சனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா

unnamed

 

மூன்றுமுறை கி.ரா. ஞானபீடத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டார் என நான் அறிவேன். ஒவ்வொருமுறையும் தமிழ்பிரதிநிதிகளால் அது தவிர்க்கப்பட்டது. அவர்கள் அதிகாரம் மிக்கவர்களுக்கு அதை அளிக்க விரும்பினார்கள். கி.ராஜநாராயணனும் அசோகமித்திரனும் மலையாளிகள் என்றால் இதற்குள் ஞானபீடம் அவர்களின் காலடியில் அமர்ந்திருக்கும்.

கி.ரா தமிழிலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவர். இலக்கியத்தின் சாராம்சமாக அமையும் தரிசனங்கள் பலவகை. மரபின்மீதான விமர்சன நோக்கு – புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமிபோல. சமூகவிடுதலை விழைவு – ஜெயகாந்தன் போல. நவீனத்துவ வாழ்க்கைப்பார்வை – அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிபோல. கி.ரா தமிழுக்களித்தது முற்றிலும் புதிய ஒன்று. கிராமியவிவேகம். நாட்டார் மரபிலிருந்து பெறப்பட்ட ஒரு பண்பாட்டுக்கூறு அது. அதுவே தமிழுக்கு அவரது கொடை. இன்று தமிழில் அவ்வகையில் அவரது மிகச்சிறந்த வாரிசு என சு.வேணுகோபாலைச் சொல்வேன்

கி.ராவின் கதைச்சூழலான கிராமங்கள் இன்றில்லை. உறவும் உழைப்புமாக திகழ்ந்த கிராமங்கள் வணிகமயமாகிவிட்டன. அவரது கதாபாத்திரங்களை இன்று பார்க்கமுடியாது, அவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது அல்லது மண்மறைந்துவிட்டனர். தூங்காநாயக்கரையோ தாத்தையநாயக்கரையோ இனி அவரது கதைவெளியில்தான் சந்திக்கமுடியும். ஆனால் அக்கதைகள் அளிக்கும் அந்த நாட்டுப்புற விவேகம் என்றுமழியாதது.

இன்றைய வாசகனுக்கு அவரது கதைவெளி யதார்த்தம் அல்ல, ஒருவகை புனைவுப்பரப்பு மட்டுமே. அறிவியல்புனைகதைகளுக்கோ வரலாற்று, புராணப்புனைகதைகளுக்கோ நிகரானது அது. அக்கதைகள் இன்று ஆசிரியரின் நிதானமான உலகியல்பார்வையும், எல்லா தரப்பையும் நோக்கும் சமநிலையும், ஆண்டு அறிந்து கடந்த புன்னகையும் அளிக்கும் அகத்தெளிவால் ஒளிகொண்டவையாகத் தெரிகின்றன

கி.ரா இன்னமும்கூட கூர்ந்து வாசிக்கப்படாத நம் முன்னோடி. நம் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட மேதை. ஆனால் நாம் அப்படித்தான், ‘சரிதான், தாத்தன் திண்ணையிலே இருக்கட்டுமேஎன்னும் அலட்சியநோக்கு நம்முடையது. கனடாவின் இயல் விருது அவருக்கு அளிக்கப்படுவது பெருமைக்குரிய தருணம். நாம் இயல் விருது அமைப்புக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்

முந்தைய கட்டுரைஅங் மோ கியோ நூலகத்தில்…
அடுத்த கட்டுரைகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி