தமிழிசை: காழ்ப்பே வரலாறாக…

pennes1

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

வரலாற்றில் எப்போதுமே சில அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் உள்ளன. வரலாறு பெரும்பாலும் வென்றவர்களால் எழுதப்படுகிறது. நெடுங்கால வரலாற்றுப் பகைமைகளும் ஐயங்களும் வரலாற்றுத்தகவல்களில் இருந்து வரலாற்றுண்மைகளை பிரித்தெடுப்பதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே காழ்ப்புஅம்சம் இல்லாத வரலாறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பண்பாட்டுவரலாறு என்பது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தாழ்வுணர்ச்சியின் விளைவான ஒருவகைக் காழ்ப்பின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தன்னுடைய மொத்த வரலாற்றையே ஒரு பெருந்தோல்வியாக உருவகித்துக் கொண்டிருக்கும் சமூகம் வேறெங்காவது இருக்குமா என்று தெரியவில்லை. அந்தத் தோல்விகளுக்கெல்லாம் தன்னுடைய மூதாதையரின் மண்ணாந்தைத்தனமும், மாற்றாரின் அளவிடமுடியாத மதியூகித்தனமும்தான் காரணம் என்று நம்பி அதையே அறிவார்ந்த விவாதமாக பேசிக்கொண்டிருக்கும் நம்மைப்போன்ற எவராவது வேறெங்காவது இருப்பார்களா? ஐயம்தான்.

சமீபத்தில் ஓரு விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் ஒரே ஓட்டமாகச் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று, சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல். திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் அந்நண்பர்.

அந்தச் சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ் மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அவரது தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.

நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்?

மரபிசைக்காக நீங்கள் இப்படி வசைபாடுவதற்கப்பால் செய்வது என்ன? நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இல்லை நீங்கள் எங்கேனும் சென்று இசையைக் கேட்கிறீர்களா? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா?

இசை வரலாற்றையே பார்ப்போம். மாலிக் காபூர் படை எடுத்துவந்த 1296 – 1316 முதல் தமிழ்நாட்டில் அன்னிய ஆட்சி உருவானது. இங்கிருந்த பழைய அரசுகள் சிதறின. தமிழ் பக்திஇயக்கம் அதன் கடைசிநிலையை அடைந்து மறைந்தது. இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து மராட்டிய நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டைகைப்பற்றி ஆண்டார்கள். அதுவும் தமிழ்மொழிக்கு அன்னியமான் ஆட்சியே

இந்தக்காலகட்டத்தில் பக்தி இயக்கத்தில்மறுமலர்ச்சி கண்டிருந்த தமிழிசையும் இலக்கியமும் பெரும் பின்னடைவு கண்டன. மீண்டும் அவை பதினேழாம் நூற்றாண்டில்தான் மெல்லத் தலையெடுத்தன. தமிழிலக்கியம்சிறிய பாளையக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களை நம்பி தங்கிப்பிழைத்தது.இந்த சின்ன மன்னர்களின் சின்ன ரசனைக்குரிய சின்ன இலக்கியங்கள் உருவாகின. அவை சிற்றிலக்கியங்கள் எனப்பட்டன. கலம்பகங்கள், குறவஞ்சிகள், தூதுகள், உலாக்கள்.

தமிழ்மரபிசை இக்காலகட்டத்தில் மூன்று வழிகளாக பிரிந்து நீடித்தது. ஒன்று , ஓதுவார்களின் பண்ணிசை. அது ஆலயங்களையும் மடங்களையும் நம்பி வாழ்ந்தது. அதுவே பக்தி இயக்கத்தின் பாரம்பரியத்தை கொண்ட மைய ஓட்டம். இன்னொன்று இசைவேளாளர்களின் நாதஸ்வர இசை. அல்லது விழா இசை. அது மக்களின் தேவைகளை ஒட்டி தாக்குபிடித்தது. மூன்று அரசசபை சார்ந்த இசை. இதுவும் சிறியமன்னர்களின் சபைகளைச் சார்ந்து வளர்ந்தது.

முதல் இரண்டுக்கும் பெரிய ஊக்கம் கிடைக்கவில்லை, ஆகவே வளர்ச்சியும் நிகழவில்லை. காரணம் அவை தமிழ்ப்பண்பாட்டுடன் பிணைந்தவை. ஆட்சியாளர்கள் தமிழறியாதோர். ஆனால் சபையிசை தன்னை தெலுங்குக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்மாற்றிக்கொண்டு ஆதரவு பெற்றது. 1700களில் , சொல்லப்போனால் தஞ்சைமராட்டியர் சபைகளில் இந்த இசை மெல்ல பிராமணர்களின் கைக்கு வந்தது.

பொதுவாக தமிழகத்தில் இசை பிராமணர்களின் தொழில் அல்ல. ஆலயச்சடங்குகளுக்கான தோத்திரங்கள் மட்டுமே அவர்களுக்குரியவை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில்அவர்கள் இசைக்குள் நுழைந்து சட்டென்று மேலாதிக்கம் பெற்றார்கள். அதற்குக் காரணம் விஜயநகர சபையிலும் மராட்டியர் அவையிலும் பிராமணப் பாடகர்கள் இருந்தவர்கள் என்பதே. அவர்களிடமிருந்து இசைப்பண்பாடு இங்கே வந்தது. இங்கே அக்காலத்தில் இசையை தொழிலாக எடுத்துக்கொண்ட பிராமணர்கள் பலரும் தெலுங்குப்பிராமணர்கள்.

அப்போது தமிழின் இசையிலக்கண நூல்கள் முற்றிலும் அழிந்திருந்தன. இசை முழுக்க முழுக்க குருமுறைகளில் செவிவழியாக கற்கப்பட்டது. அந்நிலையில் பிராமணர்கள் அன்று வடக்கே இருந்து மராட்டியர் வழியாக அவர்களுக்கு கிடைத்த ஒரே இசைநூலான சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரம் நூலை ஒட்டி இசையை இலக்கணப்படுத்திக்கொண்டு புத்துயிர் கொடுத்தார்கள். அதுவே கர்நாடக சங்கீதம்.

தென்னகத்துக்கு அன்று முகலாய ஆவணங்களில் ஒட்டுமொத்தமாக கர்நாடகம் என்றுதான் பெயர். சாரங்கதேவர் தேவகிரியில் யாதவமன்னர்களின் அரசவையில் இருந்தார். யாதவ அரசுக்கு கர்நாடக அரசு என்று பெயருண்டு. தக்காண சுல்தான்களின் தென்னகப்பிரதிநிதிகள் கர்நாடகநவாப்கள் எனப்பட்டனர். அவ்வாறுதான் அப்போது தென்னகம் தழுவி உருவான இசை கர்நாடக இசை எனப்பட்டது.

இவ்வாறாக தமிழிசை அதன் வளர்ச்சிப்போக்கில் தென்னக இசையாக ஆகியது. அதில் தமிழ்மொழிக்கிருந்த மையஇடம் இல்லாமலாகியமை இயல்பானதே. அதில் தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகியவைமுக்கியமான இடம் பெற்றன. அன்று தென்னாடே தெலுங்கர்களால் ஆளப்பட்டமையால் தெலுங்கு மைய இடம் பெற்றது.

மலையாளத்திலும் முக்கியமான பல இசைப்பாடல்கள்அக்காலம் முதல் உருவாயின. ஷட்கால கோவிந்தமாரார், இரயிம்மன் தம்பி,சுவாதித்திருநாள் போன்றவர்களின் ஆக்கங்கள். அவையும் முக்கியத்துவம் பெறவில்லை. கேரளத்திலும் தெலுங்குப் பாடல்களே அதிகமாகப் பாடப்பட்டன- மன்னரே மலையாளத்தில் பாடல்புனைந்த இசைமுன்னோடியாக இருந்தபோதிலும்கூட!

முகலாய ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்குமுள்ள மரபிசைகள் ஒன்றுடன் ஒன்று உரையாடின. அரேபிய இசையும் பாரசீக இசையும் அவற்றுடன் இசைப்பரிமாற்றம் செய்தன. அதன் விளைவாக உருவானதே இன்றைய இந்துஸ்தானி இசை. இந்துஸ்தானி இசையுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்பு சபையிசைக்கே இருந்தது. அந்த தொடர்பு மூலம் அது சட்டென்று பலமடங்கு விரிவுகொண்டது.புதிய ராகங்களும் பாடுமுறைகளும் கருவிகளும் உள்ளே வந்தன. இன்றைய கர்நாடக சங்கீதத்தின் முகம் உருவாகியது.

ஆனால் இந்த ஆதரவு ஒரு தலைமுறைக்காலம்கூட நீடிக்கவில்லை. மிக விரைவிலேயே தமிழகஅரசியல்ச் சூழல் மாறியது. இசைக்கு புரவலர்களாக இருந்த மன்னர்கள் அழிந்தார்கள். கர்நாடக இசைக்கும் எந்தவிதமான புரவலர்களும் இல்லாத நிலை வந்தது. கர்நாடக இசைமுன்னோடிகள் கடுமையான வறுமையில்தான் இருந்தார்கள். முத்துசாமி தீட்சிதர் கால்நடையாகவே பஞ்சம்பிழைக்க எஞ்சிய ஒரே சமஸ்தானமான எட்டயபுரத்துக்கு வந்து நோயுற்று இறந்தார். பலர் அன்றைய திருவிதாங்கூருக்கு பஞ்சம்பிழைக்க வந்தார்கள்.

ஆனால் அந்த இசைமுன்னோடிகளின் சீடர்பரம்பரை பிடிவாதமாக இசையை முன்னெடுத்தது. கடும் வறுமையில், புறக்கணிப்பில் ஒரு நூற்றாண்டுக்காலம் அவர்கள் இசையை தங்கள் குல ஆசாரம் போல பேணிக்கடைப்பிடித்தார்கள். தங்கள் குடும்பத்தினருக்கு கற்றுக்கொடுத்தார்கள். மைந்தர்களையே இசைவாணர்களாக ஆக்கினார்கள். கலையும் சிந்தனைகளும் இலக்கியமும் சோறுபோடாது. ஆனாலும் சோறில்லாத போதும் அவற்றை பாதுகாக்கும் சமூகங்களே வரலாற்றில் வெற்றிகொள்கின்றன. பிராமணர்களின் போற்றத்தக்க அந்தப்பிடிவாதமே இன்றைய கர்நாடக சங்கீதத்தை இவ்வடிவில் நிலைநிறுத்தியது. அது அவர்களின் மாபெரும் பண்பாட்டு வெற்றி என்பதே உண்மை.

பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. பிராமணர்கள் சட்டென்று ஆங்கிலக்கல்வி மூலம் அதன் பகுதியாக ஆனார்கள். கும்பகோணமும் அதன்பின் சென்னையும் அவர்களின் மையங்களாக ஆயின. ஆகவே கர்நாடக சங்கீதத்துக்கு பிராமண சமூகத்திற்கு உள்ளாகவே புரவலர் அமைந்தார்கள். அது புத்துயிர்கொண்டு வளர்ந்தது. அந்த மறுமலர்ச்சியே இன்றைய சங்கீத சபாக்களாகியது. ஆம், சபை என்ற அந்த அமைப்பு முழுக்க முழுக்க அவர்களின் சங்கீதத்துக்கு அவர்கள் உருவாக்கிக்கொண்டது. தமிழிசையை பேணி கொடுக்கும் பொறுப்பு யாராலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை.

சென்னை அன்று ஆந்திரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உரிய பொதுவான தலைநகரம். ஆகவே அங்கு கர்நாடக சங்கீதம் தென்னக இசையாக, தெலுங்கு மையமாக ஒலித்த இசையாக நீடித்தது இயல்பானதே. அங்கே தமிழிசை ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரி, அதற்கான பண்பாட்டு போராட்டமும் சரி, மிக இயல்பான அடுத்தகட்ட வளர்ச்சிகள் மட்டுமே. அது பெரும்பாலும் அவர்களுக்குள் இருந்தே எழுந்து வந்த குரலாகவும் இருந்தது.

மறுபக்கம் கோயில்களை மையமாக்கிய பண்ணிசை மெல்ல மெல்ல கைவிடப்பட்டு அழிந்து இன்று ஒரு எளிய நினைவாக எஞ்சுகிறது. இசைவேளாளர்களால் பேணப்பட்ட விழா சார்ந்த இசையும் பேணுநர் இல்லாமல் அழிந்துள்ளது இன்று. அது சடங்குத் தேவைக்காக மட்டும் நிலைநிறுத்தப்படுகிறது என்றால் மிகையல்ல. இந்த அழிவுக்கு காரணம் என்ன என்று எவரும் பார்ப்பதில்லை. நமக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் பகைவர்தானே காரணமாக இருக்க முடியும்? இனப்பகைவர்கள் அல்லாமல் நமக்கு எப்படி சிறுமை வரமுடியும்? ஆக ‘அடிடா பாப்பானை’ என்ற கூச்சல்.

பிற இசைவழிகளுக்கு என்ன நிகழ்ந்தது என அறிய நாம் பெரிதாக ஒன்றும் வரலாற்றை பார்க்கவேண்டியதில்லை, சொந்த வீட்டையும் குடும்பத்தையும் மட்டும் பார்த்தாலே போதும். முதல் விஷயம், இசையை தொழிலாகக்கொண்டவர்களுக்கு இருந்த சாதிய இழிவு. இசைவேளாளர்களை இழித்து ஒதுக்கும்போக்கு .வேளாளர், முதலியார் போன்றவர்களின் மனதில் ஆழ ஊறியிருந்தது அந்த இழிவுநோக்கு . இன்றும் கூட மாற்றமில்லாமல் அந்த உணர்ச்சி அப்படியே நீடிக்கிறது. ஆனால் அதற்கான பொறுப்பையும் சாதுரியமாக பிராமணர் மேல் சுமத்திவிடுவார்கள். சாதியை அவன் தானே கற்பித்தான்?

இந்த சாதிய இழிவுநோக்கு தமிழகத்தின் வேளாளார்- முதலியார் போன்றவர்களின் ஆழ்மனதில் மெல்ல இசையே இழிவு என்ற எண்ணம் உருவாக வழியமைத்தது. விளைவாக ஓதுவார்களுக்குக்கூட வேளாளர்குலங்களில் கௌரவமான இடமிருக்கவில்லை. இப்போதும் இல்லை. பத்தொன்பதாம்நூற்றாண்டு நாவல்களில் இந்த சமூகச்சித்திரத்தை நாம் காணலாம்.

இதன்விளைவாக இசையும் கலைகளும் அவற்றை கற்பதற்கான பொருளாதார-சமூகச்சூழல் இருந்த உயர்வட்டத்தவரால் முழுமையாகவே ஒதுக்கப்பட்டன. ஒரு குழந்தையை இசைகற்க அனுப்புவதென்பது பெரும் அவமானமாகவே எண்ணப்பட்டது. நெல்லை,தஞ்சைமாவட்டங்களில் இன்றுகூட ஒரு வேளாளப்பெண் இசை கற்பது பெரும் இழிவாகவே கருதப்படுகிறது. செட்டியார்களிலும் இதே நிலைதான்.

அத்தனை பிராமணப்பெண்களுக்கும் கண்டிப்பாக அடிப்படை இசை கற்பிக்க வேண்டுமென பிராமணர்கள் எண்ண ஆரம்பித்த பின்னரும்கூட இந்நிலை என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பிராமணப்பெண்கள் மேடைகளில் ஆட ஆரம்பித்த பின்னர் இருந்தது இந்நிலை என்பதை வைத்துப்பார்த்தால் உண்மையில் சிக்கல் எவரது மன அமைப்பில் என்பதை எளிதில் காணலாம். இன்றுக்கூட மேடையில் பாடும், ஆடும் வெள்ளாளப் பெண்மணிகள் எவராவது இருக்கிறார்களா?

இந்த இழிநோக்கே பிற இரு இசைமரபுகளையும் அழித்தது. ஒவ்வொரு மரபார்ந்த இசைக்கலைஞனும் தன் பிள்ளை தன் தொழிலுக்கு வந்துவிடக்கூடாது என்று எண்ணச் செய்தது. இசையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்த, பெரும்புகழும் பணமும் சம்பாதித்த சீர்காழி போன்ற இசைக்கலைஞர்கூட இசையார்வம் கொண்டிருந்த தன் மகன் இசைக்கலைஞனாவதை விரும்பாமல் மருத்துவராக ஆசைப்பட்டார்.

இன்று இசைவேளாளர்கள் இசையை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மாபெரும் இசைமேதைகள் வாசித்த நாதஸ்வரத்தில் இன்று குறிப்பிடத்தக்க ஒரு பெயர்கூட இல்லை என்பதே நிலை. ஓதுவார்கள் உள்ள கோயில்கள் மிகச்சிலவே என்பதே உண்மை.

தமிழிசை இயக்கத்தை பிராமணரல்லாதார் மட்டுமே முன்னெடுத்ததாக ஒரு வரலாற்றுப்பொய் இன்று மீளமீள முன்வைக்கப்படுகிறது. தமிழிசை இயக்கத்தின் மிக முக்கியமான, மிக உரத்தொலித்த குரல் கல்கியுடையது என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். சலிக்காமல் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடம் கல்கி தமிழிசைக்காக வாதாடியிருக்கிறார். தமிழில் பாடல்கள் புனைந்திருக்கிறார்.தன் மகள்களை ஆடச்செய்திருக்கிறார். தமிழிசை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் ராஜாஜி. பெரியசாமித் தூரன், மீ.ப.சோமு, டி.கெ.சிதம்பரநாத முதலியார் என ராஜாஜியின் கோஷ்டி தமிழிசை இயக்கத்தில் ஒரு வலுவான தரப்பாக இருந்தது.

தமிழிசை இயக்கம் திராவிட இயக்கத்தவரால் முன்னெடுக்கப்பட்டது என்றுகூட துணிந்து அடித்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். அதில் இருந்தவர்களில் கணிசமானவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதும், அண்ணாமலை அரசருடன் இணைந்து தமிழிசைச்சங்கம் தொடங்க உழைத்தவர்கள் ராஜாஜி, ஆர்.கெ.சண்முகம்செட்டியார் முதலிய காங்கிரஸ்காரர்கள் என்பதும் அதில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் சுத்தானந்தபாரதி ,பெ.தூரன் போன்றகாங்கிரஸ்காரர்கள் என்பதும் யாராவது சொல்லிக்கொண்டே இருக்காவிட்டால் வரலாற்றில் அழிக்கப்பட்டுவிடும் உண்மைகள். இன்றும் தமிழிசையில் ஒலிப்பவை சுத்தானந்தபாரதி ,பெ.தூரன் பாடல்களே. பார்க்க தமிழிசைச்சங்க வரலாறு

அண்ணாமலை அரசர் 1943ல் தமிழிசைச் சங்கத்தை உருவாக்கினார். மாபெரும்அரங்குகள் கட்டப்பட்டன. சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. கட்டுரைகள்எழுதப்பட்டன. ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இன்று , முக்கால்நூற்றாண்டு தாண்டி அவ்வியக்கத்தின் நிலை என்ன?

கடந்த அரைநூற்றாண்டில் பிராமணர்கள் அல்லாத சமூகங்கள் எவையும் இசையை பொருட்டாக நினைக்கவில்லை. படிப்பையும் வணிகத்தையும் போற்றினர். பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குவந்தனர்.ஆனால் தங்களுடைய மரபார்ந்த கலைகள், பாரம்பரிய ஞானம் அனைத்தையுமே உதறினர். எது காசாக ஆகுமோ அதை மட்டுமே போற்றினர்.

ஆகவே இசை அவர்களுக்கு இழிவாகவே இருந்தது. அடிப்படை இசைப்பயிற்சி அவர்களில் எவருக்கும் உருவாகவில்லை. சென்ற தலைமுறையில் இருந்த எளிய அறிமுகம் கூட பிறகுவந்த தலைமுறைகளில் இருக்கவில்லை. யோசித்துப்பாருங்கள், தமிழிசை இயக்கம் உருவான பின் சென்ற ஐம்பதுவருடங்களில் இச்சாதிகளில் இருந்து உருவாகி வந்த இசைவாணர்கள் எத்தனைபேர்?

கேட்கவும் ஆளில்லை, பாடவும் ஆளில்லை என்றால் தமிழிசை எப்படி வளரும்?சொற்பொழிவுகளைக்கொண்டு இசையை வளர்க்க முடியுமா என்ன? இன்று தமிழிசைச் சங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களைப் பாருங்கள்.அங்கே பாடும் அத்தனை பாடகர்களும் மியூசிக் அக்காதமியிலும் நாரதகானசபாவிலும் பாடும் அதே பிராமணப்பாடகர்கள்தான். இங்கே தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்பதே வேறுபாடு.

ஒருமுறை தமிழிசைச்சங்க பொறுப்பாளர் என்னிடம் சொன்னார் ‘இப்பல்லாம்சொற்பொழிவு அதிகமா வச்சுக்கிடறதில்லை சார். பிராமணாக்காழ்ப்பா எதையாவதுபேசிட்டு போய்டறாங்க. கேக்க வாரவங்க அத்தன பேரும் அவங்க. நம்மாளு சாடையாக்கூட எட்டிப்பாக்கறதில்லை.’ ஆனால் பிராமணர்களைத் திட்ட ஒரு சபைகூட்டுங்கள் . அரங்கு நிறைந்துவழியும்.

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இசையின் தளத்தில் தமிழிசைக்கு முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர்கள் சபாக்களில் பாடும் பிராமணப் பாடகர்கள்தான்.இதை தமிழிசை ஆய்வாளர் மம்முது எனக்களித்த பேட்டியில் சொன்னார் [சொல்புதிது] தமிழிசைப்பாடல்கள் அதிகமாக ஏன் பாடப்படவில்லை என்பதற்கு மம்முது சொன்னகாரணம் எளிமையானது. பழங்காலத்தில் இசை குருமரபாக கற்று பாடப்பட்டது. குரு பாடிய பாட்டையே பாடுவதே வழக்கம். அதிகம்போனால் நூறு கீர்த்தனைகளே கர்நாடக சங்கீத அரங்குகளில் பாடப்பட்டன.காரணம் அவைதான் சுவரப்படுத்தப்பட்டு கிடைத்தன. கர்நாடக சங்கீதம் என்பது அர்த்தத்தை விட வெறும் ஒலிகள் மூலம் [நிரவல்] இசைக்கோவைகளை உருவாக்குவதைமுக்கியமாக நினைப்பது. பழந்தமிழ் மரபும் அதுதான் என்றார் மம்முது. அப்படிப் பாடுவதற்கு சுவரப்படுத்தப்பட்ட கீர்த்தனைகள் தேவை.

தமிழிசைப்பாடல்களை புதிதாகச் சுவரப்படுத்தி இசைக்கோவைகளுக்கு ஏற்றமுறையில் அமைத்துபாடுவது எளிதல்ல. அத்தகைய ஒரு முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததும் சாதாரணமே. எந்த நுண்கலையிலும் மாற்றங்கள் எதிர்ப்பில்லாமல் வந்துவிடாது. அதிலும் மதம் ஆசாரங்களுடன் தொடபுடைய இசை மாற்றங்களை எதிர்ப்பது மிக இயல்பே. வேண்டுமென்றால் மேலைநாட்டு காஸ்பல் இசையின் வரலாற்றை காணலாம். நாநூறு வருடமாக அது மாற்றமே இல்லாமல் நீடித்து வருகிறது. கர்நாடகசங்கீதமென்பதே அதன் முதல் மூன்று மூதாதையர்களின் சீடமரபினரால் பாடப்படுவதாக இருக்கையில் அவர்களைஎப்படி அம்மரபினர் கைவிட முடியும்?

தமிழிசைக்குத் தீட்டு என்று கர்நாடக இசைக்கலைஞர்கள் சொன்னார்கள் என்றெல்லாம் இன்று அப்பட்டமான பொய்களை எழுதி வைக்கிறார்கள். ஒருவர்எழுதிய பொய்யை இன்னொருவர் மேற்கோளாக காட்டினால் அது நூலாதாரமாக ஆகிறது.பெரும்பாலான கூற்றுக்கள் ‘ஒருசமயம்’ என்று ஆரம்பிக்கும் நிகழ்வுகள்.‘என்றார்களாம்’ என முடியும் கூற்றுக்கள். தியாகராஜ சுவாமிகளின் பாடல்களை மட்டுமே பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குச் சென்று, தமிழில் சம்பந்தமே இல்லாமல் பாடி, அதற்கு எதிர்ப்பு வந்ததும் அதை அரசியலாக்கி தமிழில் பாடுவது தீட்டு என்றார்கள் என்று அவதூறை பதிவுசெய்து அதை வரலாறாக ஆக்குவதையே சென்ற காலத்தில் காண்கிறோம்.

கர்நாடக சங்கீத மேடை பெரும்பாலும் கேளிக்கைத்தன்மையுடன்தான் இருந்துவந்தது. மடி ஆசாரத்துடன் அல்ல. எல்லா மேடைகளிலும் எப்போதும் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டன. சிந்து போன்ற சிலவகை நாட்டுப்புறப்பாடல்களைக்கூட மணி அய்யர் போன்றவர்கள் பாடுவதுண்டு என சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். ஏன், இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலையிசைத் துணுக்கு கூட கட்டாயமாக பாடப்படும் நிலை இருந்தது. தமிழ்நாட்டு கோயில்கள் அனைத்திலும் பக்தியிசை பாடப்பட்டு வந்தது. எங்கே எப்போது இருந்தது மேடையில் தமிழுக்குத் தீட்டு?

தமிழ் துக்கடாவாக பாடப்பட்டது என்றால் அதற்கான காரணம் வரலாற்றுபூர்வமானது. தெலுங்கு-மராட்டிய அவைகளில் உருவான இசை அது.தெலுங்கர்களால் பாடப்பட்டது. தமிழிசை என்ற அடையாளத்தை இழந்து தென்னிந்தியஇசையாக தன்னை உருவாக்கிக்கொண்ட இசை அது. அதன் மூலகுருநாதர்கள் தமிழில்எழுதவில்லை. ஆகவே சீடர்மரபு பாடவில்லை. பாடவேண்டும் என்ற எண்ணம் உருவானபோது அந்த தரப்பின் ஆகச்சிறந்த படைப்பூக்கம் கொண்ட மனங்கள் அதை நோக்கி மெல்லமெல்ல வந்து சேர்ந்தன. இதுதான் வரலாறு.

தமிழிசை இயக்கம் எழுந்தபோது எதிர்க்குரல்களில் ஒருவேளை சிலர் தமிழைப்பழித்து ஏதேனும் சொல்லியிருக்கலாம். ஆனால் அன்று கர்நாடக இசையின் மையங்களாக விளங்கிய எந்த பாடகரும் அப்படிச் சொன்னதாக ஆதாரமில்லை. மாறாக அவர்கள் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், பாரதி போன்றவர்களின் பாடல்கள அப்போதே பெரும் புகழ்பெறச் செய்திருந்தார்கள். பலர் அவர்களே தமிழ்க்கீர்த்தனைகளை இயற்றினார்கள்.

உண்மையில் இன்று அவர்களின் வழிவந்தவர்களாலேயே தமிழிசை வாழ்கிறது. எம்.டி.ராமநாதன், மகாராஜபுரம் சந்தானம், டி.என்.சேஷகோபாலன் போன்றவர்கள்தான் அருமையான தமிழிசைப்பாடல்களை மீட்டு சுவரப்படுத்தி பாடி வாழச்செய்த முன்னோடிகள். சுத்தானந்த பாரதி, அம்புஜம் அம்மாள் போன்ற பிராமணர்கள் எழுதியவையே இன்றும் புகழ்பெற்ற தமிழிசைப் பாடல்கள். ஒருமுறை சென்னை புத்தகவிழாவில் சேஷகோபாலனைப் பார்த்த நாஞ்சில்நாடன் பக்திப்பெருக்குடன் அருகே ஓடிச்சென்று பணிவுடன் கைகூப்பி சிலசொற்கள் பேசி பரவசமாக திரும்பினார். ’இந்தாள் இல்லேன்னா தமிழில் எங்க பாட்டுகேக்கிறது’ என்றார்

இன்று அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமணியம்,சௌம்யா போன்றவர்கள் தமிழிசைப்பாடல்களில் மிக விரிவான ஆலாபனைகளுடன் மையப்பாடல்களைப் பாடி இசைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அவர்களின் முயற்சியாலேயே அற்புதமான தமிழிசைப்பாடல்கள் இன்று ஒலிக்கின்றன. என்னைப்பொறுத்தவரை என் மனதைக் கவர்ந்த தமிழிசைப்பாடல்கள் அனைத்தையும் இவர்களிலேயேகேட்டிருக்கிறேன். வேறு யார் இருக்கிறார்கள் பாட?

ஒரு கட்டுரையைசமீபத்தில் வாசித்தேன். வரலாறு இணையதளத்தின் தலையங்கம். சென்றவருடத்தில்சென்னை இசைப்பருவத்தில் 30 நிகழ்ச்சிகளை கவனித்த ஆசிரியர்குழு சென்னைஇசைவிழாக்களில் மிக அதிகமாக தமிழ்ப்பாடல்கள் பாடப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. மையப்பாடல்களே தமிழில்தான். அபூர்வமான தமிழிசைப்பாடல்கள் பாடப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவும் இருக்கிறதுஎன்கிறது அக்கட்டுரை. ஆசாரமானது எனப்படும் மியூசிக் அக்காதமியில்கூடதமிழிசை ஓங்கி ஒலிக்கிறது என்கிறது.

சிக்கல் குருசரண் என்ற இளைஞர் சிக்கலான வர்ணத்தை ‘சற்றே விலகி இரும்பிள்ளாய்’ என்ற தமிழ்ப்பாடலில் பாடியதை வியந்து பாராட்டும் ஆசிரியர்குழு அந்த முய்ற்சிகளை ஏன் இதழ்களும் அமைப்புகளும் பொருட்படுத்துவதேயில்லை என்று கேட்கிறது. அனைத்துக்கும் மேலாக தமிழிசை அன்பர்கள் தய்வுசெய்து பாட்டு கேட்க வரவேண்டும் என்று மன்றாடி கோருகிறது. தமிழிசைச்சங்கத்திலேயே தமிழார்வலர் நடமாட்டம் இல்லை என்னும்போது மியூசிக்அக்காதமியில் என்ன எதிர்பார்ப்பது?

இந்நிலையில்தான் தமிழிசையை சபா வைத்து அழிக்கிறார்கள் என்று பிலாக்காணம் எழுகிறது. உண்மையிலேயே எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தகேள்வியை கேட்கும் தரப்புதான் என்னுடையது என எனக்குப் படுகிறது –சாதியளவில் ,சமூக அளவில்.

தன் பண்பாடு பாரம்பரியம் அனைத்தையும் அப்பட்டமான உலகியல்மோகம் காரணமாக கைவிட்டுவிட்டு, தன்னைத்தானே அழியவிட்டுவிட்டு, தன் கையாலாகாத்தனம்,அக்கறையின்மை அனைத்தையும் இம்மாதிரி காழ்ப்புகளையும் அறியாமையும் கொண்டுமூடி வெடக்மே இல்லாமல் பொதுவெளியில் வந்து நிற்கும் தரப்புதான் நானா என்ற எண்ணம் வந்து குமட்டல் ஏற்படுகிறது

தமிழிசை ,மீண்டும் கடிதங்கள்

இசை, மீண்டும் சில கடிதங்கள்

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்

தமிழிசையா?

பிரகாம் பண்டிதர்

கர்ணாமிர்த சாகரம்:கடிதம்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமி