‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35

ஏழாம் காடு : சாந்தீபனி

[ 1 ]

பிருஹதாரண்யகத்தில் இருந்து கிளம்பி சாந்தீபனிக் காட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தருமனும் தம்பியரும் இளைய யாதவரையே எண்ணிக்கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சொல்லேனும் அவரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவரைப்பற்றி எண்ணும்போது எப்போதுமே எழுந்துவரும் உளஎழுச்சியும் உவகையும் அப்போது உருவாகவில்லை. முன்பு எப்போதும் உணர்ந்திராத தனிமையும் நிலைகொள்ளாமையுமே வந்து மூடிக்கொண்டது.

தருமன் அவரைப்பற்றி பேச எண்ணினார். துவாரகையில் என்ன நடந்தது, சால்வன் தோற்கடிக்கப்பட்டுவிட்டானா? ஆனால் அவ்வினாவுக்கு விடையென வழக்கம்போல உள்ளம் பொங்கியெழும் ஒரு வெற்றிக்கதை சொல்லப்படாவிட்டால் வாழ்க்கையில் நம்பிப் பற்றிக்கொள்ள வேறேதும் எஞ்சியிருக்காது. அத்தருணத்தில் அவர் பெயர் ஒன்றே நீண்ட இருட்குகைப்பாதையின் மறுஎல்லையின் ஒளிப்புள்ளியாகத் தெரிந்தது.

அவர் விழைந்ததுபோலவே செல்லும் வழியில் ஒரு இசைச்சூதனை கண்டுகொண்டார்கள். பிருஹதாரண்யகத்திலிருந்து கிளம்பி மரத்தடிகளிலும் காட்டிலமைந்த அறச்சாவடிகளிலும் இரவு தங்கி பதினெட்டுநாட்கள் நடந்து சாம்யகம் என்னும் காட்டில் அமைந்த அன்னநிலையத்தில் உணவுக்காகக் காத்திருந்தபோது அவன் அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தான். புழுதிபடிந்த உடலுடன் கந்தையென்றான மரவுரி அணிந்து சிக்குபிடித்த தலைமுடியும் தாடியுமாக நின்ற அவர்களை அங்கே உணவுக்கென நிரைவகுத்த எவரும் அடையாளம் காணவில்லை.

கருணன் என்னும் அச்சூதன் மட்டும் திரும்பி நோக்கி “அந்தப் பேருடலரும் உணவுக்காகவா வந்து நின்றிருக்கிறார்?” என்றான். பீமன் “ஆம், சூதரே. இங்கு அன்னம் அளந்து வழங்கப்படவில்லை அல்லவா?” என்றான். “அது உண்மை. ஆனால் அளவின்றி வழங்கப்பட்டால் நீங்கள் ஒருவர் உண்பதற்கான அன்னம் இக்காட்டில் இருக்காது” என்றான் அவன்.

“அஞ்சவேண்டாம். நான் அளவுக்குட்பட்டே அன்னத்தை உண்பதாக உள்ளேன். என் உணவு காட்டில் அளவிறந்து கிடைக்கிறது” என்றான் பீமன். “அது நன்று. காட்டில் நீர் மான்களை வேட்டையாடுகிறீரோ?” பீமன் “காட்டெருமைகளை” என்றான். கருணன் சற்று சொல்நின்று பின்பு “வாய்ப்புள்ளது. உமது உடல் அத்தகையது” என்றான். பின்னர் “எப்போதேனும் மான்களோ பன்றிகளோ சிக்குமென்றால் என்னையும் எண்ணிக்கொள்ளும்” என்றான்.

அவர்கள் பனையோலைத் தொன்னைகளில் பருப்பும் கீரையும் கிழங்குகளும் அரிசியுடனும் வஜ்ரதானியத்துடனும் கலந்து வேகவைக்கப்பட்ட அன்னம் வாங்கிக்கொண்டு சென்று ஆலமரத்தடியில் வேர்புடைப்புகளில் அமர்ந்தனர். “இரண்டுநாள் பசிக்கு சூடான அன்னம் அளிக்கும் இன்பம் நிகரற்றது” என்றான் சூதன். “ஆனால் சூடான ஊனுணவு என்றால் உயிரே எழுந்து நடனமிடத் தொடங்கிவிடும்.” பீமன் “ஆம், ஊன் ஊனை வளர்ப்பது” என்றான்.

“எனக்கு மானின் ஊன் பிடிக்கும். அவை உண்ணும் புல்லின் மணம் அவ்வூனில் இருக்கும்” என்றான் கருணன். “பன்றி ஊனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டால் கையில்கொண்டுசெல்லும் உணவு அது. தீயில் வாட்டி கொழுப்பு உருக அப்படியே உண்ணலாம். தென்னகத்துப் பாணர் யாழில்லாமல் பயணத்துக்கு இறங்கக்கூடும், இது இன்றி இறங்குவதில்லை.”  “அதற்கு சில பன்றிகளை உடன் கூட்டிச்செல்லலாமே?” என்றான் பீமன்.

ஏறிட்டு அவனைப் பார்த்த கருணன் வெடித்துச் சிரித்து புரைக்கேறினான். மீண்டும் புரைக்கேறி தடுமாற பீமன் அவன் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டினான். மூச்சு சீரடைந்ததும் அவன் கலங்கிய கண்களுடன் “அதற்காக தலை சிதறுமளவுக்கா அடிப்பது?” என்றான். பெருமூச்சுடன் “நான் நீங்கள் எவர், எங்கு செல்கிறீர் என அறிந்துகொள்ளலாமா?” என்றான். “நாங்கள் சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம்” என்றான் பீமன். “அது இன்னமும் எட்டுநாட்கள் பயணத்தில் அல்லவா உள்ளது?” என்றான் சூதன். “அப்படியா? நாங்கள் கேட்டுத்தெரிந்துதான் சென்றுகொண்டிருக்கிறோம்.”

சூதன் “நானும் உங்களுடன் வரலாமென நினைக்கிறேன். உணவு குறைவின்றி கிடைக்கும்…” என்றான். “நீர் எங்கே செல்கிறீர்?” என்றான் பீமன். “உண்மையை சொல்லப்போனால் நான் அதை இன்னும் அறியவில்லை. ஊர்கள்தோறும் சென்று சலித்தேன். சரி காடுகள்தோறும் செல்லலாமே என எழுந்தேன். துவைதக்காடு சென்றேன். அவர்கள் சொல்வதை நான் நாவில் ஏந்தியிருந்தால் பட்டினி கிடந்தே சாகவேண்டியதுதான் எனத் தோன்றியது. சிறந்த கதைகள் ஏதேனும் சிக்குமென்றால் ஒரு குறுங்காவியத்துடன் ஊர்களில் தோன்றுவேன்” என்றான் கருணன்.

அன்னத்தை வழித்து உண்டுவிட்டு தருமனை நோக்கி கருணன் “இவர் யார்? கல்விநிலையில் இருந்து துரத்தப்பட்ட முனிவர் போலிருக்கிறார்?” என்றான்.  பீமன் “இவர் அரியணையிலிருந்து துரத்தப்பட்ட முனிவர், யுதிஷ்டிரர் என்று பெயர்” என்றான். “ஆ!” என்று கருணன் வாயை பிளந்தான். “கதைகளிலிருந்து இறங்கி வந்துவிட்டீர்களே! அய்யோ, நான் முதல்முறையாக கதைகளில் பேசப்படும் ஒருவரை நேரில் பார்க்கிறேன்.” பீமன் “எப்படி இருக்கிறார்?” என்றான். “திரும்ப கதைக்குள் சென்றுகொண்டிருப்பவர் போலிருக்கிறார்” என்றான் கருணன். பீமன் நகைத்தான்.

“ஓநாய் போல சிரிக்கிறீர். அப்படியென்றால் நீர் விருஹோதரர். அந்தப் பெண் துருபதன் மகள். அவர் வில்விஜயர். அடாடா, ஏன் இது எனக்கு முன்னர் தோன்றவில்லை? நான் உடனே காவியம் எழுதியாகவேண்டுமே” என்றான் கருணன். பீமன் “கூச்சலிடாதீர். உமக்கு சிறந்த காவியங்கள் காத்திருக்கின்றன” என்றான். “நீங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றான் கருணன்.

“பிருஹதாரண்யகத்திலிருந்து. சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம். உமக்கு வழி தெரியுமா?” என்றான் பீமன். கருணன் “சூதர்களுக்கு அனைத்து வழிகளும் தெரியும். அவர்கள் வழி தவறினால் அதுவே வழியென்றாகிவிடும்” என்றான்.

“நீர் அறிந்த வழி என்றால் எங்களுடன் வாரும்” என்றார் தருமன்.  கருணன் “அரசே, வணங்குகிறேன். தங்களை முனிவரென பார்க்கையில் ஜனகரை நினைவுகூர்கிறேன். அவரை அரசமுனிவர் என்கிறார்கள்” என்றான். தொன்னையைச் சுருட்டி கையில் எடுத்தபடி எழுந்து “ஏன்?” என்றான் பீமன். “அவர் அவ்வாறு அழைக்கப்பட விரும்பினார்” என கருணன் கைவிரல்களை நக்கியபடி சொன்னான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என அத்தனை அரசர்களும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் அவைச்சூதர்களால், அவர்களின் மஞ்சத்தறையின் சுவர்களுக்குள். அதைப்போன்ற ஓர் அழைப்பாகவே இதுவும் இருக்கும், அதை யாரோ கவிஞன் எழுதிவைத்துவிட்டான்.”

“சாந்தீபனி என்றால் அனைத்தையும் சுடரச்செய்வது என்று பொருள். நான் முதலில் அதை கேட்டபோது அங்கே காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும் என எண்ணினேன். பின்னர் சொன்னார்கள் அது மின்மினிகள் நிறைந்த காடு என. மின்மினி இருந்தால் நாகங்களும் இருக்கும் அல்லவா என்றேன். ஆம், அவையும் ஒளிவிடும் என்றார்கள். நஞ்சும் அதன் உணவும் ஒளிவிடுவதைப்பற்றி எண்ணியபோது மிகவும் வேதாந்தமாக அமைந்துவிட்டது. அதை ஏதேனும் முனிவருக்கு அளித்து நிகராக ஒரு கதையை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்” என்றான் கருணன்.

அவர்கள் காட்டுப்பாதையில் செல்லத் தொடங்கினர். பீமன் மரங்களிலிருந்து கனிகளையும் காய்களையும் கொண்டுவந்தபடியே இருந்தான். “இத்தனைக்கும் பின்னரா நீங்கள் அங்கே உணவுக்கு வந்து நிரையில் நின்றீர்கள்?” என்றான் கருணன். “நான் இத்தனை கனிகளை உண்டால் காதல்பாடல்களை அன்றி வேறெதையும் பாடாமலாகிவிடுவேன்.” தருமன் “இங்கிருக்கும் காடு ஏன் சாந்தீபனி என அழைக்கப்படுகிறது?” என்றார். “நான் கற்றறிந்ததை சொல்கிறேன். உண்மை என்பது பரவலாக அனைவராலும் ஏற்கப்படுவதனால் நாச்சொல் என நீடிப்பது. மக்கள் தங்கள் விழைவை சொல்லிச்சொல்லி நிலைநாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு உதவுவதே சூதர்களின் கடன்” என்றான் கருணன்.

அரசே, சௌனக குருநிலையில் இருந்து பிரிந்து சென்ற பதினெட்டு பிரிவுகளில் ஒன்று சாந்தோக்யமரபு.  அதிலிருந்து பிரிந்து வளர்ந்த ஏழு பிரிவுகளில் ஒன்று என சாந்தீபனி மரபு சொல்லப்படுகிறது. முன்பு சாந்தோக்யக் காட்டின் வேதச்சொல்லவையில் சகஸ்ரர் என்னும்  இளைஞர் எழுந்து   ‘பிறிதிலாதது ஏன் தன்னை பிறிதெனக் காட்டுகிறது? அதற்குரிய விடையன்றி எதுவும் பொருளற்றதே’ என்றார். ஆசிரியராக அமர்ந்திருந்த பன்னிரண்டாவது  ஸ்வேதகேது  ‘மைந்தா, நோக்க எவருமே இல்லாதபோதும் கன்னியர் அணிசெய்துகொள்கிறார்கள். மைந்தர்கள் விளையாடுகிறார்கள்’ என்றார்.

அதன் பெயர் லீலை என்று ஸ்வேதகேது சொன்னபோது சகஸ்ரர் ‘அது ஒரு சொல் மட்டுமே’ என்றார். ‘அனைத்தும் சொற்களே’ என்று ஸ்வேதகேது அதற்கு மறுமொழி சொன்னார். அறிதலுக்கு நிகராக மானுடர் வைக்கத்தக்கது ஒரு சொல்லே. அச்சொல்லை எடுத்துக்கொண்டு அங்கு பிறிதொரு அறிதலை வைத்துச்செல்வதே பிறர் செய்யத்தக்கது’. அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவராக சினந்து சகஸ்ரர் சாந்தோக்ய குருநிலையிலிருந்து  கிளம்பிச்சென்றார். பிறிதொரு குருநிலையை நாட உளம்கொள்ளாதவராக அவர் காட்டுப்பாதைகளில் கால்கள் கொண்டுசென்றதுபோல சென்றுகொண்டிருந்தார். பலநாட்கள் அலைந்து அவர் சென்றடைந்த காடுதான் இன்று சாந்தீபனி என அழைக்கப்படுகிறது.

அரசே, சகஸ்ரர் அதைக் கண்டது ஆடிமாதக் கருநிலவு நாளில். அவர் ஒரு காட்டின் விளிம்பை சென்றடைந்ததும் அங்கே இருந்த குரங்குகள் அனைத்தும் ஒரு திசைநோக்கி செல்வதைக் கண்டார். அங்கு நீரோ இன்னுணவோ இருக்கக்கூடுமென எண்ணினார். பின்னர் காட்டுப்பசுக்களும் மான்களும் அதே திசைநோக்கி சென்றன. விலங்குகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக மலையேறிச்செல்லக் கண்ட அவர் தானும் உடன்சென்றார். வளைந்து சுழன்றேறிய அப்பாதை அவரை ஒரு மலையுச்சியில் கொண்டுசென்று சேர்த்தது.

அங்கே விலங்குகள் அனைத்தும் ஒன்றை ஒன்று நெருக்கியபடி மரங்களிலும் புதர்களிலுமாக காத்திருப்பதை கண்டார். அவை காத்திருப்பது எதுவென்றறியாமல் அவரும் அத்திசை நோக்கி விழி நாட்டி நின்றார். இருள் பரவத்தொடங்கியதும் அவர் தொலைவில் தரையும் வானும் சந்திக்கும் வளைகோட்டில் மெல்லிய நீலவெளிச்சத்தை கண்டார். அங்கொரு பெரிய ஏரி தேங்கியிருப்பதாக முதலில் எண்ணினார். ஆனால் வான் ஒளி அணைய அணைய அந்த வெளிச்சம் கூடியபடியே வந்தது. சற்றுநேரத்தில் அங்கே காட்டுத்தீ எரிந்தணைந்த கனல்வெளி பரந்திருப்பதுபோல் தெரிந்தது. அவ்வொளி பச்சைநீரொளியா என விழியை மயக்கியது

குரங்குகள் ஊளையிடத்தொடங்கின. ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டு அவை எழுப்பிய ஊளை அறுபடாது வானில் எழுந்து வளைந்தது. அங்கிருந்த அத்தனை விலங்குகளும் ஒலியெழுப்பத் தொடங்கின. அவ்வொலிகள் அனைத்தும் கலந்து அந்த மலையின் கூக்குரல் என ஒலித்தது. அவர் கீழிறங்கி செல்லத்தொடங்கினார். வரையாடுகள் மட்டுமே செல்லத்தக்க மலைச்சரிவு அது. உள்ளத்தின் விசையால் இயக்கப்படும் அச்சமற்ற இளையோர் மட்டுமே அவ்வழி செல்லமுடியும்.

ஏழுநாட்கள் பயணம் செய்து அவர் அந்த காட்டை சென்றடைந்தார். அது ஒளிவிடுவது ஒரு விழியமயக்கோ என்னும் ஐயம் அவருக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் அணுகிச் செல்லும்தோறும் அந்த ஒளி மிகுந்தபடியேதான் வந்தது. அது இளநீல ஒளியெனத் தோன்றியது. செந்நிறமோ பச்சையோ என மாறிமாறி மாயம் காட்டியது. பேருருவம் கொண்ட மின்மினி அது என எண்ணம் குழம்பியது. கந்தர்வர்கள் மானுடரை ஈர்த்து அழிக்க வைத்த பொறியோ என்று அஞ்சியது.

அந்தக் காட்டை அவர் காலையில் சென்றடைந்தார். அது ஒரு மாபெரும் நொதிச்சேற்றுக்குழி. அதன்மேல் விழுந்து மட்கிக்கொண்டிருந்த பெரிய மரங்களின் மீதன்றி எங்கே கால்களை வைத்தாலும் புதைந்து உள்ளிழுத்தது. நொதித்துக் குமிழிவெடிக்கும் சேற்றின் நீராவிவாடை பன்றி வாய்திறந்ததுபோல எழுந்தது. அங்குள்ள மரங்களெல்லாமே பெரும்கோபுரங்கள் போல எழுந்த அடிமரங்களுடன் கிளைவிரித்து பச்சைக்கூரையை தாங்கி நின்றன. அவற்றின் வேர்கள் நீராடும் பாம்புக்கூட்டங்கள் போல சதுப்புக்குள் மூழ்கி அப்பால் எழுந்து வளைந்து மீண்டும் மூழ்கிப்பரவியிருந்தன.

அச்சதுப்பு முழுக்க மூழ்கிய யானையின் துதிக்கைக்குமிழ் போலவும், தளிர்விட்டெழும் வாழைக்கன்றின் கூம்புமுனைபோலவும், ஆட்டுக்குட்டியின் இளங்கொம்புகள் போலவும், பசுவின் வால்மயிர் போலவும் மூச்சுவிட எழுந்த வேர்கள் பரவியிருந்தன. அத்தனை மரங்களிலும் இளநீலநிறமான பாசிப்பரப்பு படர்ந்து மேலேறியிருந்தது. பெருமரங்கள் இடைவெளிவிட்டு உருவான ஒளிகொண்ட வட்டங்களில் கிளைகளிலிருந்து கிளைகளாகப் பிரிந்த கள்ளிச்செடிகள் பசுந்தழல்போல செறிந்து மேலெழுந்திருந்தன.

அங்கு பெரிய விலங்குகள் ஏதுமில்லை. கீரிகள், முயல்கள் போன்ற சிறு விலங்குகள் தரையில் விழுந்த மரங்களின் மீதும் சருகுக்குவைகளின் மீதும் மட்டுமே பாய்ந்து ஓடின. கிளைகளில் சிறிய கரும்பட்டு உடலும் வெண்நுரைபடர் முகமும், நீண்ட வாலும் கொண்ட குரங்குகள் சுண்டப்பட்டவை போல தெறித்துச் சென்று சிறுநுனிகளில் அமர்ந்து ஊசலாடி எக்காள ஒலியெழுப்பின. அணில்கள் கிளைகளில் நீர்த்துளிகளென தொற்றி நீண்டோடி வால் தெறிக்க உளிசெதுக்கும் ஓசையெழுப்பின. பறவைகளின் ஓசை தழைப்பசுங்கூரைக்குமேல் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தது. புதர்களுக்குள்ளும் சருகுக்குவைகளுக்குள்ளும் செம்போத்துக்கள் கொல்லன் துருத்தியென ஓசை எழுப்பி ஊடுருவி ஓடின.

அங்கு ஒளிவிடுவது எது என அவரால் உணரமுடியவில்லை. பெரிய மரமொன்றின்மேல் தொற்றி ஏறி அதன் உச்சிக்கவை ஒன்றில் கால்நீட்டி அமர்ந்தார். செல்லும்வழியில் பறித்துக் கொண்டுசென்ற கனிகளை அங்கு அமர்ந்து உண்டார். அந்த மரக்கிளையிலிருந்த பாசிப்படலம் அவர் உடலில் சாம்பலென பூசிக்கொண்டது. அது இருந்தால் கொசுக்கள் கடிக்காதென்று எண்ணி அவ்வண்ணமே விட்டுவிட்டார். அங்கு ஒளியுடன் கந்தர்வர்கள் வந்திறங்கக்கூடுமென எண்ணினார். அவர்கள் வரும்பொழுது தான் விழித்திருப்போமா என ஐயுற்றார். அவர்களின் மாயையால் துயின்றுவிடக்கூடும். துயிலாதிருக்கவே தன் முழுச் சித்தத்தையும் குவித்தபடி அமர்ந்திருந்தார்.

இருள் பரவத்தொடங்கியதும் அவர் மெல்ல தன் உடல் ஒளிகொள்வதை கண்டார். திகைப்புடன் எழுந்து தன் கைகளை பார்த்தார். இளநீலப் பட்டுப்பரப்பாக அவர் உடல் மாறிவிட்டிருந்தது. வயிறும் கால்களும் மின்னத் தொடங்கின. தன்னைச் சூழ்ந்திருந்த மரங்கள் அனைத்தும் இளநீலமாக ஒளிகொள்ளத் தொடங்கியபோதுதான் அது என்ன என்று அவருக்குப் புரிந்தது. அந்த மரங்களின் மேல் படர்ந்திருந்த பாசியின் ஒளி அது. கூர்ந்து நோக்கியபோது அதன் ஒவ்வொரு துளிப்பருவும் மிகமென்மையான ஒளியை வெளிவிட்டது. ஆனால் அவை இணைந்து அக்காட்டையே ஒளிகொள்ளச் செய்தன.

அந்த ஒளியில் இலைப்பரப்புகளும் பளபளத்தன. சற்றுநேரத்தில் கீழே சதுப்புவெளியிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மின்மினிகள் எரிகனல்மேல் காற்றுபட்டதுபோல கிளம்பத்தொடங்கின. அவை எழுந்து இலைகள்மேல் அமர்ந்தன. காற்றில் சுழன்று நிறைந்தன. காட்டின் ஒளி செந்நிறமாகியது. விழிகொள்ளாத விம்மலுடன் அவர் அதை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அந்தக் கள்ளிச்செடிகள் ஒளிகொள்ளலாயின. அவற்றுக்குள் பச்சைநிற ஒளியே சாறென ஓடுவதுபோல. அவற்றின் தண்டுகளுக்குள் அது ஓடுவதன் அலைகளை பார்க்கமுடிந்தது.”

இரவெல்லாம் அவர் அந்த ஒளியில் விழிகளில் ஆத்மா நிறைந்திருக்க அமர்ந்திருந்தார். புலரியில்தான் துயின்றார். துயிலில் அவரது மூடிய இமைகளுக்குமேல் வெயில்காசுகள் விழுந்தபோது அவர் ஒரு கனவுகண்டார். அக்கனவில் அவர் அறிந்ததன் அதிர்வில் உடல் நிலைதடுமாற கீழே விழுந்தார். அவரது ஒரு கால் மரக்கிளையில் சிக்கிக்கொண்டதனால் கீழே மரத்தடிமேல் விழாது தப்பினார். உடலெங்கும் சிராய்ப்புகளில் குருதி வழியும்போதும் அவர் மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

SOLVALAR_KAADU_EPI_35

அரசே, அவர் உருவாக்கிய கொள்கையை மகாலீலாசித்தாந்தம் என்கிறார்கள். இவ்விசும்பும் புடவியும் பிரம்மத்தின் விளையாட்டுக்கள். செயலுக்குத்தான் தேவையும் இலக்கும் உண்டு. ஆடல் ஆடலின் இன்பத்திற்கென்று மட்டுமே நிகழ்த்தப்படுவது. அது ஆடியும் கன்னியுமாகி தன்னை பார்த்துக்கொள்கிறது. சிம்மமும் மானுமாகி தன்னை கிழித்து உண்கிறது. புழுவும் புழுவுமாகிப் புணர்ந்து புழுவாகப் பிறக்கிறது. அலைகளினூடாக தன்னை நிகழ்த்திக்கொள்கிறது கடல் என்று அக்கொள்கையை சகஸ்ரர் முன்வைத்தார் என்று அவர்களின் நூல் சொல்கிறது.

”அனைத்தும் ஒளிவிடும் காட்டுக்கு பாரதவர்ஷமெங்கிலும் இருந்து இன்று மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனை வேதமெய்மைகளையும் சாந்தீபனியின் மெய்மையாக மாற்றிக்கொள்ளமுடியும் என்கிறார்கள். அனைத்து மெய்மையாகவும் அது உருமாறவும் கூடும்.  ஏனென்றால் அது ஒளி. தான் தொடுவதையெல்லாம் தானென்று காட்டும் பெருமாயத்தையே நாம் ஒளி என்கிறோம்” என்றான் கருணன். “சாந்தீபனி கல்விநிலையின் நூற்றெட்டு கிளைகள் பாரதம் முழுக்க இருக்கின்றன. தெற்கே உஜ்ஜயினியில் இருக்கும் சாந்தீபனிக் கல்விநிலையில்தான் இளைய யாதவர் தன் மூத்தவருடன் சேர்ந்து கல்விபயின்றார்.”

அவர்கள் பிறிதொரு அன்னநிலையத்தின் அருகே கட்டப்பட்டிருந்த கொட்டகையில் ஈச்சையோலைப் பாய்களில் அமர்ந்திருந்தனர். ஆமணக்கெண்ணை ஊற்றப்பட்ட கல்விளக்குகள் எரிந்த கொட்டகைக்குள் பலர் துயின்றுகொண்டும் சிறுகுழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் எளிய யாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் தோன்றினர். நாடோடிகளான சூதர்களும் அவர்களுள் இருந்தனர். அவர்களின் முழவுகளும் யாழ்களும் தலைமாட்டில் ஒலிமறந்து அமைந்திருந்தன.

அவர்களை தருமன் நோக்குவதைக் கண்ட கருணன் “சாந்தீபனிக்காடுதான் வேதக்கல்விநிலைகளில் அனைத்துக் குடிகளும் தேடிவருவதாக உள்ளது. அது வேதக்கல்விக்கு குலம் நோக்குவதில்லை. வேதமெய்மை அனைவருக்கும் உரியதென்று  எண்ணுகிறது. வேதம் நாடிவரும் புதுக்குலங்களால்தான் அது இன்று பேணப்படுகிறது” என்றான். “ஆம், யாதவர்கள் மட்டுமல்ல நிஷாதர்களும் கூட தங்கள் மைந்தர்களை சாந்தீபனிக் கல்விநிலைகளில்தான் சேர்க்கிறார்கள்” என்றான்.

[ 2 ]

“இப்புடவியின் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன” என்றார் சாந்தீபனி முனிவர். “இங்குள்ள ஒரு சிறுபுழு அழியும் என்றால் அதை உண்ணும் ஒரு பறவை அழியும். அப்பறவையை நம்பியிருக்கும் ஒரு விலங்கு அழியும்… கோடானுகோடி உயிர்கள் ஒன்றுடன் ஒன்று முழுமையாக தொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உப்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. உப்புகளுடன் உயிர்கள் பின்னப்பட்டுள்ளன. அரசே, ஒன்றை ஒன்று சார்ந்தே இங்குள்ள அனைத்தும் செயல்படுகின்றன. தனித்திருக்கும் பெரும்பாறைகூட மழையிலும் வெயிலிலும் கரைந்து தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறது.”

அவ்வாறென்றால் மெய்மை மட்டும் எப்படி தனித்தமைய முடியும்? இங்குள்ள எந்த மெய்யறிதலும் பொய் அல்ல. பயனற்றதும் அல்ல. அது எதனுடன் இணையவேண்டியது என்பது மட்டுமே நாம் அறியவேண்டிய வினா. ஒவ்வொரு உண்மையும் தனக்கு இணையும் எதிரும் ஆன பிற பல்லாயிரம் உண்மைகளுடன் இணைந்தே பொருள்கொள்கிறது. உயிர்களைப்போல உப்புகளைப்போல உண்மைகளும் பெருநடனமொன்றின் சிறுதுளியசைவுகள் மட்டுமே. அதையே லீலை என்கிறார் எங்கள் முதலாசிரியர்.

பிருஹதாரண்யக மரபை நோக்குங்கள். நேதி நேதி என மறுத்துமறுத்துச் சென்று எஞ்சுவதே இறுதியுண்மை என்று அது எண்ணுகிறது. அது மறுத்துச் சென்ற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து ஒற்றைப் பேருருவாக அவர்களை சூழ்கின்றன. பின்னர் அவர்கள் நிகழ்த்துவது அந்த இறுதியுண்மையை படைக்கலமாகக் கொண்டு முடிவிலியுடன் ஒரு போர். பொருளில்லாத பெருநடனமே அதுவும். அரசே, இங்குள்ள அனைத்தும் பொருளின்மையின் பேரழகு கொண்டவை. கோடானுகோடி இணைவுகளும் பிரிவுகளும் விரிவுகளும் ஒடுங்கல்களுமாக நிகழும் இந்த விளையாட்டை உணர்ந்துகொண்டவன் விடுதலை கொள்கிறான்.

அரைநாழிகைநேரம் ஒரு சிறுநாய்க்குட்டியின் விளையாட்டை கூர்ந்து நோக்கி பொருள்கொள்ள முயல்க! சித்தம் சிதறிப்போகும். அதன் பொருளின்மை பேரலையாக எழுந்து வந்து எண்ணப்பெருவெளியுடன் மோதும். நம்மால் பொருளின்மையை தாளவே முடிவதில்லை. நாம் இங்கு ஒவ்வொன்றையும் எண்ணி அடுக்கியிருக்கிறோம். பெயரிட்டு இலக்கமைத்து பொருத்திப் பொருள் அளித்து வைத்திருக்கிறோம். நம் சிற்றுலகுக்கு அப்பால் உள்ளது இந்த நிகழ்பெருக்கு. பொருளின்மையின் கொந்தளிப்பு அது.

அதை நோக்குபவன் முதலில் தன் சின்னஞ்சிறு உலகின் எளிய நெறிகளைக்கொண்டு அதற்கொரு பொருள் சமைத்து அளிக்கிறான். அதுவே அதன் மெய் என்று தன்னைச் சூழ்ந்தவர்களிடம் சொல்லிச்சொல்லி நிலைநாட்டுகிறான். அரசே, மெய்கண்டவன் ஏன் மெய்யிலமராமல் அதை தோளிலேற்றி ஊர்க்கோலம் செல்கிறான்? ஏனென்றால் அவன் தன்னைச்சூழ அம்மெய்மை திகழும் ஓர் உலகை அமைத்துக்கொள்ள விழைகிறான். அது அவன் கோட்டை. அதுவே அவன் சுற்றம். அவன் மொழி அது. அவன் மூச்சிழுக்க விழையும் காற்றுவெளி.

பிறிதொருவன் தன்னை காத்துக்கொள்ள முயல்வதில்லை. காற்றில்வைத்த மணப்பொருள் என அவன் கரைந்து மறைகிறான். அவனைக் கரைக்கும் முடிவிலியை அறியமுடியாமையின் வெறிப்பு ஒளிரும் விழிகளால் நோக்கிக்கொண்டிருக்கிறான்.  யோகி அறியும் இருள் என்கின்றன அதை நம் நூல்கள். அவனை பரமஹம்சன் என்கின்றன. செத்தவன்போல் வாழ்பவன். அறிந்து கடந்து  இல்லாமல் இருப்பவன் அவன்.

அரசே கேள், அப்பொருளின்மையின் மையத்தில் பெரும்கொண்டாட்டமொன்று உள்ளது என்று கண்டுகொண்டவனே விடுதலை பெற்றவன். கொண்டாட்டங்கள் அனைத்தும் பொருளற்றவையே. பொருளற்றவை மட்டுமே கொண்டாட்டமாக ஆகவும் முடியும். இது லீலை. நிகழ்வுகளின் பெருவிளையாட்டு. நிகழ்வுகளை நோக்கும் பார்வைகளின் பெருவிளையாட்டு” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆகவே எந்தக் கொள்கையையும் எங்கள் மரபு விலக்குவதில்லை. எதனுடனும் மோதுவதும் மறுப்பதும் இல்லை. அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு ஒற்றைப் பெரும்படலமெனப் பின்னி விரிந்துசெல்லவே முயல்கிறது.

”எங்கள் கொள்கையை சமன்வயம் என்கிறோம். ஒன்றுக்கு முற்றிலும் நிகரென பிறிதொன்றைக் கண்டு ஒன்றின் போதாமையை பிறிதொன்று நிரப்ப தன் இயக்கநெறிகளின்படி தானே வளர்ந்துசெல்லும் முறை இது” என்று சாந்தீபனி முனிவர் சொன்னார். “உலகியலும் மெய்யியலும், தத்துவமும் காவியமும், வேட்டலும் துறத்தலும் என முன்னோர் முரண்பட்டவை என வகுத்த அனைத்தையும் ஒன்றென இணைத்து நோக்குகிறோம். எவ்வுண்மையையும் நிலைநாட்டுவதற்காக அல்ல, உண்மைகளென இங்கு வந்தவை அனைத்தும் உண்மையின் பகுதிகளே என அறிவதற்கே இங்கு மெய்யவை கூடுகிறது.”

அவர்கள் சாந்தீபனிக் காட்டின் நடுவே அமைந்திருந்த கல்விநிலையின் மையக்குடிலில் அமர்ந்திருந்தனர். நூறு நெய்யகல்களின் பொன்னிற இதழ்கள் மெல்ல அசைந்துகொண்டிருந்த அந்த நீள்வட்டக் கூடத்தில் நூறு மாணவர்கள் மடியில் மலர்க்கை வைத்து உடல் நிமிர்ந்து விழிசரித்து அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர். பெரிய குடையெனக் கவிந்திருந்தது வளைக்கப்பட்ட மூங்கில்களைக்கொண்டு எழுப்பப்பட்ட கூரை. சுற்றிலும் நூறு தூண்கள் விளக்குகளை ஏந்தி நின்றிருந்தன.

“எவருமில்லா காடு தனக்குத்தானே என கொண்டாடிக்கொண்டதை எங்கள் முதலாசிரியர் கண்டார். தான் அடைந்த மெய்மையையே அவர் பெயர் எனக் கொண்டார். அனைத்தையும் ஒளிவிடச் செய்வதாக இருந்தது அந்த அறிதல். இன்று நாங்கள் இங்கு அளிக்கும் கல்வி என்பது எங்கு எதைக் கற்றாலும் அதை ஒளிவிடச்செய்யும் அறிவுதான்” என்றார் சாந்தீபனி முனிவர். “விலக்குவது எங்கள் வழக்கமல்ல என்பதனால்தான் அனைவரையும் இங்கு அமைத்துக்கொள்கிறோம். ஆகவேதான் மானுடர் அனைவருக்கும் உரியதென இது திகழ்கிறது.”

“நால்வேத மெய்மையும், தொல்வேதங்கள் அறிந்தவையும், வேதம் கிளரா புறமானுடருக்குத் தெளிந்தவையும் அனைத்தும் சென்று முயங்கிச் சுழிக்கும் ஒரு மையம். அது நாங்கள் விரியவிரியத்தான் உருவாகும் என்பதனால் எங்கள் கல்விநிலையை இங்கிருந்து தென்னகம் வரை விரித்துச்சென்றோம். யவனரும் சோனகரும் பீதரும் காப்பிரிகளும் கொண்டுள்ள மெய்மைகளையும் அள்ளி அணைத்துக்கொண்டோம். ஒரு மனிதனுக்குரிய மெய்மை உலகுக்குரியதாகும் என்றும் உலகுக்குரியதே ஒவ்வொருவருக்குரியதுமாகும் என்றும் எங்கள் ஆசிரியர்கள் சொன்னார்கள்.”

“இங்கு நிகழ்வது ஒரு பந்தாடல், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். “பந்தைக் காணாமல் ஆட்டத்தைக் காண்பவரின் திகைப்பை இதற்குள் நீங்கள் அடைந்துவிட்டிருப்பீர்கள். இந்த ஆடல் எதன்பொருட்டென்று அறியும்கணம் இவையனைத்தும் இனிய களியாட்டாக மாறித் தெரியத் தொடங்கும். அத்தருணம் உங்களுக்கு அமைவதாக!” தருமன் எழுந்து தலைவணங்கினார்.

அவர்கள் மெய்யவை முடிந்து பந்த ஒளியும் நிழல்களும் முயங்கி ஆடிய அரையிருளில் தங்கள் குடில்களுக்கு திரும்பினர்.  தருமன் “இங்கிருந்து இளைய யாதவர் கிளம்பியிருக்கிறார், இங்கு மீண்டும் வந்துசேர்ந்திருக்கிறார்” என்றார். “எதற்காக இக்குருநிலையில் இருந்து அவர் கிளம்பினார்? எதைக் கண்டுகொண்டபின் திரும்பிவந்தார்?” அவர் சொற்களுக்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை.

இரு பந்தங்களைக் கடந்து சென்றபின் தருமன் “இன்று அவர் சொல்வது சாந்தீபனி குருநிலையின் சொற்களைத்தானா?” என்றார். அர்ஜுனன் இருட்டுக்குள் “இல்லை” என்றான். அவனைக் கூர்ந்து நோக்கினார் தருமன். ஆனால் மேலும் சொல்லாமல் அவன் நடந்து மேலும் இருளுக்குள் சென்றான். தலையசைத்தபடி தருமன் தொடர்ந்தார்.

முந்தைய கட்டுரை‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’
அடுத்த கட்டுரைவெய்யோன் – ஓர் அறிவிப்பு