கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

Tamil_Literati_Rajanarayanan_KiRa

 [தொடர்ச்சி]

கி.ராஜநாராயணனின் மொழி

கி.ராஜநாராயணன் ஒரு ‘ கதைசொல்லி ‘ [கதைசொல்லி X கதையெழுத்தாளன் என்ற வேறுபாட்டை ‘புன்னகைக்கும் கதைசொல்லி:அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் ‘ என்ற கட்டுரையில் காண்க ] வாய்மொழிக்கதையே இலக்கியத்தின் அடிப்படை என்று மட்டுமல்ல, பிற்காலத்தில் இலக்கியத்தின் ஒரே வடிவமும் அதுதான் என்றுகூட சொல்லியிருக்கிறார். வாய்மொழிக்கதை சொல்லல் மீதான அவரது பிடிப்பு இயல்பானது. அவரது இனக்குழுத்தன்மையை சிறப்பாக வெளிப்படுத்த அவர் அதை சார்ந்தே ஆகவேண்டும். அழகியல் ரீதியாக ஒரு கதைசொல்லியாகவும் அவருக்கு அம்மரபின் கூறுகள் இன்றியமமையாதவை. ஆனால் அவர் எழுத முன்வந்தபோது அவரது மொழிநடையில் மேலோங்கியிருந்தது எழுத்துமொழியின் கூறுகள்தான். ‘மாயமான் ‘ கதையின் நடை சரளமான இதழியல் எழுத்துநடைதான். அதன் முன்னோடிகள் என்று தீவிர இலக்கியத்தில் கல்கி வழியினரைத்தான் சொல்லவேண்டும். ஆனால் கி.ராஜநாராயணனின் எழுத்தின் ஆரம்பகாலத்தில் அவர் மீது ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் கு.அழகிரிசாமி என்று படுகிறது. இருவர் நடையும் துவக்கத்தில் பிரித்தறியவே முடியாதபடி உள்ளன.

ஆனால் அப்போதே வாய்மொழிமரபின் கூறுகளை தன் நடையின் அடிப்படை அம்சமாகக்கொண்டிருந்தார் கி.ராஜநாராயணன். ‘ராமசாமிக்கு நாலைந்து பெயர்கள் உண்டு . நெட்டைக்கொக்கு ராமசாமி, வளந்த பனை ராமசாமி, பீச்சாங்கை ராமசாமி, இன்னும் சுருக்கமாக ஒட்டகம் ஏணி மண்டு …இப்படி! பயல் ஒசரமாய் ஒல்லியாய் இருப்பான்… ‘ .ஆரம்பகாலம் முதலே அவரது நடையில் ஒரு தனித்தமிழ் தன்மையும் இருந்துவந்தது என்பதை வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ‘நுண்மணல் ‘ [கண்ணீர்] போன்ற சொல்லாட்சிகளை அவரது கதைகளில் எபோதுமே இருந்து வந்துள்ளன. மற்ற நவீனத்துவத் தமிழ் படைப்பாளிகளைப்போல பழந்தமிழ் பயிற்சி அறவே இல்லாதவரல்ல அவர். அவருக்கும் அவரது நண்பர் கு.அழகிரிசாமிக்கும் பழந்தமிழில் , குறிப்பாக கம்பராமாயணத்திலும் தமிழிசைப்பாடல்களிலும் ஈடுபாடு இருந்தது. டி.கெ.சிதம்பரநாதமுதலியாரின் அவையில் பலகாலம் பங்கெடுத்தவர் கி.ராஜநாராயணன். தன் வட்டார வாய்மொழிமரபு, செவ்விலக்கியக் கூறுகள் , நேரடியான இதழியல்நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்தே அவர் தன் தனிநடையை உருவாக்கிக் கொண்டார்.

ஆனால் 2000 வாக்கில் நான் அவரை சந்தித்த போது [அப்போது பிரேமும் கூட இருந்தார்] கற்று வாசித்து பெறப்படும் எதுவுமே காலத்தில் நிற்காது என்றும் ,காதால்கேட்டது மட்டுமே கலாச்சார நினைவில் நிற்கும் என்றும் அழுத்தமாக சொன்னார். பேசி கேட்பது மட்டுமே உண்மையான மனித இயல்பு ,வாசித்தறிவது செயற்கையான ஒன்று என வாதிட்டார். அதில் அவரது நம்பிக்கை ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அக்கூற்று அவரது எழுத்துச்செயல்பாடுகளையே நிராகரிப்பது என்று சொன்னபோது ஒப்புக் கொண்டு, அதனாலேயே இலக்கியத்தை வாய்மொழிக்கூற்றுக்கு மிக அருகே கொண்டுவர முயன்றதாகச் சொன்னார். கி.ராஜநாராயணனின் அந்நம்பிக்கை அதிகப்படியான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் இன்றும் எழுத்து ஆசிரியனின் கதைசொல்லலாக பார்க்கப்படும் உளவியல் தொடரவே செய்கிறது! அதற்காகவே ஆசிரியனின் புகைப்படம் ,வாழ்க்கைகுறிப்புகள் எல்லாமே தேவையாகின்றன. ஒரு புகைப்படம்கூட பிரசுரிக்கப்படாத , திட்டவட்டமான அடையாளம் இல்லாத பெயர்கொண்ட ஒரு படைப்பாளியை படிப்பது விசித்திரமான உளவியல் சிரமம் அளிப்பதாக இருக்கிறது .இன்று நாம் கேட்கவில்லை, ஆனால் நம் வாசிப்பில் கேட்கும் அனுபவம் கற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் சொல்வதைப்போல எழுத முடியாது. குரல் என்ற மனிதம் நிரம்பிய உயிர்த்துடிப்பான அம்சம் எழுத்தில் இல்லை. முகபாவனைகள் இல்லை. அதைவிட பேச்சு நம் புரிதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடரக்கூடிய ஒன்று. எழுத்து நிலையான பதிவு. நமக்காக அது வளையாது. ஆகவே பேச்சு நெகிழ்வாக இருக்கிறது, எழுத்து செறிவாக. ஒரு கதாபாத்திரம் பேசுவதை சொல்லிக் காட்டலாம். அதை அப்படியே எழுதினால் வளவளப்பாகவே முடியும். எழுத துவங்கும்போதே அதைநாம் செறிவாக்க ஆரம்பித்துவிடுகிறோம்.[ தொலைபேசியில் பேசுவதைபோல எவருமே கடிதம் எழுதுவது இல்லை] இந்த செறிவின் விளைவுகளில் முக்கியமானது படைப்பின் குறியீட்டுத்தன்மை. எழுத்து வரிவடிவையே நம்பி செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் பலவிஷயங்களை நம்மால் உணர்த்த முடிவதில்லை. ஆகவே வாசகனை ஊகிக்க வைக்க முயல்கிறோம். வாசக கற்பனையை விரிவடையச் செய்யவே இலக்கியத்தின் உத்திகள்பலவும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல நமது பேச்சுமொழி எழுத்தின் சொற்றொடர் இயல்புகளை உள்வாங்கியபடியேதான் உள்ளது. கச்சிதமாக்குதல், தரப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களை பேச்சுமரபுக்கு எழுத்துமரபே அளிக்கிறது என்று வகையில் சொல்லலாம்.

ஆகவே பேச்சுமரபு வேறு எழுத்து மரபு வேறு. இரண்டும் இருவேறு பணிகளை ஆற்றும் தனித்தனிப் போக்குகள். ஒன்று இன்னொன்றை பாதித்துக் கொண்டேஇருக்கிறது. எழுத்துமரபு செவ்வியலாக்கம் நோக்கிச் செல்கிறது. பேச்சுமரபு நடைமுறை பயன்பாடு நோக்கி. இரு சக்திகளும் சேர்ந்து உருவாக்கும் முரணியக்கமே மொழியின் சலன கதியை தீர்மானிக்கிறது. இலக்கியம் முற்றாக எழுத்துமொழியை சார்ந்து நிற்கும்போதுதான் மறைமலையடிகள்தமிழ் அல்லது மு வரதராசனார் தமிழ் போன்ற தட்டையான மொழி உருவாகிறது . பேச்சுமரபை மட்டுமே நம்பி இருக்கும்போதும் மொழியின் சலன சக்தி குறைவு படுகிறது . நம் மேடைப்பேசுகளில் உள்ள வெற்றோசை இதன் விளைவே. கி.ராஜநாராயணன் பேச்சுமொழிக்கு அதீத இடமளிக்க ஆரம்பித்த காலகடத்தில்தான் தன் சலன சத்தியை இழக்க ஆரம்பித்தார் .

பேச்சுமொழியை எழுத்து எப்படிப் பயன்படுத்துகிறது ? அ] புனைவின் நம்பவைத்தலுக்காக ஆ] சொலவடைகள் மற்றும் சொல்லாட்சிகளுக்காக இ] பயன்பாடுமூலம் சொற்கள் கொள்ளும் மெல்லிய பொருள் மாற்றங்களை அறிய. புனைகதைகளில் பேச்சுமொழி ஒரு சூழலை நம்பவைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இப்படி தாத்தைய நாயக்கர் பேசினார் என்ற பிம்பத்தையே கி.ராஜநாராயணன் உருவாக்க முடியும். தன் திறமை மூலம் அதை நம்ப வைக்க முடியும். தாத்தைய நாயக்கரின் உண்மையான பேச்சை ஒருபோதும் பதிவு செய்யமுடியாது. வட்டார வழக்கு என்பது இலக்கியத்தில் புனைவுலகை, கதாபாத்திரங்களை வாசக மனதில் நம்பகமாக உருவாக்கும் உத்தி மட்டுமே. அது சமூக ஆவணம் என்றும், மாற்றுமொழி உருவாக்கம் என்றும் , மொழியை மக்கள் மயமாக்கல் என்றும் கூறப்படும் பொதுவான கூற்றுக்கள் மிகைப்படுத்தல்கள்மட்டுமே. மொழியின் பொதுச்செயல்பாட்டில் இலக்கியம் ஆற்றும் பங்கு மிக நுட்பமானதும் அறிவார்ந்த மையத்தில் மட்டுமேசெயல்படுவதனால் மறைமுகமானதுமாகும். நாளிதழ்கள் வணிகப்பயன்பாடுகள் போன்றவை செலுத்தும் பாதிப்பே நேரடியானது, உடனடியானது.

இலக்கியத்தில் மொழி பயன்படுத்தப்படுவது மிக நுட்பமான விதத்தில் என நாம் அறிவோம். மொழி அங்கே சொல்வதைவிட குறிப்புணர்த்தவே அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்புணர்த்தல் என்பது கற்பனையை தூண்டுதல், முன்நினைவுகளில் சலனம் உருவாக்குதல், மொழியினூடாக சொற்தொடர்புகளின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குதல், ஒலி மூலம் கூடுதல் குறிப்புறுத்தல் ஆகியவற்றால் நிகழ்கிறது. ஆகவே அதற்கு ‘சீர் செய்யப்பட்ட ‘ ‘தரப்படுத்தப்பட்ட ‘ சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள் அதிகம் உதவி செய்வது இல்லை . ‘புதிய ‘ சொல்லாட்சிகள் தேவையாகின்றன. இவை பொதுவாக செயற்கையாக உருவாக்கப்படமுடியாதவை. மொழி வாழ்க்கையை சந்திக்கும் தருணங்களில் இயல்பாக எழுந்துவருபவை. எழுத்தாளனின் நுட்பமான மொழிப்புலன் ஒன்று அதை உள்வாங்கியபடியே உள்ளது .அது படைப்புசார்ந்த பல மாற்றங்களுக்கு உள்ளாகி அவன் படைப்புமொழியில் புதுவடிவம் கொண்டு வருகிறது. ‘நடை ‘ என்று நாம் சொல்லும் மொழித்தனித்தன்மைகள் இப்படி உருவாகிவரும் மொழிக்கூறுகளால் ஆக்கப்பட்டவையே. ஓர் இலக்கியப்படைப்பாளியின் தனிப்பட்ட அகவுலகை நமக்கு தெரியப்படுத்துவது அவனது நடையே

நடை என்பது தன்னைச்சுற்றியுள்ள மொழிச்சலனத்தை பின்தொடர்வதன்மூலம் எழுத்தாளனால் உருவாக்கப்படுவது . இந்த மொழிச்சலனம் என்பது பலவகைகளில் நடைபெறுகிறது. கல்வி, நிர்வாகம், வணிகம் ,செய்தி முதலிய பலதளங்களில் மொழி அன்றாடப் பயன்பாட்டுக்கு வரும்போது புதிய சாத்தியங்களை சந்திக்கிறது.பவற்றை எழுத்தாளனின் மொழிப்புலன் எடுத்து உள்ளூர சேர்த்துக் கொள்கிறது. அவற்றில் முக்கியமானது மக்கள்வாய்மொழியே. நல்ல படைப்பாளி என்பவன் மக்கள்வாய்மொழியில் தணியாத மோகம் கொண்டவனாகவே இருப்பான். காதில் விழும் மொழியே நடை என்ற அந்தரங்க ஊற்றை உருவாக்கும் மழை என்றால் மிகயல்ல.

உதாரணமாக நாஞ்சில்நாடனின் நடையில் குமரிமாவட்ட சொல்லாட்சிகள்தான் நடையாகின்றன ‘ மாப்பிள்ளைபிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு என்பதுபோலத்தான் அன்றாடக் கணக்கும். ஒன்றும் சொல்வதற்கில்லை… ‘ என்ற அவரது நடையில் மொழியில் உருவாகி முளையின் மொழிப்புலனில் தேங்கிய ஒரு பகடி எழுந்துவருகிறது. இந்த அம்சம் சுந்தர ராமசாமியின் கட்டுப்படுத்தப்பட்ட நடையில் ஒருமுறை கழூவி உலர்த்தப்பட்டு மறுபிறப்புகொள்கிறது. ‘ டி.கெ.சி வெண்ணைகடையும்போது மத்தின் சத்தமே கேட்பதில்லை… ‘ வாய்மொழி மரபே மொழியில் புதிய சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் உருவாக்குகிறது. மொழி காதில் விழாத இடத்தில் வாழும் ஒருவரால் உயிர்த்துடிப்பான உரைநடையை உருவாக்க முடியாது .

நடையின் முக்கியமான கூறு சொற்களின் மாற்றங்களைப் பற்றிய பிரக்ஞை . பேச்சுமொழி சொற்களைமாற்றியபடியே இருக்கிறது . ‘சரியான புன்னைகைமன்னன் அவன்.. ‘ இங்கே புன்னைகைமன்னன் என்ற சொல்லை நம் பேச்சுமொழியில் அறிமுகம் இல்லாத ஒருவரால் புரிந்துகொள்ளமுடியாமல்போகலாம். இலக்கியம் இம்மாதிரி சொற்களை எப்போதுமே தன் நுட்பமான தொடர்புறுத்தலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இம்மூன்று தளத்திலும் மக்கள்வாய்மொழி சார்ந்தே இலக்கியம் இயங்குகிறது. நல்ல இலக்கியம் கணந்தோறும் நிறம் மாறும் பேச்சு மொழியிலிருந்து கலாச்சாரத்தின் பருவடிவமாக நிரந்தரத்தில் உறைந்துள்ள பேரிலக்கியமொழி வரையிலான அகன்ற வெளியை தன் தொடர் மின்னல்களால் இணைக்கிறது.

கி.ராஜநாராயணன் தன் பெரும்பாலான கதைகளில் இந்த இணைப்புக்காக தீவிரத்துடன் எழுவதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் அவரது இடம் முக்கியமாக அவரது நடை மூலமே. இலக்கியமொழியில் இருந்து எடுத்துக் கொண்ட கச்சிதம், குறிப்புணத்தும் தன்மை , உள்ளடுக்குகளைக் கொண்டிருத்தல் ஆகியவை அவரது சிறந்த கதைகளில் இருக்கின்றன. பேச்சுமொழியின் சரளம் , சமத்காரம் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டே இவற்றை அடைய அவர் முயன்று தன்னுடைய சிறந்த கதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட அவரது சிறந்த கதைகளில் இந்தச் சிறப்பு வெளிப்பட்டிருக்கிறது. உரையாடலை காதில் விழச்செய்யும் சொற்றொடர்கள்[ எடுக்கட்டும் பயபுள்ளைக. நல்ல்..ல திண்ணு கொழுத்துப்போய் அலையுதுக] நாட்டுப்புறச் சொலவடைகள் [என்னடா எளவாப்போச்சு, எளவிலேயும் பேரெளவா இருக்கே. சம்சாரி கொத்தைப்பருத்தியிலேயும் கேவலமா போயிட்டானே ]சொல்லாட்சிகளின் நுட்பமான மாறுபாடுகள் [ஊரெல்லாம் ஒரே கெக்கோல்.பேசிச்சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே]

இதன் மூலம் அவரால் மொழியின் நுட்பமான சாத்தியங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது. கதைவடிவம் அளிக்கும் குறிப்புணர்த்தல்களை தாண்டி மொழி தன் ஒவ்வொரு துளியாலும் அளிக்கும் குறிப்புணர்த்தல்கள் நிரம்பிய பரப்புகள் அவை . கதை அளிக்கும் ஆர்வத்தைமீறி அவரது கூற்றே தனியான ஓர் ஆர்வத்தை அளிப்பது இதனால்தான். என்னைப்பொறுத்தவரை கி.ராஜநாராயணனின் கதையை விட அவரது சித்தரிப்புகளே முக்கியம் , அவற்றுக்குள் ஏராளமான கதைகளின் ரகசிய விதைகள் உள்ளன. உதாரணம் கொத்தைப்பருத்தியில் பெண்பார்க்க வந்த கலெக்டர் அப்பா கோனேரியின் களஞ்சியங்களைப்பார்த்து ‘ரட்ணக்காலை ‘ மாற்றி சாதாரணமாக உட்கார்வது.மொழியின் ஓர் சின்ன திருகலால் கதைக்குள் ஒரு கதையின் விதையை கி.ராஜநாராயணன் புதைத்து வைப்பதுண்டு. [ப.சிங்காரத்திடம் இப்படி பல துளிகளைக் காணலாம். உதாரணம் ‘டாலர் ‘ ராஜாமணி அய்யர். அய்யர் மோட்டார் டிரைவர் ஆகிய பரிணாமம் என்ன ?] எங்கும் ஓர் நிறையில் அங்கயற்கண்ணி,பேதையில் ஒரேயொரு வசனம் மட்டும் பேசும் காளி.

கி.ராஜநாராயணனின் எல்லை அவரது ‘கதைசொல்லி ‘ இயல்பிலிருந்து உருவாகிறது. கதைசொல்லிகள் சொல்வதற்கு மட்டுமே மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்துகிறார்கள். கி.ராஜநாராயணன் சித்தரிப்புக்கும் ஓரளவு பயன்படுத்துகிறார் என்றாலும் அச்சித்தரிப்புகூட ‘சொல்லவே ‘ படுகிறது. மனதின் கட்டுக்குமீறிய ஓட்டங்களை , மாறிமாறி வரும் புறக்காட்சியின் அமைவுகளை , அறிவார்ந்த விவாதங்களை அனைத்தையுமே வாய்மொழிமரபின் சாத்தியங்களைப்பயன்படுத்தி மேலும் வளர்த்தெடுக்கும் தீவிரம் அவரில் இல்லை.

உதாரணமாக அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை ‘ கதையில் ஒரு லாரி ஒரு சிறுவன் மீது பாயும் கணம் ஒருபக்கத்துக்கும் மேலாகவே சொல்லப்பட்டுள்ளது. அதை சொல்ல வாய்மொழிக்கூறுகளை எப்படி பயன்படுத்தலாம், மெளனியின் ;அசையும் தோணி கடப்பதறியாது எல்லைகடக்கும் ‘ இடத்தை இம்மொழியால் எப்படி தொடலாம் ? அவை பெரிய சவால்கள். வைக்கம் முகம்மது பஷீர் அந்த சாத்தியங்களை பெருமளவுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆன்மீக அகஅனுபவத்தின் எழுச்சி வாய்மொழிக்கூறுகளால் சொல்லப்பட்ட சிறந்த பஷீர் கதைகள் உள்ளன. குர்-ஆன் ஹதீஸ் உறவுகளைப்பற்றி ஒரு தச்சனிடம் பேசுவதுபோன்று எழுதப்பட்ட அவரது கட்டுரை அறிவார்ந்த விவாதங்களை வாய்மொழிக்கூறுகளால் எழுதுவதன் சிறந்த உதாரணம். ஆங்கிலத்தில் யுலிசஸ் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் அதை சாதித்தார் என்கிறார்கள், என்னால் அந்நாவலை உணர்ந்து படிக்கமுடியவில்லை .கி.ராஜநாராயணன் சொல்லலில் மட்டுமே தன் படைப்பியக்கத்தை நிறுத்திக் கொண்டவர்.

000

கி.ராஜநாராயணனின் கருத்தியல் பிரச்சினைகள்

எழுத்தாளனின் கருத்தியலை அவன் படைப்புகளில் தேடுவது பெரும்பாலும் அசட்டுத்தனமாகவே முடியும், ஏனெனில் நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதைச் சார்ந்து எழுதுபவன் என்பதனாலேயே திட்டவட்டமான கருத்தியல் ஒன்று அவனது படைப்புலகத்தில் இருக்க முடியாது. திட்டவட்டமான அரசியல் , கருத்தியல் நிலைப்பாடுகள்கொண்ட பொன்னீலன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலேயேகூட திட்டவட்டமான கருத்தியல் இல்லை, அது அவரது கட்சிக்காரர்களை எப்போதும் குழப்புகிறது. ஏற்கனவே இக்கட்டுரையில் சொன்னதுபோல இனக்குழு அடையாளத்துக்கும் மார்க்ஸிய கருத்தியலுக்கும் இடையேயான சமர் தான் கி.ராஜநாராயணனின் படைப்புகளின் இயக்கவிலை உருவாக்குகிறது. அவரது அடிப்படைக் கருத்தியல் பெரும்பாலும் மார்க்ஸிய மனிதாபிமான நோக்கே. ஆனால் அவரது இனக்குழுப்பார்வை சில சிக்கல்களை அதில் உருவாக்குகிறது. நமது இனக்குழுப்பார்வை எப்போதுமே ஆண்மைய , ஆதிக்கத்தன்மை கொண்ட பார்வைதான்.

கி.ராஜநாராயணனின் ஆக்கங்களில் பெரும்பாலும் பெண்கள் மீதான கருணையும் அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் சார்ந்த தர்மாவேசமும் வெளிப்படுகிறது என்பது உண்மையே. இக்கதைகளுக்கு மகுடம் என ‘கண்ணீர் ‘ என்ற கதையைச் சொல்லலாம். ஆனால் அவரது மொழிநடையில் எப்போதுமே பெண்களைப் பற்றிய பிரியம்தோய்ந்த ஒரு இளப்பம் வெளிப்படுகிறது. ‘ பாவம், பெண்டுகளுக்கு என்ன தெரியும் ‘ என்பதுபோன்ற ஒரு தோரணை. பற்பல உதாரணங்களை எடுத்து அதைவிளக்கலாம் . குறிப்பாக சொல்லவேண்டிய கதைகள் என ‘வலி வலி ‘ போன்ற கதைகள். அதைப்போல அவர் ஆதிக்கசாதி அடிமைசாதிகள்மீது செலுத்தும் வன்முறையையும் சுரண்டலையும் அவர் உக்கிரமாகவே சொல்லியிருக்கிறார், உதாரணம் ‘கிடை ‘ . ஆனால் விவசாயத்தொழிலில் உள்ள சுரண்டலை அவரது பல கதைகள் போகிறபோக்கில் நியாயபடுத்தி சென்றுவிடுகின்றன. சிறந்த உதாரணம் ‘நிலைநிறுத்தல் ‘ .மாசாணம் ‘வாங்க ‘ப்படுவது , அவன் தன் தனித்தன்மைமூலம் அச்சமூகத்தில் இடம் பெறுவது பற்றிய சித்திரத்தில் எப்படியோ அது ஓர் இயல்பான விஷயம் என்ற தொனி உள்ளது.

அனைத்தையும்விட முக்கியமானது கி.ராஜநாராயணனின் உலகில் தலித் மக்களின் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சொல்லப்படவில்லை என்பதே. கி.ராஜநாராயணனின் ஆசியுரையுடன் வெளிவந்துள்ள இலட்சுமணப்பெருமாளின் சிறுகதைதொகுப்பில் ஒரு கதையில் பயிட்டன் என்ற பகடை [சக்கிலியர் ] அவர் அம்மா கடனுக்கு வாங்கிய ஒரு புடவையிந் விலைக்கு ஈடாக எட்டு வயதுமுதல் எழுபதுவயது வரை நில உடைமை நாயக்கரிடம் அடிமையாக உழைத்து , திருமணம் கூட செய்துகொள்ளாமல் வாழ்ந்து இறுதியில் அக்கிராமத்தில் உருவாகும் ஒரு விழிப்புணர்வால் விடுதலைபெறும் சித்திரம் உள்ளது. நாயக்கர்களின் கிராமசபை பயிட்டனை மேலும் அடிமையாக வைத்திருப்பதே நியாயம் என்றே பேசுகிறது .அடிதடி ஏற்படும் என்ற அச்சமே பயிட்டனுக்கு விடுதலையை வாங்கி தருகிறது. கி.ராஜநாராயணனின் கதைகளில் வரும் அதே உலகம்,அதே மக்கள் .ஆனால் சமூகக்காட்சி முற்றிலும் வேறு.கி.ராஜநாராயணன் காட்ட மறந்த காட்சி. அவரது கதைகளில் நாம் காணும் பலவிதமான நாயக்கர்களில் அப்பாவிகள் தான் அதிகம். அபூர்வமாக சிலர் அவர்களை ஏய்த்துண்ணும் தந்திரசாலிகள். அனைவரையும் ஒருவித கேலிச்சித்திரங்களாக ஆக்குவதன்மூலம் கி .ராஜநாராயணன் அவர்களை நாம் பிரியத்துடன் பார்க்க வழி செய்கிறார். இடைசெவலை நம் வாசகர்கள் நேசித்தது அதனால்தான். அவர்கள் கொண்டாடும் வாழ்க்கையின் உள்ளே உள்ள இந்த உக்கிரமான கருமை நம்மை அவர் கதைகளின் வழியாக வந்தடைவது இல்லை.

இதை மேலும் நீட்டித்துப் பார்த்தால் கி.ராஜநாராயணனின் மனநிலையில் உள்ள முக்கியமான ஓர் அம்சத்தைக் கண்டடையலாம். அவரது பார்வையில் காலம் முன்னகரவில்லை, பின்னகர்கிறது! விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா ? அவரது குழந்தைகள்  தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே ? பயிட்டனின் மகன் கதை எழுதினால் அவன் இக்காலகட்டத்தை எப்படிச் சித்தரிப்பார் ?

ஆக நாம் இக்கட்டுரையில் முதலில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறோம். கி.ராஜநாராயணனை பொறுத்த வரை வரலாறு ஒரு பெரிய முன்னகர்வே. ஆனால் கடந்த சில வருடங்கள் சரிவு. அது அவரது இனக்குழுவுக்கு ஏற்பட்ட சரிவுதான். அவர்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு ஏற்பட்ட சரிவு. அதை கி.ராஜநாராயணன் ஆழ்ந்த துயரத்துடந்தான் சித்தரிக்கிறார். மின்சாரம் மறுக்கப்படும் விவசாயியின் நியாயமான கோபம் அவரால் எழுதப்படுகிறது, சுயகெளரவம் மறுக்கப்படும் விவசாயக் கூலி கதைப்பரப்புக்குள் வரவேயில்லை.இங்கே ஒரு மார்க்ஸிய முற்போக்காளரான கி.ராஜநாராயணனை அவரது இீனக்குழுமனம் வெறு முன்சென்றுவிடுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் வீழ்ச்சியைக் கொண்டாடவேண்டியவர் அதற்காக பெருமூச்சு விடுகிறார். அவரது கருத்தியலின் முக்கியப்பிரச்சினை இதுவே.

இனக்குழுசார்ந்த ஆழ்மனம்கொண்ட படைப்பாளியான கி.ராஜநாராயணன் நவீனயுகத்தின் சித்தாந்தமாகிய மார்க்ஸிய மனிதாபிமான நோக்கால் உசுப்பப்பட்டு அவை இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமாக தன் படைப்பியக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அந்தமோதலும் முயக்கமும் உக்கிரமாக நிகழ்ந்த காலகட்டமே அவரது நல்லபடைப்புகளின் பிறப்பை சாதித்தது. வாய்மொழிக்கூறுகள் மூலம் கதைசொன்ன கதைசொல்லி அவர். அக்கூறுகளை மனம் என்ற மேலும் நுட்பமான அமைப்பை அறிய அவர் பயன்படுத்தவில்லை. இனக்குழுமனம் அவரது மார்க்ஸிய சார்பை உண்டு செரித்தபோது அவரது பயணம் நின்று இனக்குழு ஆவணநிபுணராக அவர் உருக்கொண்டார். தமிழில் கி.ராஜநாராயணனின் சிறப்பிடம் நமதுமரபின் ஆழ்மனம் எப்படி நவீனகாலகட்டத்தை எதிர்கொண்டது என்ற சித்திரத்தை அளிக்கும் சிறந்த சிறுகதைகளிலும் கோபல்ல கிராமம் என்ற நாவலிலும் உள்ளது

.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39