அண்ணன் ஜெயமோகனுக்கு,
இசையின் கவிதை பற்றி மணிகண்டன் எழுதியதை வாசித்தேன்
“எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது.” — என,
இசையின் கவிதையைப் பற்றிப் படர்ந்திருக்கும் ஏ.வி. மணிகண்டனின் கட்டுரைக் கொடி, வேர் நிலம் புதிதாய், வீரியம் புதிதாய், வடிவச் சொற்திரட்சி முட்டித் திளைக்கும் வாசகனை வசமாக்கும் கட்டுரை.
தங்களுடன் இதைப்பற்றி உரையாடியபொழுது, இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளார் என்றீர்கள். மணிகண்டனின் கட்டுரை வடிவமும், அதன்வழி இசையின் கவிதையைப் பேசும் அனுபவச் சிலாக்கியமும், ஒரு படைப்பிற்குள் ட்டனல் வழி (Tunnel) கீழ் புகுந்து. .. பின் கீழ் ஊர்ந்து, நடுவே மத்தியில் முட்டி மேல் வெளிவரும் அசாத்திய சைக்கிளத்திறன் (cyclotron) பாங்கு…
“ரிமோட் கண்ட்ரோல்களுக்கு முந்தைய கால கட்டத்தில், தேவதேவனுக்கு மனைவியோடு சண்டை வந்தால் கோபத்தை எதில் காட்டுவார்? பசுவய்யாவுக்கு BSA சைக்கிளில் சென்று லேடிபார்ட் சைக்கிளை துரத்துவது பற்றி ஏதும் கனவுகள் இருந்ததா? மயிலாப்பூரின் குளத்தில் உறு மீனுக்காக காத்திருக்கும் கொக்கிடம் சொல்ல ஞானக்கூத்தனுக்கு ஏதாவது இருந்ததா? பிரமிளுக்கு லூஸ் ஹேர் பிடிக்குமா? என்று நமக்கு தெரியவில்லை. அவர்களுடைய கவிதைகள் அவர்களே நமக்கு முன் வைக்கும் தேர்வுகள் மட்டுமே. ஒரு நாளின் சில மணி நேரங்களை, ஒரு வாழ்வின் ஆன்மீகமான சில பகுதிகளை மட்டுமே அவர்கள் நமக்கு முன்வைக்கின்றனர். அந்தவகையில் இசை தமிழின் முதன்மையான 24×7 கவிஞர். பொத்தான்களை கழற்றி விட்டு, உள்ளே நுழைத்த சட்டையை வெளியே எடுத்து விட்டு, இழுத்து வைத்திருந்த தொப்பையை தொங்க விட்டு, பிறகு பேசத் துவங்குவதை போல கவிதையிலிருந்து இருந்து “கவிதையை” கழற்றி வைத்து விட்டு பேச துவங்குபவை. அதனால் தான் நான் முதல் முறை பார்த்த பொழுது கவிதையை அதன் தலைக்கு மேலே தேடிக் கொண்டிருந்திருக்கின்றேன். ”
இப்படியாய் நவீனத்தமிழ்க் கவிதையின் ஒரு காலக்கணக்கை இன்றைய இசையின் (கவிஞர்) இசத்துடன் கடந்து செல்லும் உத்தி, என்வரையில் சமீபத்தில் நான் படித்த இலக்கியக் கட்டுரைகளில் மிக எளிதாக, கட்டுரை பாணியிலிருந்து கட்டுரையை கழற்றி வைத்து விட்டு பேசத்துவங்கியிருக்கும் முக்கியமான கட்டுரையாக மணிகண்டனின் கட்டுரை அமைந்துள்ளது.
நீங்கள் சொல்லியபடி அவரை ஓவியரென்றும், வெண்முரசின் ஓவியங்களில் அவர் பங்கும் உள்ளதென்று அறிகிறேன்.
மணிகண்டன், கட்டுரையும் கைப்பழக்கம்தான்… ஓவியத்தோடு நின்றுவிடாதீர்கள்
நெப்போலியன்
சிங்கப்பூர்
***
ஜெ
இசை பற்றி மண்கண்டன் எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. இசையின் கவிதைகளில் உள்ள ‘unbearable lightness of being’ அதே உற்சாகத்துடன் வெளிப்பட்டிருந்தது. வாழ்த்துக்க்ள்
செல்வா
***
அன்புள்ள ஜெ
மணிகண்டனின் கவிதை வாசிப்பு இசையின் உலகுக்கு மிக ருகே உள்ளதை கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. நல்ல உரை
ஜெயராம்