கைவிடு பசுங்கழை

Singapore Poetry Fest 2016 (2)

நண்பர்களே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சொற்பொழிவுத் தொடரில் நான் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு, கைவிடு பசுங்கழை . உங்களில் சிலர் உடனடியாக கூகுளில் அதை அடித்து குறுந்தொகையில் அது எந்தப்பாடலில் வருகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். ‘அணிலாடு முன்றிலார்’ போன்று சில கவிஞர்களுடைய பெயர்கள் அந்த கவிஞர் எழுதிய சிறப்பு வரியாலேயே குறிப்பிடப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சங்கப்பாடல்களில் முக்கியமான பல கவிதைகளை எழுதிய பெருங்கவிஞர்கள் இருக்கிறார்கள். கபிலர், பரணர், ஔவையார் போல. ஆனால் சிலர் ஒரு தனி சொல்லாட்சியை மட்டுமே அளித்துவிட்டு வேறு எதையும் எஞ்சவைக்காமல் வரலாற்றில் மறைந்து போனவர்கள்.அவர்களில் ஒருவர் மீனெறி தூண்டிலார். அவர் எழுதிய ஒரு சங்கப்பாடல் இது.

யானே ஈண்டையேனே என்நலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீ
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலின் நிவக்கும்
கான நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே

யான் இங்கிருக்கிறேன். என் நலன், என் அழகு, தினைப்புனம் காக்கும் கிணைப்பறையின் ஒலியைக் கேட்டு அஞ்சிய காட்டு யானை தான் பிடித்த மூங்கிலை அப்படியே விட்டுவிட்டு செல்ல, அந்த மூங்கில் மீன் விழுந்த தூண்டிலின் கோல் நிமிர்வது போல மீண்டு செல்லும் காட்டுக்குரியவனோடு அன்றே சென்றுவிட்டது.

இது தான் அந்தக் கவிதை .இந்தக் கவிதையில் நான் எடுத்துக் கொண்ட வரி ‘கைவிடு பசுங்கழை’. கான யானை கைவிடு பசுங்கழை. அந்தக் காட்சியை உங்கள் நெஞ்சில் விரிக்க விரும்புகிறேன். யானை காட்டில் உள்ள உயரமான மூங்கிலை பற்றி இழுத்து வளைத்து அந்த ஓலையை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தினைப்புனம் காக்கிறவர்கள் பறையடிக்கிறார்கள். யானை அந்த பறையொலியைக் கேட்டு மூங்கிலை விட்டு விட்டு போகிறது. கைவிடப்பட்ட மூங்கில் மீன் கவ்வியதனால் இழுபடும் தூண்டில் போல மீண்டு மேலே போகிறது.

இந்தக் காட்சியை சொல்லும் தலைவி ’தலைவன் என்னை விட்டு அகன்று சென்றாலும் அவனை நோக்கி என் உள்ளம் திரும்பி போகிறது’ என்று சொல்வதற்காகத்தான் அந்த வரியை குறிப்பாக முன்வைக்கிறாள். ‘அந்த நாட்டைச் சேர்ந்தவனிடம் என்னுடைய உள்ளம் சென்றுவிட்டது. எவ்வண்ணம் பற்றினாலும் வளைந்தாலும் இறுதியில் அவன் நினைவுக்கே திரும்பி போகும் உள்ளம் கொண்டவனாக இருக்கிறேன்’ என்று அவள் சொல்கிறாள்.

இங்கே அந்த வரியை என்னுடைய வாசகசுதந்திரத்தால் வேறொரு பொருளில் கவிதை ரசனைக்கான குறியீடாக எடுத்துக் கொண்டேன். இப்படி சொல்கிறேன், அந்த மூங்கிலை அந்த யானை வளைப்பது கவிதையின் எழுத்து. திரும்பி அந்த மூங்கில் செல்லும் பயணம் தான் கவிதை ரசனை. எத்தனை தூரம் அந்த மூங்கில் திரும்பி போகிறது என்பது தான் ரசனை .அது மீனெறி தூண்டில். எந்த மீனைக் கவ்விச் செல்கிறது அது என்பது தான் கவிதை ரசனை.

கவிதை ரசனை என்பது எது படிக்கப்படுவது என்பது அல்ல, படிக்கப்பட்ட பிறகு அந்த மூங்கில் எந்த அளவு மீண்டு செல்கிறது என்பதுதான். கவிதையின் ரசிப்பு நிகழ்வது கவிதை படிக்க்கப்படும் கணத்தில் அல்ல, படித்த பிறகு நீங்கள் உங்களுடைய ஆளுமைக்கு திரும்பிப் போகும் பயணத்தில். ஒரு கவிதையில் நீங்கள் என்ன படித்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன கற்பனை செய்தீர்கள் என்பது தான் முக்கியம். என்ன தெரிந்து கொண்டீர்கள் என்பது முக்கியம் கிடையாது, என்ன உணர்கிறீர்கள் என்பது முக்கியம். ஒரு கவிதையின் சாரம் என்பது எது அதில் நேரடியாக சொல்லப்படவில்லையோ, அங்கு இருக்கிறது. ஆம், கவிதை என்பது மறைபொருள்.

நண்பர்களே, நெடுங்காலமாக நாம் இறைச்சி என்ற வார்த்தையை அப்பொருளில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். உள்ளுறை பொருள் அது. ஒரு கவிதையில் அதனுடைய சொற்களின் ஒவ்வொரு இடைவெளிக்கும் நடுவே எதோ ஒன்று இருக்கிறது. அது அந்த வாசகனால் அடையப்படுவது. அது தான் கவிதை. இறைஞ்சப்படுவதனால் எழுவதுதான் இறைச்சியா என்ன?

ஈராயிரம் வருடங்களாக நம்முடைய் கவிமரபு இப்படித்தான் இருக்கிறது. யோசித்து பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பல குறுந்தொகைப் பாடல்கள் பதினாறு வார்த்தைகளுக்குள் தான் இருக்கின்றன. இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைச் சொல்லி யாரை நம்பி அதை வைத்துவிட்டு போனார்கள் அக்கவிஞர்கள்? இரண்டாயிரம் வருஷங்களாக இங்கு திருப்பி திருப்பி அதை தொட்டு எடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்களே. அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு இருந்திருக்கிறது. கவிதைமேலான நம்பிக்கை அது.

ஏன், நம்முடைய பிரபல நவீனக் கவிஞர்களுக்கு பெரும்பாலும் அந்த நம்பிக்கை வருவதில்லை? ஒரு வரியில் சொல்ல வேண்டியதை அவர்கள் ஏன் ஒரு கவியரங்கத்தில் ஒன்பது பக்கங்களில் பாடுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் தன் முன்னால் இருப்பவனை நம்புவதில்லை. தன் காலத்தைக் கடந்து வருபவனை காண்பதில்லை. சுந்தர ராமசாமி சொல்வார் ஒரு கவிஞரைப் பற்றி, தலைவாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறி அவரே சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார் என்று. நல்ல கவிதை வாசகனை நம்பும், வாசகனின் ஆழத்துடன் அது பேசும்.

இதோ இந்தக் கவிதை, ‘நான் இங்கிருக்கிறேன். என்னுடைய அழகு யானை கைவிட்ட மூங்கில் போல நிமிர்கிறது. என் நலன் அந்த நாட்டைச் சேர்ந்தவனோடு அன்றே போயிற்று. இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள இணைப்பை நிகழ்த்தவேண்டிய பொறுப்பை தன் வாசகனுக்கு விட்டுவிட்டு அவனால் விலக முடிகிறது. ஓர் உரையில் சங்கப்பாடலை பற்றி சொல்லும்போது ஏ.கே.ராமானுஜன் சொன்னார், இந்த அளவுக்கு நுட்பமான, இந்த அளவுக்கு மறைபொருள் கொண்ட கவிதைகள் இந்தியாவிலேயே குறைவாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றன என. என்ன காரணம் என்றால் இதை இயற்றி ரசித்தவர்கள் நுண்ரசனைகொண்ட ஒரு சிறிய வட்டத்தினர் என்பதுதான்.

எந்த அளவுக்கு ரசிகர்கள் சிறிய வட்டத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு கலை நுட்பமாக ஆக முடியும். உங்களுக்குத் தெரியும், உங்கள் வீட்டுக்குள் பேசிக் கொள்ளும் சில குழூக்குறிகள் வெளியே இருப்பவர்களுக்கு தெரியாது. என்னுடைய நண்பருடைய வீட்டில் அவர்கள் அப்பாவை சி.எம் என்று சொல்வார்கள். ‘சி.எம். ப்ரொட்டோகால் என்ன?’ என்றால் அவர்களின் அப்பா எப்ப வருவார் என்று அர்த்தம். இப்படி வீட்டுக்குள் ஒரு மொழி உருவாவது போல ஒரு குறு சமூகத்திற்குள் ஒரு மொழி உருவாகும்போது அந்தக் கவிதை மேலும் மேலும் நுட்பமானதாக ஆகிறது.

இரண்டாவதாக, இந்தக் கவிதைகள் அனைத்துமே அமைப்பை வைத்துப்பார்த்தால் பாணன் பாடி, விறலி நடனமிடுவதற்காக எழுதப்பட்டவை எனத் தெரிகிறது. ஒரு நிகழ்த்து கலையின் எழுத்து வடிவம் போலுள்ளன இவை. முனைவர் துளசி ராமசாமி விரிவாகவே இதை எழுதியிருக்கிறார். ஆகவே இந்தக் கவிதையை ஒரு மேடையில் ஆடும் விறலி தன் அபிநயம் வழியாக வளர்த்து எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தக் ‘கைவிடு பசுங்கழையை’ ஒரு பதிமூன்று அல்லது பதினைந்து சைகைகள் வழியாக நடித்துக் காட்டியிருப்பார்கள். அதனுள் இருக்கும் எல்லா அர்த்தங்களும் வெளிப்பட்டிருக்கும்

இதற்கு சமானமாக சொல்லப்படுவதென்றால் இன்றைக்கு கதகளியைச் சொல்லலாம். கதகளிக்கு பெரும்பாலும் முப்பது பேருக்குமேல் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஐம்பது பேர் இருந்தால் பெருங்கூட்டம், அந்த நடிகன் பதறிப்போய்விடுவான் என்கிறார்கள். இந்த முப்பது பேரும் ஒவ்வொரு முறையும் கதகளியை தொடர்ந்து பார்ப்பவர்களாக இருப்பார்கள். திருவட்டாறில் வருடத்தில் இரண்டு முறை தொடர்ந்து பத்து பத்து நாட்கள் கதகளி நடக்கும் அதே ஐம்பது பேர்தான் உட்கார்ந்திருப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் அதே நளசரித்திரம் கதையாடல்தான். ஒவ்வொரு வருஷமும் அதே நளன் அதே அன்னப்பறவையை தமயந்திக்கு தூது விடுவான். ஆனால் ஒவ்வொருமுறையும் மனோதர்மம் எனப்படும் கற்பனை புத்தம்புதியது.

நூறுவருஷத்திற்கும் மேலாக இந்த தூது நடந்துகொண்டிருக்கிறது. கேட்டால் சொல்வார்கள், போன முறை விட்ட அன்னம் அல்ல இது. இது வேறுஅன்னம். அன்னப்பறவையை எடுத்து தம்யந்தியிடம் அனுப்பும் நளன் அந்த அன்னப்பறவையை என்னவாக மாற்றுகிறான் என்றுதான் இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அன்னப்பறவை தூது போகும் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த அன்னப்பறவை ஒரு காதல் கடிதமாக ஆகலாம். நளனின் உள்ளமாக ஆகலாம். ஒருமுறை நான் கதகளி பார்த்துக்கொண்டிருந்தேன். அன்னப்பறவையை மாவேலிக்கரை சிவராமன் நாயர் அனுப்பிக்கொண்டிடிருந்தார். என் பக்கத்தில் உட்காந்திருந்த பாட்டி ”ஆஹா” என்றாள். ”என்ன?” என்று கேட்டேன். ”அன்னப்பறவையை தாமரையாக மாற்றிவிட்டார்” என்றார். ”ஒவ்வொரு இதழாக விரித்து அனுப்புகிறார்” என்றாள்.

இங்கே அந்தக் கலைஞனுக்கும் ரசிகைக்கும் நடுவே கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்பு நிகழ்கிரது. அன்னப்பறவை எப்படி வெள்ளைத்தாமரையாக மாறும்? முத்திரைகளில் அப்படி மாற்றிவிட்டார். அத்தகைய நுட்பமான ஊடாட்டம் எப்போது ஒரு வாசகருக்கும் கவிஞருக்கும் இடையில் இருக்கிறதோ அப்போது தான் கவிதை ரசனை தொடங்கிறது. அது சங்கப்பாடல்கள் எழுதி ரசிக்கப்பட்ட காலத்தில் இருந்தது. ஆகவேதான் அவை அத்தனை நுட்பமானவையாக இருந்தன. அப்படிப் பார்க்கும்போது சங்கப்பாடல் ஒரு நீண்ட கவிமரபின் கடைசிக் கணக்கு புத்தகங்கள் போல் தோன்றுகிறது. அதாவது ஒரு பெரிய மரபு முடிந்த பின்னர் அதில் சிறந்ததை மட்டுமே எடுத்து தொகுத்து உருவாக்கப்பட்டவை அவை. ஆகவே பெரும்பாலும் எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன.

நானூறு என்பது சமணர்களின் எண்ணிக்கை. சுண்டிப்பார்த்து தேர்வுசெய்திருப்பார்கள். சில கவிதைகள் மிகச்சாதாரணமொழியில் எழுதப்பட்ட சிறந்தகவிதைகளாக இருக்கின்றன. சில கவிதைகள் மிகச்சிக்கலான சொல்லமைப்பு கொண்டவை . சிலகவிதைகள் சிக்கலான படிம அமைப்பு கொண்டவை. ஒருவரியில் இரண்டு உவமை வருகிறது. மீனின் முள் போல, சிட்டுக் குருவியின் நகம் போல, தாழை முள் இருந்தது என ஒருவரி. ஒரு தாழைமுள் பற்றிய வர்ணனை!

சில கவிதைகளில் ஒரு சாதாரண உவமை கூட இல்லாமல் வெறுமே காட்சி மட்டுமே இருக்கிறது. வெறுமே காமிரா கிளிக்கி நிற்கிறது. ஆனால் அது ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் நின்றுகொண்டிருக்கிறது. சங்கப்பாடல்களுக்கென ஓர் அழகியல் உண்டு. அதை நான் இப்படி சொல்வேன், கண்ணுக்கும் உணர்ச்சிக்கும் நேரடியான ஒரு பாதை அது. எப்படி நீங்கள் கண்ணால பார்க்கிறீர்களோ அந்தக் காட்சி அப்படியே உணர்ச்சியாக மாறிவிடுகிறது. அதற்கு நடுவில் ஒரு அறிவார்ந்த மாற்றம், ஒரு சமையல் நடந்திருக்கிறது. அந்தக்காட்சித் தருணம் உள்ளக் காட்சியாகிவிட்டிருக்கிறது. இந்த நேரடியான காட்சித் தன்மைதான் மிகப்பெரிய அழகையும் நுட்பத்தையும் கொடுக்கிறது சங்கப்பாடல்களுக்கு.

ஓடை போகிறது. அதன் ஓரத்தில் இருக்கும் வேர்களை வெண்ணிறமான மெல்லிய விரல்கள் என்று ஒரு வர்ணனை சொல்கிறது. மாசறக்கழுவிய யானைபோன்ற பாறைகள் என ஒரு உவமை. எருமை போன்ற கருங்கல்பாறைகள் பரவிய மலைச்சரிவு என ஒரு சித்திரம். எல்லாமே நேரடியாக நீங்கள் அங்கு போனால் பார்க்க வாய்ப்புள்ள காட்சிகள். ஆமாம், நானும் பாத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய வரிகள். அந்தக் காட்சியை அப்படியே உணர்ச்சியோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். அதற்கு நடுவில் எந்த கருத்தோ கொள்கையோ அழகியல் இலக்கணமோ ஊடாடியிருக்காது.

புதுமைப்பித்தன் சங்கப்பாடல்களை எந்தவகையிலுமே தன்னைப்பாதிக்காதவை என்று சொல்கிறார். போட்டோகிராபி கவிதை என்கிறார். நான் கம்பராமாயணத்தில் ஊறித்தோய்ந்த பேராசிரியர் ஜேசுதாசன்அவர்களை நேரில் சந்தித்த போது அவரும் அதையே சொன்னார். எனக்கு சங்கப்பாடல் எந்த அனுபவத்தையும் கொடுக்கவில்லை, எல்லாம் வெறும் படங்கள். அவர்கள் ஒரே சிந்தனைப்பள்ளி. நான் சொன்னேன். ‘இல்லைசார், அவை வெறும் சித்திரங்கள் அல்ல. அந்த சித்திரங்களுக்கு மேல் ஒரு உணர்வு ஏற்றப்பட்டிருக்கிறது’ ஆனால் அவர் ‘அந்த உணர்வு அதில் இல்லையே. வெறும் சித்திரம் தானே இருக்கிறது’ என்று சொன்னார்.

தமிழின் கற்பனாவாதத்தின் உச்சகாலத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு பெரும்பாலான சங்க இலக்கியங்கள் பிடிகொடுப்பதில்லை. அவை வெறும் வாழ்க்கைச் சித்திரங்கள்தான் என்ற எண்ணம் உருவாகும். உண்மையில் சங்கப் பாடல்களுக்கு உரை எழுதிய பல உரையாசிரியர்கள்கூட வெறும் வாழ்க்கை சித்திரங்களுக்கு உரை எழுதுவதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். ‘இந்தப்பாடல்கள் சங்க கால மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன’ என்ற வரியை நீங்கள் அத்தனை பேரும் பள்ளியில் படித்திருப்பீர்கள். ‘படம் பிடித்து’ காட்டுவதற்காக ஒருவன் இத்தனை சொல்நுணுக்கிக் கவிதை எழுதுவானா?

ஓவியங்கள் அல்ல இவை. அதற்கப்பால் சொல்லப்படாத ஒரு உணர்வின் இணைப்பு இருக்கிறது. அந்த இணைப்பு பிற்காலத்தில் தான் நமக்கெல்லாம் துலங்கி வந்தது. இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லப்போனால் கன்னடனரான ஏ.கே.ராமானுஜம் போன்ற ஒருவரால்தான் அந்த இணைப்பு நம் வாசிப்பில் வலுவாக ஊன்றப்பட்டது. Interior Landscape என்று அவர் சங்கப் பாடல் தொகுப்புக்கு தலைப்பு கொடுத்தார். அகநிலக்காட்சி! இவற்றில் உள்ல நிலம் உண்மையான நிலம் அல்ல. இத்தகைய நிலம் அன்றும் இன்றும் இருந்திருக்கமுடியாது. இது ஒரு கற்பனைநிலம். உணர்வுகளின் நிலம். உள்ளத்தின் ஆழத்தில், கனவுகளில் உள்ள நிலம். சங்க காலத்தில் இப்படியொரு யானை வந்து மூங்கிலைப்பிடித்து இழுத்ததா என்பதல்ல இங்கே முக்கியம். தன்னுடைய உள்ளம் எப்படி விசையுறு பந்தினைப்போல் அவரிடம் திரும்பிச் செல்கிறது என்று என்று சொல்ல விழைந்த ஒரு கதாநாயகியின் கற்பனையில் உருவாகிய நிலம் அது. ஆக இது ஒரு வாழ்க்கைக் காட்சி அல்ல, உளநிலக்காட்சி. இந்த வாசிப்பு வந்த பிறகு தான் சங்கப்பாடல்களின் அழகு மேலும் துலங்க ஆரம்பிக்கிறது.

மு.வரதராசனார் நற்றிணை இன்பம் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவரது வாசிப்பு இப்படித்தான் இருக்கும் ”யானை எவ்வளவு அற்புதமாக மூங்கிலை இழுத்து சாப்பிடும் என்ற காட்சியை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார்”. இவை வாழ்க்கை அல்ல, கனவுகள். நிலம் அல்ல உள்ளம். இந்த நிலமும் இவைகாட்டும் வாழ்க்கையும் இவை இயற்றப்பட்ட காலத்திற்கு நெடுநாட்களுக்கு முன்பு எப்போதோ இருந்தவை. நாம் இப்போதும் ராஜாராணிக்கதை பேசுகிறோமே அதைப்போல. அவர்களின் கனவுக்குள் வளர்ந்த கடந்தகாலம் இது. சென்று மறைந்த அரைப்பழங்குடி வாழ்க்கை. அதன் நிலம். ஆகவேதான் சங்கப்பாடல்களில் ஒரு விசித்திரத்தைப்பார்க்கமுடிகிறது. புறநாநூறு காட்டும் வாழ்க்கை மிக வளர்ச்சியடைந்த ஒன்றாகவும் அகப்பாடல்கள் காட்டும் வாழ்க்கை அரைப்பழங்குடிவாழ்க்கையாகவும் உள்ளன

இதைமட்டும் நாம் கருத்தில் கொண்டால் சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு வாசல்கள் திறந்து நமக்குக் காட்டுவதைக் காணலாம். தொடர்ந்து சங்கப்பாடல்களைப்பற்றி அந்த வாசிப்புகளை நிகழ்த்தி புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்.

குருகு என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். நானும் என்னுடைய மகனும் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அவன் பறவையியலில் மிகுந்த நாட்டம் கொண்டவன். ஒரு வெண்பறவை வயலில் இருந்து எழுந்து தாழையில் உட்கார்ந்தது. இவன் “குருகு !குருகு!” என்று கத்தினான். நான் “குருகுன்னா கொக்குதானே ?” என்று சொன்னேன். அவன் கடுங்கோபத்துடன் “குருகு வேற, கொக்கு வேற. இதப்பார் இது குருகு. கால் குட்டையாக இருக்கும். அதனாலேயே கழுத்தும் குட்டையாக இருக்கும். குருகு புதருக்குள்தான் வாழும். பெரும்பாலும் அதற்கு மணமே கிடையாது. நாய் பக்கத்தில் போனால் கூட அதை பிடிக்க முடியாது. ஒரு வயலில் ஒரு குருகு இருப்பதை அந்த வயலில் வருடம் முழுக்க வேலை பார்த்தாலும் கூட நீங்கள் பாக்காமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு ரகசியமான பறவை. மிகத்தற்செயலாக தான் அது கண்ணுக்குப்படும்.
அப்போதுதான் அந்த சங்கப்பாடல் எனக்கு ஞாபகம் வந்தது.

யாரும் இல்லை, தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தான் அன்ன பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே” (குறு.25)

இப்பாடல் என்ன சொல்கிறது. அவன் என்னை மணந்து கை தொட்டு சத்தியம் செய்து கொடுத்த அந்த நாளில் சான்றாக பக்கத்தில் குருகு மட்டும் தான் இருந்தது. அது மட்டும் தான் சான்று.
கிட்டத்தட்ட நூறு வருஷமாக இதற்கு கொக்கு என்று உரை எழுதியிருக்கிறார்கள் பண்டிதர்கள். நான் அஜிதனிடம் சொன்னேன். இப்படி ஒரு பாட்டு இருக்கிறது என்று. அதற்கு கொக்கு என்று உரை எழுதியிருக்கிறார்கள் என்றபோது அப்படியே சிரித்துவிட்டான். “அப்பா கொக்கு திறந்த வெளியில் வாழக்கூடியது. அப்ப தலைவியை திறந்தவெளியிலா உடலுறவு கொண்டான்?”. ஆம், குருகு தாழைக்குள் எங்கென்று தெரியாமல் இருக்கும் ஒன்று. திரும்பிச்சென்றால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒன்றுதான் தனக்கு சாட்சியாகிறது என்று சொல்லும்போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு அர்த்தமே வருகிறது. எங்கே பாத்தாலும் கண்ணில் படும் கொக்குதான் சாட்சி என்று சொன்னால் அது கவிதையே இல்லை. இது தான் சங்க இலக்கியத்தின் நுட்பம்

சங்கப்பாடல்களில் ஒரு குறிப்பிட்ட வகையான பறவையோ மலரோ சொல்லப்படும்போது அதற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல் பொருள்கொள்வார்கள். அவர்கள் திண்ணையை விட்டு வெளியே போகாதவர்கள். அந்தப்பூ என்ன, அந்தப்பறவை என்ன என்று அவர்கள் விசாரிக்கவே மாட்டார்கள். ‘இதுவாகத்தான் இருக்கும், வேற என்ன எழுதியிருக்கப்போறாங்க’ என்று பொருள் எழுதிவிட்டார்கள். இன்றைக்கு நம் நவீன வாசிப்பில் நாம் சங்கப்பாடலை முழுக்க திருப்பி பொருள் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சங்கப்பாடல்களில் இருந்து நம் மூங்கில் வெகுதூரம் நம்மை நோக்கி திரும்பி வரவேண்டியிருக்கிறது.

சங்கம் மருவிய காலகட்டம் என்று அடுத்த காப்பியகாலகட்டத்தை சொல்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவகசிந்தாமணியின் காலம். சங்க காலத்துக்கும் இதற்குமான வேறுபாடு என்ன என்று கேட்டால் முதன்மையாகத் தத்துவச் சிந்தனை. தத்துவநோக்கு தமிழ் மரபில் வலுவாக வேரூன்றிய காலகட்டம் என்று இதைச் சொல்லலாம். பௌத்த, சமண தத்துவங்கள் இங்கே வந்தன. பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வந்தன. வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் பற்றிய கேள்விகள் வந்தன. தத்துவ சிந்தனை வந்த உடனே என்ன நிகழ்ந்தது என்றால் காட்சிக்கும் உணர்வுக்கும் நடுவில் தத்துவ சிந்தனை வந்து நின்றது. வாழ்க்கைக் காட்சி தத்துவ சிந்தனையால் மறு ஆக்கம் செய்யப்பட்டு பரிமாறப்படலாயிற்று. காட்சிகள் குறியீடுகளாயின.
புகழ் பெற்ற அந்த வரியை இங்கு நினைவு கூர்கிறேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழைகிறார்கள்.
போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பதுபோல் மறித்து கைகாட்ட

என்கிறார். கொடி வராதீர்கள் என்று கைகாட்டுகிறது. இந்த வகையான ஒரு படிமத்தை நீங்கள் சங்கப்பாடலில் பார்க்க முடியாது இதை இன்றைக்குள்ள நவீன வாழ்க்கையில் சொல்லப்போனால் cereberal image என்று சொல்லலாம். சிந்தனை சார்ந்த படிமம். ஒரு சிந்தனையாளனாகிய ஒருவரால், தத்துவத்தை அறிந்த ஒருவரால், உருவாக்கப்பட்ட படிமம். கண்டெடுக்கப்பட்ட படிமம் அல்ல. வயல்வெளிக்கு சென்று அங்கு ஒரு மலரையோ பறவையையோ பார்த்து அதிலிருந்து ஒரு தூண்டுதல் அடைந்த கவிதை அல்ல இது. சிந்தித்து எழுதப்பட்ட கவிதை. இந்த மாற்றம் தான் தமிழ்க் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. \

இது இந்தியாமுழுக்க நிகழ்ந்தது என்று சொல்லலாம். தமிழில் இந்த மாற்றம் நிகழ்வதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் நிகழ்வதற்கான காரணம் என்ன என்பதற்கு ஒரு விஷயத்தை மட்டும் விரிவாக சொல்கிறேன். சங்கநூல்களில் நான்கு கவிதைகளை எழுதியவர் கொல்லன் அழிசி . அவர் வெறும் கவிஞன் அல்ல, கொல்லன். ஆனால் தத்துவம் வந்தபிறகு முழு நேரக்கவிஞர்கள் மெதுவாக உருவாகலானார்கள். தமிழ்ப்பெருங்காவியம் ஒன்றை எழுதியவன் மதுரை கூலவாணிகனாகிய சாத்தன். ஆனால் பின்னர் தத்துவ ஞானியும் மத அறிஞனும் ஆகிய கவிஞன் உருவாகிவந்தான். கவிஞன் மட்டுமேயான கவிஞன். அவைக்கவிஞன். புரவலரால் பேணப்பட்டவன். இந்த மாற்றம் வந்த பிறகுதான் அழகியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஆற்றுர் ரவிவர்மாவிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் ஓர் உவமையை ரசித்து சொன்னேன். கதாசப்தசதியில் வரும் ஓர் உவமை. மையுண்ட இருகண்களும் நிறைந்து கதாநாயகியின் கண்ணீர் துளிகள் விழுந்தன. அந்த மை கலந்த கண்ணீர்த்துளிகள் அவளுடைய பொன்னிறமான மார்பில் கோடுகளாக நீண்டன. அவை மஞ்சள் நிறமான மரத்தை அறுப்பதற்காக நூல்கட்டி கரிக்கோடு போட்டது போல் இருந்தன. பிரிவென்னும் ரம்பத்தால் உள்ளத்தை காலம் அறுக்கப்போகிறது .அதற்காக போட்ட கரிக்கோடு போல அவள் கண்ணிலிருந்து விழுந்த கரிக்கோடு அது.

ஆற்றுர் ரவிவர்மா சொன்னார், இது cerebral ஆன உவமை. இந்த விஷயத்தை சொல்வதற்காக தன் உள்ளத்தில் இருந்து அவன் எடுக்கவில்லை. சிந்தனையிலிருந்து உருவாக்கியிருக்கிறான். இது அழகற்ற உவமை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் சங்ககால உவமைக்கு நிகரானதல்ல. இது வேறு வகையான உவமை. இது ஒரு கவிஞனால் உருவாக்கப்படும் உவமை. ஒரு கவிச்சூழலால் சமைக்கப்பட்ட உவமை. இதற்கொரு அழகு இருக்கிறது. இது ஒரு பொற்கொல்லன் மிக நுட்பமாக நகை செதுக்குவது போல . ஒரு நுட்பமான பொன்மலர் இது. ஆனால் வெளியில் சென்று ஒர் அழகான ஆவாரம்பூவை எடுத்துப்பார்த்தால் அதற்கும் இதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. இதுதான் சங்கப்பாடலுக்கும் அடுத்த காலகட்டத்துக்கும் இடையே இருக்கும் அடிப்படையான வேறுபாடு

இதிலிருந்து ஆரம்பித்து கவிதை ‘செய்தல்’ நிகழ்ந்த பெரிய காலம் இருக்கிறது. Improvisation னின் காலம். நுட்பமாக மேம்படுத்திக் கொண்டே போவது. நுண்மையாக்கிக் கொண்டே செல்வது. ஒவ்வொரு கவிஞனுக்கும் அவனுடைய பெருங்க்களம் முன்னரே இருக்கிறது. அவன் சொந்தக் களஞ்சியத்திலும் கொஞ்சம் படிமங்கள் இருக்கின்றன. எழுத எழுத கவிதைக்கான கருவூலங்கள் நிறைந்துகொண்டே இருந்தன. Stock Images அதை எடுத்து இவன் எப்படி மாற்றியமைக்கிறான் என்பது தான் கவித்திறமை எனப்பட்டது.

நான் ஏற்கனவே சொன்னேன். அதே நளன், அதே தமயந்தி ,அதே அன்னம். ஆனால் இங்கு அவர் தாமரைப்பூவாக மாற்றுகிறார் அல்லவா, அதுமாதிரி . அதுவும் அழகுதான். ஆனால் முந்தைய காலகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். களங்கமற்ற கவிஞன் இல்லை, அறிஞன் வந்துவிட்டான்.
வருவார் கொழுநர் எனத்திறந்தும்.
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயும்

என்று கலிங்கத்துப்பரணியில் ஒரு வரி வருகிறது. காதலன் வரப்போகிறன் என்று எதிர்பார்த்துத் திறந்தும் வரவில்லை என்ற ஏக்கத்தில் மூடியும் இரவெல்லாம் சுழன்று காலையில் கதவு அமைந்திருக்கும் குமிழ்க்குடுமி தேய்ந்துவிட்டது . இது மூளைப்படிமம். செம்மையாக்கப்பட்ட படிமம்.

இது ஒரு சித்திரம்தான். ஆனால் இதன் நீள்வாசிப்பு என்னவென்றால் அந்தக்கதவு அவள் மனம். கிரீச்சிட்டு திறந்து, மூடியும், உரசிச் சூடாகி தேய்ந்து மறைவது அவள் அகம். அது அவள் உள்ளமென்றாகும்போது அதில் ஒரு அழகை உருவாக்குகிறார். ஆனால் இது ஒரு நிரந்தரப்படிமம். முன்னரே இருந்துவரும் ஒரு படிமத்தின் இன்னொரு வகைமாதிரி இது. இதை ஜெயங்கொண்டார் தன் கவித்திறமையால் கொஞ்சம் நுட்பமாக்குகிறார். இன்னொருவர் அதை இன்னமும் நுட்பமாக்குவார். இது ஒருவகையில் செவ்வியல் ஆக்கத்தின் அடிப்படை. கிளாசிசத்தின் இயல்பே இதுதான். கிளாசிசம் நேரடியாக வாழ்க்கையிலிருந்து படிமங்களை எடுத்துக் கொள்ளும். அதை ஒரு பெரிய கருவூலமாக மாற்றும். அதன் பிறகு வரும் கவிஞர்கள் அந்த கருவூலச்செல்வத்தை பெருக்கி நுண்மையாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

டிசம்பர் மாதம் நீங்கள் சென்னை கச்சேரிக்கு போனிர்கள் என்றால் ஒரு அறுபது அல்லது எழுபது பாட்டைதான் திருப்பி திருப்பி பாடுவார்கள். நகுமோ மோ கனலேனி சென்ற வருடம் எப்படி பாடினாரோ அதே மாதிரிதான் இந்த வருஷமும் பாடுவார். ஆனா சென்றவருடம் பாடினதைவிட இந்த வருடம் கொஞ்சம் மாறியிருக்கும். மனோதர்மம் என அதைச் சொல்வார்கள். மேம்படுத்துவது, நுட்பமாக்குவது, செதுக்குவது வழியாகத்தான் செவ்வியல்கலை செயல்படும். அதை ஒரு பொற்தேர் என்று நான் சொல்வேன். ஒவ்வொருவரும் தன்னுடைய அணிகலனை செதுக்கி அதில் அணிவிக்க்கிறார்கள். ஆயிரமாண்டுக்காலம் நம் முன்னோர் துளித்துளியாகச் சேர்த்த ஒரு தேர் என நம்முடைய வீதியில் உருண்டோடி இங்கு வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது அது.

காப்பிய காலகட்டத்துக்கு பிறகு பக்தி காலகட்டம் வந்தது. காப்பிய காலகட்டத்தில் இருந்து பக்தி காலகட்டத்துக்கான முதன்மையான மாற்றம் என்ன என்று கேட்டால் இரண்டு விஷயங்களைச் சொல்வேன். ஒன்று, பக்தி தத்துவத்தை நேரடியாகவேச் சொல்லக்கூடியது. இதை நீங்கள் காப்பிய காலத்திலும் பார்க்கலாம் அங்கு ஒரு கதைக்குள்ள தத்துவம் இருந்தது. நேரடியான தத்துவ உரையாடல்கள் இருந்தன. ஆனால் பக்தி காலகட்டத்தில் நேரடியாகவே இறைதத்துவத்தை மட்டுமே சொல்லக்கூடிய கவிதைகள் வந்தன. கவிதையின் நோக்கம் இறையனுபவத்தைச் சொல்வது என எண்ணப்பட்டது. ஆகவே கவிதை முக்கியம் அல்ல அதன் இறையியல் உள்ளடக்கமே முக்கியம் என்றாயிற்று.

என் நண்பர் வேதசகாயம் சொல்வார் 1970கள் வரைக்கும் கூட திருநெல்வேலியில் சைவ சித்தாந்த உள்ளடக்கம் இல்லாத கவிதை எழுதியவரை கவிஞர் என்று ஒத்துக் கொள்ளமாட்டேன் என்று சொல்லக்க்கூடிய பிள்ளைவாள்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பூனை நாலுகாலில் சைவ சித்தாந்தத்தில் விழுந்தாகவேண்டும். பக்தியை பாடினால்கூட அந்த உணர்ச்சியை மட்டும் சொன்னால், சைவ தரிசனத்தை மட்டும் சொன்னால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வம்சம் இன்றைக்கு கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது

நெடுங்காலம் நம்முடைய கவிதை ரசனையில் சுருக்கமாக ஒரு மதத்தத்துவத்தை சொன்னாலே அது உயர்ந்த கவிதை என்று நம்பக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கு கூட தமிழகம் முழுக்க இருக்கும்ய சைவப்பேராசிரியர்களின் கவிதை ரசனை அதுவே. ‘ரத்தினச் சுருக்கமாக சொல்லிட்டான்! பாத்திங்களா என்ன அற்புதமாக சொல்லிட்டான்!” உண்மையில் இதுவும் ஒரு ரசனை தான். கவிதை எல்லாமும்தான். ஆனால் ரசனையின் ஒரு பகுதி மட்டும்தான் இது.

பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யாரறிவார்

என்று நம்மாழ்வார் கவிதை. இங்கிருக்கிற அத்தனை உருவங்களையும் உருவாக்கியவனே உன் உருவை யாரறிவார். இந்த வரியை எடுத்துக்கொண்டுபோய் அருவமான பரம்பொருள் உருவமாக மாறுவதைப் பற்றிய அத்தனை தத்துவத்தையும் பேசிவிட முடியும். இங்கிருக்கும் அத்தனை உருவங்களும் உருவமற்ற ஒன்றின் உருவங்களே. இங்கிருக்கும் அத்தனை உருவங்களில் இருந்தும் அந்த உருவற்ற ஒன்றை போய் சேரவும் முடியும். அருவமான ஒன்று உருவமாக மாறுகிறது. உருவமான ஒன்று அந்த அருவமான ஒன்றுள் ஒளிந்திருக்கிறது.

பெரும்பாலான சைவ வைணவ பக்தி நூல்களில் இருந்து ஒரு பெரிய தத்துவத்தை நோக்கி போகமுடியும். அவ்வரிகள் வழிகாட்டும் அம்புக்குறிகள் மாதிரித்தான். சென்னையைச் சுற்றியுள்ள அவ்வளவு ஊர்களிலும் சென்னையைக் குறித்து ஓர் அம்புக்குறி இருப்பதைப்போலதான் அனைத்து நூல்களிலும் சிவனை நோக்கியோ விஷ்ணுவை நோக்கியோ போகும் ஓர் அம்புக்குறி இருக்கிறது.

இது ஒரு பொதுவான மதப்பாடல்களின் மீதான ரசனை ஆனால் வைணவ இலக்கியத்தில் மட்டும் மேலதிகமான ஒன்று உள்ளது. அது ஒரு வகையான பரவச உணர்ச்சி என்று சொல்லலாம்.

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே?

முதல் இரண்டு வரி பக்தி இயக்கத்தின் உணர்வுப்பெருக்கின் அடையாளம்.. விடுவேனா என் விளக்கை? என் ஆவியை? நான் போன பாதையில் நடுவே வந்து மறித்து ஆட்கொண்ட தெய்வத்தை நான் விடுவேனா? ஆனால் இரண்டாவது வரிதான் மிகவும் சுவாரசியமானது. ஆய்ச்சியரை தொட்டு அவர் உள்ளத்தில் குடிபுகுந்து அவளுடைய அழகிய கண்களில் காதலென வெளிப்படும் கண்ணனை நான் விடுவேனா? தெருவில் பார்க்கும் ஆய்ச்சியரின் கண்களின் அழகாக வெளிப்படக்கூடியவன் கண்ணன். அந்தக் கண்ணனை நான் விடுவேனா. இந்த வரிதான் வைணவக்கவிதைகளில் இருக்கும் அழகு. இந்த உணர்வை நீங்கள் பின்னால் கண்ணதாசனில் பார்க்கலாம்.

மார்கழி நன்னாளில் மங்கையர் இளந்தோளில்
கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்

கண்ணனின் கருப்பு நிறம் பொன்னிறமான மங்கையர் தோளில் படிந்த கூந்தல் என்று சொல்கிறார். எதிர்ப்படும் பெண்ணின் கண்ணின் அழகாக வரும் கண்ணன் என்ற நம்மாழ்வாருடைய வரியின் தொடர்ச்சிதான் அது. இந்த ஒரு பரவசநிலை வைணவ இலக்கியத்துடைய ஒருதனிக் கவிதை பாணியாக தொடர்ந்து வருகிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையுமே கொண்டாடக்கூடிய மனநிலை. அது சைவத்தில் கிடையாது. அதனால் தான் கிருஷ்ணனை கோலாகலன் என்று சொல்கிறான். கோலாகலன் என்றால் கொண்டாட்டக்காரன் என்று தமிழில் சொல்லலாம்.

வாழ்க்கையை ,இயற்கையை, இன்பங்களை அனைத்தையுமே கொண்டாடக்கூடிய மனநிலையை உருவாக்கியவன் அவன். இவ்வனைத்திலுமே அவனைப்பார்க்க முடியும் இவ்வனைத்தும் அவன்தான். இந்த மனநிலையை வெளிப்படுத்தும் ஆழ்வார் பாடல்களில் மற்ற எந்த பக்திப்பாடல்களிலும் இல்லாத அளவுக்கு ஒரு தனி காப்பியச்சுவை இருக்கிறது. அது தமிழுடைய மிக முக்கியமான மரபுகளில் ஒன்று

மேலும்…..

[ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பின் சார்பில்  ஆகஸ்ட் 16, 2015 அன்று ரசனை முற்றம் என்னும் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட   கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரை ]

முந்தைய கட்டுரைகாந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 31