ஒரு நீண்ட காலத்துக்கு பின் சிற்றிலக்கியங்களில் உலகம் உருவாகி வந்தது. அதற்கான அரசியல் சூழல் ஒன்று இருந்தது. இங்கிருந்த மூன்று பேரரசர்களும் அழிந்துவிட்டார்கள். சிறு சிறு ஜமீந்தார்களை நம்பி கவிஞர்கள் வாழவேண்டிய காலம் வந்தது. மதுரையை, தஞ்சையை ஆண்டவர்கள் தெலுங்கு பேசியவர்கள். தமிழை அவர்கள் ஆதரிக்கவில்லை. சின்னச் சின்ன சபைகளில் சின்னச் சின்ன சக்திக்கேற்ற சின்ன காவியங்கள் எழுதக்கூடிய கவிராயர்கள் வந்தனர்.அதுதான் சிற்றிலக்கியங்களின் காலம். பெரும்பாலும் இந்தக் கவிதைகளில் இருப்பது ஒரு தொழிற்திறன்தான். ஒரு வித்தை. மொழியைக் கற்று அதில் ஒரு சாமர்த்தியத்தை காட்டுவது
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால்வாங்கித் தேய்
என்று ஒரு பாட்டு இருக்கிறது. ஒரு காலில் முள் குத்தினால் என்ன செய்வது? பத்துரதன் – தசரதன், புத்திரனின் – மகன் ராமனின், மித்திரனின் – ராமனின் நண்பன் சுக்ரீவனின், சத்துருவின் – சுக்ரீவனின் பகைவன் வாலியின், பத்தினி – வாலியின் மனைவி தாரையின். கால்வாங்கி – நெடில் அடையாளத்தை எடுத்து, அதாவது தரை. தரையில் தேய் என்று அர்த்தம்.
இதுவும் ஒரு வகையான ரசனையாக ஒரு நூற்றைம்பது வருஷம் தமிழை ஆண்டிருக்கிறது. இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. மடக்கு, யமகம், சித்திரகவி, நாகபந்தம். மதுரைக்கோவில் போனீர்கள் என்றால் நாகபந்தக் கவிதைகளையும் சித்திரகவிதைகளையும் பாக்கலாம். பாம்பு சுற்றிச் சுற்றி இருப்பதுபோல வடிவம். அதில் சுற்றிச் சுற்றி க ங ப என்று இருக்கும். அதை வாசித்து, கணக்காக ஆக்கி தீர்வுகண்டால் ஒரு கவிதையாக மாற்றிக் கொள்ளலாம். சதுரங்க விளையாட்டுக்கும் கவிதைக்கும் இடையில் ஒரு ரசனை. கிட்டத்தட்ட இருநூறு வருடம் இது தான் கவிதை என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.
இன்னொரு வகையாக , சுருக்கமாகவும் ரத்தினமாகவும் வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லும் செய்யுள்கள் கவிதை எனப்பட்டன. ஔவையாருடைய கவிதைகளில் ஒன்று இது
ஈதல் அறம் ஈட்டல் பொருள்
காதலருவர் கருத்தொருமித்து –ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைத்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு
அறம் பொருள் இன்பம் வீடு மூன்றையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு வகையும்தான் அதிகமாக கவிதையாக கருதப்பட்டன. வாரியார் சுவாமிகளின் உரையில் இந்த வகையான கவிதைகள் தான் அதிகமாக மேற்கோள் காட்டுவார். அவரே அப்படி நிறையச் சொல்வார். தாமரைக் கண்ணால் நோக்கினார், தாம் அரைக் கண்ணால் நோக்கினார்- இப்படி.
இந்தச் சிற்றிலக்கிய வகைமைக்குள் பலவகையான பேரிலக்கியங்கள் உள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. இந்த அழகியல் குறைவானது என்றும் சொல்லவில்லை. இது ஒருவகைப் பொதுப்போக்கு என்றுதான் சொல்லவந்தேன். சிற்றிலக்கியங்களில் மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் ஒரு பெரிய கிளாஸிக். திருப்புகழ் ஒரு கருவூலம்.
ஆக ஒரு பெரும் மரபை நான் கோட்டுச்சித்திரமாக இவ்வாறு சுருக்கிக்கொள்கிறேன். ஒரு வசதிக்காகத்தான். இறுதியாக வகுத்துரைக்கவில்லை. எவரும் சண்டைக்கு வரவேண்டாம்.
1.சங்க காலம் – கண்ணிலிருந்து உணர்வுக்கு நேரடியாக போகும் வடிவம்
2.காப்பிய காலகட்டம் – தத்துவத்தின் ஊடாட்டம்.
3.பக்திக் காலகட்டம் – மதமெய்யியலை மையமாக்குதல். மதம் சார்ந்த உருவக உணர்வுகள்
4.சிற்றிலக்கியங்களின் காலகட்டம்- சொல்விளையாட்டுகளும் கருத்துச் சுருக்கங்களும். பழைய அழகியலின் நுண்மையாக்கல்கள்
இவ்வாறு நம் நெடுமரபு விரிந்து செழித்துத் தேங்கிய காலகட்டத்தில் தான் தமிழில் வாராது வந்த மாமணியாக பாரதி தோன்றினான். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டால் எப்போதுமே பாரதிக்கு முன் – பாரதிக்கு பின் தான். பாரதிக்கு முன்னால் இருப்பது நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் .பாரதிக்கு பின்னால் நவீன காலகட்டம்.
பாரதி வாழ்ந்த காலத்தில் பழைய இலக்கியமே மையப்போக்கு .உ.வெ.சா.வின் சுயசரிதையில் ஒரு சம்பவம் வருகிறது. சென்னை கவர்னர் ஓய்வு பெற்று போகிறார். அதற்கு ஒரு பாராட்டு .கவிதை படிக்கவேண்டும். அன்றைய சென்னை கவர்னருக்கு தமிழ் தெரியும். ஆகவே மாம்பழக்கவிச்சிங்க கவிராயர் என்ற ஒரு மரபான கவிஞரைக் கொண்டு வந்து ஒரு வாழ்த்து எழுதவைக்கிறார்கள். அவர் ஒரு பெரிய நிலைமண்டில ஆசிரியப்பா எழுதிக்கொடுத்து பணம் பெற்றுக்கொண்டு செல்கிறார்.
விழா தொடங்குவதற்கு ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அந்தக் கவிதையை பிழை திருத்தி அளியுங்கள் என்று உ.வெ.சாவிடம் கொடுக்கிறார்கள். இவர் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.. முதல் ஏழு பாடல்களும் கவர்னருடைய மனைவியின் முலைகளின் அழகைப்பற்றி பாடப்பட்டியிருக்கிறது. சபையில் அதைப்பாடினால் துரை என்னதான் செய்ய மாட்டார்? பதறிப்போய் வெட்டிட்டு உ.வே.சா வேறு ஒன்று சொந்தமாக எழுதுகிறார். அதைத்தான் அன்று படித்தார்கள்
மாம்பழக்கவிசிங்கராயர் செய்தது நம் மரபுசார்ந்த ஒரு செயல். திருமலைநாயக்கன் முன்னால் பாடவேண்டியதை கவர்னர் முன்னால் பாடிவிட்டார், அவ்வளவுதான். மரபில் அரசியின் ஸ்தனங்களை பாடும் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. மாம்பழக்கவிராயருக்கு அவர் என்ன தப்பு செய்தார் என்று தெரியாது. நவீன இலக்கியத்தை நோக்கி காலம் வந்துவிட்டது என்பதை கவிராயர்கள் உணராமலே இருந்துவிட்டார்கள். முன்னழகுகளின் காலம் பின்னழகுகளின் காலம், கூந்தல்களின் இதழ்களின் கண்களின் காலம் முடிந்து போய் வேறு காலம் வந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தை தான் நாம் நவீன காலகட்டம் என்று சொல்கிறோம்.
இந்த காலகட்டத்தின் தனிச்சிறப்பு என்ன என்று கேட்டால் முதல் தனிச்சிறப்பு என்பது கவிதை என்பது நேரடியான அனுபவ உணர்ச்சி வெளிப்பாடுக்கு அப்பால் போய் ஓர் அறிவார்ந்த தன்மையின், ஒரு நுண்ணுணர்வின் வெளிபாடாக மாறியது என்பதே. அதை நீங்கள் பாரதியில் பார்க்கலாம். அதாவது நவீனக் கவிதைக்கு சாராம்சமாக இருக்கும் நவீன எண்ணம், அதாவது ‘modern idea’ அவரிடம் ஏற்கனவே இருந்தது.
இன்றைக்கும் இந்த வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். மரபுக்கவிதை எழுதும் ஒருவர் அறிவுஜீவியாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. அப்பாவியாகக்கூட இருக்கலாம். அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் புதுக்கவிதை எழுதும் ஒருவர் பொருட்படுத்தக்கூடிய இரண்டு கவிதைகளை எழுதினால்கூட அவர் அறிவுஜீவிதான். அப்படி இல்லாமல் அந்தக் கவிதையை எழுத முடியாது.
நவீனக் கவிஞனுக்கு அனைத்தின்மீதும் ஒரு ஆர்வம் இருக்கவேண்டும். அரசியல் பிரக்ஞை வேண்டும். நவீன அறிவியலும் அறிமுகம் இருக்கவேண்டும். ஒரு நவீன அறிவுஜீவிதான் நவீன கவிதை எழுத முடியும். ஆனால் மரபுக்கவிதை எழுத ஓரளவுக்கு அழகனுபவம் இருந்தாலே போதும். வீட்டில் தன்மனைவி அழகாக இருக்கிறாள் என்று தோன்றினாலே போதும் நல்ல கவிதை எழுதிவிடலாம். ஆனால் புதுக்கவிதைக்கு அது போதாது.
பாரதி அவருடைய உரைநடையில் ஒரு வரி எழுதுகிறார்.
மண்ணில் வேலி போடலாம் வானத்தில் வேலி போடலாமா என்றார் ராமகிருஷ்ண முனி. போடலாம் மண்ணிலும் வானம் தானே நிரம்பி இருக்கிறது. மண்ணைக் கட்டினால் வானத்தைக் கட்டியது ஆகாதா?
இது ஒரு கட்டுரையின் முதல் பத்தி. இரண்டு வருடம் கழிந்து ஒரு கவிதை எழுதினார்.
கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திட மாட்டாவா – அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதா?
அதேதான். அந்தக் கருத்திலிருந்து இந்தக் கவிதைக்கு வரும் ஒரு தாவல் இருக்கிறதே, அது தான் நவீன கவிதை. மண்ணில் வேலி போடலாம், வானத்தில் வேலி போட முடியுமா என்றார் ராமகிருஷ்ண முனி. போடலாம். மண்ணிலும் வானம் தானே நிரம்பியிருக்கிறது. இது Poetic statement .கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திட மாட்டாவா – அட
மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதா- என்பது prose poetry . இங்கெ உரைநடை கிட்டத்தட்ட கவிதைக்கு பக்கத்தில் இருக்கிறது. அதில் பழுத்து இதில் கவிதை என உருவாகிவருகிறது.
மாமரத்தின் எந்தப்பகுதியை எடுத்து வாயில் போட்டாலும் ஒரு மாங்காய் மணம் வரத்தான் செய்யும். இலையில், தளிரில் எல்லாம் இருக்கிறது அந்த மணம். அது கனிந்துதான் மாம்பழமாக ஆகிறது. உரைநடை என்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த சிந்தனை .அதன் கனிந்த ஒரு பகுதிதான் நவீன கவிதை. இந்த ஒரு மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய ஒருவனைத்தான் நவீனக் கவிஞன் என்று சொல்கிறோம்.
இரண்டாவதாக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. எஸ்.ரா.பௌண்ட் A Retrospect to Imagism என்னும் முக்கியமான கட்டுரையில் நவீன கவிதையின் இலக்கணங்களை சொல்கிறார். அதை தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். அதுதான் புதுக்கவிதையின் manifesto. அதில் பல விஷயங்களை அவர் சொல்கிறார். முதல்விஷய்ம் ஓசை நயம் என்பதை விட்டு விடலாம். ஏனெனில் அதற்காக வலிந்து சொற்களைச் சுழற்றவேண்டியிருக்கும். சுருக்கமாக சொன்னால் போதும் . இரண்டாவதாக, அனைவருக்குமான பேச்சுமொழியில் எழுதலாம். கவிதைக்கு என்று ஒரு தனி மொழியில் எழுதவேண்டிய அவசியமில்லை.
மூன்றாவதாக மிக முக்கியமான விதி. அலங்காரங்கள் , அணிகள் ஆகியவற்றை களைந்துவிடலாம் என்று எஸ்ரா பவுண்ட் சொல்கிறார். இதன் முக்கியத்துவம் என்ன என்பது தமிழாசிரியர்களுக்கு தெரிவதில்லை. முகம் என்று சொன்னால் அது கவிதையாகத் தெரிவதில்லை. மலர் முகம் என்று சொல்லவேண்டும். நெற்றி என்று சொன்னால் சரியாக இல்லை. நறுநெற்றி என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அணிகளே பழைய இலக்கியம்.
ராமேஸ்வரம் கோபுரத்தைப் பார்த்திருக்கிறீர்களா சிற்பம் இல்லாத இடமே இருக்காது. அங்கு தூணில் ஆறடி உயரத்தில் ஒரு சிலை இருக்கிறது. அதன் கையில் ஒரு கட்டாரி இருக்கிறது. அந்தக் கட்டாரியின் பிடியில் சிற்பங்கள் இருக்கின்றன. அதை யார் பார்ப்பார்? பார்க்கவேண்டாம், அது அப்படி பூத்து நிறையும். அதுதான் அதன் அழகியல் , அவ்வளவுதான்.அணிகள் என்பவை பழைய இலக்கியத்தின் உலகப்பார்வை. அதை சம்ஸ்கிருதத்தில் அலங்காரம் என்று சொல்வார்கள். அந்த அழகியல் இங்கு ஓர் உச்சத்தை அடைந்தது. அது வெறும் தொழில்நுட்பம் அல்ல, அதற்குப்பின் ஒரு பெரிய வாழ்க்கைநோக்கு இருந்தது.
இந்த அணிகளை வெறும் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துவிடுவோம் என்கிற பிரகடனத்திலிருந்து தான் புதுக்கவிதை உருவாகியது. அப்படி ஒரு அணியைப் பயன்படுத்தினார்கள் என்றால் அதற்கு குறிப்பாக ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். ஆகவே தான் பழைய இலக்கியத்தில் உள்ள உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற அனைத்தையும் நவீன இலக்கியத்தில் பொதுவாக Poetic Image என்று, படிமம் என்ற வார்த்தையை பயன்படுத்தி, சொன்னார்கள். படிமம் என்றால் அதுவும் ஒருவகையில் உவமைதான். ஒரு பழைய கவிஞன் அது உவமைதானே என்றுதான் கேட்பான். உவமைதான், ஆனால் உவமையும் அல்ல.
படிமம் என்பதும் உவமை போல ஒரு காட்சிதான். அர்த்தம் ஏற்றப்பட்ட ஒரு காட்சி. கைவிடு பசுங்கழை என்பது ஒரு உவமைதான். அணிதான். ஆனால் அது நவீனக்கவிதையில் படிமம் ஆக மாறும்போது என்ன ஆகும் என்றால் அது எதைச் சுட்டுகிறதோ அது முழுக்க முழுக்க வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருக்கும்.
குறவர் எழுப்பிய
ஒலிக்கு அஞ்சி
காட்டுயானை
கைவிட்ட மூங்கில்
எழுகிறது
மீண்டும்.
அவ்வளவுபோதும் நவீனக்கவிதைக்கு. உதாரணமாக ஒரு குறளைப் பார்ப்பொம்
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு
தொட்டு அனைத்து ஊறும் மணற்கேணி என்று மட்டும் எழுதி அடுத்த வரியை வாசகனின் கற்பனைக்கே விட்டால் அது படிமம். அது எதைக் குறிக்கிறது என்கிறதை நீ சொல்ல வேண்டாம், நானே வாசிக்கிறேன் என்று நவீன வாசகன் சொல்கிறான். ஒரு காட்சியை மட்டும் வாசகனிடம் கொடு. அதில் உணர்ச்சியும் பொருளும் தொனிக்கவை. அது முழுக்க முழுக்க வாசகனுடைய ரசனையினால் வளர்ந்து பொருள்கொள்ளட்டும். அதுவே அது படிமம். ஆம், சங்கப்பாடல் முதல் இன்றுவரை இப்படி இது உருவாகிவந்த ஒரு பாதை உள்ளது. அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பிச்சமூர்த்தி ஆரம்பகால கவிதைகளில் படிமமாக ஆகாத உருவகக்காட்சிகளை எழுதியிருப்பார். ’படிகக்குளத்தோரம் கொக்கு’ .கொக்கு குளத்தோரம் உட்கார்ந்திருக்கிறது. செங்கால், கழுத்துநீளம். நாம் பாக்கும்போது கீழ தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் அதன் பிம்பம் தெரிகிறது. எப்போதோ ஒருமுறைதான் ஒரு மீன் கிடைக்கிறது. இவர் இப்படி முடிக்கிறார்.
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?
அதாவது அவர் சொல்வது உவமைதான். அது படிமம் என்னும் வடிவம் உருவாகி வருவதன் தொடக்கம். ஆனால் ‘நம் பிம்பத்தை நாமே பார்த்து உட்கார்ந்தாலே போதாதா?’ என்னும் விளக்கம் நவீனக் கவிஞனால் அளிக்கப்படுவதல்ல. அந்த பிம்பத்தை மட்டும் எழுதி முடித்துக்கொள்வான். முடிக்கிற இடத்தில் அமைதி இருந்தால் வாசகனின் இடம் பெரிதாகிக்கொன்டே போகிறது.
நவீன கவிதையில் கவிஞனுக்கும் வாசகனுக்குமான உரையாடலுக்கான இடம் விரிந்துகொண்டே போகிறது. சொல் சுருங்க பொருள் விரிகிறது. கவிஞன் ஒரு சின்ன குறிப்பு காட்டும்போதே வாசகன் புரிந்துகொள்கிறான். ஆகவே திரும்ப சங்க காலம் மாதிரியே ஒருகாலம் வந்துவிட்டது. ஒரு குறுகிய வட்டமும் அமைந்துவிட்டது. அதே மாதிரி இன்றைக்கும் அதிக பட்சம் ஐயாயிரம் பேர் மட்டுமே கொண்ட வட்டம்தான். இங்கே நண்பர் இசை இருக்கிறார். அவர் ஒரு கவிதை எழுதினால் சென்னையில் இருக்கும் அவர் நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு தெரியும். அவர்கள் இரண்டு பேரும் தான் படித்துக்கொண்டு ரசிப்பார்கள். லிபி ஆரண்யாவுக்கு சொல்வார்கள்.
இன்று உலகமெங்கும் இப்படி தான் ஒரு சின்ன வட்டத்துக்குள் நவீனக்கவிதை இருக்கிறது. நீங்கள் அந்த வட்டத்துக்குள் போகவேண்டும். கிட்டத்தட்ட ஐஐடிக்கு நுழைவுத்தேர்வு அளவுக்கு கஷ்டமானது.. இப்படி உலகமெங்கும் நுண்பொருள் கொள்ளும் சிறுவட்டங்களால் ஆனதாக மாறிவிட்டது கவிதை. அவர்களுக்குள்தான் படிமம் என்பது செறிவாகி பெரும்பாலும் நுட்பமாக உணர்த்தி மட்டுமே நிற்பதாகத் திகழ்கிறது.
சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒருபறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது
நான் இங்கு ஒரு கொள்கையை சொல்வதற்காகத்தான் மிகப் பிரபலமான கவிதையைச் சொல்கிறேன். இதிலுள்ளது ஒரு படிமம். அர்த்தம் குறிப்பாலுணர்த்தப்பட்ட ஒரு காட்சி மட்டும்தான் இது. பழைய கவிதைகள் எனில் ‘அதைப்போல’ என்று ஆரம்பித்து மேலே சொல்லும் கருத்து தேவை. இது எதைக் குறிக்கிறது? பறவை பறந்து போய்விட்டது.சிறகிலிருந்து ஒரு இறகு உதிரும்போது அப்படி சுழன்று சுழன்று தான் இறங்கும். அது எழுதுவது போல் இருக்கிறது. அலையலையாக அதன் அடியில் புரண்டு வரும் தீராத காற்றுப் பக்கங்களில் அது எதையோ எழுதிக்கொண்டிருக்கிறது. எதை எழுதுகிறது? அந்தப்பறவையின் வாழ்க்கையை எழுதிப்போகிறது. காவியம் என்று இந்தக் கவிதைக்கு பிரமிள் தலைப்பு வைக்கின்றார். அச்சிறகு அந்தப்பறவையின் காவியம். அப்பறவை விட்டுச்செல்லும் அறிவிப்பு. அப்பறவையாக இங்கே எஞ்சிநிற்பது அது.
நவீன கவிதையில் இரண்டு வகையான கூறுமுறை இருக்கிறது. ஒன்று படிமம் இன்னொன்று கவியுருவகம். Metaphor என்று சொல்வார்கள். படிமம் என்பதன் முதல் இலக்கணமே அது கண்ணுக்குத் தெரியக்கூடிய ஒரு காட்சியாக இருக்கவேண்டுமென்பது தான். பிரமிளின் கவிதை ஒரு படிமம். நீங்கள் படித்த உடனே அந்த காட்சி உங்கள் கற்பனையில் வருமென்றால்தான் அது படிமம். அந்தப்படிமம் மூளைசார்ந்ததாக இருக்கும்பட்சத்தில் அது உருவகமாக மாறிவிடும். அது ஏதோ ஒரு நோக்கத்துக்ககா உருவாக்கியிருப்பார்கள் , அந்த நம் எண்ணத்திலும் நோக்கம் வந்துவிடும். கவியுஉருவகம் என்பது நவீனக்கவிதையில் இரண்டாம் பட்சமான விஷ்யமாக தான் கருதப்படுகிறது. நவீனக் கவிதை பெருமளவுக்கு படிமம் வழியாக தொடர்புறுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது இன்று.
தேவதேவனுடைய ஒரு கவிதையை நினைவுகூர்கிறேன்.
அசையும்போது தோணி அசையாத போது தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்
இது படிமத்தின் அடுத்த கட்டம். படிமத்தை பின்னி ஒரு பரப்பை உருவாக்கிக்காட்டுகிறது இக்கவிதை. இது உறைந்த படிமம் அல்ல. ஒரு நதியில் இருக்கிறது தோணி .அசையாத போது அது ஒரு தீவு. அசையும் கணம் அது ஒரு தோணி. அந்த தீவுக்கும் இந்த தோணிக்கும் நடுவே மின்னற் பொழுதே தூரம். ஒரு கணம் தான் ஆனால் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடந்து போக முடியும். இதில் நதி,படகு ஒரு படிமம். தோணி தீவு இன்னொரு படிமம். மின்னல் இன்னொரு படிமம். மூன்று படிமங்களை இணைத்து ஒரு நெசவு. ஒரு விளையாட்டு. படிமத்தைப் படிமப்பின்னலாக்கிவிட்டது இது. இப்படித்தான் நவீன கவிதையின் பரிணாமம் நிகழ்ந்தது.
கவிதையின் சமகாலம் என்பது என்ன? கவிஞர்கள் எஸ்ரா பவுண்ட் காலத்தில் ஆரம்பித்து படிமங்களில் திளைத்து படிமங்களில் புழங்கி கிட்டத்தட்ட ரூபாய் நோட்டுக்குச் சமானமாக படிமங்களை வைத்து புழங்க ஆரம்பித்த ஒரு காலம் இருந்தது. அப்போதுதான் உலக அளவில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்தது. எம்.டிவின்னு ஒன்று வந்தது. ஒரு நாளைக்கு முப்பதாயிரம் படிமங்களை கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நல்ல கவிஞன் இரவுபகலாக எழுதறவிட நல்ல படிமங்களை காட்சியாக உருவாக்கினார்கள் தொலைக்காட்சியாளர்கள்.
விளைவாக உலக அளவில் கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வருஷத்தில் படிமம் என்பதே இல்லாமல் போய்விட்டது. படிமமற்ற கவிதை அல்லது Plain poetry உருவாகி வந்தது. அதில் இரண்டு வகை இருக்கிறது .ஒன்று குறுஞ்சித்தரிப்பு. ஒரு சின்ன நிகழ்ச்சியை மட்டும் காட்டுவது. நண்பர் இசை எழுதும் பெரும்பாலான கவிதைகள் அப்படிப்பட்டவை. ஒரு காட்சியை மட்டும் சொல்லக்கூடியவை.ஒரு சந்தப்பத்தை மட்டும் சொல்லக்கூடியவை. அது படிமமா என்று கேட்டால் படிமம் மாதிரிதான் . ஆனால் படிமம் மட்டும் அல்ல. இன்றைய பொதுப்போக்கு இதுதான். ஒரு பைத்தியம் அதிகாலையில் சூடான டீயை வாங்கிக்கொண்டுசெல்கிறது. அந்தக்காட்சி மட்டும்தான் கவிதை. கவிஞன் அந்த டீ சூடாறாமல் இருக்கவேண்டுமென வேண்டிக்கொள்கிறான். அவ்வளவுதன. மீண்டும் சங்ககாலம். மீண்டும் வெறும்காட்சி!
ஆக கைவிடு பசுங்கழையிலிருந்து இன்றைய கவிதை வரைக்கும் ஒரு நீண்ட பரிணாமக்கோடு இருக்கிறது நண்பர்களே.
நன்றி, வணக்கம்.
[ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 16, 2015 அன்று ரசனை முற்றம் என்னும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரை ]