்சரடு இதுதான்.

ஆனால் அவர் ஒரு மௌனி ஆகிவிடமாட்டோமா என்று ஏங்கினார். என் கணிப்பில் மௌனி சுந்தர ராமசாமியைவிட ஓரிரு படிகள் கீழே நின்றிருக்கும் ஒருவர். மௌனியின் உலகில் ஆன்மீகமான அம்சங்கள் எதுவுமே இல்லை. பெரும்பாலும் உணர்வு ரீதியான உலகியல் அவருடையது. அவ்வுலகியலை எதிர்கொள்ளும் திகைப்பை எழுத முடிந்ததமையாதான் அவரது சிலகதைகள் கலையாகின்றன. சுந்தர ராமசாமியின் மனிதாபிமானத்தில் உள்ள ஆன்மிகத்தன்மை பல மடங்கு மேலானது.

ஆனால் எழுபதுகளின் இலக்கியச் சூழலில் மேலோங்கியிருந்த ஒருவகையான நவீனப் பிராமண மனம் உருவாக்கிக்கொண்ட பிரமை அவரை மௌனியை நோக்கித் தள்ளியது. நாரணோ ஜெயராமன்  ‘பல்லக்குத் தூக்கிகளி’ன் முன்னுரையில் எழுதிய ஒரு வரி மிகச்சிறந்த உதாரணம்.  ‘சுவாரசியமான எழுத்தாளராக இருந்தவர் இப்போது தான் கலைஞனாக மாறியிருக்கிறார்’ என்று சுந்தர ராமசாமியை அவர் மதிப்பிட்டார். நாரணோ ஜெயராமனால் சிலாகிக்கப்பட்ட் பல்லக்குத் தூக்கிகளில் உள்ள வாசனை, அழைப்பு போன்ற பெரும்பாலான கதைகள் இன்றைய வாசகனுக்கு அலுப்பூட்டக்கூடிய  உருவகக்கதைகள் மட்டுமே. ஆனால்  ‘பிரசாதம்’ தொகுப்பின் பல கதைகளை இன்றைய வாசகன் பெரும்பரவசத்துடன் புதிதாக கண்டுபிடிக்கமுடியும். உதாரணம் லவ்வு.

jeeva communist 550 1
ஜீவானந்தம்

 

ஒரு எளிய நகைச்சுவைக் கதையாகவே படிக்கப்பட்டு வந்த கதை அது. எண்பத்தெட்டில் சுந்தர ராமசாமியிடம் அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என நான் சொன்னபோது அவர் உண்மையில் எரிச்சல் அடைந்தார். தனது பெறுமானத்தை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றுதான் அவருக்கு அன்று தோன்றியது. எனது விளக்கங்கள் அவருக்கு நிறைவளிக்கவும் இல்லை.

நீண்ட காலத்துக்கு இப்பால் நின்று அக்கதையை மறுபடியும் படிக்கும்போது கணிப்பு மீண்டும் உறுதியாகிறது. சுந்தர ராமசாமியின் கதைகளில் மட்டுமல்ல தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று லவ்வு. பிரமு ஆச்சி தன் பேரப்பிள்ளை அணைஞ்ச பெருமாளுடன் வசித்து வருகிறாள். அணைஞ்ச பெருமாள் கொஞ்சம் அணைந்து கரிபடிந்த ஆள்தான். தூக்குப்போசியுடன் தறி நெசவுக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பிவருவான். போசியில் பிழிந்த பழைய சாதமும் துவையல் உருண்டையும் இருக்கும். பொரிகடலை வாங்கித் தின்பதற்கு கிழவியிடம் பத்துக் காசு சண்டை போட்டு வாங்கிக் கொள்வான்.

திரும்பும்போது நாகர்கோவிலில் இருந்து வரும் ஏதேனும் ஒரு மாட்டுவண்டியை பிடித்துக் கொண்டு நடந்து வருவது வழக்கம். மாட்டுவண்டி கிடைக்கவில்லையென்றால் அவன் திரும்பி வருவதற்கு நெடுநேரம் ஆகும். கேட்டால் வண்டி கிடைக்கவில்லை என்று சொல்வான். கிழவிக்கு அது புரியாது, “சவம் ஏதோ பினாத்துது” என்று எடுத்துக் கொள்வாள். இப்படிப்பட்ட அணைஞ்ச பெருமாள் திடீரென்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறான். பெரியவர்களாகப் பார்த்து திருமணம் செய்துவைத்தார்களாம். தாலி கட்டச்சொன்னார்களாம் “கெளவி கோசலை அளகுபோல இருக்கா பாரு” என்கிறான்

”அடப்பாவி. இது யாருலே? என்னலே செய்தே?” என பிரமு ஆச்சி பதறித் துடித்தாலும் பக்கத்துவீட்டு கிழவி சொல்கிறாள் “எது எப்படி இருந்தாலும் அவனுக்கும் திருமணம் ஒன்று ஆகிவிட்டது. நீ இந்த வயசில் எங்கே போய் பெண் பார்த்து வைக்கப்போகிறாய்?” பிரமு ஆச்சி ”அதுவும் உண்மைதான்” என்கிறாள் சமாதானமாகி.

ஆனால் கோசலை ஆறாவது மாதத்தில் திண்டோதரன் மாதிரி ஒரு மகனைப் பெறுகிறாள். கிழவிக்கு இடி விழுந்தது போல் ஆகிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இப்படி உண்டா?” என்று அலமலந்துபோகிறாள். “யாருடி அது? எவன் பிள்ளைடி அது?” என்று திருப்பி திருப்பி கோசலையிடம் கேட்கிறாள். அவளோ வந்த நாள் முதல் எதுவுமே பேசுவதில்லை. மூர்க்கமான வெறியுடன் வீட்டு வேலைகள் செய்வாள். எஞ்சின நேரம்முழுக்க தன்னந்தனியாக படுத்து தாலியில் இருக்கும் ஊசியால் பல்லைக் குத்திக் கொண்டிருப்பாள். கிழவி நூறு முறை கேட்டும் அவள் ஒன்றும் சொல்வதில்லை.

அணஞ்ச பெருமாளிடம் “ஏலே மோணையா, ஆருன்னு கேளுலே” என்று கிழவி சொன்னால் ”சும்மா போட்டு பினாத்தாதே, அறஞ்சே கொன்னுடுவேன், நான் பிள்ளையப் பாப்பேனா உன்னை பாப்பேனா?” என்று அவன் திட்டுகிறான்.

நிலையழிந்திருக்கும்போதுதான் அங்கு புலவர் கோலப்பன் வருகிறான். கோலப்பன் வில்லுப்பாட்டு பாடுபவன். பரம ஆபாசமான விஷயங்களையும் முகஞ்சுளிக்காமல் சொல்லும் திறமை படைத்தவன் என்று ஆசிரியரால் வர்ணிக்கப்படுகிறான். வெற்றிலை போட்டுப் போட்டு வாயில் ஒரு பகுதி கிழிந்திருக்கும் என்று அவனது தோற்றத்தை காட்டுகிறார் ஆசிரியர். புலவர் கேட்கிறான் ”என்ன பேசுதே நீ? நீ எந்தக் காலத்தில் இருக்கே? இது லவ்வுல்லா?”

”என்னது?” என்று கிழவி பீதியடைகிறாள். ”இது லவ்வு! வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சது, லவ்வுன்னாலே இப்படி ஆகும்” என்று கோலப்பன் சொல்கிறான். கிழவிக்கு ஆச்சரியம் தாளவில்லை “லவ்வு” என்று சொல்கிறாள். “அழுத்திட்டியே… இந்தா இந்த மாதிரி சொல்லு, லவ்வு” என்கிறான். “இந்தா பூ மாதிரி சொல்லுதேன் பாத்துக்கொ.. லவ்வு லவ்வு” என்று கிழவி சிறுமியை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறாள்.\

“ஆ! சொல்லியாச்சில்ல இதுதான். அணஞ்ச பெருமாள் சந்தைக்கு போன இடத்தில் லவ்வாகியிருக்கும். இது அவனுடைய குழந்தைதான் லவ்விருந்தா இப்படி தான் குழந்தை பிறக்கும்” என்கிறான். கிழவிக்கு மனநிறைவு. ”நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சேனே கோலப்பா. நல்ல வேளை தெய்வமா வந்து நீ எனக்கு எல்லாத்தையும் தெளிவுபடுத்திட்ட” என்கிறாள். தன் கிழவித்தோழி வந்தவுடன் இந்த விஷயத்தை சொல்வதற்காக ”லவ்வு” என்று அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டு கிழவி காத்திருக்க ஆரம்பிக்கிறாள். பூரிப்புடன் சொல்லிக்கொள்கிறாள் “லவ்வுல்லா!”

ஒரு புன்னகையுடன் படித்து முடிக்கக்கூடிய கதை. சுந்தர ராமசாமியின் மிகச்சிறந்த படைப்பு. மகாபாரதத்தில் தந்தைக்கு எவரெல்லாம் மைந்தராக முடியும் என்கிற பட்டியலை போட்டிருக்கிறார்கள். கானீனன் என்றால் மனைவி பிறிதொருவனிடமிருந்து தெரியாமல் பெற்றுக் கொண்ட குழந்தை. குமரி மாவட்ட வழக்கில் மிகச்சரியாக அதைக் காட்டுக்குட்டி என்று மொழிபெயர்ப்பார்கள். காட்டில் சென்று உறவு கொண்டதால் வந்த பிள்ளை. அவனும் அந்த தந்தையின் மைந்தன்தான்.

எல்லாவகையான குழந்தைகளையும் ஏதேனும் ஒரு பெயரிட்டு மகன் என்று அடையாளப்படுத்துகிறது மகாபாரத அறம். எந்தக் குழந்தையுமே அந்தச் சமுதாயத்திலிருந்து தந்தை இல்லாதவன் என்று புறக்கணிக்கப்படுவதில்லை. தொன்மையான ஒரு பழங்குடிச் சமுதாயத்தில் குழந்தைகள் அத்தனை மதிப்பு மிகுந்தவை. அதிலிருந்த அந்த மிகப்பெரிய மனிதாபிமானத்தின் ஒரு நவீன முகம் என்று இந்தக் கதையைச் சொல்ல முடியும்.

கேலியாகவே கிழவியை ”லவ்வுல்லா..” என்று சொல்ல வைக்கிறார் சுந்தர ராமசாமி. ஆனால் அந்தப் பிரியமான கேலிக்குப் பின்னால் இருந்து கொண்டு மாபெரும் பொதுவுடமை ஆசானாகிய ஜீவா ”அன்பல்லவா..” என்று சொல்லும் குரல் எனக்குக் கேட்கிறது. சுந்தர ராமசாமியின் ஒரு அதிகாரபூர்வமான கொள்கை விளக்கமாக இந்த வரியை நான் சொல்வேன். லவ்வுல்லா!

 

தோழர் ஜீவா -ஒரு கட்டுரை

 

முந்தைய கட்டுரைகாஷ்மீரும் பி.ஏ.கிருஷ்ணனும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43