ஓஷோவின் பைபிள் வரி

index

ஜெ

ஒரு புத்தகத்தை படிக்கும்போது அதில் உள்ள ஒரு விசயம் எதாவது ஒருவிதத்தில் (சந்தேகம் அல்லது ஆர்வம்) என்னை கவர்கிறது. உடனே புத்தகத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டு என்னை கவர்ந்த விசயம் தொடர்பான விபரங்களை தேடத்தொடங்கிவிடுகின்றேன். இதனால் முழுமையாக ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதென்பது பெரும் போராட்டமாக உள்ளது. உதாரணமாக சமீபத்தில் I say unto you  என்ற ஓசோவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன் அதில் ஏசுவின் கடைசி இது “Thy will be done, thy kingdom come” அழுதுகொண்டிருந்த ஏசு அந்த வார்த்தைக்குப்பிறகு கிருஷ்து ஆனார் என்று இருந்தது உடனே ஒரு ஆர்வத்தில் புத்தகத்தை வாசிப்பதை நிருத்திவிட்டு பைபிளை எடுத்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏசுவின் கடைசி வார்த்தையை வாசித்தேன் ஒசோ சொன்னதுபோல் அப்படி எந்த வார்த்தையும் ஏசுவின் இறுதி நிமிடங்களில் இல்லை.

ஏசுவின் இறுதி நிமிடங்களில் இல்லாத ஒரு வார்த்தையை இருப்பதாக ஏன் ஓசோ சொன்னார்? ஒரு வேளை உண்மையிலேயே அப்படி ஏசு சொல்லியிருப்பாரோ? இப்படி அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிவிடுகின்றேன். கடந்த பத்து நாட்கள் ஏசுவின் இறுதி வார்த்தையிலேயே  போய்க்கொண்டு இருக்கிறது.

இப்படி வாசித்த ஒவ்வொன்றையும் உண்மையில் அப்படித்தானா என்று உறுதிபடுத்திக்கொள்வதில் ஏதேனும் நன்மை உண்டா அல்லது இது ஒரு சரி செய்துகொள்ள வேண்டிய மன ரீதியான பிரச்சனையா? இதனால் பெரும் மனக்குழப்பமும், நேர விரயமும் ஏற்படுகிறது. உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

நன்றி

பூபதி

***

அன்புள்ள பூபதி,

அது ஏசுவின் கடைசிச் சொற்கள் அல்ல. அவரது கடைசிப்பிரார்த்தனையில் சொல்லப்பட வரி. மத்தேயூ 6-10 வசனம்.

இந்த வரி மார்க் எழுதிய சுவிசேஷத்தில் இல்லை. ஆகவே பிற்சேர்க்கை என சொல்லப்படுவதுண்டு. இந்த ஒரே வரி சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு பைபிள்களில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க http://biblehub.com/matthew/6-10.htm

ஆனால் புனித தோமையர் எழுதிய சுவிசேஷத்தில், இது மறைக்கப்பட்ட பைபிள் எனப்படுகிறது, ’உமது விண்ணுலகம் ஏற்கனவே வந்துவிட்டது என்றே சொல்லப்பட்டுள்ளது தோமையர் எழுதிய சுவிசேஷம்

அதேசமயம் பல விஷயங்களில் ஓஷோ மிகுந்த சுதந்திரம் எடுத்துக்கொண்டும் எழுதியிருக்கிறார். ஏனென்றால் இவையனைத்துமே ஒருவகை புனைவுகள் என்ற எண்ணமும் அவருக்குண்டு

ஆகவே ஓஷோவை வாசிக்கையில் ஆழ்ந்து வாசியுங்கள். ஐயமிருந்தால் பிற நூல்களில் தேடுங்கள். விவாதியுங்கள். கடக்கமுடிந்தால் கடந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் ஓஷோவின் ஆடிட்டர் அல்ல என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், உங்கள் கடிதத்திலேயே உங்களை ஒரு கூர்வாசகர் என நியமித்துக்கொள்ளும் மனநிலை உள்ளது. வாசிப்புக்கு மிக எதிரானது இது. எளிய ஆணவம் ஒன்றையே அது எஞ்சவைக்கும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவெய்யோன் – ஓர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைஅறத்தாறிது…