இன்று சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்நிலையத்தில் சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு சிறுகதைப்பயிலரங்கம் நடத்துவதற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு அரங்கசாமியிடம் பேசியபோது நா.முத்துக்குமாரின் இறப்புச்செய்தி தெரிந்தது. இத்தகைய தருணங்கள் ஒருவகையான வெலவெலப்பை அளிக்க ஆரம்பித்துவிட்டன. இளைய நண்பர் ஒருவரின் இறப்பு மூத்தவர்களுக்குரிய நரகம். அது தொடங்கிவிட்டது என்னும் உணர்வு
நா.முத்துக்குமார் எனக்கு இருபதாண்டுக்காலத்துக்கும் மேலாக அணுக்கமானவர். திருவண்னாமலையில் நானும் அவரும் ஒரு நிலத்தை இணைந்து உரிமைகொண்டிருக்கிறோம், அவ்வகையில் பங்காளிகள். என் மீது அவருக்கிருந்த உறவு சற்று சிக்கலானது. என் எழுத்துக்கள் மேல் ஈடுபாடும் தனிப்பட்ட முறையில் பெரும் பிரியமும் கொண்டவர் .குடித்தால் அருகிருப்பவரிடம் என்னைப்பற்றி வசை மழை பொழிவார். அப்படி நிகழ்ந்தால் மறுநாள் காலையில் அவரே ஃபோன்செய்து என்னிடம் பேசுவார்.
அவரது பார்வை வேறு. வாழ்க்கைப்போக்கு வேறு. அதை நான் ஏற்பதில்லை என அவருக்கு தெரிந்திருந்தது. என்னைப்பார்த்ததுமே குடியை விடுவதற்கு முடிவுசெய்திருப்பதைப்பற்றி பேசுவார். கடைசியாகச் சந்தித்தபோது கடுமையாக அந்தப்பேச்சை எடுக்காதே என்று சொன்னேன். அவர் நான் காணக்காண கரைந்து அழிந்துகொண்டிருந்தார்.
நா. முத்துக்குமார் ஒருவேளை அவரது சினிமாப்பாடல்களுக்காகவே நினைக்கப்படுவார். இலக்கியத்தில் அவர் எண்ணிய எதையும் எழுத நேரவில்லை. அதற்கான மொழியை அமைத்துக்கொள்ள அவருக்குக் கூடவில்லை. ஆனால் ஓர் இலக்கியவாதியாக ஆகியிருக்கக்கூடிய அனைத்துத் தகுதிகளும் கொண்டவர். நுணுக்கமான ரசனையும் தொடர்ச்சியான வாசிப்பும் கொண்டவர் .வாசித்தவற்றைப்பற்றிப் பேசவும் திறமைகொண்டவர்
அவரது குடும்பம் குறித்து அவருக்கிருந்த பற்று அபூர்வமானது. கொந்தளிப்பான பேரன்பு அது. தன் மகன் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். மகள் பிறந்ததை நாலைந்துமுறை கூப்பிட்டுச் சொன்னார். ஆகஸ்ட் 23 அன்று மகளைப்பார்க்க அவர் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தேன். முடியவில்லை. 24 அன்று அவருக்கு வசதிப்படவில்லை ,ஃபோன் எடுக்கவே இல்லை. நோயில் இருப்பதைப்பற்றி தெரிந்திருக்கவே இல்லை.
இளையவன் என்னும் உணர்வு எஞ்சியிருக்கிறது. திரையுலகில் ஏறத்தாழ அத்தனைபேருக்கும் அவர் தம்பிதான். ஒருவகையான இயல்பான பணிவு அவரிடமிருந்தது. பவாசெல்லத்துரை அவருடைய ஆதர்ச புருஷன் போல. அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் இயல்பு, அத்தனை மனிதர்களையும் விரும்பும் தன்மை, அவருடைய ஆளுமை என்று சொல்லலாம். அவர் தந்தை ஒரு பொதுவுடைமைச் செயல்பாட்டாளர். தந்தை மேல் முத்துக்குமாருக்கு இருந்தது பெரும் பக்தி. பவா செல்லத்துரை அவருக்கு தன் தந்தையின் இன்னொரு வடிவம். திருவண்ணாமலைக்குச் செல்வதை சொந்தக்கிராமத்துக்கு செல்லும் மனநிலையுடன் கொண்டாடினார். அதன்பொருட்டே அங்கு நிலமும் வாங்கினார்
நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி