கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

மனுஷ்யபுத்திரன் -கடிதம் படித்தேன். நான் இலக்கியத்திற்குப் புதியவன் என்பதால், இதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியாது. அதனால் இந்தக் கடிதம் அது குறித்து அல்ல, பொதுவாக இப்படிப்பட்ட சர்ச்சைகளைப் பற்றியது.

பொதுவாக அவதூறுகளையும் வசைகளையும் கேட்கும்போது எனக்கு எழும் கேள்வி இது: ஏன் இதுபோன்ற கருத்துக்களை பொதுவில் சொல்லவேண்டும், ஏன் அதைத் தனியாக அந்த மனிதனிடம் சொல்லக்கூடாது? ஒருவனிடம் அவனைப் பற்றிய விமர்சனங்களை நேரடியாகச் சொல்லும்போது, அது குறித்து அவன் தன்னுடைய பார்வையைச் சொல்லும் வாய்ப்பு இருக்கிறது. மாறாக அதைப் பொதுவில் வைத்ததும், அதில் உண்மையை இருந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் எப்படியாவது தன் நிலையை சரியாகக் காட்டும் அவசியம் ஏற்படுகிறது. இதில் நேரடியாக சம்மந்தப்படாத மற்றவர்களும் களத்தில் இறங்கி முடிந்த அளவு குட்டையைக் குழப்பிவிடுகிறார்கள். விவாதத்திற்குப் பதில் இரைச்சல்தான் மிஞ்சுகிறது.

கலீல் ஜிப்ரானின் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று: I have no enemies, if I have one let my strength be equal to his, so that truth alone can win.

ஆனால் இங்கோ பொய்களையும், போலித்தனத்தையும் ஏந்திக்கொண்டு எப்படியேனும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்று முயல்பவர்கள்தான் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அடுத்தவனின் வீழ்ச்சியில்தான், தான் வெற்றிபெற முடியும் என்று நம்புபவர்களைக் குறித்து என்ன சொல்வது. அதில் வெற்றி பெறுவது யாராக இருந்தாலும் தோல்வியடைவது உண்மை எனும்போது வருத்தமாக இருக்கிறது.

அன்புடன்,

சு.மோ.

அன்புள்ள மோகன் சுப்ரமணியன்

இலக்கியத்தில் எப்போதுமே பூசல்களுக்கு ஓர் இடமிருக்கிறது. சிலவகை விஷயங்கள் பூசல்கள் மூலமே தெளிவடைகின்றன. பெரும்பாலும் அவை தனிப்பட்ட விஷயங்கள் அல்ல. தனிப்பட்ட விஷயங்கள் போல தோன்றும், ஆனால் எழுத்தாளன் எழுதுவதெல்லாமே தனிப்பட்ட விஷயங்கள்தானே

சிலசமயம் தனிப்பட்ட விஷயம் மட்டுமாகவே இருக்கும். அப்போது நீங்கள் சொல்வது சரிதான்

ஜெ

அன்புள்ள ஜெ..

நாளை மற்றுமொரு நாளே என்பதை “Tomorrow one more day” என்று மொழி பெயர்த்து பெங்குயின் வெளியீடாக வந்தது என்று அழியாச்சுடர்களில் படித்தேன்.

“Tomorrow is just another day” என்றல்லவா இருந்திருக்கவேண்டும்??

பாலா

அன்புள்ள பாலா

Tomorrow is another day என்ற சொல்லாட்சியின் தமிழாக்கமே நாளை மற்றுமொரு நாளே. அதை திருப்பி மொழியாக்கம் செய்வதற்குப் பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாமே என மொழிபெயர்ப்பாளர் நினைத்திருக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெமோ,
சில ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரன் அவர்கள் ஒரு கேள்விக்கு “தனது கதைகள் மேலும் ஒரு 30, 40 ஆண்டுகளே தாக்குப்பிடிக்கும்” என தனக்கே உரிய யதார்த்தத்துடன் பதிலளித்திருந்தார். (ஆனால் இனிமேல் தான் அதிகம் வாசிக்கப்படப் போகிறார் என நம்புகிறேன்). எனினும் அவரது கருத்தை முழுமையாக மறுக்க முடியவில்லை. இரண்டு தலைமுறை தாண்டினாலே வாழ்க்கையை நோக்கும் பார்வை, பழக்க வழக்கம், விஞ்ஞான முன்னேற்றம், புதிய தொழில்கள் என எல்லாமே மாறிவிடுகிறது. மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகளில் பல இப்பொழுது சாதாரணமாகிவிட்டதாக தோன்றுகிறது. தலைமுறைகளை தாண்டி(ங்கிச்) செல்லும் இலக்கியத்தை நிர்ணயிப்பது யார்? எது?

தங்கள் உளமறிந்த வாசகன்,
கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து

உண்மையைச்சொல்லப்போனால் அப்படி தீர்மானிப்பது எது என்று எவருமே சொல்லமுடியாது. அறிவியல்பூர்வமாக எதிர்காலத்தை கணிக்கும் எதிர்காலவியலாளர்களின் கணிப்புகள்கூட 30 சதவீதமே உண்மையாகின்றன. இந்நாளைப்பற்றிய ஐம்பதாண்டுக்காலத்துக்கு முந்தைய எதிர்கால கணிப்புகளை இப்போது வாசித்தால் சிரிப்புதான் வருகிறது

இப்படிச் சொல்லலாம். நேற்றைய ஓர் ஆக்கம் ஏன் இன்றுவரை அழியாமல் இருக்கிறது என்று நோக்கி அந்த கூறுகள் கொண்ட ஆக்கம் நாளையும் நீடிக்கும் எனலாம். பொதுவாக மானுடனின் எப்போதைக்குமான பிரச்சினைகளை பேசும் படைப்புகளே நீடிக்கின்றன. அறிவார்ந்த, சமகாலம் சர்ந்த ஆக்கங்கள் எளிதில் காலாவதியாகின்றன

ஒரு படைப்பின் கதையை பெரும்பாலும் அதை இழக்காமல் வாயால் சுருக்கிச் சொல்லமுடியும் என்றால் அது அழியாது. ஏனென்றால் அது ஒரு தொன்மமாக நீடிக்கும் தன்மை கொண்டிருக்கிறது.

ஒரு பண்பாட்டின் ஒட்டுமொத்தத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆக்கமும் என்றும் வாழும். அந்த சமூகம் அதை ஒருபோதும் இழக்கச் சம்மதிக்காது

சில சமயம் சில ஆக்கங்கள் ஆழ்மனத்தில் குறியீடாக ஆகிவிடும். அவை அழியாது. பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா ஒரு நல்ல படைப்பல்ல. ஆனால் அந்த குறியீடு அந்நாவலை விட பல மடங்கு மேலானது. அது அழியாது

இலைகள் மட்கி நரம்புப் படலமாக ஆவதைப்போல படைப்புகள் மட்கி சாரம் மட்டும் மிஞ்சுகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி
அடுத்த கட்டுரைவல்லினம்