‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22

[ 10 ] 

புலர்காலைக்கு முன்னரே காலனுடன் நகுலன் வந்து தருமனை எழுப்பினான். மரவுரித்தூளியில் துயின்றுகொண்டிருந்த தருமன் எழுந்து இருளுக்குள் கையில் சிறு நெய்யகல்சுடருடன் நின்றிருந்த இருவரையும் நோக்கியதுமே நெஞ்சு பெருமுரசென அறையப்பட்டார். “என்ன ஆயிற்று?” என்றார். “விதுரர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது” என்று நகுலன் சொன்னதும் உள்ளம் அலை பின்வாங்கி குளிர்ந்து உறைந்தது. ஒரு கணத்திற்குள் தன்னுள் உறைந்துகிடந்த அத்தனை அச்சங்களையும் பேருருக்கொண்டு பார்த்துவிட்டார்.

“எங்கிருக்கிறார்?” என்றார் சீரான குரலில். எழுந்து உடையை சீரமைத்தபடி “உண்ணாநோன்பிருக்கிறாரா?” என்று நகுலனை நோக்காமல் கேட்டார். தன் உள்ளத்தை இருளிலும் அவன் அறிந்துவிடக்கூடும். முதலிருவரும் தங்களுக்கென உலகு கொண்டவர்கள். மாத்ரேயர்கள் அவர் நிழல்கள். அவர் விழிகளைப்போல அவர்கள் அறிந்த பிறிதொன்றில்லை. “தைத்ரியக் காட்டில் இருக்கிறார். உண்ணாநோன்பு கொள்ளவில்லை. ஆனால் எவரிடமும் சொல்லாடாமல் தனிமையில் இருக்கிறார்” என்றான் நகுலன்.

ஒருகணத்தில் உள்ளம் தன் தெரிவுகளை வரிசைப்படுத்தியதை தருமன் நினைத்துக்கொண்டார். முதன்மையென எழுந்த அச்சம் மைந்தனைப் பற்றியதுதான். அப்படியென்றால் இப்புவியில் அவனே தனக்கு முதன்மையானவனா? வெறும் தந்தை அன்றி பிறிதில்லையா தான்? தந்தையென்று ஆனபின் தந்தைமட்டுமே என்றன்றி பிறிதொன்றாக ஆனவர் எவரேனும் இப்புவியில் இருந்துள்ளனரா? அப்போது மிக அணுக்கமாக திருதராஷ்டிரரை உணரமுடியுமென தோன்றியது. ஆயிரம் மைந்தரின் தந்தை. கணுதோறும் காய்த்த மரம்.

“நாம் உடனே கிளம்பியாகவேண்டும்” என்று காலன் சொன்னான். “தைத்ரியக்காடு சற்று அப்பால் உள்ளது. செல்லும் வழி எனக்குத் தெரியும்.” தருமன் “ஆம், கிளம்புவோம். இளையோனே, மந்தனுக்கு செய்தி சொல்லவேண்டும். அவன் காட்டுக்குள் குரங்குகளுடன் இருப்பான் இந்நேரம்” என்றார். “குறுமுழவொன்றை மயில்நடைத்தாளத்தில் வாசிக்கச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் மூத்தவர். அவரை எளிதில் அழைத்துவிடலாம்” என்றான் நகுலன். “பிறர் ஒருநாழிகைக்குள் சித்தமாகட்டும். நான் சென்று திவாகரரை வணங்கி விடைபெற்று வருகிறேன். கருக்கிருட்டு மயங்குவதற்குள் கிளம்பிவிடுவோம்” என்றார் தருமன்.

நீராடி உடைமாற்றி அவர் மையக்குடிலுக்குச் சென்றபோது திவாகரர் தன் அணுக்க மாணவர்கள் ஐவருக்கு ஆரண்யகத்தை கற்பித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரையிருளில் முகம் மட்டும் அகலொளியில் மின்ன அமர்ந்திருந்தனர். அவர் புலித்தோலிட்ட மணைமேல் கண்களை மூடி அமர்ந்து அவர்கள் ஐவருக்கும் மட்டுமே கேட்கும்படி உரையிட்டுக்கொண்டிருந்தார். அரைநாழிகையில் அந்தக் கற்பு முடிவதுவரை தருமன் வெளியே காத்து நின்றிருந்தார். உள்ளே மெல்லிய மணியோசை எழுந்ததும் ஒரு மாணவன் தருமனின் வருகையை சென்று அறிவித்தான். திவாகரர் அவரை உள்ளே அழைத்ததும் சென்று கைகூப்பியபடி அமர்ந்தார்.

“ஆசிரியரே, இந்த குருகுலத்தில் ஒருமாதகாலம் தங்கி ஐதரேய விழுப்பொருளை அறிந்து தெளிய இயன்றது என் நல்லூழ்” என்றார் தருமன். “மேலும் இருமாதம் இங்கு தங்கவேண்டுமென எண்ணியிருந்தோம். உடனே செல்லவேண்டிய அரசப்பணி வந்துள்ளது. சொல்கொண்டு கிளம்பலாம் என்று வந்தேன்.” திவாகரர் கை தூக்கி அவர் நெற்றியைத் தொட்டு வாழ்த்தினார். “அறிவுறுக! அறிவே வெற்றியென்றும் ஆகுக! நிறைவுறுக!” தருமன் அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினார்.

“நேற்றிரவு இங்கே சொல்லெடுத்த இருவரும் இன்று கிளம்புகின்றனர்” என்றார் திவாகரர். “பாவகனும் பவமானனும் என் சொல்லமர்வு தொடங்குவதற்கு முன்னரே வந்து வாழ்த்துபெற்றுச் சென்றனர். அவர்களுடன் நீங்களும் செல்வது ஒரு நற்குறி என்றுபடுகிறது. ஏனென்றால் விரிவது எதுவும் வளர்ச்சியே.” தருமன் “அவர்களுடன் நேற்று இரவு நெடுநேரம் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் ஐயங்கள் இங்கே கற்றவற்றால் தீட்டப்பட்டு கூர்கொண்டிருக்கின்றன. அவை இலக்கை அடையட்டுமென வாழ்த்தினேன்” என்றார்.

“ஆம், நான் சொன்னதும் அதுவே” என்றார் திவாகரர். “என் ஆசிரியர் மகாபிங்கலர் இங்கு அமர்ந்திருந்த காலத்தில் ஒரு மாணவர் விடைபெற்றுச் செல்வதென்பது ஆண்டுகளுக்கொரு முறை நிகழ்வதாக இருந்தது. இன்றோ அது கொத்துக்கொத்தாக வாரந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இலையுதிர்காலத்துப் புயல்காற்று என்று இதை இங்கு ஓர் ஆசிரியர் சொன்னார். புயல்தான். காடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. அத்தனை குருகுலங்களிலும் நாள்தோறும் மாணவர் வந்துசேர்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள்.” தருமன் “அது நன்று. அவர்களின் தேடல் கூர்கொள்கிறது” என்றார். “ஆம், அவர்கள் எதையாவது கண்டடைந்தால் நன்று” என்றார் திவாகரர்.

“சொல் ஒன்றே. அது அந்தணனாக அனல் ஓம்பியது. ஷத்ரியனாக வாள் ஏந்தியது. வைசியனாக துலா பற்றியது. சூத்திரனாக மேழி பிடித்தது. நான்கு திசைகளிலும் வேலியென்றாகி இவ்விளைநிலத்தைக் காத்தவை அவை. இன்று விளைநிலங்கள் பெருகிவிட்டிருக்கின்றன. வேலி விரிய முடியவில்லை” என்றார் திவாகரர். “ஆனால் அதற்கு இக்கல்விநிலைகள் என்ன செய்யமுடியும்? இவை தேன்கூடுகள். தேனீ பல்லாயிரமாண்டுகாலம் பயின்றவகையிலேயே காட்டுத்தேனை தன் தட்டுகளில் நிரப்பமுடியும். எடுத்துச்செல்பவர்கள் ஏதேனும் செய்யலாம்.”

“பிறிதொரு கோணத்தில் இது காட்டுக்குள் அமைந்த சுனையென்றிருந்தது. இதன் நான்கு ஊற்றுக்கள் இதை நிறைத்தன. வானத்தை அள்ளி தன்னில் விரித்து குளிர்விழி எனத் திகழ்ந்தது. இன்று பெருமழை பெய்து புதியகாட்டாறுகள் எழுந்துள்ளன. மலரும் குப்பையும் மண்ணும் சேறுமென புதுவெள்ளம் வந்து இதை நிறைக்கிறது. கொந்தளித்து நிறைந்து கவிகிறது. இதன் ஒருகணம் பிறிதொன்றுபோல் இல்லை. அரசே, வேதமெய்யறிவு இன்று பல்லாயிரம் குலங்களின் தொல்லறிவுகளால் அலைக்கழிக்கப்படுகிறது. உலகமெங்குமிருந்து சிறகடித்து வந்து நம் துறைசேரும் கலங்களில் வந்திறங்குபவை பொன் மட்டுமல்ல, புதிய எண்ணங்களும்தான்.”

“என்ன நிகழுமென என்னால் கணிக்கக் கூடவில்லை. வரவிருக்கும் நிலநடுக்கத்தை குழியெலி அறிவதுபோல இங்கு இருண்ட காட்டுக்குள் அமர்ந்து நான் இதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார் திவாகரர். “வேதச்சொல்லில் இருந்து இங்கு அறமும் நெறியும் பிறந்தது. இன்று அதை மறுக்கும் குரல்கள் எழுந்து சூழ்கின்றன. அவியிடுவதனால் என்ன பயன் என்கிறார்கள். அனலோம்புவதனால் அறம் வளருமா என்கிறார்கள். அழியாத சொல் என்றால் அது அனைத்துயிருக்கும் பொதுவே என்கிறார்கள். ஒரு வினாவுக்கு விடைதேடுவதற்குள் பறவைக்கூட்டங்களென ஓசையிட்டபடி எழுந்து சூழ்கின்றன பலநூறு நாவுகள்.”

“அரசே, இவையனைத்தும் தொடங்கியது எங்கிருந்து என நான் அறிவேன்” என்று திவாகரர் சொன்னார். “அன்று நான் இளையோன். என் ஆசிரியருக்கு முதன்மை மாணவன். உடலெங்கும் புழுதியுடன் கையில் ஒரு இசைமூங்கில் மட்டும் கொண்டு இங்கு வந்தவன் யாதவகுலத்தவன். குழலில் மயிற்பீலி சூடியிருந்தான். அது தன் குடியடையாளம் என்றான். கரியவன், பெயரும் கிருஷ்ணனே. இன்று உங்களுக்கு அணுக்கமானவன். நாளை பாரதவர்ஷத்திலொரு பெரும்போர் சூழுமென்றால் அதன் நடுவே நின்று ஆட்டிவைக்கப்போகிறவன் அவன். அக்குருதிப்பழி முழுக்க அவனையே சேருமென்பதில் எனக்கு ஐயமில்லை.”

“இளைய யாதவர் நட்பும் வழித்துணையும் இறைவடிவுமென எங்களுக்கு அருள்பவர்” என்றார் தருமன். திவாகரர் “ஆம், அதை அறிவேன்” என்றார். “இங்கு வந்தடைந்த அவனுக்கு விடாய்நீர் அளித்து வரவேற்பு சொன்னவன் நான். அவன் நீராட சுனைமுகம் கொண்டுசென்றேன். உண்பதற்கு அமுதை நானே கொண்டுசென்றளித்தேன். அவன் எரிந்துகொண்டிருந்தான் என்று தோன்றியது. அனலருகே நின்றிருப்பவன் என உள்ளத்தால் உணர்ந்தேன். அன்று மாலை சொல்லவை கூடியபோது என் ஆசிரியர் மகாபிங்கலர் அவனை நோக்கியே பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அங்கிருந்தவர் அனைவரும் அவன் ஒருவனையே உடலே விழியாக நோக்கிக்கொண்டிருந்தனர்.”

ஆறுமாதகாலம் அவன் எங்களுடன் இருந்தான். இங்குளோர் ஓராண்டில் கற்பதை அவன் ஒருவாரத்தில் கற்றான். பிறிதெவரிடமும் ஒரு சொல்லும் அவன் பரிமாறிக்கொண்டதில்லை. வேதமெய் பேசிய அவைகளில் அன்றி அவனை எங்கும் பார்த்ததுமில்லை. அவன் இங்கே ஆபுரப்போனாக தன்னை அமைத்துக்கொண்டான். பசுக்களும் கன்றுகளும் அவனைக் கண்டதுமே அறிந்துகொண்டன. சொல்லாமலேயே அவன் விழைந்ததை செய்தன. பகலெல்லாம் அவற்றை காட்டில் மேயவிட்டு மரத்தடியில் அமர்ந்து விழிசொக்கி குழலிசைத்துக்கொண்டிருந்தான். குழல்கேட்கும் தொலைவில் செவிகூர்ந்தபடி அவை மேய்ந்தன. குழல்நின்றதும் வந்து அவனருகே கூடின. அவன் நடந்து மீள்கையில் அந்திக்கருக்கலில் விழிகள் மின்ன உடன் வந்தன.

ஐதரேயமெய்மை அனைத்தையும் அவன் கற்றுத் தேர்ந்தான். பன்னிரண்டாவது ஆரண்யகம் நிறைவுற்று ஆசிரியர் ஆற்றிய உரைக்குப்பின் அவன் எழுந்து உரத்த குரலில் கேட்டான் “ஆசிரியரே, அரசனுக்கு மண்ணில் இறைவனுக்குரிய இடத்தை அளிப்பது எது?” அவன் அதை கேட்பான் என்று நான் முன்னரே உணர்ந்திருந்தேன். மதுராவில் கம்சனின் குழவிக்கொலையையும் தாய்மாமன் நெஞ்சுபிளந்து குருதி அணிந்த மருகனின் மறத்தையும் அறியாதவர் எவரும் அங்கிருக்கவில்லை. “இளையோனே, ஒலிகளில் முதன்மையானது அ என்பதுபோல் உலகியலில் அமைந்த மானுடரில் அரசன். விண்ணுக்கு இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே அரசுக்கு அவன். அதை வகுத்தளிப்பது வேதம். வேதகாவலனை வேதமே காக்கும்” என்றார்.

“அவ்வண்ணமென்றால் என் நகரில் சொல்திருந்தும் முன்னரே வாள்போழ்ந்து வீசப்பட்ட குழவியருக்கு வேதம் பொறுப்பேற்கிறதா? அங்கே விழுந்த அன்னையரின் விழிநீருக்கு வேதமே அடிப்படையா?” என்றான். அவன் உடல் அவைநடுவே நின்று பதறுவதைக் கண்டேன். ஆசிரியர் வாயெடுப்பதற்குள் அவன் கைநீட்டி கூவினான் “ஆம், அதுவே உண்மை. மண்புரக்கும் நெறிகளை அமைத்தது வேதம். மானுடரில் இந்திரர்களை உருவாக்கியது. இன்று பாரதமெங்கும் குருதிப்பழி சுமந்து நின்றிருக்கிறது.”

“மைந்தரைக் கொன்றவனின் அவைநின்று வேதமோத அந்தணருக்கு தயக்கமிருக்கவில்லை. முனிவரே, அவர்களின் கையிலிருந்த கங்கைநீரே அங்கு தந்தையரின் வாள்களை கட்டுண்டு நிற்கச்செய்தது. அன்னையரின் தீச்சொல் எழுந்து அந்நகர் எரிபடாமல் காத்தது. அனைத்து மறத்துக்கும் வேதமே துணை என்றால் அவ்வேதத்தை மிதித்து மேலேறிச்சென்று அறத்தை அடையவேண்டிய காலம் வந்தணைந்துள்ளது” என்று அவன் சொன்னான். அக்குரலை இப்போது கேட்பதுபோல் அறிகிறேன். பலநூறுமுறை அது எனக்குள் நிகழ்ந்துவிட்டது. சில தருணங்களில் சொற்கள் முற்றிலும் பொருளிலிருந்து விடுபட்டு தூய உணர்வுமட்டுமே என்றாகிவிடுகின்றன.

“யாதவனே, ஐம்பருக்களின் கூட்டு இப்புடவி. ஐந்துபுலன்களும் உடன் சேர்ந்து அமைகையில் உடல். ஆன்மா குடிகொள்கையில் மனிதன். இவை இங்ஙனம் கூடியமைவதென்பது இங்கெங்கும் நாம் அறியும் அறியவொண்ணா பெருவிளையாட்டின் ஒரு கணம். எண்ணத் தீராத பெருவிந்தையே மனிதன். ஒருவன் தன் உடலை ஒருகணம் நோக்கினான் என்றால் இவையிணைந்து இப்படி நின்றிருப்பதைக் கண்டு பரம்பொருளே என்று வீரிட்டு கண்ணீர் வடிக்காமலிருக்கமாட்டான்” என்றார் மகாபிங்கலர். “ஆனால் ஒரு பிடி நெருப்பு போதும் மனிதனை கூட்டவிழ்க்க. ஆன்மா விண்புகும். ஐம்புலன்களும் அவற்றுக்குரிய தேவர்களை சென்றடையும். ஐம்பருக்களும் நிலைமீளும். எஞ்சுவது ஏதுமில்லை.”

“வேதத்தின் ஒவ்வொரு ஒலியும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காற்றில் உருத்திரண்டன என்கின்றன பிராமணங்கள். ஒலிகள் கூடிச் சொல்லானது மேலும் ஆயிரமாயிரம் வருடங்களில். அச்சொற்களில் பொருள்சென்றுகூடியது மேலும் பல்லாயிரம் ஆண்டுகளில். இளையோனே, ஒரு சந்தம் உருவாகி வர மானுடம் எத்தனை தவம் செய்திருக்கவேண்டும் என்று அறிவாயா? ஒரு சடங்கு வகுக்கப்பட எத்தனை போர்கள் நிகழ்ந்திருக்குமென உணர்ந்திருக்கிறாயா? ஒரு நெறியை நாம் அனைவரும் ஏற்க எத்தனை விழிநீர் சிந்தப்பட்டிருக்கவேண்டும் என எண்ணிப்பார்! மெல்ல நெகிழ்ந்து வழிவிட்டது மண்ணைப் போர்த்தியிருந்த ஆசுரம். வேதமுளை ஈரிலை விட்டெழுந்தது.”

“இது செங்குருதியும் கண்ணீரும் நீரென விடப்பட்டது. அருந்தவம் வேலியாகி காக்கப்பட்டது. இன்று அமைந்துள்ள இவ்வாழ்க்கை வேதக்கொடை. ஆம், அது பிழைபட்டிருக்கும் தருணங்களுண்டு. வகுக்கப்பட்டு உறுதியாக நிலைநாட்டப்பட்டிருப்பதனாலேயே அது எளிதில் மீறப்பட முடியாததாகிறது. தெளிவாக விளக்கப்பட்டதென்பதனாலேயே அது எண்ணத்தை கட்டுப்படுத்துவதாகிறது. ஆனால் வேதச்சொல் கட்டவிழ்ந்தால் மீள்வது ஆசுரம். விடியலில் விலகிய இருள் எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு இலைக்கு அடியிலும் ஒவ்வொரு கூழாங்கல்லுடனும் அது காத்திருக்கிறது. அதை மறக்காதே” என்றார் மகாபிங்கலர்.

“ஆசிரியரே, ஒங்கி உயர்ந்த கோபுரத்தை அடியில் இருந்து இடிப்பவன் தானுமழிவான் என நானும் அறிவேன். ஆனால் அதை இடிப்பவன் அதை நன்கறிந்த சிற்பி என்றால் அது அவன் கையில் களிப்பாவை. இடிப்பது அதன் கற்களைக் கொண்டு பிறிதொன்றைக் கட்டி எழுப்ப. இங்கு எழுக புதியவேதம்! மேலும் மானுடர் அறிவது. மேலும் அழகியது. மேலும் தெய்வங்கள் குடிகொள்வது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றான். பின்பு அந்த அவையிலிருந்தே இறங்கி வெளியே சென்று இருளுக்குள் மறைந்தான். அவன் ஆசிரியரின் நற்சொல் பெறவில்லை. விடைகொள்ளவுமில்லை.

அவன் சென்றபின் அனைவரும் ஆறுதலுடன் நிலைமீண்டோம். ஆனால் ஒவ்வொருவரும் அக்கணமே மாறிவிட்டிருந்தோம். பிறகொருபோதும் நான் அவனை நினைக்காமல் ஒருநாளை கடத்தியதில்லை. அவன் சொற்கள் ஊடுகலக்காமல் வேதச்சொல் ஆய்ந்ததுமில்லை. என் ஆசிரியரும் அவ்வாறே ஆனார் என நான் அறிந்தேன். அவர் அதன்பின் சொன்னவை அனைத்தும் அங்கு அவன் விட்டுச்சென்ற சொற்களுக்கான மறுமொழியாகவே அமைந்தன. எதிர்நிலைகொண்டு அவர் விலகிவிலகிச் சென்றார்.

ஆனால் அவர் வைகாசிமாதம் வளர்நிலவு நான்காம்நாள் உடல்நீத்து சொல்முழுமை கொள்கையில் அருகே நான் அமர்ந்திருந்தேன். என் கைகளை தன் மெலிந்து நடுங்கும் கைகளால் பற்றிக்கொண்டார். “இளையோனே, அன்று என் முன் வந்தவன் எவன் என நான் அறியேன். அவன் முகமும் நான் அறிந்திராததே. ஆனால் அவன் குரலை எங்கோ கேட்டிருக்கிறேன் என என் அகம் சொல்லிக்கொண்டே இருந்தது. இப்போதும் அதை வலுவாகவே உணர்கிறேன். அவன் யாரென்றோ அவன் சொற்களின் பொருள் என்னவென்றோ நாம் அறியமுடியாதென்றும் தோன்றுகிறது.”

“மண் அகழ்ந்து மணி எடுப்பது போல வேதத்திலிருந்து அவன் புதியவேதத்தை எடுக்கக்கூடும். முன்னரே வேறு வேதங்களிலிருந்து எழுந்துள்ளதே இவ்வேதம் என நாம் அறிவோம். இங்கு நமக்கிடப்பட்ட பணி இதை சொல்லும் பொருளுமென ஓம்புவது மட்டுமே. அதை நாம் செய்வோம். அருமணிகளுக்குக் காவலென நச்சுநாவுடன் நாகங்கள் அமைவதுபோல இருப்பினும் அதுவே நம் அறம். நான் நிறைவுகொண்டுள்ளேன். பிறிதொருமுறை அவனைப் பார்க்கையில் அவனிடம் இந்நிறைவை நானே உரைப்பேன் என நினைக்கிறேன்” என்றார். அவரால் மூச்சுகொள்ள முடியவில்லை. ஆனால் பேசவிழைந்தார்.

கைகளைக் கூப்பி கண்களை மூடி முதலாசிரியர் மகிதாசர் இயற்றிய இந்திர வாழ்த்தை சொல் சொல்லாக நினைவுகூர்ந்தார். “இளையோனே, பிரம்மம் இந்திரன் எனப் பெயர் கொள்கிறது என்கிறது பாடல். ஏனென்றால் அவன் காணப்படுபவன். இங்கே இதோ இவ்வாறென்று வந்து நிற்பவன். தேவர்கள் மறைந்திருப்பவர்கள். அவன் ஒருவனே அவர்களின் சார்பில் கண்முன் எழுபவன். அரசனும் அவ்வாறே. தெய்வங்கள் மறைந்திருக்கின்றன என்பதனால் கோலுடன் அவன் அரியணை அமர்கிறான்.”

“அரசனை பிரம்மவடிவன் என்கின்றன பிராமணங்கள். அவன் மணிமுடி விஷ்ணு. நெற்றிப்பொட்டு சிவன். அவன் கைகள் பிரம்மன். அவன் தோள்கள் கொற்றவை. அவன் நெஞ்சு லட்சுமி. அவன் நா கலைமகள். அவன் விழிகள் ஆதித்யர்கள். அவன் காது வாயு. அவன் கழுத்து சோமன். அவன் வயிறு வருணன். மைந்தா, அவன் கால்களே யமன் என்கின்றன மூதாதையர் சொற்கள்” என்றார். பின்பு “ஆம், நமக்குச் சொல்லப்பட்டது அது” என்றபின் நீள்மூச்சுவிட்டார். அதன்பின் அவர் பேசவில்லை.

“எரி சென்ற காடு போல அவன் சென்ற தடம் தெரிந்தது. வேதம் கானகங்களில் பொருள்பெருகத் தொடங்கி பல தலைமுறைகள் ஆகின்றன. இதுவரை இப்படி ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்ததில்லை. அறிவுத்தளத்தில் எது நடந்தாலும் அது உகந்ததே. ஏனெனில் உண்மையே வெல்லும். அவ்வண்ணமே ஆகுக!” என்று திவாகரர் சொன்னார். “நான் விழைவதும் அதுவே” என்று சொல்லி வணங்கி தருமன் எழுந்துகொண்டார்.

 

[ 11 ]

வழியிலேயே அவர்களுடன் பவமானன் இணைந்துகொண்டான். அவர்கள் ஐதரேயக்காட்டைக் கடந்து அப்பால் விரிந்த புல்வெளியை அடைந்தபோது தொலைவில் ஒரு மரத்தடியில் அவன் அமர்ந்திருப்பதை கண்டனர். காலன் அவனை நோக்கி கைவீசக்கண்டு அவன் எழுந்து நின்றான். அருகணைந்ததும் அவன் அணுகி தலைதாழ்த்தி வணங்கினான். “நீரும் எங்களுடன் வரலாம், உத்தமரே” என்றார் தருமன். “ஆம், ஆனால் என் வழி ஏது என நான் இன்னும் அறியவில்லை. தைத்ரியக்காட்டிலிருந்துதான் நான் இங்கு வந்தேன். எனவே அது என் இலக்கல்ல” என்றான் பவமானன். “நன்று, வழிதெரியும்வரை உடன்வருக!” என்றார் தருமன்.

“நீங்கள் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டேன். நான் குருகுலம்விட்டு நீங்கும்போது இருளுக்குள் அவர் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.” அவன் நகைத்து “அது என் உள இருளுக்குள்ளா என நான் ஐயம்கொண்டேன்” என்றான். தருமன் புன்னகை செய்தார். “அவரைப் பிரிவது கடினம் என்றே எண்ணியிருந்தேன். தாயுமானவராக இருந்த நல்லாசிரியர் அவர். ஆனால் துறவுகொள்ள எண்ணம் வந்தபின் அன்னை சலிப்பூட்டத்தொடங்கும் விந்தையை நான் எண்ணி எண்ணிப்பார்த்திருக்கிறேன். பேரன்புகொண்ட அன்னை வெறுப்பையே உருவாக்குகிறாள். புழுக்கத்தில் கம்பளிமெய்ப்பையை அணிந்திருப்பதுபோல. கழற்றிவீசிவிட்டு விடுதலை நோக்கி பாயவேண்டுமென துடிக்கிறோம்.”

அவன் பெருமூச்சுடன் “வணங்கியதும் அவர் சற்று விழிகலங்கினார். அக்கணம் மட்டும் என்னுள் இருந்த கசப்பு சற்றே மட்டுப்பட்டது” என்றான். “ஆனால் கிளம்பி காட்டுப்பாதையில் வரத்தொடங்கியதும் என்னையறியாமலேயே அது மீண்டும் ஊறித்தேங்கியது.” தருமன் “அது இயல்பே” என்றார். “ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவென்பது தந்தை மைந்தன் உறவுபோலவே தெய்வங்களிட்ட ஆயிரம் முடிச்சுகளும் அதை அவிழ்க்க முயலும் மானுடரிட்ட பல்லாயிரம் முடிச்சுகளும் செறிந்தது.” அப்பால் விழி சுருக்கி அதை கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டதும் அவருக்குள் ஒரு புன்னகை விரிந்தது. “இளையோன் அதை நன்கறிவான்” என்றார்.

ஆனால் அர்ஜுனன் எரிச்சல்கொள்ளவில்லை. அவருள் எழுந்த புன்னகையை அவனும் கண்டுகொண்டிருந்தான் எனத் தோன்றியது. பவமானன் “துரோணருக்கும் தங்களுக்குமான உறவைப்பற்றி சூதர் பாடிய கதைகளை கேட்டுக்கொண்டே வளர்ந்தவன் நான், இளையபாண்டவரே” என்றான். “ஆம், நானும் அவற்றைக் கேட்டு வளர்கிறேன்” என்று அர்ஜுனன் இதழ்கோடிய புன்னகையுடன் சொன்னான். தாடியை நீவிக்கொண்டே காட்டின் இலையுச்சிகளை நோக்கியபடி “செல்வோம்” என்றான்.

அவர்கள் நடந்தபோது சகதேவன் “ஆசிரியர் மாணவரிடம் கொள்ளும் அன்பா மாணவர் ஆசிரியரிடம் கொள்ளும் அன்பா எது பெரிது என்னும் வினா எப்போதுமே எழுவதுண்டு. ஆசிரியர் இறந்தகாலத்தில் மேலும்மேலும் பின்னோக்கிச் சென்றுகொண்டே இருப்பவர். அவருக்கு வாழும் நிகழ்காலமும் அறியா எதிர்காலமும் மாணவனே. ஆகவே மேலும்மேலும் உருகி எழுந்து அவனைச் சூழ்கிறார். அவனை விட்டுவிடாமலிருக்கும் பொருட்டு அதற்குரிய சொற்களை உருவாக்கிக்கொள்கிறார். மாணவனுக்கு அவர் எதை அளித்திருந்தாலும் அவன் தேடும் எதிர்காலத்தில் அவர் இல்லை. அவன் அவரைவிட்டு விலகிச்சென்றே ஆகவேண்டும். ஆகவே அவன் அவர்மேல் கசப்புகளைப் பயிரிட்டு விலக்கத்தை உருவாக்கிக்கொள்கிறான்” என்றான்.

“அறியேன்” என்றான் பவமானன். “நான் அவர் மேல் கசப்புகொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன். அவர் அளித்தவை எனக்குப் போதவில்லை. அவர் முன்வைத்தவற்றைப் பிளந்து வெளிச்செல்கிறேன். அக்கல்வி அவரேதான் என்பதனால் அது அவரைப் பிளப்பதே.” தருமன் சிரித்து “ஆம், ஆனால் இது நாம் எண்ணிக்கொள்வதுபோல தூய அறிவுத்தேடல் மட்டும் அல்ல. இதிலுள்ளது நம் ஆணவத்தின் ஆடலும்கூட. அதை நேருக்குநேர் உணர்ந்துகொண்டோம் என்றால் நன்று” என்றார்.

பவமானன் “ஆம், அதையும் நான் உணர்கிறேன். என்னுடையது நிலைத்தமர முடியாத இளமையின் துடிப்பு மட்டும்தானா என்றும் எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். பெயர்ந்துசெல்லமுடியாத முதுமையில் அடைந்ததில் அமர்ந்துகொள்வேனா? அப்படித்தான் தேடுபவர்கள் சென்று அமைகிறார்களா?” என்றபின் தலையைக்குலுக்கி “அறியேன்… எண்ண எண்ண நம்மைச் சூழ்ந்து ரீங்கரிக்கின்றன சொற்கள். அனைத்தும் இறுதியில் வெறும் சொற்கள் மட்டுமே” என்றான்.

புல்வெளிமேல் வானத்தின் ஒளிக்கசிவு மெல்லிய புகைப்படலம்போல வந்து படியத் தொடங்கியது. ஓரிரு பறவைகள் மரக்கூட்டங்களின்மேல் சிறகடித்தெழுந்து சுழித்து மீண்டும் இறங்கின. அவற்றின் ஒலியில் காடு விழித்தெழத் தொடங்கியது. காட்டை நோக்கியபடி திரண்ட கைகளை சற்றே விரித்து பீமன் நெடுந்தொலைவு முன்னால் நடக்க அவனருகே காலன் நடந்தான். புற்பரப்பில் இரவுப்பனியின் ஈரம் நிறைந்திருந்தது. குளிர்காற்று முதலில் இனிதாக இருந்து பின் நடுக்குறச்செய்து அப்போது மண்ணிலிருந்து எழுந்த மென்வெம்மை காதுகளில் பட மீண்டும் இனியதாக ஆகத் தொடங்கியிருந்தது

SOLVALAR_KAADU_EPI_22

“விலகி வந்தவர்கள் முந்தைய ஆசிரியரை பழிப்பதை கண்டிருக்கிறேன்” என்று பவமானன் தொடர்ந்தான். “அவர்கள் அவரது கொள்கைகளை பழிக்கத் தொடங்குவார்கள். ஆனால் அது அவரே என்பதனால் மெல்ல அவரது ஆளுமையைப் பழிப்பதில் சென்றுசேர்வார்கள்.” அவன் நகைத்து “அவ்வாறு பழிப்பவர்கள் வந்தணைந்த புதிய ஆசிரியரிடம் எண்மெய்யும் மண்பட வணங்குவர். உருகி விழிநீர் கசிவர். அது நடிப்பல்ல. அவர்கள் அவ்வுணர்ச்சிகளினூடாக தங்களை இங்காவது முற்றமைத்துக்கொள்ள முடியுமா என்று தேடுகிறார்கள்” என்றான்.

அர்ஜுனன் “அவர்களின் பிழை ஒன்றே, ஆசிரியர் ஓநாயன்னையைப் போல உண்டு செரித்து கக்கி வாயில் ஊட்டுவார் என எண்ணுகிறார்கள். மெய்யறிவை எந்த ஆசிரியரும் அளிக்கமுடியாது. ஆசிரியரின் அறிவு மாணவனுக்குரியதே அல்ல. ஏனென்றால் இரு மானுடர் ஒற்றை உள்ளம் கொள்வதே இல்லை. ஆசிரியர் அளிப்பது அவர் கடந்துவந்த பாதையை மட்டுமே. மாணவன் கற்றுக்கொள்வது தான் செல்லவேண்டிய பாதையைத்தான். அவன் அடைவது தன் மெய்மையை. அது அவ்வாசிரியர்நிரை அளித்ததும் கூடத்தான் என்று உணர்பவன் ஆழ்ந்தமைகிறான். ஆகவேதான்  சென்று எய்தியவர்கள் ஆசிரியர்களை முழுதும் பணியத் தயங்குவதில்லை” என்றான்.

“இப்பயணத்தை உணர்ந்தவன் ஆசிரியர்களை வழிச்சாவடிகளை என வணங்கி எளிதில் கடந்துசெல்வான். ஆசிரியர்களில் சிறியவர் பெரியவர் என்றில்லை. ஆசிரியர் என்பது ஓர் அழியாநிலை. அதில் முகங்கள் மட்டும்தான் மாறிக்கொண்டிருக்கின்றன” என்று அர்ஜுனன் சொன்னான். “முற்றிலும் பணியாமல் கல்வி இல்லை. ஆணவத்தால் ஊற்று சுரக்கும் கண்களை மூடிவைத்துவிட்டு குருகுலங்களில் அமர்ந்திருப்பதில் எப்பயனும் இல்லை. அப்பணிவுடனேயே நீங்கமுடிபவனால் மட்டுமே கல்விகொள்ளும் கலம் என தன் உள்ளத்தை ஆக்கிக்கொள்ளமுடியும்.”

புன்னகையுடன் பவமானனின் தோளைத் தொட்டு அர்ஜுனன் சொன்னான் “இளையோனே, எவரும் மாணவர்களோ ஆசிரியர்களோ மட்டும் அல்ல, ஆசிரியர்களும் மாணவர்களுமாக ஒரே தருணத்தில் திகழ்கிறார்கள். நான் துரோணரின் கால்களை எண்ணி வணங்காமல் ஒருநாளும் விழித்ததில்லை. என் மாணவர்களுக்கு நான் அளிப்பது அவருடைய சொற்களைத்தான். அழியாது செல்பவை சொற்கள். மானுடர் அவற்றை காலத்தில் கடத்தும் சரடுகள் மட்டுமே.”

முந்தைய கட்டுரைமனதிற்கான வைத்தியசாலை
அடுத்த கட்டுரைகுஜராத் தலித் எழுச்சி- கடிதம்