அனபின் ஜெயமோகன்,
தங்களுடைய தஞ்சை தரிசனம் 5 கட்டுரையை வாசித்தேன். ஆதித்த கரிகாலன் தொடர்பாக நீங்கள் சற்று விரிவாக எழுதினால் தெளிவு பெறுவேன். கல்கியின் பொன்னியின் செல்வன், பேரா.தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திரம் நூலையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் கல்கியே பெருமைக்காக உத்தம சோழன் , ஆதித்த கரிகாலனைக் கொலை செய்யவில்லை என எழுதியிருப்பது தவறு. சதாசிவ பண்டாரத்தார் அவ்வாறு எழுதியிருக்கிறார். அதற்கு சில காரணங்களும் கூறியுள்ளார். முதல் காரணம், உத்தம சோழரின் தாயும், கண்டராதித்தரின் மனைவியுமான செம்பியன் மாதேவி அவர்களின் செயல்பாடுகள். மேலும் உத்தம சோழரின் மகன் கண்டராதித்த மதுராந்தகன் ராஜராஜனின் ஆட்சியில் கோயில்களின் நிர்வாகத்தில முக்கிய அதிகாரியாக இருந்ததும்.
ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது மட்டும் உத்தம சோழரின் தான் குற்றவாளி என்பதை எப்படி விளக்குவதாகும் என்று கருதுகிறீர்கள்.
இதற்கு தெளிவான சான்றுகள் இல்லை என்பது மட்டும் உண்மை. இரண்டு முடிவுகளுமே ஊகம்தான். பெருமைக்காக உத்தம சோழனை சிவபக்தன் என்பது தவறென்றால் தங்களின் முடிவும் தவறுதானே. சிவபக்தன் என்று ஊகிப்பதற்கு செம்பியன் மாதேவியின் கற்றளிகளும், கண்டராதித்த மதுராந்தகனின் செயல்பாடுகளும் உள்ளன.
அன்புடன்,
வெங்கடாசலம்.
அன்புள்ள வெங்கடாசலம் அவர்களுக்கு
பண்டாரத்தார் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி எழுதியிருப்பதை அறிவேன். அந்த ஊகம் அல்லது சமாதானம் கிட்டத்தட்ட வரலாறாக ஆனது கல்கியாலேயே. அதையே சொன்னேன்
பொதுவாக பிற்காலச் சோழ வரலாற்றாசிரியர்களான பர்ட்டன் ஸ்டெய்ன் கே கே பிள்ளை போன்றவர்கள் ஆரம்பகால சோழ வரலாற்றாசிரியர்களான சீனிவாச சாஸ்திரி பண்டாரத்தார் போன்றவர்கள் சோழர்களை புகழும் நோக்குடன் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்
பிற்கால வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் உத்தமசோழருக்கோ அல்லது அவரை சூழ்ந்திருந்தவர்களுக்கோ ஆதித்தகரிகாலன் கொலையில் பங்கிருக்கலாம் என்றே கருதுகிறார்கள். சமீபத்தில் ராமச்சந்திரன் அவர்களும் அப்படியே எழுதியிருந்தார்
நான் இந்த விவாதங்களை வாசிப்பவன் மட்டுமே. உள்ளே நுழைந்து ஆராய்பவன் அல்ல. சோழர் வரலாறு எனக்கு கொஞ்சம் தூரம்தான்
ஜெ
அன்புள்ள ஜெ.மோ,
வணக்கம். நலமா?
தஞ்சாவூர் தரிசனம் . அருமை. தொடர்ந்து வருகிறேன்.
ஒரு வேலி நிலம் என்பது 6.61 ஏக்கர்.
உங்கள் அனைவருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி
படிக்கப் படிக்க தி.ஜ.ராவின் பிடி கருணை சிறுகதை நினைவுக்கு வருகிறது
அன்புடன்
பாலா
ஜெ..
திடீரெனெத் தூக்கம் தொலைந்து போய் எழுந்து என் பலகணியில் நின்று கொண்டு சஞ்ஜய் காந்தி தேசியப் பூங்கா என்று நகைச்சுவையுணர்வோடு அழைக்கப் படும் மும்பை நகர்க் காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் உங்களையும், நாஞ்சிலையும் என் வீட்டுக்கு அழைக்க ஆசை. உங்கள் “கல் வாழை” நினைவுக்கு வந்தது. இந்திய நாஸ்திக இயக்கத்தின் ஒரு நடுநிலையான ஒப்பீடு.
ராஜராஜனைப் பற்றி எழுதும் போது, ஒரு context ஐக் கொண்டு வந்தீர்கள். அவன் காலத்தில் ஐரோப்பா எப்படியிருந்தது என்று. பூங்குன்றன் என்னும் கணியனின் காலத்தில், உலகம் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் உள்ளம் நெகிழ்ந்துதான் போகிறது. கல்வாழையில் நாஸ்திகம் என்னும் இயக்கம் துவங்கும் காரணிகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே போல், இந்து மதச் சிந்தனைகள் தேங்கி அழுகிக் கொண்டிருக்கும் மத நிறுவனங்களை கண்ணெதிரே காண்கிறோம். நீங்களும் இதை எழுதியிருக்கிறீர்கள். ஒரு ஒப்பீடு செய்கையில், நாஸ்திகம் கல்வாழையாய், அலங்காரப் பொருளாய் நின்று விட்டது போல், அதன் மறுபக்கமான பாரம்பரிய மத விருட்சங்கள் பட்டுப் போய் நிற்கின்றன – அதுவும் ஒரு பெரும் சீரழிவே..
ஒரு தனிமனிதனின் உழைப்பும், ஒழுக்கமும் காஞ்சி மடத்தைக் கொண்டு சென்ற உயரமும்.. அதற்கடுத்த மனிதர்களின் ஆளுமைகள் (கீழ்மைகள் என்று சொல்லலாமா?) அம்மடத்தை கொண்டு சென்ற இடமும் கண் முன்னே…
பாரம்பரியம் என்பதையே ஒரு சில தனி மனிதச் சாதனைகள் வழிநடத்துகின்றன என்று ஒரு எண்ணம் எழுந்தது மனதுள். ஒரு லீ க்வான் உருவாக்கிய சிங்கப்பூர்.. ஸ்ரீதரன் கட்டிய கொங்கன் ரயில் பாதை.. கட்டிக் கொண்டிருக்கும் தில்லி மெட்ரோ.. நாரயண மூர்த்தி உருவாக்கிய மென்பொருள் வழிப் பாதை.. “one man’s perfection can still save the world” என்பது அரவிந்தர் வாக்கு..
அன்புடன்
பாலா
Dear Je Sir,
How are you and family? I am reading ‘Indu Gnana Marabil Aaru
Dharisinangal’. It is somewhat difficult to me to understand. Ok.
Today I read about your Kumbakonam visit. You have mentioned the
tower is thrid one in Tamil Nadu for its height. No Sir. I am
furnishing the heights of Meenakshi Amman Temple Towers.
•East Tower (Nine Storeys). Height 161’3″. This Gopura has 1011 sudhai
figures.
•South Tower (Nine Storeys). Height 170’6″. This Tower has 1511 sudhai
figures.
•West Tower (Nine Storeys). Height 163’3″. This Tower has 1124 sudhai figures.
•North Tower (Nine Storeys). Height 160’6″. This Tower has lesser
figures of sudhai than other outer towers.
So South Tower of Madurai Meenakshi Amman Temple will find place the
second one next to Sri Villiputhur.
Thank you Sir.
—
ARAVINDHAN.S.
அன்புள்ள அரவிந்தன்
தகவலுக்கு நன்றி. அங்கே எழுதி வைக்கப்பட்டிருந்ததை சார்ந்து நான் அந்த தகவலைச் சொல்லியிருந்தேன்
ஜெ