[ 12 ]
“இன்று நீங்கள் ஆசிரியரை சந்திக்கச் சென்றபோது அங்கு நிகழ்ந்துகொண்டிருந்ததை இயற்கல்வி என்கிறார்கள்” என்று பவமானன் சொன்னான். “ஸ்வாத்யாயம் செய்யும் மாணவர்களை ஆசிரியர் தெரிவு செய்கிறார். அவர்களுக்குரிய நூல் ஒன்றை பரிந்துரைக்கிறார். ஒவ்வொருநாளும் இரவிலோ புலரியிலோ அவர்கள் அவரை தனியாக சந்திக்கிறார்கள். அவர் ஒரு பாடலை அவர்களுக்கு கற்பிக்கிறார். அடுத்த அமர்வு வரை அவர்கள் எவரிடமும் எதுவும் பேசக்கூடாது. எவர் சொல்லையும் கேட்கவும் கூடாது. நூலாயவோ இசைகேட்கவோ ஒப்புதலில்லை. பணிகளென எதையும் ஆற்றலாகாது. காட்டுக்குள் உலவுதலும் தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அப்பாடல் வரிகளுடன் முற்றிலும் தனித்திருக்க வேண்டும்.”
“அந்நூலின் பெரும்பொருள் மண்டையுச்சியைப் பிளந்து உள்ளே இறங்கும் கடப்பாரை போல அவனுள் நுழையும். ஆனால் அதன் நுண்பொருள் கருவறைக்குள் விந்து என அறியாது புகுந்து உறையும். மானுடனை நூல் முற்றாக மாற்றியமைக்கமுடியும் என்பதை கண்டிருக்கிறேன். இவ்வாறு கற்ற நூலில் இருந்து மாணவனுக்கு விடுதலை மிக அரிது” என்றான் பவமானன். “நீர் கற்ற நூல் எது?” என்றான் அர்ஜுனன். “ஐதரேய ஆரண்யகத்தின் நான்காம் நூல்” என்றான் பவமானன். “ஓராண்டு காலமாகியது அது என்னை சூழ்ந்துகொள்ள. நான் அதிலிருந்து வெளிவர ஒருகணம்தான் ஆகியது.”
பெருமூச்சுடன் அவன் சொன்னான் “ஒவ்வொன்றும் கைகளால் ஆற்றக்கூடிய செயல்களாக நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொன்றும் உள்ளத்தால் அடையக்கூடிய பொருள்வெளியாக விரிந்துகொண்டுமிருந்தன. ஒன்றில் இன்னொன்றை கண்டடைவதென்பது காலைமலர் இதழ் விரிவதுபோன்றது. அல்லது முகில்களில் இடி எழுவதுபோன்றது.” அவன் துயர்மிக்க புன்னகையுடன் தலைகுனிந்து நடந்தபடி சொன்னான். “ஒருவரி என்னில் எழுந்ததை நினைவுகூர்கிறேன். ஆரண்யகம் சொன்னது, இருவகைக் கயிறுகள் உள்ளன. வலம்புரியும் இடம்புரியும். வலம்புரி சில விலங்குகளை கட்டும். இடம்புரி சிலவற்றை. இருபுரி கயிறுகளும் கையிலிருப்பவன் அனைத்து விலங்குகளையும் கட்டுகிறான். அப்போது கயிறு திரித்துக்கொண்டிருந்தேன். கைநடுங்கி இழைகள் தரையில் விழுந்துவிட்டன.”
“இருபுரியில் எதுவானாலும் அது கயிறே. ஆனால் அது குறிப்பதென்ன, மறுபுரியா அவிழ்புரியா? அன்று பித்தெடுத்தவனாக காட்டுக்குள் ஓடினேன். கொதிநீர் விழுந்தவன் இன்னது செய்வதென்று அறியாமல் அலறியபடி அங்குமிங்கும் அலைக்கழிவது போலிருந்தேன். பின்னர் எங்கோ சொல்லென இன்னமும் நான் ஆக்கிக்கொள்ளாத என் அறிதலை சென்றடைந்தேன்” என்றான் பவமானன்.
“பிறிதொருமுறை ஆசிரியர் எனக்கு சொல்லுரைத்துக் கொண்டிருந்தார். இந்நாளை அவன் எனப் பாடித்தொடங்குவோம் என்றார். அவன் எனும் சொல்லே பிரம்மம். அதை நாமுரைக்கையில் அவன் ஆணென ஆகிறான். அவன் எனும் அச்சொல் பெண் என ஆகிறது. அவர்கள் முயங்கி மைந்தரை பெற்றெடுக்கிறார்கள் என்று அவர் சொல்லிக்கொண்டிருந்த கணம் நான் வேள்விச்செயல் என்றால் என்ன என்று கண்டுகொண்டு மெய்சிலிர்ப்படைந்தேன்” பவமானன் சொன்னான். “நான் அறிந்த சொற்கள் அனைத்தும் என்னுடன் உள்ளன இப்போது. அவை விண்மீன் ஒளியென வழிகாட்டுகின்றன.”
அவன் இனியநினைவுகளால் அப்போதெழுந்த கசப்பை வெல்ல முயல்கிறான் என்று தெரிந்தது. இளவெயில் எழத்தொடங்கியதும் அவர்கள் ஒரு சிற்றோடைக்கரையை வந்தடைந்தனர். அங்கே மரத்தடியில் இலைகளைப் பறித்துப் பரப்பி அவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க மஞ்சம் அமைத்தான் பீமன். தருமனும் பவமானனும் அமர்ந்தனர். அப்பால் திரௌபதி ஆடையால் முகம் மறைத்து உடல்சுருட்டிப் படுத்தாள். சிலகணங்களிலேயே அவளிடமிருந்து துயில்மூச்சு எழத்தொடங்கியது.
நகுலனும் சகதேவனும் அப்பால் அமர்ந்தனர். பீமனும் அர்ஜுனனும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு காட்டுக்குள் சென்று மறைந்தனர். ஓடை நீர்குலுங்கி ஒலிக்க சிறுபாறைகளினூடாக ஒளிகொண்டு பாய்ந்தோடியது. அவர்களின் தலைக்குமேல் கௌதாரி ஒன்று ஓசையிட்டுக்கொண்டே இருந்தது. மிகத்தொலைவில் இடியோசை உறுமியது.
“கிழக்கே மழை வருகிறது” என்று பவமானன் சொன்னான். “தித்திரிப்பறவைகள் மழையை முன்னறிபவை. நீங்கள் செல்லும் பாதை அது. மழைமுகிலை எதிர்கொள்வீர்கள்.” தருமன் கிழக்கை நோக்கியபோது அங்கே வான்சரிவில் நிழல்விழுந்ததுபோல கார் தெரிந்தது. “ஆம், ஆனால் மெல்லியமழைதான்” என்றார். “குறுமழை. ஆனால் இடியும் மின்னலும் இருக்கும்” என்று பவமானன் சொன்னான்.
“தைத்ரியக்காட்டில் நீர் எத்தனை ஆண்டுகள் இருந்தீர்?” என்று தருமன் கேட்டார். “நான்காண்டுகாலம்” என்று கையால் இலைத்தண்டுகளை ஒடித்தபடி பவமானன் சொன்னான். “வேதக்கல்விமரபுகளில் தொன்மையான ஒன்று அது. அங்கே இப்போது தித்திரிமுனிவரின் வழிவந்த கோபாயனர் முதன்மை ஆசிரியரென அமர்ந்திருக்கிறார். தைத்ரியமரபு தனக்கென வேதச்சடங்குமுறைகளும் கூற்றுநெறிகளும் பொருளமைவுகளும் கொண்டது. பாரதவர்ஷம் முழுதிலும் இருந்து அங்கே நாளும் மாணவர்கள் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள்.” அச்சொற்குறிப்பே அவன் மேலும் ஏதோ சொல்லப்போகிறான் என்பதை காட்டியது. தருமன் அவனை நோக்கி அமர்ந்திருந்தார்.
“ஆனால் இவற்றால் என்ன பயன்? அரசே, வேள்விகள் என்றுமிருந்தன. நாகர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் அரக்கர்களும்கூட வேதமோதி அவியிட்டனர். நால்வேதங்கள் என அவை எல்லைகட்டப்பட்டபோது அவை முறைப்படுத்தப்பட்டன. இன்று அதர்வவேதத்துடன் மட்டுமே நாகர்களும் கிராதர்களும் கொண்டிருந்த வேதஉறுப்புகள் இணைந்துள்ளன” என்று பவமானன் சொன்னான். “வேதவேள்விகளை பிராமணங்கள் வகுத்தன. வேதச்சொல்லை ஆரண்யகங்கள் விளக்கின. இன்று என்ன நிகழ்கிறது இக்கல்விநிலைகளில்? எந்த எரி எச்செயலுக்கு, எந்த வகை எரிகுளம், நோன்பென்ன, நெறியென்ன, ஏன் அவியென்ன விறகென்ன என்றுகூட முற்றாக வகுத்துவிட்டிருக்கின்றனர்.”
“இங்கு சொல்லெண்ணி இவர்கள் கற்பது மாறாது இவற்றை நிலைபெறச்செய்யும் ஆணைகளை மட்டுமே. அவற்றை நாநுனியில் ஏற்றிக்கொண்டவன் பெருவைதிகனாக இங்கிருந்து கிளம்பி நகரங்களுக்குச் செல்கிறான். அரசவைகளிலும் ஊர்மையங்களிலும் அமைந்து நற்கொடை கொள்கிறான். வேதம் ஓதி வாழ்த்துரைக்கிறான். விதைப்புக்கும் அறுவடைக்கும் திருமணத்திற்கும் பிறப்புக்கும் தருணம் குறிக்கிறான். போருக்கு எழுபவர்களின் வாள்தொட்டு அருள்புரிகிறான். இவையே வேதமெய்யறிவு என்றால் வேதமில்லா பழங்காலத்துக்கு மீள்வதே உகந்ததாகும்.”
அர்ஜுனன் கிழங்குகளுடனும் கனிகளுடனும் வந்தான். நகுலனும் சகதேவனும் எழுந்து சென்று அவற்றை பெற்றுக்கொண்டனர். ஓடையில் அவற்றைக் கழுவி துண்டுகளாக்கி இலைகளில் பரிமாறி இருவருக்கும் கொண்டுவந்து வைத்தான் நகுலன். தருமன் முதல்துண்டை எடுப்பதற்காகக் காத்து அவர் உண்டபின் திரௌபதி எடுத்துக்கொண்டாள். தருமன் “மந்தன் எங்கே?” என்றார். “அவர் உணவுண்கிறார்” என்றான் அர்ஜுனன். புரிந்துகொண்ட தருமன் உண்ணத்தொடங்கினார்.
கையில் கிழங்குத்துண்டை எடுத்துக்கொண்டு “இங்கு உள்ளவை மூன்று எல்லைகள் மட்டுமே” என்று பவமானன் தொடர்ந்தான். “ஒன்றில் வேதங்களை சொல்லெண்ணிக் கற்கிறார்கள். வேள்விச்சாலைகளை கூடுகட்டும் குளவிகளைப்போல அச்சு மாறாமல் கட்டுகிறார்கள். வேதத்தை காட்டுச்சீவிடுகளைப்போல ஒற்றையிசையாக பாடுகிறார்கள். இரண்டாவது எல்லையில் இவர்களை முற்றிலும் மறுத்து அமர்ந்திருக்கிறார்கள் சார்வாகர்கள். வேதமில்லை, வேள்வி தேவையில்லை என்கிறார்கள். இன்பமே விழுப்பொருள் அதை அடையும் வழியே அறிவு, அதை காலஇடத்தருணத்தில் கண்டடைவது மட்டுமே கல்வி என்கிறார்கள்.”
“பேசிப்பேசி எல்லைகடந்து சென்று அறிவு தொகுக்கப்படவேண்டியதே இல்லை என்கிறார்கள். மானுடன் தானென உணர்ந்ததுமுதல் இங்கு அறிதல்கள் இணைக்கப்படுகின்றன. அவை இணைந்து மாமானுட வடிவென எழுந்து நின்றிருக்கின்றன. மொழியின் கடல். பொருளின் அலைப்பெருக்கு. ஊன் புழுவாவதுபோல அறிவு மானுடனாக உருக்கொண்டு எழுகிறது. அதில் பிறந்து அதை உண்டு அதில் திளைத்து அதில் மடிகிறோம். ஆனால் பட்டறிவன்றி பிற அறிவெல்லாம் பயனற்றவை என்கிறார்கள் பிரஹஸ்பதியர். அனைத்தறிவும் பட்டறிவாக மாறும்போதே பயன்கொள்கின்றன என்கிறார்கள்.”
“மூன்றாம் எல்லையில் அருமணிதேரும் வணிகனைப்போல வேதச்சொல்லை எடுத்து ஒளியில் நோக்கி ஆராய்கிறார்கள். அதன் ஒவ்வொரு பட்டையையும் கணக்கெடுக்கிறார்கள். அருமணிகளேதான். எவருக்கும் எப்பயனும் இல்லாத நுண்மைகள். ஒரு குவளை நீரோ ஒருபிடி உணவோ ஆகாத பேரழகுகள். பிரக்ஞையே பிரம்மம். ஆத்மாவே பிரம்மம். இவையனைத்திலும் உறைகிறது இறை. அது நீயே. எத்தனை பெருஞ்சொற்றொடர்கள், எத்தனை ஊழ்கச்சொற்கள். அவை இங்கே காட்டுக்குள் எவ்வுயிரும் அண்டாத மலையுச்சிச் சுனைபோல் ஊறி நிறைந்துகொண்டிருக்கின்றன.”
“மூன்றுக்கும் அப்பால் ஒன்று இருக்கவேண்டும். இல்லையென்றால் உருவாகி வரவேண்டும். தெய்வமென கருவறை அமர்வது, அருமணியென சென்னிசூடத்தக்கது, படைக்கலமென கையிலமைவது, உழுபடை என மண்ணுடன் இயைவது. அத்தகைய ஒன்றுக்காக காத்திருக்கின்றன இக்கானகங்கள்.”
விந்தையான உளஎழுச்சி ஒன்றை தருமன் அடைந்தார். “அரசே, வேதமெய்நூல்களின் சிறப்பே அவை மாற்றற்கரிய உறுதிகொண்டவை என்பதுதான். அதனால்தான் அவை வென்று நின்றன. மானுடம் சிதறிப்பரவிய காடுகளிலிருந்து பாரதவர்ஷத்தை படைத்தெடுத்தன. அவற்றின் தீங்கும் அவ்வுறுதியே. வைதிகன் யானைமேல் செல்பவன் போல. அவன் எந்த வாயிலிலும் தாழ்ந்துசெல்ல முடியாது என்று சொல்லப்படுவதுண்டு. வேதத்தின் உறுதியுடன் காவியப்பாடல்களின் நெகிழ்வுடன் ஒரு புதியவேதம் எழவேண்டும். இரும்பும் ஆடகப்பொன்னும் ஆன ஒன்று. கானகங்கள் இன்று கருவலி கொண்டு துடிப்பது அதற்குத்தான் போலும்.”
அவன் பேசிக்கொண்டிருந்ததை ஆர்வமற்று விழிதிருப்பி கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் அச்சொற்களால் மெல்லிய மாற்றமொன்றை அடைவதை தருமன் கண்டார். மீண்டும் அந்த விந்தையான உணர்வெழுச்சி ஏற்பட்டது. அந்த மாற்றம் எப்படித் தெரிந்தது என எண்ணிக்கொண்டார். அவன் விழிதிருப்பவில்லை. உடலில் எவ்வசைவும் எழவில்லை. ஆனால் அவன் மெல்ல அகம் மலர்வதை உணரமுடிந்தது. அல்லது அச்சம் கொள்வதை. அல்லது வியப்பதை. அது எப்படி தெரிந்தது? காதலன் பெயர் ஒலிக்கையில் காதலியின் மலர்வுபோல. வியாசமாலிகையின் வரி அது. ஆம், அதுதான். தருமன் புன்னகைத்தார். விழிதிருப்பி திரௌபதியைப் பார்த்தபோது அவள் எழுந்து அமர்ந்து அர்ஜுனனைப் பார்த்தபின் விழிதிருப்புவதைக் கண்டார். அப்படியென்றால் அது ஒரு உளமயக்கு அல்ல.
“கிளம்புவோம், மூத்தவரே. இரண்டுநாழிகையில் வெயில் ஏறி வியர்வை வழியத்தொடங்கிவிடும்” என்றான் பீமன். “ஆம்” என்றபடி தருமன் எழுந்தார். நகுலனும் சகதேவனும் எழுந்தனர். திரௌபதி எழுந்து தன் ஆடையிலிருந்த சருகுகளை தட்டிவிட்டுக்கொண்டாள். கனவிலிருப்பவர்கள் போல பவமானனும் அர்ஜுனனும் அமர்ந்திருந்தனர். பவமானன் முகம் துயர்கொண்டதுபோல, தனிமை சூழ்ந்ததுபோலிருந்தது. அவர்கள் எழுந்த அசைவைக்கண்டு அவனும் எழுந்தான்.
“மூத்தவரே, கிளம்புவோம்” என்று நகுலன் அர்ஜுனனை அழைத்தான். “ஆம்” என்று திடுக்கிட்டு எழுந்து தன் வில்லுக்கு கைநீட்டினான் அர்ஜுனன். அவனையே வியப்புடன் திரௌபதி நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் நீள்விழிகள் பாதிமூடியவைபோலிருந்தன. பவமானன் “நான் இவ்வழியே பிரிகிறேன், அரசே” என்றான். “நீங்கள் தேடுவது உங்களையும் தேடுவதாக!” என தருமன் அவனை வாழ்த்தினார்.
[ 13 ]
உச்சிப்பொழுது வரவில்லை, மாறாக வெயில் மங்கியபடியே வந்தது. இலைநிழல்கள் வடிவழிந்து கரைந்து மறைந்தன. தொலைவில் தெரிந்த மரக்குடைகள் வானில் புடைத்து எழுந்து அணுகி வந்தன. பறவைகள் கூவியபடி வான் நிறைத்து தென்றிசை நோக்கி சென்றன. வானிலிருந்து ஒளி முழுக்க வழிந்து மேற்குச்சரிவில் தேங்கியது. கிழக்குத்திசையில் செறிந்திருந்த கருமை மேலேறிக்கொண்டே வந்தது. அதன் பரப்புக்குள் மின்னல்கள் துடிதுடித்தன. களிறு உறுமுவதுபோல தொலைவில் இடி ஒலித்தது.
“மந்தா, எங்கேனும் ஓர் இடத்தில் அமைந்து இந்த மழையை எதிர்கொள்வோம். புயலும் உள்ளதென எண்ணுகிறேன்” என்றார் தருமன். “ஆம், பருவம்தவறிய மழை. இடியும் புயலும் இருக்கும்” என்றான் நகுலன். பீமன் சுற்றும் பார்த்தபின்னர் “அந்தப் பாறை இடுக்குக்குள் நின்றுகொள்ளலாம், மூத்தவரே” என்றான். “ஆம், புயல்மழையில் பக்கவாட்டு நீர்க்காற்றே சாட்டைகள் என அறையும். பாறை இடுக்கு பாதுகாப்பானதே” என்றான் சகதேவன்.
அவர்கள் அந்தப் பாறையிடுக்கை அடைந்ததும் பீமன் “ஒருகணம்” என்று அவர்களை தடுத்தான். பாறைச்சரிவில் தொற்றி ஏறி மேலே உரிந்த பொருக்கென பிளந்து நின்ற பாறையை அணுகினான். அதைச் சுற்றிவந்து பார்த்தபின் குதித்து அப்பால் நின்றிருந்த மரக்கிளை ஒன்றை உடைத்து தன் இடைக்கத்தியால் செதுக்கி எடுத்துக்கொண்டு மேலே சென்றான். “என்ன செய்கிறான்?” என்றார் தருமன். பீமன் அந்தக் கிளையை நெம்புகோலாக்கி பாறையுரிவைப் பிளந்து மேலெழுப்பினான். “பிளந்துவிட்டான்” என்றார் தருமன். “அவன் தோள்வல்லமை சிலதருணங்களில் எனக்கே அச்சம் அளிக்கிறது.”
பிளந்த பாறையை சரிவில் மிக மெல்ல உந்தி கீழிறக்கிக் கொண்டுவந்து அந்த பாறைப்பிளவை நோக்கித் திருப்பியதுமே அவன் செய்யப்போவதென்ன என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பாறைப்பலகையை பிளவுக்குமேல் கூரையென அமைத்தபோது அது ஒரு சிறு குகையென்றாகியது. “மேலிருந்து நீர் வழிந்து வரக்கூடும். அந்தப் பாதையை திருப்பிவிட்டு வருகிறேன்” என்றான். “இனிய சிறுவீடு. வேதங்கள் பெறப்பட்ட அத்தொல்காலத்தில் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்” என்றார் தருமன்.
அவர்கள் அதற்குள் சென்று அமர்ந்தனர். தொலைவில் இடியோசை கேட்டது. காற்றில் குளிர் பெருகியது. மெல்லிய மின்னலில் எதிரே இருந்த பாறை நிறம்மாறி துடித்து மீண்டும் கருமைகொண்டது. ஏதோ பறவையொன்றின் குரல் வாள்வீசும் ஒலிபோல் எழுந்தது. புழுதியும் சருகுத்தூளும் மலர்ப்பொடியும் அள்ளிக்கொண்டு வந்த காற்று அவர்களை மூடி கடந்துசென்றது. திரௌபதி ஆடையை நன்கு சுற்றிக்கொண்டு தூசியை துப்பினாள்.
“மண்மணம்” என்று தருமன் சொன்னார். “நினைவிருக்கிறதா, இளையோனே? முன்பு இத்தகைய ஒரு புதுமழையில் நாம் கங்கைக்கரைக் காட்டில் ஒரு மரப்பொந்தில் அமர்ந்திருந்தோம். இதேபோல.” நகுலன் புன்னகைத்து “ஆம், அப்போது மிகச்சிறிய உடல்கொண்டிருந்தோம். ஒரு சிறுமரப்பொந்துக்குள் ஐவரும் அமரமுடிந்தது” என்றான். சகதேவன் “பின்னர் சாலவனத்திலும் ஒரு குகைக்குள் மழைக்கு ஒதுங்கினோம். அன்று அன்னை உடனிருந்தார்” என்றான்.
தருமன் முகம் மலர்ந்து அந்நினைவுக்குள் ஆழ்ந்துசென்றார். “அன்னை மழையைக்கண்டு அஞ்சியதை நினைவுகூர்கிறேன். அவர் முகம் சினந்ததுபோலிருந்தது. பின்னர் அழுவதுபோல் ஆகியது. ஆனால் மழைத்தூவல்கள் வருடி உடல் குளிரத் தொடங்கியபோது அன்னையின் முகம் அறியாது மலர்ந்தது. கைநீட்டி குகைவாயிலில் பொழிந்த நீர்ச்சரடுகளை அளைந்தார். காலால் சேற்றுநீரை மிதித்து கலக்கினார். பின்னர் சிறுமியைப்போல் துள்ளும் குரலில் இமைகள் படபடக்க அவர் இளமைகொண்டாடிய மதுவனத்தின் மேய்ச்சல்காடுகளைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.”
“அன்னையை அதுபோல பின்னரும் கண்டதில்லை. அவரும் அவர் தமையன் வசுதேவரும் கன்றுகளை ஓட்டிக்கொண்டு செல்லும்போது நாகங்கள் குறுக்காகக் கடந்து செல்வதையும் அவற்றை மணம்கொண்ட முதற்பசு பெருமூச்சுவிட்டு விழியுருட்டி நின்றுவிடுவதையும் அதன் மூச்சிலிருந்தே அவர்கள் உய்த்துணர்ந்து நாகத்தை அடையாளம் காண்பதையும் சொன்னார். மழைவருவதை காற்றின் ஈரவெம்மையிலிருந்தே உணர்ந்து பசுக்கள் கரியமூக்கு வியர்க்க தலைதூக்கி காத்து நின்றிருப்பதையும் குளிர்காற்று மண்மணத்துடன் மரங்களைச் சுழற்றியபடி சூழ்வதையும் இலைகள் மேல் துளிவிழும் கொந்தளிப்பையும் நாமே பார்ப்பதுபோலிருந்தது” என்றார் தருமன்.
“அப்போது உண்மையிலேயே அக்குகைக்குள் நாகம் ஒன்று நுழைந்தது. அரசப்பெருநாகம்” என்றான் நகுலன். திடுக்கிட்டதுபோல தருமன் அவனை திரும்பிப்பார்த்தார். “அன்னைதான் அதன் மணத்தை முதலில் அறிந்தார். அது என்ன மணம், மூத்தவனே அது என்ன மணம், மந்தா அந்த மணம் என்ன என்று பதறினார். மூத்தவர் குனிந்து கீழே கிடந்த கற்பாளங்களைப் பெயர்த்தபோது சீறியபடி அவர் இடையளவுக்கு படம் விரித்து எழுந்தது. இருவிழிகளும் இருளில் அனலெனச் சுடர்ந்தன. அதன் வலப்பக்கப் பாறையை மிதித்து அது சீறித் திரும்புவதற்குள் கழுத்தைப்பற்றி கையில் சுருட்டி எடுத்தார். அவர் கையளவுக்கே அதன் உடலும் இருந்தது. இறுகிய தசைச்செறிவு போல மின்னியபடி அது அவர் பிடியில் நெளிந்தது. அதன் நா எழுந்து பறந்தது.”
“ஆம்” என்றபடி தருமன் தலைகுனிந்தார். “அன்னை அதை விட்டுவிடு மந்தா, இது என் ஆணை என்று கூவினார். இது அப்பாம்பின் குகை. அது மீளவரும் என்றார் மூத்தவர். வீசுங்கள் அதை. மழைக்குள் சென்றபின் மீளாது என்று இளையவர் சொன்னதும் மூத்தவர் மழைச்சரடுக்கு அப்பால் அதை எறிந்தார். ஒரு வளைவு மட்டுமே தெரிந்தது. மறைந்துவிட்டது” என்று நகுலன் சொன்னான். “அதன்பின் அன்னை பேசவில்லை. அவரிலிருந்து விரிந்தெழுந்த அனைத்தும் மீண்டும் உள்ளே புகுந்துகொண்டன. அந்த மழை நான்குநாழிகைப்பொழுது சூழ்ந்து பெய்தது. ஓய்ந்து துளித்தபோது நாம் கிளம்பினோம். அன்னை ஓர் அசைவென மட்டுமே நம்முடனிருந்தார். மீண்டும் அவர் குரலை நாம் கேட்க ஏழுநாட்கள் ஆயின.”
தருமன் அவனையே நோக்கிக்கொண்டிருந்தார். மீண்டும் ஒரு புழுதிச்சுழல் எழுந்து அவர்களை மூடி கடந்துசென்றது. அதில் வண்ணத்துப்பூச்சிகளும் கலந்திருந்தன. குளிரத் தொட்டவை மழைத்துளிகள் என பின்னர் கைதூக்கி நோக்கியபோது தெரிந்துகொள்ள முடிந்தது. எதிர்பாரா கணத்தில் விழிகளை வெண்மையால் மூடி மின்னல் எழுந்தடங்கியது. குருதிப்புள்ளிகள் ஒளிரும் கண்களுடன் தருமன் பர்ஜன்யனைப் புகழும் வேதமந்திரத்தை சொல்லத்தொடங்கினார். செவிகளைக் கடந்து சித்தத்தையும் நடுங்கச்செய்தது இடியோசை.
“எங்கு சென்றிருக்கிறான் மந்தன்?” என்றார் தருமன் அமைதியின்மையுடன். “வருவார்” என்று சகதேவன் சொன்னான். “அவர் கொண்டாடும் தருணங்கள் இவை, மூத்தவரே.” அர்ஜுனனும் திரௌபதியும் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை தருமன் உணர்ந்து திரும்பிப்பார்த்தார். ஒரே கணத்தில் இருவர் விழிகளையும் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். “இங்கும் நாகம் வாழக்கூடும்” என்றான் நகுலன். “இங்கு மேலே கூரையில்லை. அது நீர்புகா இடங்களிலேயே வாழும்” என்றான் சகதேவன். மின்னல்களும் இடியோசையும் பழகிவிட்டிருந்தன. அறைந்து மூடப்போகிறது என எதிர்பார்த்த மழை யானைநடையில் மெல்ல அணுகியது. மழைத்துளிகள் மிகப்பெரிதாக இருந்தன. அவை விழுந்த அறைதலில் இலைகள் துடித்து உதிர்ந்தன. ஓசை அவர்களை முழுமையாக மூடிக்கொண்டது.
“மான்குளம்பு மழை என இதற்குப்பெயர்” என்று தருமன் எவரிடமென்றிலாது சொன்னார். மழைக்குள் இருந்து பீமன் கையில் ஒரு கூடையுடன் ஓடிவந்தான். பெரிய உடல்கொண்டவன் காற்றென ஒழுகிவருவதை எப்போது பார்த்தாலும் எழும் விந்தையுணர்வை தருமன் அடைந்தார். மடம்புக்குள் நுழைந்து தன் உடலை பொருத்திக் கொண்டான். அவர்களின் உடல்வெம்மையால் அவன் உடலில் வழிந்த நீர் ஆவியாகிச் சூழ்ந்தது. “எங்கிருந்தாய்?” என்றார் தருமன். “என்ன அது?” என அக்கூடையை நகுலன் எடுத்தான். காட்டுக்கொடிகளால் பீமனே பின்னிய அக்கூடைக்குள் கிழங்குகள் இருந்தன.
“நன்று” என்று தருமன் சொன்னார். “இந்தமழை எவ்வளவு நீடிக்குமெனத் தெரியவில்லை. பசிக்கும் என எண்ணிக்கொண்டிருந்தேன்.” நகுலன் கிழங்கை எடுத்து தருமனுக்கு அளித்தபின் திரௌபதிக்கு அளித்தான். அவர்கள் கிழங்குகளை உண்ணத்தொடங்கினர். மழைக்குள் மின்னல்கள் ஊடுருவி நிறைந்து மறைந்தன. ஒவ்வொரு மழைத்தாரையும் கண்கூசும் வெண்பளிங்கு விழுதெனத் தெரிந்தணைந்தது. தருமன் “வேதமெய்ப்பொருளின்படி எரியிறைவன் விண்ணிலிருந்து வந்தவன். ஆதித்யர்களுக்கு ஒளியை அளிக்கும் முதற்பேரொளியின் மைந்தன் அவன்” என்றார்.
“காலமறியா நெடுங்காலம் இப்புவியின் உயிர்கள் இரவுகளில் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தன. நோய்களில் அவை செத்துக்குவிந்தன. இருளை அஞ்சிய உயிர்கள் அன்னைப்புவியை வணங்கி மன்றாடின. அன்னை விண்நோக்கி ஏங்கினாள். ஒருநாள் விண்ணில் வாழ்ந்த செந்நிற ஆதித்யர்களில் ஒருவன் அம்புபோல மண்ணைநோக்கி வந்து புதைந்து ஆழத்தில் மறைந்தான். அன்னையின் கருவில் அவன் வளர்ந்தான்.”
“ஆயிரமாண்டுகாலம் அன்னை வயிற்றில் வாழ்ந்தமையால் அவன் மாதரிஸ்வான் என அழைக்கப்பட்டான். சிறிய செந்நிற ஈரிலைத் தளிர்விட்டு அவன் எழுந்தபோது அவனைக் கண்டு உயிர்கள் அஞ்சின. அவன் ஆறாச்சினம் கொண்டவன். உண்ணப்பெருகும் பசிகொண்டவன். நாவே உடலென்றானவன். அந்திப் பொன்னொளி வண்ணத்தவன். ஆனால் அவியளித்துப் பேணும்போது இளங்கன்றுபோல நமக்கு இசைபவன். செந்நிற வழிகாட்டிப் பறவை. செம்முனைகொண்ட வேல்படை. நம் முன்றிலில் விரிந்து தீரா பொன்மலர். நம் அடுமனைகளில் சோர்வுறாத பணியாளன்.”
“எப்பொருளாலும் தூய்மை கெடாதவன் என்பதனால் அவனை அக்னி என்றழைத்தனர் மூதாதையர்” என்றார் தருமன். “பிறிதொரு ஆதித்யன் ஆழிப்பரப்பில் விழுந்து நீல இருளுக்குள் கருவானான். அவன் செந்நிறச் சிறகுகளுடன் சீறும் அலைகள் மேல் எழுந்தபோது அவனை ஆபாம் நபாத் என்றழைத்தனர். நீரில்பிறந்தவன் மண்ணில்பிறந்தவனுக்கு இளையோன். அவன் அலைவளைவுகளில், மீன்செதில்களில், கடல்கொண்ட பலகோடி விழிகளில், சிப்பிக்குள் முத்தொளியில் வாழ்பவன். நெய்யிலும் சோமத்திலும் சுராவிலும் உறைபவன் அவன்.”
“மூன்றாவது ஆதித்யன் விழுந்தது ஒரு அன்னைத்தவளையின் விழிகளுக்குள்” என்றார் தருமன். “அங்கிருந்து அவன் ஒலியென எழுந்தபோது அவனை அவ்வொலியாலேயே வாக் என்றனர். நாவில் அனலென எழுபவன். மழலையரில் அவன் மகிழ்ச்சி. கவிஞரில் அவன் சந்தம். முனிவரில் அவன் மந்திரம். நீதிதேடும் மூத்தோரில் அவன் கூர்வாள். உடன்பிறந்தார் மூவரும் ஒருவரை ஒருவர் அறியும் தருணமே வேள்வி என்கின்றனர் வைதிகர். மாதரிஸ்வான் அரணிக்கட்டையில் கண்விழித்து வேள்விக்குளத்தில் சிறகுகொள்கிறான். நெய்யென சோமம் என சுரா என அவனைச் சென்றடைகின்றான் நீர்மைந்தன். நாவிலெழுந்து உடன் நின்றாடுகிறான் சொல்மைந்தன்.”
அவர்கள் அச்சொற்களை கேட்டுக்கொண்டு ஒற்றை உடலெனத் திரண்டு பெயல்திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பீமன் “மூத்தவரே, இந்தப் பழங்கதைகளால் இன்று ஆவதென்ன?” என்றான். தருமன் “இன்று அவ்விளைஞன் சொன்னதை நினைத்துக்கொண்டேன், மந்தா. இன்றுள வேள்விகளில் மூன்று அனல்களும் ஒருசேர எழுவதில்லையோ என்று” என்றார் தருமன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. சற்று கழித்து “மூவரும் ஒன்றென ஆகி நடமிட்ட அந்தப் பழைய வேள்விச்சாலைகள் மீண்டும் உருவாகவேண்டும். உருவாகியாகவேண்டும். ஏனென்றால் இங்கு மானுடம் வாழ்ந்தாகவேண்டும் என்பதே பிரம்மத்தின் ஆணை” என்றார்.
இடியோசை நீர்ச்சரடுகளை அதிரச்செய்தது. அவர்களைச் சூழ்ந்திருந்த பாறைப்பரப்பு நீராலானதுபோல் குளிர்கொண்டது. யானை ஒன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல என்று தருமன் எண்ணிக்கொண்டார். வாரணவதம் நினைவில் எழுந்தது. எரியுண்ட அரக்குமாளிகை. அது ஒரு வேள்விக்கொடை என்றே நினைவில் தங்கிவிட்டிருந்தது. பெருமூச்சுடன் உடலை அசைத்து அமர்ந்து “கரியுரித்து போர்த்தி எழுந்த அண்ணலை எண்ணிக்கொள்கிறேன், இளையோனே” என்றார். “இவ்விருள் கிழித்து மீண்டுமொரு அனல் எழவேண்டும்.”