[ 19 ]
நீண்டபேச்சுக்குப்பின் வரும் அமைதியில் சித்தத்திலும் சொற்களில்லாமல் ஆகிவிடும் விந்தையை அதிலிருந்து விழித்தபின் தருமன் எண்ணிக்கொண்டார். காற்று மரங்களை உலைக்கும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் காட்டுக்குள் கருங்குரங்குகள் நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பின. அரசமரத்திலிருந்து இலைகள் சுழன்றிறங்கி சரிந்து சென்றன.
இளைய யாதவரின் சொற்களினூடாக நெடுந்தூரம் சென்று அறியா நிலங்களில் வாழ்ந்து மீண்டபோது உதிரியான காட்சிகள் மட்டும் கனவு கலைந்து எஞ்சுவன போல அவருள் இருந்தன. இளைய யாதவர் சற்று அசைந்தபோது அவ்வோசையால் அவர் முழுமையாக மீண்டு வந்தார். “நெடுநேரமாயிற்று” என இளைய யாதவர் சொன்னார். “ஆம், நீங்கள் இதைப்போல கட்டற்றுப் பேசுவதை நான் கேட்டதே இல்லை” என்றார் தருமன்.
இளைய யாதவர் நிமிர்ந்து நோக்கி விழிகளில் சிரிப்புடன் “அப்படியா? நான் பேசிக்கொண்டே இருப்பவன் என்றல்லவா என் கல்வித்தோழர்களும் பெண்களும் சொல்கிறார்கள்?” என்றார். “இளவயதில் என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக்கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது. பேசத்தொடங்கியதுமே கேட்பவர்களை மறந்துவிடுவேன்” என்றபின் மேலும் சிரித்து “நான் கற்ற தத்துவநூல்களை முழுமையாகவே பேசித்தான் தொகுத்துக்கொண்டேன். அவற்றை மறுப்பதும் பேசியபடிதான்” என்றார்.
“முழு தத்துவநூலையும் நின்று கேட்பதென்றால் கடினம்தான்” என தருமன் நகைத்தார். இளைய யாதவரும் நகைத்துக்கொண்டு “அந்நூலை எவ்வகையிலும் எதிர்கொள்ளவில்லை என்றால் கேட்கலாம். என்னுடன் சுதாமன் என்னும் அந்தணன் பயின்றான். எளிய வைதிகன். என் சொற்களை சொற்களாகவே கேட்டு கடந்துசெல்பவன். இரும்புக்காதுகொண்டவன் என அவனை சொல்வார்கள்” என்றார். “அவன் நெடுநாட்களுக்குப்பின் என்னை காணவந்திருந்தான். பெரிய குடும்பம், பதினெட்டு குழந்தைகள். எப்படி அவர்களுடன் வாழ்கிறாய் என்று கேட்டேன். யாதவனே, நான் உன் ஒருவனிடம் அடைந்ததை இவர்கள் பதினெட்டுபேரும் சேர்ந்து எனக்கு அளித்ததில்லை என்றான்.”
தருமன் அவர் சிரிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “யாதவரே, நீங்கள் நகையாட்டாகவும் மன்றுரையாகவும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இன்று பேசியதுபோல உங்கள் செயல்களை நீங்கள் விளக்கிப்பேசியதில்லை” என்றார். இளைய யாதவர் விழிமாறுபட “ஆம்” என்றார். தலைகுனிந்து “அதைப்பற்றியே நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார். தருமன் “ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் இன்னமும் முழுக்க உங்களுக்கே விளக்கிக் கொள்ளவில்லை” என்றார். இளைய யாதவர் விழிகளைத் தூக்காமல் “ஆம்” என்றார். “நீங்கள் செய்தவை உங்கள் நெஞ்சில் இருந்து உறுத்துகின்றனவா?” என்றார் தருமன். அவ்வாறு அவர் ஒருபோதும் இளைய யாதவரிடம் பேசியதில்லை என்று எண்ணமெழுந்தது.
“இல்லை, இதுவே எல்லை என்றுணர்கிறேன். யாதவர் முற்றழிவின் விளிம்புவரை சென்றுவிட்டார்கள். கூர்வாளைச் சுழற்றி விளையாடும் மைந்தனை கல்வீசி வீழ்த்துவதுபோன்றது நான் ஆற்றியது” என்று இளைய யாதவர் சொன்னார். “பிறிதொரு வழி இல்லை. அனைத்தையும் நோக்கிவிட்டு நான் அடைந்தது இது. இந்த அறுவைமருத்துவமே அவர்களை ஒன்றாக்கியது. ஆனால் இதையும் அவர்கள் கடப்பார்கள் என்றால் இனியொன்றும் செய்வதற்கில்லை.”
“அவர்கள் முற்றடங்கிவிட்டார்கள் என்றீர்கள்?” என்று தருமன் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “யாதவர்கள் ஆழத்தில் பெரும்கோழைகள். ஷத்ரியர்களைப்போல எதையும் போராடிப்பெறும் உளம்கொண்டவர்கள் அல்ல. வேளாண்குடிகளைப்போல நெடுநாட்களாக நிலம்காத்து நின்றிருப்பவர்களும் அல்ல. ஒவ்வாததை கைவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் உளநிலை எப்போதும் அவர்களை ஆள்கிறது. மனித உள்ளங்கள் அவர்கள் புழங்கும் சூழலில் உள்ளவற்றில் உள்ளுறைந்துள்ள பொருளை தாங்களும் பெற்றுக்கொள்பவை. எப்போதும் அக்கரைப்பச்சை நாடும் கால்நடைகளால் சூழப்பட்டவர்கள் யாதவர்.”
“களங்களில் நான் அவர்களை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அவர்களால் போரைத் தொடங்குவதுதான் கடினம். இடர் என வந்ததுமே அங்கிருந்து விலகிச்செல்வதைத்தான் அவர்களின் உள்ளம் நாடுகிறது. அவர்களின் உடல்கள் விலகாதபோதுகூட உள்ளம் விலகி நெடுந்தொலைவு சென்றிருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆகவே நீச்சலுக்கு அஞ்சிப்பின்னடைபவனை நீரில் தள்ளிவிடுவதைப்போல ஒவ்வொருமுறையும் அவர்களை போருக்குள் செலுத்துவது என் வழக்கம். போரில் ஈடுபட்டபின் அவர்கள் தங்கள் அச்சத்தை தாங்களே காண்கிறார்கள். அதை வெல்லும்பொருட்டு இரக்கமற்றவர்களாகவும் கண்மூடித்தனமான வெறிகொண்டவர்களாகவும் தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.”
“அவர்கள் போரிடுவதேகூட ஷத்ரியர்களைப்போல அதில் திளைப்பதற்காக அல்ல, அதை முடிந்தவரை விரைவாக முடித்து அதிலிருந்து விலகிவிடவேண்டுமென்பதற்காகவே. அவர்கள் வெற்றியமலை ஆடுவதை நோக்கியிருக்கிறேன். அவர்கள் கொண்டாடுவது தங்கள்மேல் தாங்கள் கொண்ட வெற்றியைத்தான்” என இளைய யாதவர் சொன்னார். “அவர்களின் உள்ளத்தில் நீங்காத அச்சத்தை நிலைநிறுத்திவிட்டேன். இனி ஒரு பூசலுக்கு தன்னியல்பாக அவர்கள் எழப்போவதில்லை. அது அவ்வண்ணமே நீடிக்கும்வரை யாதவரின் ஒற்றுமைக்கும் இடரில்லை.”
“ஆனால் நீங்கள் அதை நம்பவில்லை. உங்கள் உள்ளத்தின் கலக்கம் அதன்பொருட்டே” என்றார் தருமன். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வருவதற்கு முன் உங்கள் ஆற்றல்மிக்க உள்ளத்தால்கூட வகுத்துக்கொள்ள முடியாத ஒன்று நிகழ்ந்தது. அதனால்தான் அர்ஜுனனைத் தேடி வந்திருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு பேசியதுகூட அதனால்தான்” என்று தருமன் மீண்டும் சொன்னார். “ஆம்” என்றார் இளைய யாதவர். அவர் மேலே சொல்வதற்காக தருமன் காத்திருந்தார். ஆனால் உடையை சீரமைத்தபடி இளைய யாதவர் எழுந்துவிட்டார்.
தருமன் எழுந்தபடி இயல்பான குரலில் “இளையவன் தங்களுக்காக காத்திருக்கிறான் என நினைக்கிறேன்” என்றார். “ஆம், இருவரும் இன்று காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லலாம் என சொல்லியிருந்தேன்” என்றார் இளைய யாதவர். “வருகிறேன், அரசே” என்றபின் தயங்கி “நான் இன்று அரசியிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். அவர்களிடம் என் அன்பை தெரிவிக்கவேண்டும்” என்றார். “நீங்களன்றி எவர் அதை அவளிடம் சொல்லமுடியும்?” என்றார் தருமன். “இன்னொருமுறை சந்திக்கும்போது சிரிக்க வைத்துவிடுகிறேன்” என்றபடி இளைய யாதவர் தன் சால்வையை மீண்டுமொருமுறை சீராக போட்டுக்கொண்டார்.
பின்னர் தருமனை நோக்காமல் “சால்வனின் படையெடுப்பின்போதெல்லாம் மூத்தவர் துவாரகையில் இல்லை. பாலைவேட்டைக்குச் சென்றவர் அவ்வழியாக மதுராவுக்கும் பின் மதுவனத்திற்கும் சென்ற பின்னர் திரும்பிவந்தார். திரும்பிவரும்வரை அவரிடம் எதுவும் சொல்லப்படவில்லை. அது என் ஆணை, அவரிடம் அரசியல்செய்திகளை சொல்லவேண்டியதில்லை என்பது” என்றார். தருமன் காத்து நின்றார். “வந்ததுமே அவர் தன் அரசியிடம்தான் பேசினார். மறுநாள் என் மன்றுக்கு அவர் வரவில்லை. மாலை என் அறைக்கும் அவர் வரவில்லை.”
“அவர் எளிதில் உளத்திரிபு கொள்பவர். எளிதில் உளம்திரிபவர்களை வெல்வதும் எளிது” என்றார் தருமன். “ஆம், இடம்பொருள் அறியாப் பெருஞ்சினமே மூத்தவரின் இயல்பு. அது ஓரிரு சொல்லில் அணைந்து குளிர்வதையும் நான் அறிவேன். ஆணவமும் தன்னலமும் தொடாத உள்ளம் கொண்டவர் அவர். ஆகவேதான் அவர் சினம் கொண்டிருப்பார் என்றும் அச்சினம் தணிந்த பின்னர் அவரே வரட்டும் என்றும் ஒருநாள் காத்திருந்தேன். அவர் வரவில்லை என்று கண்டதும் நானே இயல்பாக அவர் அரண்மனைக்குச் சென்றேன். நான் வரும் செய்தியை முன்னறிவிப்பு செய்யவில்லை. வாயிலில் நின்றபின் காவலனிடம் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னேன்.”
“உள்ளே அரசி இருந்தார்கள். அவர்கள் சென்றபின் நான் உள்ளே சென்றேன். மூத்தவர் சினம்கொண்டு பெருங்கைகளை ஓங்கியபடி என்னை தாக்க வருவார் என எண்ணினேன். பலமுறை என்னை அவர் தாக்கியதும் உண்டு. இரண்டு அடிகளை நான் வாங்கிக்கொண்டேன் என்றால் அவர் கை அதன்பின் எழாது. அவரிடம் சொல்லவேண்டிய சொற்களை எனக்குள் கோத்தபடி அவர் அறைக்குள் நுழைந்தேன். அவர் பீடத்தில் அமர்ந்திருந்தார். என் காலடியோசை கேட்டதும் நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை திருப்பிக்கொண்டு அமர்க என்று கைகாட்டினார்.”
நான் அமர்ந்துகொண்டேன். அவர் உடலும் முகமும் காட்டிய மூத்தவரை நான் அதற்கு முன் கண்டதே இல்லை. ஆகவே என் உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. எங்கு பேச்சை தொடங்குவதென்று தெரியவில்லை. கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். அவரும் நான் பேசுவதற்காக காத்திருந்தார். அது அவர் இயல்பே அல்ல. நான் இயல்பாக மதுவனத்தில் பிதாமகர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார் என்று ஒற்றைச் சொல்லுரைத்தார். பெரியதந்தையர் பற்றி கேட்டேன். அதற்கும் ஒற்றைவரியே மறுமொழியாக வந்தது. மதுராவில் தந்தையைப்பற்றியும் அன்னையரைப்பற்றியும் கேட்டேன். நலமாக இருக்கிறார்கள், இடரொன்றும் இல்லை என்றார்.
அவருடைய இயல்பே அல்ல அது என்பதனால் நான் செயலிழந்துவிட்டேன். பின்னர் என்னை திரட்டிக்கொண்டு ஊக்கமெழுந்த குரலில் நான் சால்வனை வென்றதைப்பற்றி சொன்னேன். என்னிடம் வெளிப்படும் சிறுவனை மூத்தவர் பெரிதும் விரும்புவார் என எனக்குத் தெரியும். அதனாலேயே அவர்முன் இருக்கையில் என்னையறியாமலேயே நான் சிறுவனாகிவிடுவதுண்டு. என் குரல் விரைவுகொள்ளும். சிறுவர்களைப்போல கைகால்களை வீசி ஒவ்வொன்றையும் விவரிப்பேன். மலர்ந்தமுகத்துடன் அவர் கேட்டிருப்பார். ‘மூடா! மூடா!’ என தலையிலடித்து சிரிப்பார். ‘பார்த்தீர்களா இவனை, மூடச்சிறுக்கன்!’ என அருகிருப்பவரிடம் சொல்வார்.
அன்று சால்வனின் போர்நிகழ்வுகளை சொல்லச் சொல்ல அவர் விழிகள் வெறுமையாக என்னை நோக்கியிருந்தன. ஆகவே என் குரல் தணிந்தது. அதை நான் மேலெழச்செய்தபோது மிகையாகியது. செயற்கையாக சிறுவனைப்போல் நடிக்கிறேன் என உணர்ந்ததுமே என் பேச்சு அறுபட்டு நின்றது. என்ன ஆயிற்றென்றே தெரியாமல் நான் தன்னிரக்கம் கொண்டேன். ‘மூத்தவரே, இங்கு நிகழ்ந்தவை வெறும் உளப்பிளவுகள் மட்டுமல்ல. யாதவர்களுக்கு குலப்பூசல் புதிதும் அல்ல. ஆனால் தன்குலத்தை போர்முனையில் காட்டிக்கொடுப்பதை இன்றுவரை யாதவர் செய்ததில்லை. நம்மவர் அதையும் செய்தனர். கீழ்மையின் அடியிலி. அதை என் நெஞ்சு தாளவில்லை’ என்றதுமே என் கண்கள் நீர்கொண்டு குரல் உடைந்தது.
அது உண்மை உணர்வு, அரசே. நான் ஆயிரம் அலுவல்சொற்களாலும், நாள்நிகழ்வுகளாலும் மூடிமூடிவைத்திருந்த அனல். அதை மிக அணுக்கமான எவரிடமாவது சொல்ல ஏங்கியிருந்தேன். அவரன்றி அத்தனை அருகே பிறர் எவருமிருக்கவில்லை என்று உணர்ந்தேன். ‘தொன்மை மிக்க ஹேகயகுடியினர் அதை செய்தனர். என்னை களத்தில் சால்வனிடம் ஒற்றுக்கொடுத்தனர். நான் வென்றது வீரத்தால் அல்ல, அவ்வஞ்சம் கண்டு எழுந்த பெருஞ்சினத்தால்தான்’ என்றேன். என் உணர்வுகள் கட்டின்றி பெருகின. தெய்வத்தின் முன் என அமர்ந்து என் உள்ளத்தை பெருக்கினேன்.
‘காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம், மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களை தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால். நம்குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால். நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால். ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால். கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.’
‘சூத்திரர் படைகொண்டு பெயர்கொண்டு வரலாற்றில் எழுந்து வரமுடியும் என்று நாம் பாரதவர்ஷத்திற்கு காட்டியாகவேண்டும். அப்பொறுப்பை நமக்கு அளித்துள்ளது காலம். அதை நாம் தவறவிட்டோம் என்றால் இப்பெருநிலத்தில் பிறகு அது நிகழ மேலும் பல்லாயிரமாண்டுகள் ஆகலாம். ஒவ்வொரு நிலத்திலும் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன தொல்குடிகள். அனைவருக்கும் முன்னால் செல்லும் கொடி நம்முடையது’ என்றேன். ‘அனைத்துக்குடிகளும் வளர்ந்தாகவேண்டும். அதுவே இப்பெருநிலத்தின் நல்லூழ். இங்கு நாம் கோட்டையும் கொடியும் கொண்டு அமர்ந்திருப்பது அதன்பொருட்டே.’
‘இந்தச் சுடரை நாம் அணையவிடலாகாது. அப்பெரும் பழியிலிருந்து நம்மை வரும் தலைமுறைகள் விடுவிக்காது. நம் எதிரிகள் வரவிருக்கும் புதிய பாரதவர்ஷத்திற்கு குறுக்கே நிற்பவர்கள். பெருவெள்ளத்தைத் தடுக்கும் எளிய மதகுகள். அவர்கள் உடைக்கப்பட்டாகவேண்டும். அதைவிட நம்முள் முளைக்கும் வஞ்சகர்கள் முழுமையாக அகற்றப்பட்டாகவேண்டும். தங்கள் அறிவின்மையால் தன்னலத்தால் அவர்கள் அழிப்பது மாபெரும் மானுடக் கனவொன்றை.’
‘ஆம், நான் மிகையான வன்மையுடன் இவர்களை தண்டிக்கிறேன். மூத்தவரே, நான் யானையின் கையிலிருக்கும் கழி. என் எடையைவிட நூறுமடங்கு பெரியது என் அடியின் விசை. நான் வரவிருக்கும் யுகத்தின் படைக்கருவி. புதுமழையில் நிலம் முளைப்பதுபோல பாரதவர்ஷம் தளிர்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒரு புதியகுடி கோல்கொண்டு எழுந்துவருகிறது. நாளுமொரு வணிகப்பாதை சென்று அறியா நிலமொன்றை தீண்டுகிறது. நிலம்பிளந்து எழுந்துவரும் பெருந்திரளின் முகப்பிலெழுந்தது இக்கருடக்கொடி.’
நான் பேசிக்கொண்டிருக்கையில் அவர் விழிகள் நிலையற்று அசைந்தன. தோள்களில் தசைகள் இறுகித்தளர்ந்தன. இயல்பாகத் திரும்பி அருகே இருந்த தாலத்திலிருந்து மாங்கனி ஒன்றை எடுத்து கைகளால் அதன் தோலை உரிக்கத் தொடங்கினார். அக்கணத்தில் என்னில் பெருஞ்சினம் எழுந்தது. ‘ஆகவே என் செயல்களுக்கு நான் இன்றுள்ள எவருக்கும் விளக்கமளிக்க வேண்டியதில்லை. கோடிமாந்தரை கால்கீழிட்டு மிதித்து எழுந்து இவர்கள் இங்கு அமைத்திருக்கும் அரசுகளின் முறைமைகளுக்கும் நெறிகளுக்கும் நான் கட்டுப்பட்டவனும் அல்ல. எளியோரின் விழிநீரை அறியாத இவர்களின் அறமல்ல என் அறம். மானுடத்தை பேரன்புடன் அணைத்துக்கொள்ளாத இவர்களின் இறுகிய வேதமல்ல என் சொல்’ என்றேன்.
‘என்னுள் இருந்து ஆணையிடும் விராடபுருஷனுக்கு மட்டுமே நான் செவிசாய்க்கிறேன். இச்சிறு உடல் அல்ல நான். இக்குடியினன் அல்ல. இக்குலத்தோனும் அல்ல. பாரதவர்ஷமெங்கும் வேரோடி பல்லாயிரம் கிளைவிரித்து வான்சுமந்து நின்றிருப்பவன். இவர்கள் அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லும் வீண் சொல் அல்ல என் உள்ளமைந்தது. முற்றுணர்ந்து சித்தமென்றாகி நின்றிருக்கிறேன் அவ்வறிதலை. ஆம், நானே பரமபுருஷன்!’ என்றேன். அதன்பின் சொல் செல்லாதென்று உணர்ந்து அமைதியடைந்தேன். சிலகணங்கள் தரையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து தலைவணங்கி அவர் அறைவிட்டு வெளியேறினேன்.
ஆனால் என் அறை நோக்கி செல்லச் செல்ல சோர்வடைந்தபடியே சென்றேன். நான் சொன்ன முழங்கும் சொற்களை மீண்டும் கேட்கையில் எவருடையவையோ என ஒலித்தன. அவற்றை ஏன் அத்தனை முழக்கினேன்? அவ்வாறென்றால் நான் அவற்றை உண்மையில் நம்பவில்லையா? தொலைவில் நின்றிருப்பவர்களிடமே கூவிச்சொல்கிறோம், தன்னுடன் சொல்லும் சொற்களை எவரும் கூவவேண்டியதில்லை என்று ஆசிரியர் சொல்வதுண்டு. என் அகம் எனக்குள் அத்தனை ஆழத்திலா அமைந்திருக்கிறது? அவை உண்மை. ஆனால் அவையே உண்மை அல்ல. அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது. அது என்ன? அதை நான் அறிவேன். அதன்மேல் உணர்வுகளால் போர்வையிட்டிருக்கிறேன்.
அது என்ன என்று என் அறைக்குள் சென்று பீடத்திலமர்ந்ததும் உணர்ந்தேன். நான் சொன்னவை அனைத்தும் மெய்யே. பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் புதுக்குலங்கள் முளைத்தெழுவதை காண்கிறேன். அவை எழுந்து தழைத்து இத்தொல்பெருநிலம் வாழவேண்டுமென விழைகிறேன். இதன் தொல்மூதாதையர் அறிந்த மெய்மை பல்லாயிரம் கிளைகள் கொண்டு பெருகவேண்டுமென கனவுகாண்கிறேன். அதன்பொருட்டே இங்கு முடிசூடியிருக்கிறேன். அதற்காகவே குருதிசூடி களம் நிற்கிறேன்.
ஆனால் அது எனக்குள் வாழும் அந்த விராடபுருஷனுக்கு எவ்வகையிலும் ஒருபொருட்டல்ல. அவன் நின்றிருக்கும் வெளியில் அவனைச் சூழ்ந்திருப்பது முழுமுற்றான இன்மை மட்டுமே. அதை உணர்ந்ததுமே நான் விடுபட்டேன். இரும்புத்தூண்மீது படிந்த களிம்பு இந்த யாதவத்தோற்றம். நான் இதுவல்ல. ஆனால் இதுவும் நானே.
அன்றிரவு மீண்டும் என் உள்ளம் உருகத்தொடங்கியது. என் மூத்தவர் என் வெண்ணிழல் என என்றும் என்னுடன் இருந்தவர். கற்றும் கருதியும் நான் வளர்ந்தபோது இழந்தவை அனைத்தும் கூடி அவர் வடிவாக என்னைத் தொடர்ந்தன. அவரின்றி என்னை எண்ணிக்கொண்டதே இல்லை. அவருடன் ஆயிரம் பூசல்கள் வெடித்துள்ளன, ஆனால் அவர் என்னிடமிருந்து விலகியதே இல்லை. வெளித்தோற்றத்திற்கு அன்று நிகழ்ந்தது ஒரு எளிய விலக்கம் மட்டுமே. ஒருநாளில் ஓரிரு சொல்லில் அதை கரைத்தழிக்க முடியும். அவர் என்னிடமிருந்து விலகியதில்லை, எனவே விலகப்போவதுமில்லை. அதை நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அது உண்மையல்ல என்று ஆழம் அறிந்திருந்தது.
மறுநாளே மீண்டும் மூத்தவரை காணச்சென்றேன். அவர் மாறாத விழிகளுடன் உணர்வற்ற ஒற்றைச் சொற்களுடன் என்னை எதிர்கொண்டார். தோற்று சினம்கொண்டு திரும்பி வந்தேன். இரண்டுநாட்கள் அவரை எண்ணாமலிருக்க முயன்றேன். என் அன்றாட அரசுப்பணிகளில் மூழ்கினேன். ஆனால் அவரையே எண்ணிக்கொண்டிருந்தேன் என மீண்டும் அறிந்தேன். கடல்மாளிகையில் இருந்த அவரை மீண்டும் சென்று கண்டேன். விழிநோக்கா தெய்வச்சிலைபோல அவர் மாறிவிட்டிருந்தார்.
இருநாட்களுக்குப்பின் சீற்றம்கொண்டு அவரைத் தேடிச்சென்றேன். ‘மூத்தவரே, என்னை தண்டிப்பதென்றால் எதன்பொருட்டு என்று சொல்லுங்கள். என் மேல் சினம்கொண்டிருப்பது ஏன்? அதை நான் அறிந்தாகவேண்டும்’ என விழிநோக்கி சொன்னேன். என் கண்களிலிருந்து நீர் பெருகியது. ‘நான் உங்கள் இளையோன். உங்கள் மைந்தனாகவே என்னை உணர்பவன். என் பிழையென்ன என்று சொல்லுங்கள். என் தலையால் அதை களைகிறேன்’ என்றேன். ‘அப்படி ஏதுமில்லை, உன் மிகையெண்ணம் அது’ என்றார். ஆனால் அவர் சொல்லும் விழியும் மாறவில்லை.
உணர்வு மிகுதியுடன் நான் அவர் முன் சென்று கைகளை பற்றிக்கொண்டேன். ‘மூத்தவரே, நீங்கள் என்னை அடித்திருக்கிறீர்கள். வசைபாடியிருக்கிறீர்கள். உங்கள் இந்த உளவிலக்கம் அதைவிட என்னை வதைக்கிறது. நான் என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள்’ என்றேன். என் கையை மெல்ல உருவியபடி ‘ஒன்றுமில்லை. நீ சொல்வன ஏதும் எனக்குப் புரியவில்லை’ என்றார். விழிகள் உணர்வற்றிருந்தன. பெரும் ஏமாற்றம் என் நெஞ்சை நிறைத்து மறுகணமே சினமாக மாறியது. நான் அவரை நிறைந்த கண்களுடன் நோக்கி நின்றேன். அவர் என் விழிகளைத் தவிர்த்து திரும்பிச்சென்றார்.
அவரை என்னால் எவ்வகையிலும் ஊடுருவ முடியவில்லை. அவர் உளத்திரிபு ஏன் என்று எல்லா வகையிலும் எண்ணிப்பார்த்தேன். சத்யபாமையிடம் அவரைச் சென்றுகண்டு அடிபணிந்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமென ஆணையிட்டேன். அவளே என் துயர்கண்டு உளம்வருந்தியிருந்தாள். மூத்தவரைச் சென்றுகண்டு அவர் கால்தொட்டு சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரினாள். அப்போது தன் அனைத்து கட்டுகளையும் இழந்து விம்மியழுதுவிட்டாள். அவர் ‘ஒன்றுமில்லை, எனக்கு சினமோ துயரோ இல்லை. நீங்கள் தேவையில்லாது மிகைப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை’ என்றுதான் மீண்டும் சொன்னார்.
என் தேவியர் சென்று குக்குடர்குலத்து அரசி ரேவதியை கண்டனர். எங்களுக்குள் நிகழ்ந்த உளப்பிளவை சீர்செய்ய அவர்களால்மட்டுமே முடியுமென மன்றாடினர். முதலில் சினந்தும் பின்பு தருக்கியும் சொல்லாடியபின் மெல்ல அவரும் தணிந்தார். அவரே சென்று பேசியபோதும் மூத்தவர் உளம் மாறவில்லை. எரிச்சலுற்று ‘மீளமீள இதையே சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வன ஏதும் எனக்குப் பிடிபடவில்லை’ என்று கூவினார். அக்ரூரரும் பிறரும் அவரை நான்குமுறை அவைக்கு கொண்டுவந்தனர். அவையில் ஒரு சொல் பேசாமல் மீசையை நீவியபடி எங்கோ விழியகல நெஞ்சு அலைய அமர்ந்திருந்தார்.
அவரை எண்ண எண்ண என் ஏமாற்றம் மிகுந்து வந்தது. ஒரு தருணத்தில் அது எரிச்சலாக ஆகியது. அக்ரூரரிடம் ‘இனி அவரைப்பற்றி என்னிடம் பேசவேண்டியதில்லை. மூடத்தனத்திற்கும் அளவுண்டு. எதையுமே புரிந்துகொள்ளாத ஒருவரிடம் பேசுவது பாறைமேல் தலைமுட்டுவதுபோல. அவர் விழைந்தபடி செய்யட்டும்’ என்று கசந்து சொன்னேன். அவர் கொண்டுள்ள அந்த விழியின்மையை எண்ணி எண்ணி வெறுக்கலானேன். நான் சொன்னவை எதையும் அவரால் மறுக்கமுடியாது. அவருக்கென மாற்றுநிலையும் இல்லை. ஆனால் உளஒப்புதலும் இல்லை என்றால் அவரை ஏன் மானுடராக நான் ஏற்கவேண்டும்? ஆம், அவரை நான் புறக்கணிக்கிறேன், அவர் இங்கில்லை என்றே கொள்கிறேன். அதையே மீளமீள சொல்லிக்கொண்டேன்.
ஒருநாள் அவர் தன் அரசியுடன் கிளம்பி மதுராவுக்குச் சென்றார். செல்வதற்கு முந்தைய நாள்தான் எனக்கு செய்தியறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் கிளம்பிச்சென்றது ஆறுதலைத்தான் அளித்தது. அவருக்கான அனைத்தையும் செய்ய ஆணையிட்டேன். அவர் கிளம்பும்போது சற்றே விழிகனிந்து என்னிடம் பேசக்கூடுமென என் உள்ளத்தின் ஆழம் எதிர்பார்த்தது. அப்போது அதே வெற்றுவிழிகளுடன் ஒற்றைச் சொல்லுடன் நான் மறுமொழி உரைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டபோது நெஞ்சின் ஓரத்து எரிச்சல் மேல் குளிர் பரவியது.
ஆனால் அவர் அப்போதும் அதே விழிகளுடன்தான் விடைபெற்றார். என்னையும் நான் இறுக்கிக்கொண்டேன். முறைமைச்சொற்களுக்கு அப்பால் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விழிமுன்னிருந்து மறைந்ததும் நெஞ்சு ஏக்கம் கொண்டு விம்மியது. விழிகளில் நீர்கோத்து நோக்கு மறைந்தது. என் அறைக்குச் சென்றபோது என்னால் நடக்கவே முடியவில்லை. தனிமையில் அமர்ந்து எண்ணத்தொடங்கியபோது ஒவ்வொரு எண்ணமாக எழுந்து வந்து என்னை அழுத்தின. விழிநீர் சிந்த தனிமையில் அமர்ந்து அழுதேன்.
“மறுநாளே கிளம்பி இங்கு வந்தேன். பார்த்தனின் அருகே மட்டுமே என்னால் சற்றேனும் மீட்புகொள்ள முடியுமெனத் தோன்றியது” என்றார் இளைய யாதவர். “இங்கு அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு சிறுவனைப்போல் சிலநாட்கள் வாழவேண்டும். அதைத்தவிர பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை.” தருமன் பெருமூச்சுவிட்டு “அவ்வாறு நிகழ்ந்தால் அது நன்றே” என்றார். இளைய யாதவர் விழிதூக்கி அவரை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பின்பு தலையை சரித்து குழல்கற்றைகளை அள்ளிக்கட்டி பீலி நிறுத்தியபின் “நான் வருகிறேன் அரசே, பார்த்தன் காத்திருக்கிறான்” என்றார். “நன்று” என்றார் தருமன்.
மீண்டும் ஏதோ கேட்க அவரிடம் எஞ்சியிருந்தது. அச்சொல்லில் சிலகணங்கள் தத்தளித்த பின்பு “அரசே, தாங்கள் எண்ணுவதென்ன? மூத்தவரின் உளவிலகல் சீரமைய வாய்ப்புள்ளதா?” என்றார் இளைய யாதவர். தருமன் கூரிய குரலில் “இல்லை” என்றார். திடுக்கிட்டவர் போல இளைய யாதவர் நிமிர்ந்து பார்த்தார். “சொல்லாக மாற்றத்தக்க கசப்புகளும் சினங்களும் சொல்லாக ஆக்கி வெளித்தள்ளத்தக்கவை. இது நஞ்சென அங்கு ஊறிவிட்டது. அங்கே முளைத்துப்பெருகுவது. அதை அகற்ற அவரால்கூட இயலாது. அது எவ்வண்ணம் எங்கிருக்கிறதென்பதையே அவர் அறிந்திருக்க மாட்டார்” என்றார் தருமன். “சில பிளவுகள் பளிங்கில் மயிர்கோடென தெரிபவை. ஆனால் அவை அமையும்போதே நாம் அறிந்துவிடுவோம், அவை பிளந்து விரிபவை.”
“ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றார் இளைய யாதவர். “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” அவர் புன்னகைத்து “என் முன் எப்போதும் முதல் எதிரி என என் மூத்தவரே நின்றிருப்பார். அதுவே ஊழ் எனில் அவ்வாறே ஆகுக!” என்றபின் நடந்தார்.
தருமன் அவர் நடையின் தளர்வை நோக்கினார். வந்தபோது அதிலிருந்த சிறுவன் மறைந்துவிட்டிருந்தான். அவர் இரண்டு அடி வைத்து பின்னால் சென்று “யாதவரே, இதுவும்கூட உங்களுள் எழுந்த விராடவடிவனுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?” என்றார். “ஆம், பொருட்டே அல்ல. அவனுக்கு நானேகூட ஒரு பொருட்டில்லை” என்றபின் சிரித்தபடி இளைய யாதவர் நடந்து சென்றார்.